Saturday, July 18, 2009



அவன்

-நடராஜா முரளிதரன்-

நான் வேலைக்குச் சென்ற போது அங்கே அவன் நின்றிருந்தான். தலைமயிர் ஒட்டவெட்டப்பட்டுச் சொக்கைகள் அல்லது கன்னங்கள் பருத்து அழுக்கான உடைகளோடு அலங்கோலமான “பூட்ஸ்களையும்” அணிந்திருந்தான் அவன். எங்கேயோ வெறித்துப் பார்த்தவாறு “குத்துக்கல்லாக” ஆடாமல் அசையாமல் சிறிது நகர்ச்சிக்கும் தன்னை ஆட்படுத்திவிடாதவாறு அவன் அமர்ந்திருந்ததாகவே எனக்குப்பட்டது.

எப்போதும் உரிய நேரத்தில் வேலைக்குப் போய்ப் பழகியிராத நான் அன்றும் பிந்தியே வேலைக்கு வந்திருந்தேன். வந்தவுடன் அவன் குறித்து பெரிதும் அக்கறைப்பட எனக்கு நேரம் கிடைக்கவில்லை. ஏதாவது “டிலிவறி” இருக்கிறதா என்று பார்த்துவிட்டு கையுறைகளை மாட்டிக்கொண்டு இருபது கிலோ கொண்ட ஒரு பெட்டி “சிக்கின்விங்ஸை” “மரனைட் சோஸில்” கலந்து குழைத்து நீண்டு, அகன்ற பெரிய அலுமீனியத்தட்டுக்களிலே வரிசையாக நிரைப்படுத்த ஆரம்பித்த போது ஓயாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் “24 மணி” நேர தமிழ் வானொலிப்பெட்டியையும் முறுக்கி விட்டேன். வழமையாக இவ்வாறுதான் எனது நாளாந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துக் கொள்வேன். நான் பணிபுரியும் இடம் “பீஸா” மற்றும் “சிக்கின்”(கோழி) போன்ற வகையறா உணவுகளைத் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் வீடுகளுக்கே கொண்டு சென்று விநியோகம் செய்யும். அத்துடன் நேரில் வருபவர்களுக்கும் தயார் நிலையிலுள்ள உணவுப் பட்டியலுக்கிணங்க அவர்களுடைய தேர்வுப்படி உணவுகளைத் தயாரித்து வழங்கும்.

முதலாளியும் தன்பாட்டுக்கு ஒவ்வொரு நாளும் பாடும் பல்லவியை அன்று மீண்டும் பாட ஆரம்பித்தான். “அண்ணை எக்கச்சக்கமான வேலைகள் கிடக்குது. கெதியாய் முடியுங்கோ. முடிச்சுப்போட்டு ஒருபெட்டி ‘பிறைசும்’(உருளைக்கிழங்கு நீள்நறுக்குகள்), ‘ஒனியன்றிங்சும்’ (வெண்காய வளையங்கள்) வேண்டி வரவேணும். அதோட ‘பாங்கில’ காசும் ‘டிப்போசிற்’ பண்ண வேணும். இல்லாட்டில் ‘செக்’ துள்ள வேண்டியதுதான். காசையும் முதல் போட்டதுமல்லாமல் எவ்வளவு முறி முறிஞ்சும் ஒரு பிரயோசனமும் இல்லாமல் இருக்கு. வியாபாரத்தை வித்துப்போட்டு எங்கையாவது போய் வேலை செய்தால் சம்பளமாவது மிஞ்சும்”; என்ற வகையில் விரிந்து செல்லும் நீண்ட பல்லவி அது. “முதலாளிமார் எண்டால் இப்பிடித்தான் அழுவினம். உதுகளையெல்லாம் நம்பக்கூடாது. கள்ளப் பயலுகள்” எண்டு எனது உள்மனம் சொல்லிக் கொண்டாலும் வளர்ச்சியடைஞ்ச கனடா மாதிரியான நாடுகளிலை சிறுவியாபாரம் செய்வதென்பது கஸ்ரமான விசயமாயும் தோன்றியது. ஆனாலும் முதலாளியட்டை இருக்கிற வைப்புச்சொப்பு கனக்க எண்டில்லை. இருக்கிறது சும்மா மூண்டு வீடும், மூண்டு வாகனமும் மட்டுந்தான். அதிலையொண்டு புத்தப்புது “பென்ஸ்”, மற்றதொண்டு “லீசிலை” எடுத்த “ரொயொட்டா” ராவ் மொடல் ஜீப். கடைசியாய் வேண்டின வீடு சுமார் 4000 சதுர அடிக்கு மேலை.

அதற்கிடையில் புதிதாய் வந்து “குத்துக்கல்லாய்” குந்தியிருப்பவனின்; ஞாபகம் வரவே “உதார் புது ஆளாய் கிடக்குது” எண்டு முதலாளியை நோக்கி ஒரு கேள்விக்கணையை வீசினேன். அந்தக் கேள்வியின்ரை வீச்சிலை “என்ர வேலையைப் புடுங்கிக் கொண்டு போக அவன் வந்திருப்பானோ எண்ட ஐமிச்சமும்” உள்ளடங்கியிருந்தது. முதலாளி ஒரு காலை இழுத்தவாறே நடப்பான். அவ்வாறு நடந்துகொண்டே “உந்தாள் எங்கடை தமிழ் பெடியன்தான், பக்கத்திலை இருக்கிற “ஷெல்ரரிலை” இருக்கிறார். சாப்பாடு, படுக்கையெல்லாம் குடுக்கினம். கிழமையிலை ஒருக்கா 25 டொலரும் கிடைக்கும.; குடுத்து வைச்ச ஆள். நாங்களெண்டால் எவ்வளவு “பில்லுகளைக்” கட்டவேணும். இந்த நாட்டு அரசாங்கம் இப்பிடியான ஆக்களுக்கு எவ்வளவு உதவிகளைச் செய்யுது. அவருக்கு ஒரு பிரச்சினையும் கிடையாது. கவலை இல்லாத மனிசன்” என்ற அறிமுக விளக்கத்தை எனக்குத் தந்தான் .

அப்போது மீண்டுமொரு தடவை அவனைப் பார்ப்பதற்காக அவனை நோக்கி எனது பார்வை நீண்ட போது அவனது கண்கள் என்னை நோக்கியே நிலை கொண்டிருந்ததை என்னால் உணரமுடிந்தது. நான் அதை அவதானித்த அக்கணத்தில் உண்மையில் தடுமாறிப் போய்விட்டேன். ஆனாலும் அதனை வெளிக்காட்டாமல் ஒருவாறு சமாளிப்பில் ஈடுபட்டவாறே அவனை நோக்கிச் சிரிப்பொன்றை உதிர்த்தேன். அவனும் மெலிதாகத் தலையை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டான். நான் மூன்று வேலைகளை ஒரு கணத்தில் நிகழ்த்தும் வித்தைக்காரனாகக் கைகள் “சிக்கின்விங்சுடனும்”;, ஓர் காது “24 மணி நேர வானொலிப்பெட்டியின் காற்றலைகளிலும்” மறு காது முதலாளியின் “கதைகளை” உள்வாங்கியும், இவை எல்லாவற்றிற்கும் மேலதிகமாக மூளை தன் ஆளுமையின் மேலாண்மையினை நிலைநாட்டும் பொருட்டு இவ்வாறான வினைத்திறன்களுக்கு ஏற்றபடியான கருத்தாடல்களுக்குத் தன்னைத் தயார் நிலைப்படுத்தியும் அதிஉச்ச வேலைகளைச் செய்து கொண்டிருந்தன.

இடையே தொலைநகலியில் “டிலிவறி ஓடர்” வருவதற்கான சப்தம் எழஆரம்பித்து அதற்கான “கட்டளை” அச்சாகும் ஒலி தெளிவாகக் கேட்க ஆரம்பித்தது. எனது பிரதான பணி “டிலிவறி ஓடர்களை” காரில் எடுத்துச் சென்று விநியோகிப்பதே. அதை விடுத்து மற்றவைகள் எல்லாம் வேலை செய்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக மேலதிகமாக இடப்பட்ட பக்கப் பணிகளாகும்.

முதலாளிதான் பிரதான சமையற்காரன். அவன் தொலைநகலியில் வந்த “ஓடரைக்” கிழித்தெடுத்துப் பின் அடிமட்டத்தை வைத்து அரைவாசியாகக் குறுக்கறுத்து ஒருபாதியைத் தனக்கும் மறுபாதியை எனக்கும் தந்துகொண்டான். இரு பாதிகளும் ஒரே தகவல்களையே கொண்டிருக்கும். உணவு விநியோகம் செய்யவேண்டியவரின் பெயர், முகவரி, தொலைபேசிஇலக்கம், வழங்கப்பட வேண்டிய உணவுவகைகள் என அந்த வரிசை அமைந்திருக்கும்.

முதலாளி தான் எடுத்துக் கொண்ட பாதித்துண்டில் குறிப்பிட்டிருந்த உணவுகளைத் தயாரிக்க ஆரம்பித்திருந்தான். நான் எனக்கான பாதியில் குளிர்பானங்கள், “சோஸ்” போன்ற சில்லறைச்சாமான்கள் கேட்கப்பட்டுள்ளனவா என்பதைப் தேடிப்பார்த்துத் பிடித்து “பொலித்தீன்” பையொன்றுள் அவற்றைப் பத்திரப்படுத்திக் கொண்டேன். முதலாளி “பீஸா” ஒன்றையும், இரண்டு ‘பவுண்ட்ஸ்’ “சிக்கின் விங்ஸையும்” சமைத்து முடித்து அதற்கான பெட்டிகளுக்குள் அவற்றை நுழைத்தான். நான் சகல உணவுப்பொருட்களையும் சூடாக வைத்திருப்பதற்காகவெனப் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட சிகப்புநிற நீள் சதுரப்பையினில் பத்திரப்படுத்திக்கொண்டு புறப்படத் தயாரானேன். எனது “கொண்டா” நீலநிறக் கார் கடையின் பின்புறம் அமைந்துள்ள தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

அந்தச் சமயம் பார்த்துக் “குத்துக்கல்லாய்” குந்தியிருந்தவன் இருக்கையில் இருந்து எழும்பியவாறே “அண்ணை நானும் உங்களோடை வரட்டே” என்று கேட்டான். “அதுக்கென்ன பிரச்சினையில்லை. வாங்கோ கதைச்சுக்கொண்டே போய்க் குடுத்திட்டு வருவம்” என்று பதில் கூறினேன். அவனும் மகிழ்ச்சியோடு அதனை ஏற்றுக்கொண்டு காரின் கதவினைத் திறந்து முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டான். நான் காரினை இயக்க ஆரம்பிப்பதற்கு முன்னர் விநியோகப்படுத்த வேண்டிய உணவுகள் உள்ளடங்கியிருந்த சிகப்புநிற நீள்சதுரப்பையினை அவனிடம் நீட்ட அவன் அதனை வாங்கித் மடியினில் வைத்துக்கொண்டு “சீட்பெல்ற்றினால்” தன்னை இறுக்கிக் கொண்டான்.

