பொன்.கணேசமூர்த்தி -ஓர் அஞ்சலி
-நடராஜா முரளிதரன்-
வழமை போல் அன்றும் காலையில் எழுந்தவுடன் பல்லைத் துலக்குவதற்கு முன்பாகவே கணணியின் முன்பாக அமர்ந்து கொண்டு இணைய வலயத் தளங்களுக்குள் நுழைந்து கொண்டேன்.
வலயத் தளங்களுக்கூடாக ஒரு சுற்றுச் சுற்றி வரும் வேளையில் நிதர்சனத்துக்குள் புகுந்த எனக்குத் “தின்னவேலியில் வங்கி முகாமையாளர் சுட்டுப் படுகொலை” என்ற செய்தி தடுத்து நிறுத்தியது. இன்னும் அந்தச் செய்திக்குள் ஆழப் புகுந்த போது என்னோடு சிறுவயது முதற் கொண்டே பேசிப் பழகிய, கவிதை-பேச்சு-நாடகம்-அரசியல் போன்ற துறைகளில் கூட்டாக இணைந்து இயங்கிய, அரசியல் முரண்பாடுகள் குறித்துப் பலமுறைகள் என்னோடு கடுமையாக விவாதித்த, என்னைவிடக் குறைந்தது பத்து வருடங்களாவது வயதில் மூத்த “கணேசமூர்த்தி அண்ணை” என என்னால் வாஞ்சையோடு அழைக்கப்பட்ட அந்தப் பன்முக ஆளுமை கொண்ட படைப்பாளி, கலை இலக்கியவாதி தின்னவேலித் தலங்காவல் பிள்ளையார் கோவிலுக்கு மிகச் சமீபமாக “ஹெல்மட்” அணிந்த நிலையில் தரையோடு தரையாக வீழ்த்தப்பட்டுக் கிடந்த நெஞ்சை அதிர வைத்த அந்தக் காட்சி, அது எழுப்பிய துயரம் வார்த்தைகளால் வெளிப்படுத்தப்பட முடியாதது. மரணம் வாய் பிளந்து நிற்கும் அந்தப் பூமியில் கொடூரமாக வீழ்த்தப்பட்ட உன்னருகில் உன்னவள் திலகமணி நினைவைக் கொன்று, வேதனையைக் கொன்று ஒரு நடைப் பிணமாய் குந்தியிருக்கும் பேய் அறைந்த நிலை என்னை இதனை எழுத வைக்கின்றது.
அரசியல் அத்காரத்தை வென்றெடுக்க நீ துப்பாக்கி ஏந்தவில்லை. இன்னும் ஒருபடி மேலே கூறுவதானால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் சீர்குலையும் தருணங்கள் வரை கூட்டணியின் மிதவாதப்பாதையோடு ஒத்துப் போனவன். தமிழ் இளைஞர் பேரவைக் காலங்களில் உமாமகேஸ்வரனுக்கு நெருக்கமான நண்பன். வர்க்கப் பார்வையோடு கூடிய இடதுசாரிச் சிந்தனைக்கு மேலாகக் கூர்மையடைந்துள்ள அடக்குமுறைக்கு உள்ளான தமிழ் பேசும் மக்களின் தமிழ்த் தேசியவாதமானது முற்போக்கான பல்வேறு குணாம்சங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது என்ற வாதத்தைப் பலமாக நம்பியவன் நீ.
ஆனாலும் உனது சிந்கனைத் தடத்தில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் வீழ்ச்சி எற்படுத்திய மாற்றம் கணிசமானது என்று நான் எண்ணுகின்றேன். அதுவும் குறிப்பாக உனது நெருங்கிய நண்பன், தமிழ்த் தேசியவாதி நா.கருணானந்தசிவம் (இளந் தமிழர் மன்ற நிறுவனர், ஆசிரியர்) அமைதிப் படையென வந்த இந்தியப்படையினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வேளைகளில் வேதனைகளின் உச்சி வரை இழுத்துச் செல்லப்பட்டாய் நீ என்பதை நான் அறிவேன்.
அந்நியச் சிறகுகளின் அரவணைப்பில் உண்மையான சுதந்திரம் பெறப்பட முடியாதது என்பது மட்டுமல்ல “அரவணைத்த சிறகுகளின் என்புகளே இதயங்களைக் குத்திக் கிழிக்கும்” என்ற “வேலியே பயிரை மேய்ந்த கதையை” வரலாறு எங்கணும் நாம் பார்க்க முடியும்.