நான் காரை ஆறுதலாகப் பின்வழமாகச் செலுத்திப் பக்கவாட்டுச் சாலை வழியாகப் பிரதான வீதியான “புளொருக்குள்” நுழைத்து வலப்பக்கமாக வெட்டித் திருப்பினேன். பொங்கிப் பிரவாகித்திருந்த சூரியனின் ஒளிக்கதிர்கள் கார்கண்ணாடியூடே பாய்ந்து வந்து என் கண்களைக் குத்திக் கூசச்செய்தன. நான் மடிந்து கிடந்த சூரிய ஒளித்தடுப்பினை விரித்து விட்டவாறு வளைந்து, நெளிந்து கிடந்த சாலையில் தொடர்ந்து காரைச் செலுத்திக் கொண்டிருந்தேன். அடர்ந்து செறிந்த சூரியஒளிப்பாய்ச்சல் சாலையின் இருபுறத்தையும் மஞ்சள் மயப்படுத்தின. அந்த வெய்யில் குளியல் ஏற்படுத்திய வெக்கையின் மணம் என் நாசித்துவாரங்கள் வாயிலாக நுரையீரலை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சாலையோரங்களிலே ஆங்காங்கே தென்பட்ட நிழல்பரப்ப முடியாத இலைகளை இழந்த மரங்கள். வானமும், பூமியும் ஓடிச்செல்லும் வாகன இரைச்சல்களாலும், வெளித்தள்ளப்படும் புகைகளாலும் மாசுபடுத்தப்பட்டுக் கொண்டிருந்தன.

இரண்டாம் உலகயுத்தத்தின் பின்னர் கனடாவில் குடியேறிய போர்த்துக்கீசக்குடியேறிகளும், அவர்களின் சந்ததியினரும் பெருமளவில் அந்தப் பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். பழைய “பிரிட்டிஷ்” கட்டடக்கலை சார்ந்து செங்கற்களைக் கொண்டு கட்டியமைக்கப்பட்ட குடியிருப்புக்களே பெரும்பாலும் வீதியின் இரு புறங்களிலும் அமைந்திருந்தன. பல்லாண்டு காலப்பழமை வாய்ந்த அந்தச் செங்கற்கள் மீது ஐதான கருமை நிறம் படர்ந்திருந்தது. வெடித்தும், பிளந்தும் காணப்பட்ட சில சுவர்கள் சீமெந்து பூசப்பட்டுச் சரிசெய்யப்பட்டிருந்தன. அவ்வாறான பழம்பெருமை வாய்த்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட கட்டடங்களின் வெளிப்புறம் திருத்தவேலைகளுக்கு உட்படுத்தப்படும்போது அவற்றின் வடிவம் மாற்றியமைக்கப்படக் கூடாது என்ற “ரொறொன்ரோ மாநகரசபையின்” கடும் நிபந்தனையும் வழமையான முதலாம் உலக நாடுகளின் நகரங்களுக்கே உரித்தானமுறையில் இங்கும் கடைப்பிடிக்கப்பட்டது.

ஒரு வருடத்துக்கு மேலாக இந்தக் கடையின் உணவு விநியோக கார்ச்சாரதி வேலையில் இருப்பதனால் அந்தப் பிரதேசத்துக்குள்ளே அமைந்துள்ள ஒவ்வொரு சந்துபொந்;துகளும் எனக்குத் தண்ணிபட்டபாடுதான். ஆனால் கனவுகளிலே திளைத்துக்கொண்டும், சஞ்சரித்துக்கொண்டும், நண்பர்பளோடு கைத்தொலைபேசியில் அரசியல், கலை, இலக்கியம் போன்ற வாதப்பிரதிவாதங்களை நிகழ்த்திக் கொண்டும் இவ்வாறான கடமையைப் புரியும் எனக்கு உணவு விநியோகம் செய்யவேண்டிய சரியான முகவரியைத் தவறவிட்டு மூன்று, நான்கு முறையென்று ஒரேயிடத்தையே சுழன்றுசுழன்று வட்டமடிக்கும் சூழ்நிலையும் அவ்வப்போது ஏற்படுவதுண்டு.

அப்போது “புளோர்” வீதியில் வாகனங்கள் நிறைய ஓடிக் கொண்டிருக்கவில்லை. ஆனாலும் வாகனத்தை என்னால் வேகமாகச் செலுத்த முடியாது, ஏனெனில் பாதசாரிகள் வீதியைக் குறுக்கறுக்கும் விசேடவழிகளும், “சிக்னல்” ஒளிவிளக்குகளுமாகவே அவ்வீதி அமையும். எனவே ஆறுதலாகக் “காரினை” செலுத்திக் கொண்டிருந்தேன். பக்கத்தில் அமர்ந்திருந்த “குத்துக்கல்லு” இளைஞன் எந்த வார்த்தையும் பேசாமல் முகத்தில் எத்தகைய பிரதிபலிப்புக்களையும் வெளிப்படுத்தாது உறைந்தநிலையில் காட்சி புரிவதாகவே எனக்குத் தோன்றியது. எவ்வாறு உரையாடலை இன்னொருவரிடம் ஆரம்பிப்பது என்பதில் எப்போதும் எனக்குச் சங்கடம் நேர்ந்துவிடுவதில்லை. எந்தவிதக் கூச்சமும், தயக்கமும் இல்லாமல் முன் தயாரிப்பு ஏற்பாடுகள் இல்லாமல் என்னால் எந்த அந்நியரோடும் சம்பாசித்துவிட முடியும்.

எனவே எந்தப் பீடிகையுமில்லாமல் “எப்பிடித்தம்பி இருக்கிறியள்” என்று உரையாடலைத் தொடங்கினேன். அவன் அதற்கு வாயைத்திறந்து பதிலளிக்காமல் முகத்தைச் சிறிதாக அசைவுக்குட்படுத்தி, கண்களைச் சிறிது விரித்து, உதடுகளைச் சுருக்கி எதையும் பேசாமல் மௌனத்தில் ஆழ்ந்தான். ஆனாலும் நான் விடுவதாயில்லை, “தம்பி யாழ்ப்பாணத்திலை எந்த ஊர்” என்று தொடர்ந்தேன். அப்படி ஊரைப்பற்றி நான் விளிக்கையில் “உப்பிடியெல்லாம் கேள்வி கேக்கிறது படுபிற்போக்குத்தனமானது, “யாழ்ப்பாண மையவாதம்” தனது மேட்டுக்குடி மேலாதிக்கத்தைத் தொடர்ந்தும் புலம்பெயர் வெளிகளிலே தக்கவைப்பதற்கான அணுகுமுறைகளில் ஒன்றாகவே இவ்வகையான உரையாடல்களைப் பகுப்பாய்வு செய்து கட்டுடைத்தல் வேண்டுமென்று” அண்மையில் நான் சென்றிருந்த ஏதோ ஓர் தமிழ் கலை இலக்கிய ஒன்றுகூடலிலே யாரோ ஒருவர் அறைந்து கூறியது என் ஞாபகப்பரப்பில் விரிந்தது. மேலும் அந்தப் பேச்சாளரின் சொல்லாடல்களில் கூறுவதாயின் என்னுடைய “பரவணிப்” பழக்கம் அந்தக் கோட்பாட்டுக்கு இசைய மறுத்தது. மேலும் மனம்தளராது என்னால் மேற்கொள்ளப்பட்ட வலிந்த முயற்சிகளால் அவன் தொடர்பான சிறிதளவான தகவல்களையே அவனிடமிருந்து திரட்டிக்கொள்ள முடிந்தது உணவு விநியோகத்தைச் செய்துமுடித்துத் திரும்புவதற்குள்.

பருத்தித்துறையைச் சேர்ந்த அவனது தாயும், தந்தையும் இலங்கை அரசாங்கத் திணைக்களமொன்றில் எழுதுவினைஞர்களாகப் பணியாற்றியவர்கள். தற்போது இருவரும் உயிருடன் இல்லை. ஏறத்தாள இருபது வருடங்களுக்கு முன்னமே தான் கனடா வந்து விட்டதாகவும் அதற்கு முன்னரான இறுதிக்காலங்களில் தான் யாழ்பாண நகரத்திற்கு அண்மையில் உள்ள திருநெல்வேலிப்பகுதியில் வசித்து வந்ததாகவும் மிகவும் சுருக்கமாகவே தான் தொடர்பான விபரங்களை எனக்கு ஒப்புவித்தான். இந்த ஒப்புவிப்புக்கு இடையிடையே வாழ்க்கை குறித்த தனது சலிப்பையும் அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டிருந்தான். அவனை உத்தியோகபூர்வமாக அத்தாட்சிப்படுத்தக்கூடிய அடையாள அட்டை உட்பட வங்கிக்கணக்கு இலக்கம், தொலைபேசி இலக்கம் என எதனையும் அவன் கொண்டிருக்கவில்லை. அதெல்லாம் இருப்பதும், இல்லாமல் விடுதலும் அவனைப் பொறுத்த வரையில் ஒன்றுதான் போலும். அன்று எங்கள் கடைக்கு வரஆரம்பித்தவன் ஒவ்வொரு நாள் காலையிலும் நான் வேலைக்கு வரமுன்பே அங்கு எழுந்தருளியிருந்தான்.