நீயும், உனது குடும்பமும் வாழ்ந்த பூமியிலிருந்து அடித்து விரட்டப்பட்டு வன்னி மண்ணுக்குச் சென்று வாழ்ந்து கொண்டிருந்த வேளையில் உனது மகன் போராளி அமைப்பில் தன்னைப் பிணைத்துக் கொண்டதையிட்டு நீ பெருமைப்பட்டுக் கொண்டதை எனது தையிட்டி நண்பன் தயாளசீலன் எனக்குக் கூறியிருந்தார்.
அவ் வேளைகளில் உன்னால் உருவாக்கப்பட்ட படைப்புக்களான “மண்ணுக்காக” திரைப்படமும், “சந்தனக்காடு” நாடகமும் தமிழ்த் தேசிய விடுதலைப் போருக்கு வலுச் சோப்பதாகவே அமைந்திருந்தது. உன்னால் வெளியிடப்பட்ட கவிதைத் தொகுப்பும், இயற்றப்பட்ட இசைப்பாடல்களும் கூட அது குறித்த உருவகங்களே.
புஸ்பராஜா எழுதிய “ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்” என்ற நூலில் உனது பெயர் பலதடவை குறிக்கப்பட்டும், உனது மனைவி திலகமணி ஈழ விடுதலைப் போராட்டம் ஆயுத மயமாக்கப்பட்ட தருணங்களில் பங்களிப்புச் செய்த பெண்களில் முன்னுரிமை பெற்றவர் என்றும் எழுதப்பட்டுள்ளதை இங்கு பதிவுக்குள்ளாக்க விழைகின்றேன். ஏனெனில் உங்களது பங்களிப்புக்கான ஆதாரங்கள் பல்வேறு முனைகளில் இருந்து கிடைக்கப் பெறுகின்றன. ஆதன் மூலம் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஏதாவதோர் பக்கங்களிலாவது உங்களது பங்களிப்பு செறிவாக்கப்பட வேண்டும் என்று அவாவுறுகின்றேன்.
எனது தமிழ் ஆசிரியை குறமகள் வள்ளிநாயகி கணேசமூர்த்தி குறித்த நினைவுகளை “ஈழநாடு” பத்திரிகையில் எழுதுகையில் இந்திய இராணுவம் அமைதிப்படையாக வந்திறங்கிய நாட்களில் முன்பு விரட்டப்பட்டு ஓடிய காங்கேசன்துறைச் சமூகம் சங்கக்கடைக்கு வந்து தமக்குரிய பொருட்களைப் பெற்றுச் செல்லும் போது கடைசி முறையாகச் சந்தித்தோம். அவர் அப்போதும் எந்த அமைப்போடும் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. “இனிச் சமாதானம் வருமென்று நினைக்கிறீர்களா ரீச்சர்?” என்று கேட்டார். “தமிழீழம் வராவிட்டாலும் மாகாண ரீதியான சமஸ்டி வரக்கூடும். இந்தியத் தலையீடு எப்படியும் சமாதானத்தைக் கொண்டு வரத்தானே வேண்டும் என்றேன்”. “நடந்ததை விட மோசமான யுத்தமும் நமக்கு அழிவும் தான் வரும். நான் சொன்னதை நீங்கள் ஒருக்காலும் மறக்க மாட்டீர்கள்” என்று கணேசமூர்த்தி கூறியதைப் பதிவாக்கியுள்ளார்.
எனவே சர்வதேச அரசியலைத் தெளிவாகப் புரிந்து கொண்ட கணேசமூர்த்தியிடம் இந்தியத் தலையீடு குறித்த தெளிவான விளக்கம் இருந்ததை இதன் மூலம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.
1986 டிசம்பரில் நான் விடுதலையாகி வெளிவந்த சில நாட்களில் இளந் தமிழர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த பாரதி விழாவுக்குச் சென்றிருந்தேன். விழாவில் பட்டி மன்ற நிகழ்வும் ஒன்று. பட்டி மன்றத் தலைப்பு “குற்றவாளிக் கூண்டில் இந்திய சமாதானத் தூதுவர்கள்”. என்னையும் அதில் கலந்து கொள்ளுமாறு கணேசமூர்த்தியும், நண்பர் பாப்பாவும் “அழுங்குப்பிடி” பிடித்தார்கள். இறுதியில் பட்டி மன்றத் தீர்ப்பாளராக அந்த மன்றிலே பங்குபற்றியிருந்தேன்.
கணேசமுர்த்தி அவர்கள் “இந்திய சமாதானத் தூதுவர்கள் குற்றவாளிகளே” எனப் பல்வேறு ஆதாரங்களையும், புள்ளிவிபரங்களையும் முன்வைத்துச் சொற்போர் புரிந்தார். எனவே இந்தியா குறித்த அவரது நிலைப்பாடு தேடலோடு இணைந்த ஆழ்ந்த அரசியல் பிரக்ஞையை உள்ளடக்கியதெனலாம்.
நினைத்துப் பார்க்கின்றேன். 1976ம் ஆண்டு. தின்னவேலி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ் மாணவர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த வழக்காடு மன்றம். வழக்காடு மன்றத் தலைப்பு: “குற்றவாளிக் கூண்டில் தமிழ் ஈழப் பிரிவினை வாதிகள்”. தமிழ் ஈழப் பிரிவினை வாதிகள் குற்றவாளிகள் அற்றவர் என்ற தரப்பில் கருணானந்தசிவம், கணேசமூர்த்தி, சிவதாசன் போன்றோர்.
மறுபுறத்தில் குற்றவாளிகளே என வாதம் புரியப் புதுமைலோலன், நாவேந்தன் போன்ற மிகச் சிறந்த பேச்சாளர்கள். அந்தச் சொற்போரிலே கணேசமூர்த்தி சிங்களப் பேரின வாதத்தின் விளைவே தமிழ் பிரிவினைவாதம் எனவும் அதன் உருவாக்க்தினால் விளைந்ததே தமிழீழப் பிரிவினை வாதிகள் என்றும் அடுக்கடுக்கான ஆதாரங்களை முன்வைத்து மிகச் சிறப்பாக சொற்பொழிவாற்றியிருந்தார்.
இளந் தமிழர் மன்றம் காங்கேசன்துறையிலே பாரதி விழாவை இரு நாட்கள் நடத்துவார்கள். முதல் நாள் யாழ் மாவட்டம் அடங்கலாக நாடகங்கள் கொணரப்பட்டு அதில் ஐந்து சிறந்த நாடகங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் நாடகப் போட்டி இடம்பெறும். இரண்டாவது நாள் பட்டிமன்றம், கவியரங்கம், மன்ற நாடகம் , பரிசளிப்பு வைபவம் எனத் தொடரும்.
அவ்வேளைகளிலே கணேசமூர்த்தி முதல் நாள் நாடக நடுவராக மறுநாள் பட்டிமன்றம், கவியரங்கம், மன்ற நாடகம் என அனைத்திலும் பங்குறும் பன்முக ஆளுமை கொண்ட கலைஞனாகப் பரிணமித்ததை இன்றும் என்னால் நினைவுகூரக் கூடியதாக உள்ளது.
சிறுவயதில் எனக்குப் பேசுவதற்கு பேச்சு எழுதித் தந்தவராக, வாசிப்பதற்கு கவிதை எழுதித் தந்தவராக இருந்தவர் நீங்கள். ஒருவகையில் எனக்கு நீங்கள் ஆசிரியரும் கூட. நான் இன்று அந்த மண்ணிலே உயிரோடு இருந்திருந்தால் தரையோடு வீழ்த்தப்பட்ட அந்தப் புன்னகை தவழும் உடல் தாங்கிய அந்தப் பேழையை எனது தோள் சுமந்திருக்கும். அதனால் என் மனமும் பரித்திருக்கும்.
இன்று ஒட்டாத மண்ணில் உயிரைச் சுமந்து கொண்டு “பயங்கரவாதி” என்ற பட்டத்தையும் காவிக் கொண்டு அலைந்து திரியும் பறவை நான்.
எதைத் தான் என்னால் செய்வது? இதையே நான் தருவேன். ஏற்றுக் கொள்ளுங்கள்.
எல்லோரையும் போல
மரணத்தைக் கண்டு
நானும் அச்சப்படுகின்றேன்
ஆனாலும் கதவைத் தட்டாமலே
உள்ளே நுழைந்து கொண்டு
உன்னை மரணத்திற்கு
அழைத்துச் சென்ற
அந்த மரண தூதுவர்கள்
எனக்கு
மிகப்பெரிய அச்சத்தை
ஏற்படுத்துகிறார்கள்
ஆனாலும்
மரணத்தை
வெல்லும் உனது வாழ்வு
எனது வாழ்க்கை
பற்றிய பிடிப்பில்
மீண்டும் என்னை
அழைத்துச் செல்கிறது.
1 comment:
Well Done Murali Anna....
Post a Comment