இடைக்கிடை இவ்வாறு என்னோடு உரையாடிக் கொண்டான். “ஏன் நீங்கள் இந்த வேலை பாக்கிறியள், வேறை ஏதாவது நல்ல வேலை எடுக்கலாந்தானே?” “சும்மா தேவையில்லாமல் இதுக்குள்ளை நிண்டு கொண்டு வாழ்க்கையை அநியாயமாக்கிறியள்.” இதை விட்டுவிட்டு வேறை நல்ல வேலை எடுக்கலாமோ, எடுக்கேலாதோ என்பது குறித்த சரியான விடை எனக்குத் தெளிவில்லாததாக இருந்தபோதிலும் எனதுநிலை குறித்துச் சற்று அவனுக்கு விளக்குவது எனது கடனாயிற்று. “தம்பி பத்து வருசத்துக்கு மேலை இந்த நாட்டிலை வாழுறன். இன்னும் நான் அகதியாய் இந்த நாட்டிலை ஏற்றுக்கொள்ளப்படாததாலை வதிவிட அனுமதியோ, எதுவுமோ கிடைக்கேல்லை. அதைவிட “இமிக்கிறேசன்” சம்மந்தப்பட்ட வழக்குகள், அதுக்கும் மேலாலை இந்த நாட்டு அரசாங்கம் என்னைப் பிடிச்சு வைச்சுக் கொண்டு அனுப்ப வெளிக்கிட்ட வேளையிலை எல்லாம் அதனைத் தடுத்து நிறுத்திறதுக்காய் நீதிமன்றத்தின் தடைஉத்தரவைப் பெற என்ரைமனிசி பின்ளையளையும் இழுத்துக் கொண்டு உந்த உலகமெல்லாம் ஓடித்திரிஞ்சது. ‘இமிக்கிறேசன் பேப்பர்’ இல்லாத மகளை யூனிவர்சிற்றியிலை படிப்பிக்கப் பட்டபாடு ………. இப்படியான கனவிசயங்கள் காரணமாய் நானும் என்ரைகுடும்பமும் என்ன பாடுபட்டிருப்பம் எண்டு நினைக்கிறியள். நல்லாய் படிச்சுப்போட்டு வதிவிட அனுமதியோடை வந்த சனங்களே இங்கை தங்கடை தொழில்சார் பயிற்சிக்கேற்ற வேலையெடுக்N;கலாமல் ‘கோப்பை’ கழுவிக்கொண்டும், ‘ராக்சி’ ஓடிக்கொண்டும், ‘பேப்பர்’ போட்டுக்கொண்டும் திரியிறது உங்களுக்குத் தெரியுந்தானே. அதுக்காண்டி உந்தவேலையளைச் செய்யிறதை தரக்குறைவாய் பாக்கிற ஆளும் நானில்லை” என்று என்ரை முழு விசயங்களையும் அவனுக்கு அக்குவேறை, ஆணிவேறையாய் ஒரேயடியாய் சொல்லமுடியாட்டிலும் கொஞ்சமாய் சொன்னன். இன்னும் கொஞ்சம்கூடச் சொல்லியிருக்கலாம்தான், ஆனால் அவனுடைய பாவனைகள் எண்டு சொல்லும்போது உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய அவனது உடல்மொழியைக் கண்டுகொள்வதிலை அல்லாவிடில் அதனைப் பின்தொடர்ந்து கலைச்சுக் கொண்டு போறதென்பதிலை என்னைப் பொறுத்த வரையிலை அது எனக்குச் சாத்தியாமாய் இருக்கேல்லை எண்டு சொல்லிறது இன்னும் கூடப் பொருத்தமானது. அத்தோடு அவனது சிலநடவடிக்கைகள் எனக்கு விசித்திரமாகவும் பட்டது. அவன் தான்அணிந்திருந்த அழுக்கான உடைகளை மாற்றுவது குறித்தோ அல்லது குளித்துத் தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்வதென்பதிலோ அக்கறை கொண்டிருக்கவில்லை. ஆனால் நேரத்துக்குநேரம் நன்றாய்ச் சாப்பிடவேண்டும். அவனுக்குச் “ஷெல்ரரிலையும்” சாப்பாடு கிடைத்தது. அந்தச் “ஷெல்ரரும்” கூட எங்கடை கடைக்குப் பக்கத்திலைதான் இருந்தது. அதைவிடவும் அந்தப் பகுதியிலை இருந்த சில தேவாலயங்களிலை இலவசஉணவு வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததனால் சில சமயங்களிலை அதையும் அவன் பயன்படுத்திக் கொண்டான். ஆனாலும் எங்கடை கடையிலை சமைக்கப்படும் “சிக்கின் விங்ஸ்” அவனுக்கு ருசியாய் இருந்திருக்க வேண்டும். எனவே ஒவ்வொரு நாளும் அதைச் சாப்பிடுவதிலை அவன் குறியாய் இருந்தான். அவன் கடையிலை ஒருவரோடையும் பேசாமல் தனியே அமர்ந்திருந்த வேளையிலெல்லாம் அவனுடைய கண்கள் “சிக்கின் விங்ஸையே” குறி வைத்தபடி இருந்தன.

கிழமை நாட்களில் நானும் முதலாளியும் பகலிலை வேலை செய்தாலும் மாலை நேரங்களிலை இன்னொரு “வேலையாள்” எங்களோடு இணைந்து கொள்வார். முதலாளி நிலைமையைப் பார்த்து ஏழு அல்லது எட்டு மணிக்கு கிளம்பி விடுவான் வீட்டுக்கு. அந்த வேலையாள் சகலகலா வல்லவர். இருபது வருடமாக இந்தத் தொழிலிலை இருப்பதாலை அவரால் சமைக்கவும் முடியும். மேலதிகமாகத் தேவைப்படும் போதெல்லாம் சமைத்துக் கொண்டே “டிலிவரிச்” சாரதியாகவும் பணி புரிவார். அவர் முதலாளி இல்லாத வேளைகளில் அவனுக்கு மிகவும் பிரியமான “சிக்கின் விங்ஸை” நன்றாகச் சுடவைத்து ஒரு துண்டு பீஸாவுக்கு மேலே ஏற்கனவே சிறுதுண்டுகளாக வெட்டப்பட்ட வெண்காயத்தையும், மிளகாயையும் தூவி ஒரு காகிதத்தட்டிலே வைத்துக் கொடுப்பார். எனவே ஒவ்வொரு நாளும் இறுதிவரை அந்தச் சாப்பாட்டை அவன் எதிர்பார்த்துக் காத்துக்கிடப்பதாகவே எனக்குத் தோன்றும். அதை நினைத்துப் பார்க்கும் போது பகிடியாகவும் இருக்கும் சில வேளைகளில். ஆனால் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஒரே உடுப்பையே தோய்க்காமல் அவன் உடுத்திக்கொண்டு திரிவது எனக்குச் சிலவேளைகளில் எரிச்சலை ஏற்படுத்தியது. ஏனெனில் கடை திறந்து மூடும் வரை பெரும்பாலான நேரம் எங்களோடுதான் அவன் தனது பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான்.

உடுப்பு என்பது வெளிவேசம் தான். பல வேளைகளில் இந்த வேசத்தையே சமூகம் முன்னுரிமை கொடுத்து எடைபோட முயலுகிறது. அப்படி வெளிவேசம் என்றால் ஒவ்வொருவரினதும் உள்ளுணர்வுகளின் வெளிப்பாடுகள் ஏற்படுத்தும் உந்துதலினால்தானே இந்த வேசம் எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது தீர்மானிக்கப்படுவதாகக் கொள்ளலாமா? பற்றுக்கள் குறைந்த ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு உடை குறித்த நாட்டம் ஒப்பீட்டுஅளவில் மற்றையோரைக்காட்டிலும் தாழ்ந்ததாக இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா? என்ற வகையில் எழுந்துநின்ற கூற்றுக்கள் என் மூளைநரம்புகளை ஊடறுத்தபடி இருந்தன.

எப்படியாயினும் அணிந்திருக்கும் உடைகளைத் தோய்த்து, உலர்த்தி போட்டுக் கொள்ளலாம்தானே, அதிலென்ன பிரச்சினையிருக்கிறது, உடல்நலத்திற்கும் அதனால் நன்மை பயக்கும், மற்றவர்களுக்கும் அது அசௌகரியத்தைத் தராது என்றே நான் கருதினேன். அதை அவ்வப்போது நினைக்கும் போதெல்லாம் அதை அவனிடம் நேரில் போட்டு உடைத்துவிட வேண்டுமென்ற உத்வேகம் கிளர்ந்தும், அடங்கியும் என்னுள் உழன்றபடி அலைந்து திரிந்தது. அன்று அதற்கான வாய்ப்புக் கிடைத்தது போலும். நான் உணவுப் பொதிகளைத் தயார்படுத்திக் கொண்டு “டிலிவறி” செய்வதற்காக எனது காரை நோக்கிப் புறப்பட்டுக் கொண்டிருந்தவேளை பார்த்து அவன் நானும் வரட்டுமா? என்று என்னைக் கேட்டான். ஏதோ தெரியவில்லை நானும் திடீர் ஆவேசப்பட்டவனாக “நான் இனிமேல் உம்மைக் காரில் ஏத்திறதாய் இருந்தால் நீர் குளிச்சு, தோய்ச்ச உடுப்புகளை மாத்திக்கொண்டு வரவேணும், அதுவரைக்கும் என்ர ‘காரிலை’ உம்மை ஏத்தப்போறதில்லை” என்று உரத்த குரலில் கூறிவிட்டு அவனது பதிலுக்குக் காத்திராமல் விசுக்கென்று கிளம்பிவிட்டேன்.

நான் காரை எடுத்துக்கொண்டு உணவுவிநியோகத்தை முடித்து மீண்டும் கடைக்குத் திரும்பும் வரைக்கும் எனது மனதுக்குள் நான் நடத்தி முடித்திருந்த சம்பவம் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தது என்னை நோக்கி. எனது அகத்தனிமையில் “நான் அப்படி அவனை நோக்கிக் கூறியது சரியா? பிழையா?” என்பது குறித்து எழுந்த விவாதமே அது. அது குறித்த முடிவான தீர்மானத்திற்கு என்னால் இலகுவில் வந்துவிட முடியவில்லை. ஆயினும் அந்த நிகழ்வு தந்த பாதிப்பிலிருந்து என்னால் மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். இந்தக் கனடா நாட்டுக்குக்குள் நான் புகுந்து பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் எனது அகதிக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும் கூறுவதாயிருந்தால் எனது அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதன் தொடர்ச்சியாக நான் தலைமறைவாகிப் போய்விடலாம் என்ற காரணத்தை முன்வைத்து கனடியஅரசால் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படுவதற்காகச் சிறையில் வைக்கப்பட்டிருந்தேன். பின் அந்த நாடுகடத்தல் உத்தரவுக்கெதிராக என்னால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த சமஷ்டிநீதிமன்ற நீதிபதியின் உத்தரவினால் தற்காலிகமாக அந்த வெளியேற்றத்திலிருந்து தப்பிப்பிழைத்து எனது குடும்பத்தோடு இணைந்து வாழ்கின்றேன். எந்தச் சந்தர்ப்பத்திலும் மீண்டுமொருமுறை நான் கைது செய்யப்படலாம் கனடாவை விட்டுத்துரத்துவதற்காக. அதற்கு இந்த நாட்டுச்சட்டத்திலே இன்னும் இடமிருக்கிறது. எனக்கு இந்த நாட்டிலே வேலை செய்வதற்கான அனுமதிப்பத்திரம் இன்னும் வழங்கப்பட்டிருக்கவில்லை. இங்கு வாழும் சகலருக்கும் உரித்தான இலவச மருத்துவச்சிகிச்சை பெறுவற்கான சான்றிதழ் பத்திரம் கூட என்னிடம் இல்லை. இவை குறித்த நான் தொடர்பான சில தகவல்களையாவது அவன் அறிந்து வைத்திருக்க வேண்டுமென்றே நான் எண்ணியிருந்தேன்.

நான் “டிலிவறியை” முடித்துக்கொண்டு வந்து கடையின் பின்புறம் அமைந்திருந்த கார்த்தரிப்பிடத்தில் எனது “காரை” நிறுத்திவிட்டு சிறிது நேரம் “காரை” விட்டு வெளியே இறங்காமல் உள்ளே அமர்ந்து கொண்டிருந்தேன். மீண்டும், மீண்டும் எனது நினைவுப்பொறிகளுக்குள் சுழன்று கொண்டிருந்தது அவன் குறித்த சிந்தனைகளே. வெண்பஞ்சு மேகங்கள் வானத்தில் நகர்ந்து கொண்டிருந்தன. அதற்குக் கம்பளம் விரித்தாற்போன்று பின்னணியில் இளநீலம் பரந்த வான்பரப்பில் அப்பிக்கிடந்தது. அதற்கும் கீழே நெரிசல்களாய் காணப்பட்ட வீடுகளின் கூம்பு வடிவில் அமைந்த கூரைகள் முளைத்திருந்தன. எனது பார்வையைத் தரையை நோக்கித் தாழ்த்தினேன். அவன் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவ்வாறே எனக்குப்பட்டது. நான் எனது பக்க கார்க்கண்ணாடியைத் பதித்துக்கொண்டேன். என்னிடம் வந்த அவன் மிக நிதானமாக என்னை நோக்கிக் கூறிய வார்த்தைகள் “உங்களுக்கு எப்ப ‘வேர்க் பெர்மிட்’ (வேலை அனுமதிப்பத்திரம்) கிடைக்குதெண்டு சொல்லுங்கோ, அண்டைக்கு நான் குளிச்சுப்போட்டு என்ரை உடுப்புக்களைத் தோய்ச்சுப் போட்டுக்கோண்டு வாறன்”.


Tuesday, July 14, 2009

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான ஜனநாயகத் தேர்தல்
-நடராஜா முரளிதரன்-

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலே புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களில் ஒருசாரார், இந்தப் பத்தியை எழுதிக்கொண்டிருக்கும் இக்கணம் வரை இலங்கையில் வாழும் தமிழ்மக்களுக்குச் சிறிலங்கா அரசுகள் தொடர்ந்து இழைத்து வரும் அநீதிகள் தொடர்பாகக், குறிப்பாகத் தற்போதைய ராஜபக்ச அரசின் தமிழ் மக்கள் மீதான மிலேச்சத்தனமான அடக்குமுறைகள் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி, தமிழ் பேசும் மக்களுக்கான சுயநிர்ணய உரிமை, தமிழ் பேசும் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் என்ற அடிப்படையில் தலையீடு செய்யக் கோரி கவன ஈர்ப்புப் போராட்டங்களை எவ்வித இடைநிறுத்தல்களும் இன்றித் தொடர்ச்சியாக அமெரிக்கத் தூதரக, அரசு அலுவலகங்களுக்கு முன்பாக நிகழ்த்தி வருகிறார்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்பு இராணுவரீதியாகக் களத்திலே தோற்கடிக்கப்பட்ட பின்னும் இந்தப் போராட்டம் எத்தகைய விட்டுக்கொடுப்பும் இன்றித் தொடருகின்றது. கடந்த மே மாதம் 19ம், 20ம் தேதிகளுக்கு முன்னர் இங்கு வாழும் தமிழ்மக்களுக்கு இத்தகைய போராட்டங்கள் தொடர்பாக இருந்த ஆர்வம் தற்போதைய சூழ்நிலையில் குன்றியிருந்த போதிலும் இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

விடுமுறை நாட்களில், மாலை வேளைகளில் கணிசமான அளவு மக்கள் இந்தப் போராட்டங்களில் கலந்து கொள்ளக் கூடுகின்றார்கள். கடந்த வாரம் திங்கட்கிழமை மாலை வேளையில் எனது ஊரான காங்கேசன்துறையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அந்தப் போராட்டத்திலே தங்களை ஈடுபடுத்தியிருந்தார்கள். இவ்வாறான போராட்டங்களின் போது எழுப்பப்படும் பல்வேறு கோசங்களில் ஒன்றாக விடுதலைப் புலிகள் அமைப்பை அங்கீகரிக்குமாறு வேண்டுவதும், தடையை நீக்குமாறு கேட்பதும் வழக்கம். எவை எப்படியிருந்த போதிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசின் இராஜாங்கத் திணைக்களம் சென்ற கிழமை மீண்டும் அறிவித்துள்ளது.

அவ்வறிவிப்பில் விடுதலைப் புலிகளினால் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிகக் கடல் கடந்த “தமிழ் ஈழ அரசு” என்ற அறிவிப்பினை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், தொடர்ந்து அந்த அமைப்பை ஓர் பயங்கரவாத அமைப்பாகவே கருதுவதாகவும் குறிப்பிடுகிறது அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம்.

இதேவேளை, பயங்கரவாதத்தைக் களைந்து ஜனநாயக ரீதியில் உரிமைகளை வென்றெடுக்கப் போவதாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிக்கை வரவேற்கத்தக்கதெனவும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீது நம்பிக்கை ஏற்பட இன்னும் நீண்ட காலம் எடுக்கும் எனவும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள உயரதிகாரி “கிரெக் சுல்வியான”; தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இன்று சந்தித்துள்ள புதிய சவாலை எதிர்கொள்வதற்கு ஒரு பொதுக்கொள்கையின் கீழ் வடிவமைக்கப்பட்ட பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே இன்றைய காலச் சூழ்நிலையின் வரலாற்றுக் கட்டர்யமாகும் என்ற தர்க்கத்தின் இயங்குதளத்தில் அங்கு வாழும் மக்களினது இன்றைய யதார்த்த நிலையினை அடிப்படையாக வைத்துச் சிந்திப்பதுதான் சரியானதும், நேர்மையானதும் என்ற வகையிலே விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலகத் தலைமை சிந்திப்பதாகத் தெரிகின்றது.

தாயகத்தின் தற்போதைய நிலையில் - சிறிலங்கா அரசின் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களினதும் போராளிகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், அவர்களின் நலன்களைப் பேணுதல், மக்கள் தமது வாழ்விடங்களில் விரைவாக மீளக்குடியேற வழி செய்தல், அவர்கள் தமது இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கு ஆவன செய்தல், போரில் தமது உடல் உறுப்புக்களை இழந்திருக்கும் மக்களுக்கும், போராளிகளுக்கும் புது வாழ்வளித்தல் என்பன அதற்குள் உள்ளடக்கம்..

இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அப்பாவிப் பொதுமக்களைப் புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள அமெரிக்க அரசு ஜனநாயக நெறிமுறையில் இணைந்து கொள்வது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மெய்யான அர்ப்பணிப்பு இருக்க வேண்டும் எனவும், அவர்களது ஜனநாயகம் நோக்கிய பயணத்தை அமெரிக்க அரசு மிக உன்னிப்பாக அவதானிக்கும் எனவும் குறிப்பிடுகின்றது.
1997ம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகளை ஓர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனம் செய்து வந்துள்ளது அமெரிக்க அரசு.

இங்குதான் எனது கேள்விகள் எழுகின்றது. அமெரிக்கா போன்ற அரசுகளின் வெளிநாட்டுக் கொள்கையை இவ்வாறான போராட்டங்கள் முழுவதுமாக மாற்றியமைத்து விடுமா ? இந்தக் கேள்விக்கு இல்லையென்ற பதிலைக் கூறுவதற்கு எவரும் மிகப் பெரிய அரசியல் ஞானம் படைத்தவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் எமது பிராந்தியத்திலே புவியியல் ரீதியில் மிக நெருக்கமாக அமைந்துள்ள இந்தியா போன்ற பேரரசுகளின் மூலம் கிடைக்கப் பெறும் அரசியல், இராணுவ, பொருளாதார நலன்களைக் காட்டிலும் எம்மிடமிருந்து எதுவும் கிடைக்கப் போவதில்லை அமெரிக்க அரசுக்கு. எனவே குறுகிய காலநோக்கில் உடனடிக் கால அட்டவணைக்கான நிகழ்ச்சி நிரலின்படி தென்னாசியாவுக்கான இந்து மகாசமுத்திரத்தில் தற்காலிகமாக இந்தியாவின் மேலாண்மையை ஆதரித்தாக வேண்டிய கடப்பாடு அமெரிக்காவுக்கு உண்டு. இது ஒப்பீட்டளவில் தன்னால் முழுமையாக உடன்படவும், முரண்படவும் முடியாத நாடாகிய சீனாவைக் கட்டுப்படுத்த ஓரளவுக்கு உதவக் கூடும.;

இந்த அடிப்படையின் மீதே இவை தொடர்பான எமது மொழியாடல்களைக் கட்டமைக்க வேண்டும். நடந்து முடிந்த இனப் படுகொலையை நாம் உட்பட யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. உலகம் எங்கும், தமிழ்நாட்டிலும் எழுச்சிமிகுந்த போராட்டங்கள் தமிழர்களால் நடத்தப்பட்டது. எத்தனையோ இராஜதந்திர நகர்வுகளை நாம் மேற்கொள்வதாகக் கருதிக்கொண்டு மிகுந்த நம்பிக்கையின் பேரில் செயற்பட்டோம். இருந்தபோதும் உலக நாடுகளை ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக வென்றெடுப்பதில் தோல்வியையே தழுவிக்கொண்டோம்..

தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்து அனைத்துலக அளவில் எழுந்த கண்டனங்கள் வெற்றுச் சுலோகங்களாக நம் கண் முன்னேயே வீழ்ந்து மடிந்தன. தவிர அந்தப் படுகொலையை தடுத்து நிறுத்தவோ அல்லது போராளி இயக்கத்தைப் பாதுகாக்கவோ யாருமே முன்வரவில்லை.

ஆனால் சிறிலங்கா அரசாங்கமோ தற்போதைய உலக ஒழுங்கை நன்கு புரிந்துகொண்டு இந்து சமுத்திரப் பிராந்தியப் புவிசார் அரசியலை நன்கு பயன்படுத்தியும், அனைத்துலக ஒழுங்கு முறைமை இயங்கும் நடைமுறையைக் கருத்திற்கொண்டும் உலக நாடுகளை அது தனது பக்கம் பெரும் அணியாகச் சேர்த்துக் கொண்டு தமிழர் தேசம் மீதான போரை நடத்தியது.

இந்த இராஜதந்திரக் காய்நகர்த்தல்களின் பின்னணியிலேதான் மே மாதம் 27 ஆம் தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் சிறப்பு அமர்வில் சிறிலங்கா அரசு மேற்குலகின் எதிர்ப்பையும் மீறி வெற்றி ஈட்டியது. தொடர்ந்தும், அனைத்துலக சமூகத்தினை நுட்பமாக கையாண்டவாறு சிங்களப் பெருந்தேசியவாத மேலாண்மையை தமிழ் மக்கள் மீது திணிக்கவே சிறிலங்கா அரசு முயல்கிறது.

எனவே அடுத்த கட்டப் போராட்டத்தில் நாம் தனித்து நின்று செயற்பட்டு வெற்றி பெற முடியாது. பாதிப்புற்றிருக்கும் நமது மக்களுக்கு ஆதரவாக உலகை எவ்வாறு திருப்பப் போகிறோம்?

உலக ஒழுங்கு அறத்தின் பாற்பட்டுச் சுழல்வதல்ல. அது தனது நலன்கள் என்ற அச்சில்தான் சுழன்று கொண்டிருப்பது. ஆகவே இத்தகைய உலக ஒழுங்கில் நமக்கு ஆதரவாக உலக நாடுகளை வென்றெடுப்பது சாத்தியமாகுமா? இவ்வாறான விமர்சனங்களையே தமிழ்த் தேசியச் சார்பாளர்கள் முன் வைக்கின்றார்கள்.

எனவேதான் நாம் புதிதாய், புதிய சூழலில் சிந்திக்கத் தலைப்பட வேண்டுமாயிருந்தால்
தமிழ் மக்களுக்குள் உள்ளும், வெளியுமாய் ஜனநாயகச் சூழலுக்கான அத்திவாரம் கட்டமைக்கப்படுதல் வேண்டும். கேள்விகள், சந்தேகங்கள், மாற்றுக்கருத்துகள் ஆரோக்கியமான சமூக வாழ்வின் சகஜமான நிகழ்ச்சிப் போக்குகளாகும். வேகமாய் இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்ற விதியை நாம் ஏற்பவர்களாக இருக்கும் பட்சத்தில் புலம் பெயர் வாழ்தமிழ்மக்களால் தற்போது திட்டமிடப்பட்டிருக்கும் நாடு கடந்த நிலையில் தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய தமிழ்மக்கள் சார்ந்த அனைத்துக் கட்சிகளும் பங்குபற்றுவதற்கான ஜனநாயகத் தேர்தல் ஒன்றினை நாம் ஏன் நிகழ்த்த முடியாது?

அவ்வாறு நிகழ்த்துவதன் மூலம் ஈழத்தமிழ்மக்களுடைய அரசியல் உரிமைப் போராட்டத்தினை வரலாற்றின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியும்.
தேடும் என் தோழா
-நடராஜா முரளிதரன்-

சூரியப் பந்தத்தைக்
கைகளால் பொத்தி
அணைத்து விட்டு
சந்திரனுக்கு ஒளியைப்
பாய்ச்சி விடும்
கைங்கரியத்தில்
ஆழ்ந்து போயிருக்கும்
என் தோழா

நீ புனைவுக்காரன்
சூனியமான சந்திரனைப்
பிரவாகம் கொள்ள
வைத்தது
உனது கவிதைகள்தான்
என்று கூறுவாய்

பாய்ந்து வந்த
கோடானுகோடி
கதிர் வெள்ளத்தின்
நதிமூலத்தை
அங்கீகரிக்க மறுத்த
கற்பனாவாதி நீ

சாவுக் களங்களில்
கொள்ளிக் குடங்கள்
துளையுண்டு
தண்ணீர் கொட்டும்
வேளைகள்
வாய்க்கரிசி நிறைந்து
வழியும் கணங்கள்
நட்சத்திரங்கள்
எரிந்து வீழும்
பொழுதுகள்
எனது கனவுகளைக்
குலைத்து விடுகின்றன

எனவேதான்
நித்தியத்தைத்
தேடியலைய
என் ஆன்மா
மறுத்து விடுகின்றது

ஆழ்ந்து மோனித்து
கடைந்தெடுத்து
உன்னையும் காணாது
என்னையும் கண்டடையாது
இறுமாப்பில் பெருமிதம்
கொள்ளும் என் தோழா

யுகங்களாய்
தொடரும் தேடல்கள்
முற்றுப்புள்ளியைத் தேடி
முடிவிலி வரை
பயணம் புரிகின்றன

Monday, July 13, 2009

அந்த இரவு
-நடராஜா முரளிதரன்-

இரவின் மீது பிரியமுடன்
நடந்து செல்லும்
நாளை நோக்கிக்
காத்திருக்கும் எனக்கு

ஒளியை இழந்த
அந்த இரவினைக் கடப்பது
என்றும் போல்
அன்றும் கடினமாயிருந்தது

சந்திரன் தொலைந்து
நட்சத்திரங்கள்
விழுங்கப்பட்ட
அந்த இரவு

காற்றில் எழுதப்பட்ட
வரிகளை
சுவாசிக்கவும்
திராணியற்ற
அந்த இரவு

காலமெல்லாம்
கிளர்ந்தெழும்
காமத்தை
மறுத்த
அந்த இரவு

உறைந்து போய்
ஒரு வெளியாய்
திரண்டு போயிருக்கும்
அந்த இரவு

எனக்கு வேண்டிய
சேதிகளைச்
சொல்ல மறுத்து
நிற்கிறது
அலைதலின் பின்னான குற்றச்சாட்டு
-நடராஜா முரளிதரன்-



எனது இருப்புக்கான
ஒரு கூடு தேடி
அலைதலில்
எத்தனை புனைவுகளை
இழிபேச்சுக்களை
ஒப்புதல் வாக்குமூலங்களை
கழுத்தை நெரித்த
மாலைசூடல்களை
இன்னும் என்னென்னவோ
எல்லாவற்றையும்
நான் காவிச் செல்லுகின்றேன்

நீயோ
எனைப் பார்த்து
எக்காளமிட்டுச் சிரிக்கின்றாய்
ஏனெனில்
மாட்சிமை தங்கிய
மகாராணிக்குப்
பிரியமானதைப்
படைத்துவிட்ட
குதூகலிப்பு உனக்கு

நான் அன்று
விட்டுப் புறப்பட்ட
கூடு
இன்றும்
சிறைப்பட்டே
சிதைந்து
போய்க் கிடக்கின்றது

இறக்கைகளை விரித்து
ஏகாந்தத்தைக் கிழித்து
மேலெழும்
என் அவா
என் நண்பர்களாலேயே
கேள்விக்கு
உட்படுத்தப்படுகின்றது

கோசங்களை ஓங்கியுரைத்து
உணர்ச்சிகளுக்குள்
உட்புகுந்து மறைவதில்தான்
எனது மக்கள்
எவ்வளவு
பிரியமாயிருக்கின்றார்கள்

இவற்றையெல்லாம்
போட்டுடைத்துப்
புதியவைகளை
நான் கூறப்
புறப்படுகையில்
காதுகளை அவர்கள்
அறைந்து மூடுகிறார்கள்

நான்
உரையாற்றுவதற்கெனத்
தயார்படுத்தப்பட்ட
மேடை குப்புறக்
கவிழ்க்கப்படுகின்றது
ஒலிவாங்கிகள்
பறித்தெடுக்கப்படுகின்றது
காற்று
எனது கருத்துக்களை
பறித்துச் செல்கிறது

முதுகுப் பின்னால்
இருந்து இன்னுமொருவர்
நீயும்
முன்னொரு காலத்திலே
இத்தகைய அடாவடித்தனங்களில்
ஈடுபட்டதாகக்
குற்றச்சாட்டு உள்ளதே
என்று குசுகுசுக்கின்றார்

சிவம்; மானுடத்தின் மீது காதல் கொண்ட மகத்தான மனிதர்

-நடராஜா முரளிதரன்-

என்னோடு கடந்த வாரம் சனிக்கிழமை இரவு ஏறத்தாள ஒன்றரை மணிநேரம் “சென்ற்.ஜோர்ஜ்” சப்வேக்கு அருகாமையில் இருந்த “ரொறன்ரோ” பல்கலைக்கழக மண்டபத்திலே நடைபெற்ற கூட்டத்தை முடித்துக் கொண்டு “ஸ்காபுரோ ரவுண்சென்ரர்” கார்த்தரிப்பிடம் வரை நடந்து கொண்டும், “சப்வேயிலே” பயணித்தபடியும் உரையாடிக்கொண்டே வந்த “சிவம்” என்ற கலை, இலக்கிய நண்பர் அதற்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை உயிர் பிரிந்திருக்கின்றார். பத்து வருடங்களுக்கு முன்னரே நான் அவரைக் கண்டிருக்கின்றேன். அப்போது அவர் பெயர் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆயினும் கரககரத்த அவர் “குரல் ஒலி” அவரை மற்றையோரிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்ற அடையாளமாக ஒலித்ததை என்னால் இன்னும் ஞாபகப்படுத்திக் கொள்ள முடிகிறது. அந்த நிகழ்வு ஏதோ ஓர் நூல் தொடர்பான “விமர்சனக் கூட்டத்தில்” ஏற்பட்ட சந்திப்பு என நினைக்கின்றேன். அன்று நான் அவரோடு அதிகம் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் கடந்த மூன்று வருடங்களாக அவரை அவ்வப்போது அடிக்கடி சந்திக்கும்படியான வாய்ப்புக்கள் ஏற்பட்ட வண்ணமேயிருந்தது. அவையெல்லாம் “இலக்கியச் சந்திப்புக்களாகவோ”, “நூல் வெளியீட்டு விழாக்களாகவோ”, “படைப்பிலக்கிய விமர்சனக் கூட்டங்களாகவோ” அல்லது இலங்;கையின் இனப்பிரச்சினை தொடர்பான “கருத்தரங்கங்களாகவோ” இருந்தன. அவற்றில் சில எனது வீட்டிலே கூட நடைபெற்றன. அந்தச் சந்திப்புக்களின் போதெல்லாம் அவர் என்னை நோக்கி வந்து “உரையாடலை” ஆரம்பிப்பது வழக்கமாயிருந்தது. அவர் என்னை நோக்கி, நோக்கியே வந்து கொண்டிருந்தார் என்பதே பொருத்தமான சொற்றொடர்.

முழுக்க முழுக்க இடதுசாரிச் சிந்தனைகளோடு பொதுவாழ்வுக்குள் பிரவேசித்த மனிதர் சிவம். தொழிலாளர்கள் தலைமையிலான “வர்க்கப் போராட்டத்தை” முன்னெடுத்து அதனை வெற்றிகொள்ளச் செய்வதன் மூலம் மனித சமூகத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் ஓரளவு வெற்றி கொள்ள முடியும் என்ற “பொதுவுடமைச் சித்தாந்தத்தின்” அடித்தளத்தில் வேரூன்றியிருந்த நம்பிக்கையின் பாற்பட்டது அது. “இடதுசாரிச் சிந்தனைகள்” பரந்தும், “தேசிய இன ஒடுக்குமுறைக்கு” எதிரான உணர்வுகள் மேலோங்கியும் ஒருங்கிணைந்த நிலையில் அரசியலுக்குள் உந்தப்பட்டவன் நான். இன ஒடுக்குமுறையின் கொடூரத்தால் பாதிக்கப்பட்டு அரசியலுக்குள் ஈர்க்கப்பட்ட பலரை “இடதுசாரிக் கருத்தியல்கள்” ஆகர்சித்திருக்கின்றன. அண்மைக்கால உலக வரலாறுகள் எங்கணும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களது விடிவு குறித்துப் பிரக்ஞை கொள்ளவோ, போராடவோ புறப்படுகின்ற வேளைகளில் பல்வேறு காரணங்களை முன்வைத்துப் பொதுவுடமைக் கோட்பாடுகளைப் புறந்தள்ள முடியாத அக, புறச்சூழ்நிலகள் அவர்களுக்கு ஏற்பட்டுவிடுகின்றன. அந்த வகையில் இங்கு என்னை விடப் பத்து வருடங்களுக்கு முன்னால் பிறந்திருந்த சிவம் அவர்கள் இளவயதிலேயே “சமதர்மக் கருத்துக்களால்” ஈர்க்கப்பட்டு அன்று அவர் வாழ்ந்த யாழ்ப்பாணச் சமூகத்தில் நிலவிய சாதீய அடக்குமுறைகளுக்கு எதிரான “சமூகப் போராளியாகப்” பொதுவுடமைக் கட்சியொன்றின் பின்னணியோடு முகிழ்த்தெழுகின்றார்.

1949களில் இந்திய-பாகிஸ்தானியப் பிரஜாவுரிமைச் சட்டம் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் 1960 களில் “தமிழ்த் தேசியம்” மிகவும் வலுப்படைத்ததாக மாறுகின்ற தருணங்களிலேயும் தமிழ் பேசும் மக்களிடையே தம்மின மக்கள் என்று கூறிகொள்வோரிடையே ஒரு சாரார் பிறிதோர் சாராரை மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட வகையில் சாதியின் பேரால் இழிநிலைக்கு உள்ளாக்குகின்ற கொடுமைகள் நிகழ்த்தப்பட்ட வண்ணமே இருந்தன. அவற்றின் கொடூரம் தற்போது தணிந்து காணப்பட்டாலும் நம்மவரிடையே சாதீயம் பல்வேறு வடிவங்களில் தொடரவே செய்கின்றன. சிவம் அவர்கள் வாழ்ந்த வடமராட்சிப் பிரதேசத்தில் சாதீய ஒடுக்குமுறைகள் உச்சம் பெற்றிருந்த காலகட்டத்திலே “தாழ்த்தப்பட்டவர்கள்” என்று கூறப்படுபவர்களுக்கு எதிராக மேல் சாதியினர் இழைத்த கொடுமைகளையெல்லாம் நேரிலேயே கண்டுகொள்ளும் வாய்ப்பு அவருக்கு இருந்திருக்கும். மற்றும் அவரது குடும்பப் பின்னணியில் பெரிய தந்தையார் பொன்.கந்தையா பொதுவுடமை இயக்கத்தின் தலைமைப்பீடத்தில் இருந்தவர். பருத்தித்துறைப் பாராளுமன்றத் தொகுதியில் பொதுவுடமைக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே தமிழர். அப்பகுதி மக்களிடையே பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த தன்னலமற்ற தியாகி அவர். எனவே இயல்பாகவே “மனிதநேயம்” கொண்ட எவரையும் பற்றியிழுக்கக் கூடிய பொதுவுடமைக் கருத்தியல் கோட்பாடுகள் சிவம் என்ற மனிதரையும் காலூன்ற வைத்திருக்கின்றது சமூக ஒடுக்குமுறைத் தளத்தில்.

ஆனாலும் 1980களில் சிறுபான்மையினரான தமிழ்பேசும் மக்களுக்கு எதிராகச் சிங்களப் பேரினவாதம் கொடுஞ் சூறாவளியாக சுழன்று சூறையாடிய வேளைகளில் சிவம் போன்ற சமதர்மப் போராளிகள் இன,மத,மொழி பேதமற்றுத் தொழிலாள வர்க்கம் தலைமை தாங்க வேண்டிய வர்க்கப் போராட்டத்திற்;கும் அப்பால் அசுரபலம் கொண்டு ஆர்ப்பரிக்கின்ற தேசிய இன ஒடுக்குமுறை குறித்துத் தீவிரமாகச் சிந்திப்பவர்களாக மாற்றம் பெறுகின்றார்கள் என்பதையே என்னால் உய்த்துணரக் கூடியதாக இருக்கின்றது. எனவே அத்தகைய தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுகின்ற தேசிய விடுதலைப் போராட்டம்; பொதுவுடமைக் கருத்தியல்கள் என்ற விழுதுகளைப் பற்றிக்கொண்டு எழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் கொண்டவர்களில் ஒருவராகவே சிவம் அவர்கள் அமைந்திருந்திருப்பார் அல்லது அமைந்துள்ளார்.

அவர் என்னை நோக்கி ஓடியோடி வந்த வேளையில் எல்லாம் குறைந்த பட்ச வேலைத்திட்டத்தின் அடிப்படையில்; மானுடத்தின் விடுதலையை நேசிக்கின்ற சக்திகளுக்கிடையில் ஓர் புரிந்துணர்வை, ஐக்கியத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்ற ஓயாத உந்துதல் அவர் மன ஆழத்தில் இருந்திருக்க வேண்டும். எனவேதான் அவர் என்னை மாத்திரமல்லாமல் இன்னும் பலரையும் நோக்கி ஓடிக்கொண்டே இருந்திருப்பார். இன்னும் சிலரை அவர் துரத்திக்கொண்டும் இருந்திருப்பதற்கான வாய்ப்புக்களைக் குறைத்து மதிப்பிடவும் முடியாமல் இருக்கின்றது. வெறுமனே தத்துவங்களை மாத்திரம் பேசிக்கொண்டிராமல் அரசியல், சமூக விடுதலைக்கான வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டுமென்று எண்ணுகின்ற நடவடிக்கையாளர்கள் வரலாற்றை முன்நோக்கி நகர்த்துவதற்கான அதீத ஆவலினால் இவ்வாறு உந்தப்பெற்று மிகச் சரியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அலைந்து கொண்டிருப்பார்கள். இவர்கள் தங்களை முன்னிறுத்திப் பிரபல்யம் பெறுகின்ற, இலாபம் தேடுகின்ற அரசியலுக்குள் தங்கள் மூக்கை நுழைத்துக் கொள்வதில்லை. இவர்களில் ஒருவராக “யார் குத்தியும் அரிசி ஆக வேண்டும்” என்பதால் தன் உளவியலை நிறைத்துக் கொண்டு திருப்தியடையும் மனிதராகவே சிவம் இப்போதும் என்முன் காட்சியளிக்கின்றார். சோவியத்யூனியன் சிதறுண்டு, பொதுவுடமை அரசுகள் வீழ்ந்து, செஞ்சீனத்துக்குள் திறந்த பொருளாதாரம் நுழைந்து பொதுவுடமைச் சித்தாந்தத்திற்கு என்னென்னவோ ஆகியபோதிலும், எப்படியிருந்த போழ்தும் சிவத்தின் ஆழ்மனம் அந்தச் சிந்தாந்தங்களை வலுவாக அணைத்தபடியே இருந்தது. அவை தொடர்பான விவாதங்கள் எங்கள் இருவரினதும் சம்பாசணைகளுக்குள் அகப்படாதபோதும் என்னால் அதை உறிதியாகக் கூறமுடியும். சிவம் என்ற மனிதரது வாழ்வியல் பரப்பென்பது எனது கண் நோக்கும் காட்சியெல்லைகளைக் கடந்தது. அவற்றில் நான் உற்று நோக்கும் சிறு துளிப்பிரதேசங்களைத் துல்லியப்படுத்துவதே இங்கு நான் மேற்கொள்ளும் வலிதான முயற்சி.;
கடந்த வருடம் நான் மற்றும் டானியல் ஜீவா, மெலிஞ்சிமுத்தன் ஆகிய மூவருமாக இணைந்து இலக்கியம் சார் உரையாடல்களுக்கான களத்தை இங்கு ரொறன்ரோவில் வேறோர் தளத்தில் திறப்பதற்கான முயற்சியை ஆரம்பித்திருந்தோம். பல்வேறு இலக்கிய நண்பர்கள் இலக்கியம் தொடர்பாக வௌ;வேறு வேலைத்திட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்கள் என்பதையும் இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும். இதன் முதற்கட்டமாக சில நூல்கள் குறித்த விமர்சனக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்கள் அனைத்திற்க்கும் சிவம் அவர்கள் உரிய நேரத்திற்கு வருகை தந்து விடுவதோடு மட்டுமல்லாமல் தனக்குத் தெரிந்த இலக்கிய ஈடுபாடு கொண்டவர்களையும் அழைத்துக் கொண்டு வருவார். இளங்கோ எழுதிய “நாடற்றவனின் குறிப்புகள்” என்ற கவிதைத் தொகுப்பிற்கான விமர்சன உரையாடலை நாங்கள் ஓர் நாள் நிகழ்த்திக் கொண்டிருந்தோம். அப்பொழுது எனது முறை வந்தபோது கவிதை விமர்சனத்துக்குள் நுழைவதற்கு முன்பாக நான் கவிதை என்பதை எவ்வாறு வரையறுத்துக் கொள்வது, எழுதப்படும் எல்லா வரிகளையும் கவிதைகளாகக் கொள்ளலாமா? என்பது குறித்துக் கருத்துக்களை கூற ஆரம்பித்திருந்தேன். நான் தொடங்கிச் ஒரு,சில நிமிடங்கள் ஆகியிருக்கும். சிவம் அவர்கள் வாயை ஒருபக்கம் இழுத்து முகத்தைக் கோணலாக்கிக் கொண்டு “முரளி உதை விட்டிட்டு விசயத்துக்குப் வோவம்” என்றார். அன்று நான் அந்த விமர்சனக் கூட்டத்திற்கு மயிலிட்டியைச் சேர்ந்த எனது நண்பன் அருளையும் அழைத்து வந்திருந்தேன். கூட்டம் முடிவடைந்து வீட்டுக்குச் சென்ற அருள் “ஏன் மச்சான் அவர் உன்னோடை உப்பிடிக் கதைச்சவர்” என்று தொலைபேசி மூலம் என்னிடம் விசாரித்தான். எனது நண்பன் இலக்கியப் பரிச்சயம் இல்லாதவன். அதற்கும் அப்பால் ஏன் அவர் அவ்வாறு சொன்னார் என்பதற்குப் பதிலாக நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் நோக்கில் பல்வேறு விடைகளையிறுத்து விடலாம். அவ்வாறு சொல்லப்படும் விடைகளில் சிலவோ, பலவோ என்னைக் கசப்பில் ஆழ்த்துவதாகவும் அமையலாம். எதுவாக இருந்தபோதிலும் விசயத்துக்குள் துரிதமாகச் சென்று விடவேண்டும் என்ற அந்தரமே அவ்வாறு அவர் கூறியதற்கான காரணமாக என்னால் கற்பித்துக் கொள்ள முடிகிறது.

மீண்டும் இக்கட்டுரையின் முதல் பந்திக்கு வருகின்றேன். என்னோடு கடந்த வாரம் சனிக்கிழமை இரவு ஏறத்தாள ஒன்றரை மணிநேரம் நடந்து கொண்டும், “சப்வேயிலே” பயணித்தபடியும் உரையாடிக்கொண்டே வந்த “சிவம்” எதையெல்லாம் பற்றி என்னோடு உரையாடிக்கொண்டு வந்தார் என்பதை பதிவுக்குள்ளாக்க வேண்டிய பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவே நான் கருதுகின்றேன். அப்போது எங்களோடு சிவத்தின் நண்பரான அருளும் உடனிருந்தார். அதில் ஓர் பகுதியை அவருடைய இறுதி அஞ்சலிக்கான கூட்டத்தின் போது உரையாற்றியவேளையில் நிறைவேற்றிவிட்டேன். மீண்டும் எழுத்தில் பதிவுக்குள்ளாக்க வேண்டியுள்ளது மிகச்சுருக்கமாக சில வரிகளில். “முரளி இன்று வன்னிப்பிரதேசங்களி;ல் வாழும், போராடும் பொதுமக்களோ , போராளிகளோ அல்லது போராளித் தலைவர்களோ கொல்லப்படக் கூடாது. அவர்கள் அனைவரையும் காப்பாற்றுவதற்கு எங்களால் முடிந்ததைச் செய்யவேண்டும்” என்ற வார்த்தைகளே சிவம் அவர்கள் என்னிடம் விட்டுச் சென்றவை.
எனவேதான் எம்மையெலாம் விட்டுப்பிரிந்து போன சிவம் என்ற அந்த மனிதரை “மானுடத்தின் மீது காதல் கொண்ட மகத்தான மனிதர்” என்று அழைக்க எனது மனம் அவாவுறுகின்றது.

அலைதலின் பின்னான குற்றச்சாட்டு
-நடராஜா முரளிதரன்-

எனது இருப்புக்கான
ஒரு கூடு தேடி
அலைதலில்
எத்தனை புனைவுகளை
இழிபேச்சுகளை
ஒப்புதல் வாக்குமூலங்களை
கழுத்தை நெரித்த
மாலைசூடல்களை
இன்னும் என்னென்னவோ
எல்லாவற்றையும்
நான் காவிச் செல்லுகின்றேன்

நீயோ
எனைப் பார்த்து
எக்காளமிட்டுச் சிரிக்கின்றாய்
ஏனெனில்
மாட்சிமை தங்கிய
மகாராணிக்குப்
பிரியமானதைப்
படைத்துவிட்ட
குதூகலிப்பு உனக்கு

நான் அன்று
விட்டுப் புறப்பட்ட
கூடு
இன்றும்
சிறைப்பட்டே
சிதைந்து
போய்க் கிடக்கின்றது

இறக்கைகளை விரித்து
ஏகாந்தத்தைக் கிழித்து
மேலெழும்
என் அவா
என் நண்பர்களாலேயே
கேள்விக்கு
உட்படுத்தப்படுகின்றது

கோசங்களை ஓங்கியுரைத்து
உணர்ச்சிகளுக்குள்
உட்புகுந்து மறைவதில்தான்
எனது மக்கள்
எவ்வளவு
பிரியமாயிருக்கின்றார்கள்

இவற்றையெல்லாம்
போட்டுடைத்துப்
புதியவைகளை
நான் கூறப்
புறப்படுகையில்
காதுகளை அவர்கள்
அறைந்து மூடுகிறார்கள்

நான்
உரையாற்றுவதற்கெனத்
தயார்ப்படுத்தப்பட்ட
மேடை குப்புறக்
கவிழ்க்கப்படுகின்றது
ஒலிவாங்கிகள்
பறித்தெடுக்கப்படுகின்றது
காற்று
எனது கருத்துகளை
பறித்துச் செல்கிறது

முதுகுக்குப் பின்னால்
இருந்து இன்னுமொருவர்
நீயும்
முன்னொரு காலத்திலே
இத்தகைய அடாவடித்தனங்களில்
ஈடுபட்டதாகக்
குற்றச்சாட்டு உள்ளதே
என்று குசுகுசுக்கின்றார்
என்னவர்களை நோக்கியே...
-நடராஜா முரளிதரன்-

தொடைகளுக்குள்
அழுந்தி நெரியும்
யோனிகளை
அளவளாவவே
எனது பார்வை
தெறித்தோடுகின்றது

முனைதள்ளி நிற்கும்
மேடுகளையும்
நுனிப்புல் மேய்ந்தவாறே

மனைவியோடு
பிள்ளையோடு
நண்பனோடு
பேசாத
கனிவான வார்த்தைகள்
அங்கு கொட்டுகின்றன

அன்றொரு நாள்
யேசு வாங்கிப்
பெற்றுக்கொண்ட
கற்களைக் கூடைகளில்
சேகரித்துக்கொண்டு
எறிவதற்காய்
எல்லோரையும் நோக்கி
குறிபார்த்தல்
தொடருகிறது.

வார்த்தைகளை
இரவல் வாங்கியவனாகி
விடக்கூடாது
என்பதற்காய்
வாசித்தலையே மறுத்து
துறவறம் பூணுகின்றேன்

ஆயினும்
பிரபஞ்சமெங்கணும் இருந்து
எனக்கான
படிமங்களை வேண்டியும்
இன்னும் அதற்கு மேலாயும்
இரந்து வேண்டி
இன்னுமோர் தவத்தில்
மோனித்திருப்பதாய்
கூறிக்கொள்ளுகின்றேன்

எனினும்
ஓங்கியொலிக்கும்
மனித ஓலம்
பெருக்கெடுத்தோடும்
மனிதக் குருதி
மூச்சுக் குழல்களை
அடைத்து நிற்கும்
பிணவாடை
என்னை மீண்டும்
என்னவர்களை
நோக்கியே
அழைத்துச் செல்கிறது
பிரிவினை கோரியதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன
-நடராஜா முரளிதரன்-



1962இல் இந்தியப் பிரதமராக இருந்த நேரு இந்தியா மீதான சீனப் படையெடுப்பின் போது இந்தியப் பாராளுமன்றத்தில் பிரிவினை கோருகின்ற, பிரிவினை வாதம் பேசுகின்ற கட்சிகள் தடை செய்யப்படும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றுகின்றார். அப்போது “அண்ணா” தலைமையிலான “திராவிடமுன்னேற்றக்கழகம்” அது வரை முழங்கிய, கோசித்த “திராவிடநாடு” தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டுக் கொண்டது.

காஞ்சிபுரத்தில் உள்ள தன் வீட்டுத் திண்ணையில் குந்தியிருந்து கொண்டாவது திராவிடத் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடாது இறுதிவரைக்கும் போராடுவேன் என்று கூறிய “அண்ணா” ஆயுதப் போராட்டத்தைத் தனது போராட்ட நெறியாக வரித்துக் கொள்ளாதவர். ஆயினும் அந்தக் கோசத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு தமிழகத்தில் உள்ள இடதுசாரி இயக்கங்களால் சாதிக்க முடியாத “மக்கள் அமைப்பைக் கட்டுதல்” என்ற வியாக்கியானத்தைத் தமிழகத்தில் செயற்படுத்திய வலுப்படைத்தவராக அண்ணா அவர்களைக் கருத முடியும்.

இவ்வாறான அண்ணா திராவிடநாடு பிரிவினைக் கோரிக்கையைக் கைவிடுகின்ற அவ்வேளையில் கூறிய வாசகம் இந்தியக் கூட்டாட்சி வரலாற்றிலே மிகப் பிரசித்தமானது. இன்றும் கூடத் தமிழக வரலாற்று ஆய்வாளர்களால் அவ்வாசகம் எடுத்தியம்பப்படுகின்றது.
நாங்கள் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம். ஆனால் பிரிவினை கோரியதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்ற கூற்றே அண்ணா கூறிய அந்தப் பிரசித்தி பெற்ற வாசகமாகும்.

மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி அதிகாரங்களை உள்ளடக்கிய மொழி வழி மாநிலங்களைக் கொண்ட இந்தியக் கூட்டாட்சி அமைப்பின் கீழ் தமிழ்மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட அன்றைய சென்னை மாநிலத்தின் சார்பிலே அண்ணா அந்த வாதத்தை முன்னெடுத்திருந்தார். எனினும் திராவிடத்தின் உள்ளடக்கமான ஆந்திர,கர்னாடக,கேரள மக்களது ஆதரவு கிஞ்சித்தும் அந்தக் கோரிக்கைக்குக் கிடைத்திருக்கவில்லை.

அந்த வாதம் முன்னெடுக்கப்படும் அவ்வேளைகளில் இந்திய இராணுவம் தமிழகத்தின் எந்த மூலைகளுக்குள்ளும் நுழைந்திருக்கவில்லை. அடக்குமுறை வெறியாட்டம் காட்டுமிராண்டித்தனமான வகையில் தமிழகத்து மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கவில்லை. உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான மனித உரிமை மீறல்கள் உச்சம் பெற்றதற்கான சாட்சியங்கள் அங்கு ஏதுமில்லை. அதற்காக அங்கு எல்லாம் இனிதே நிகழ்ந்தன என்று கூறவும் நான் முற்படவில்லை. அத்தகைய சூழ்நிலையிலே தொடர்ந்து அண்ணா எழுப்பிய முக்கிய கோசமானது “மத்தியிலே கூட்டாட்சி, மாநிலத்திலே சுயாட்சி” என்ற முக்கிய சுலோகமாகும். அந்தச் சென்னை மாநிலம்தான் பின்னர் அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் பெறுகின்றது.

இதைக் கூறிவிட்டு அறுத்துக் கொண்டு உடனே பின்னடைவுக்குள்ளான ஈழவிடுதலைக்கான போராட்டம் குறித்துக் கருத்துக் கூறுகின்ற குர்திஸ் தேசியவாதி “ஷெக்ஸ்முஸ் ஆமெட்” அவர்களிடம் செல்லவிரும்புகின்றேன். கடந்த சில வாரங்களாக இவர் ஈழப் போராட்டத்திற்கு இன்று ஏற்பட்டுள்ள நிலை குறித்துக் கூறிய கருத்துக்கள் இணையத்தள, மின் ஊடகங்கள் பலவற்றில் வெளியாகிப் பிரபலமடைந்துள்ளன. பின்னால் இந்த இருவர் கருத்துக்களுக்குமான தொடர்புகள் பற்றிப் பார்ப்போம். “ளூநஒஅரஒ யுஅநவ” அவர்கள் கூறுகின்றார், இன்று விடுதலைப் புலிகளின் ஈழ விடுதலைப் போராட்டம் பின்னடைவுக்குள்ளானது போன்று வரலாற்றில் குர்திஸ் மக்களும் தங்கள் விடுதலைக்கான போராட்டத்தில் பல்வேறு தடவைகள் தோல்வியடைந்துள்ளார்கள் என்று.

1925, 1938, 1946, 1975, 1988, 1991 என குர்திஸ் மக்கள் அடைந்த தோல்விகளின் வரலாற்றுப் பட்டியல் நீளுகின்றது. அது மட்டுமல்லாது இன்றும் அவர்கள் “குர்திஸ்தான்” என்ற தனிநாட்டை அமைப்பதில் வெற்றி பெற்றுக் கொள்ளவில்லை. அமெரிக்கத் தலையீட்டின் காரணமாக ஈராக்கில் அமைந்துள்ள “குர்திஸ்தான்” மாத்திரம் ஈராக்கிய மத்திய ஆட்சிக்குட்பட்ட வரையறுக்கப்பட்ட அதிகாரங்களையுடைய சுயாட்சிப் பிரதேசமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. அவர் மேலும் கூறுகையில் உங்கள் போராளிகள் இறுதிவரை நெஞ்சுரத்தோடு போராடி மரணித்த இவ்வரலாறானது உங்கள் மொழியில் அமையப்பெறும் பாடல்களிலும் , இலக்கியங்களிலும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் சாட்சியங்களாக எதிர்கால வரலாற்றில் அமையப் பெறும் என்று குறிப்பிடுகின்றார்.

தொடர்ந்து அவர் முன் வைக்கும் விமர்சனத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல் எதிர்பார்ப்புகள் மிக இறுக்கமானவை என்று கூறுகின்றார். “தங்களது தமிழீழத் தாயகக் கோரிக்கைக்குப் பரந்துபட்ட பன்னாட்டு ஆதரவு திரளாத நிலையில் இலங்கையில் தமக்கான சுயாட்சியை உறுதிசெய்யும் ஒரு கூட்டாட்சிக்கான ஒப்;பந்தத்தை ஏற்பதே யதார்த்த நிலையை ஒட்டிய தீர்வாக இருந்திருக்கும். அதே சமயம் இலங்கை அரசானது தொடர்ந்து தமிழ்மக்களின் ஆதார உரிமைகளை மீறும் பட்சத்தில் இந்தப் போராட்டத்தைத் தமிழ்மக்களின் அடுத்த தலைமுறையினர் முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றிருக்கவும் வழிவகுத்திருக்கும். அந்தக் கட்டத்தில் கூட்டாட்சி அடிப்படையில் அமைந்த தமிழர்களின் சுயாட்சி அரசுக்கு மேலதிக பன்னாட்டு அங்கீகாரம் கிட்டியிருக்க முடியும். தவிர, விடுதலைப்புலிகள் அமைப்பு “பயங்கரவாத அமைப்பு” என்ற முத்திரையுடன் மேற்கத்தேய அரசுகளால் தனிமைப்பட்டுப் போகாமல் இருந்திருக்கலாம்” என்ற வகையிலெல்லாம் அவருடைய விமர்சனம் அமைகின்றது.

ஆனால் தமிழ்த்தேசியத்தின் தீவிர ஆதரவாளர்களால் முன்வைக்கப்படும் வாதமானது சிறிலங்கா அரசானது எந்தச் சூழ்நிலையிலும் இனப்பிரச்சினைக்கு மாற்றுத்தீர்வாக ஒற்றையாட்சிக்கு அப்பாற்பட்டுத் தமிழ் பேசும் மக்களது பிரச்சினைகளுக்குத் தீர்வாக இதயசுத்தியுடன் “சமஸ்டி” அடிப்படையிலான எந்த அரைகுறைத் தீர்வையும் கூட நடைமுறைப்படுத்தத் தயாராக இருக்கவில்லை என்பதேயாகும். அதற்கான ஆதாரங்கள் வரலாற்றில் நிரம்பவே இருக்கின்றன. எனவேதான் “ஷெக்ஸ்முஸ் ஆமெட்” அவர்களின் மேற்கூறிய விமர்சனத்தில் உள்ள இலங்கையில் தமிழர்கள் தமக்கான சுயாட்சியை உறுதிசெய்யும் ஒரு கூட்டாட்சிக்கான ஒப்;பந்தத்தை ஏற்பதே யதார்த்த நிலையை ஒட்டிய தீர்வாக இருந்திருக்கும் என்ற விமர்சனத்தை நடைமுறைச் சாத்தியமானதுதானா என்ற தர்க்கத்த்pன் அடிப்படையோடு ஒப்பிட்டு நோக்க வேண்டியுள்ளது.

“உயிரோடு இருப்பதற்காக வெட்கப்படுகிறேன், எவ்வளவு இழப்புகள். எவ்வளவு குருதிப்பெருக்கு. யாவும் ஒடுக்கப்பட்ட, சொல்லமுடியாத துயரம் இந்த ஒரு வரியில் வெளிப்படுகிறது. நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரியே முடிவு செய்கிறான் என்று சொன்ன புரட்சிக் கருத்துகளை நேற்று வரை கொண்டாடி வந்த பலரும் இன்று வன்முறையிலான பாதை தவறானது. வன்முறையில்லாமல் நாம் அமைதியாகப் போராடி வெற்றி பெற வேண்டும் என்ற யோசனைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் .ரத்தம் சிந்தாமல் எந்த சமூகமும் மாறியதில்லை என்பதே வரலாறு திரும்பத் திரும்பச் சொல்லும் உண்மை. காந்தி வழியில் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்ற பள்ளிபாடச் சரித்திரம் உண்மையில்லை என்பதை இந்திய சுதந்திரப் போரில் வெள்ளையர்களால் அடிபட்டும், வன்கொலைக்கு உள்ளாகியும் இறந்தவர்களின் எலும்புகள் என்றும் சொல்லும். நான் வன்முறையை வளர்க்கச் சொல்லவில்லை. ஆனால் வன்முறை என்பது ஆயுதங்கள் ஏந்திப் போரிடுவது மட்டுமில்லை. அதிகாரம் மேற்கொள்ளும் அத்தனை செயல்களிலும் வன்முறை பீறிட்டுக் கொண்டுதானே இருக்கிறது” என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஸ்ணன் தனது இணையத்தளத்தில் பின்னடைவுக்குள்ளான ஈழப்போராட்டம் குறித்து எழுதுகிறார்.

ஏனவேதான் “ஷெக்ஸ்முஸ் ஆமெட்” அவர்களின் இறுதி விமர்சன வார்த்தைகளான “அறிவும் திறமையும் ஆற்றலும் கொண்ட ஈழத்தமிழ் மக்களே, இந்தச் தீயின் சாம்பலிலிருந்து நீங்கள் எழுவது நிச்சயம்! உம் கனவுகள் உயிரோட்டத்துடன் இருக்கட்டும், அப்போது துப்பாக்கித்தோட்டாக்களோ, வாக்குச்சீட்டுகளோ கொண்டு நீங்கள் ஈழத்தை அடைவதும் நிச்சயம்!” என்ற சொல்லாடல்களையும் பொருத்திக் கொண்டு அண்ணா மொழிந்த “நாங்கள் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம். ஆனால் பிரிவினை கோரியதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்ற வார்த்தைகளுக்குள் நுழைவதற்கான சாத்தியங்கள் குறித்து சிந்திக்கத் தலைப்படுகின்றேன்.