Thursday, August 31, 2006

ராஜீவ் காந்தி

-நடராஜா முரளிதரன்-

15 வருடங்களுக்கு முன்னர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது அவர் இந்திய நாட்டின் பிரதமராக இருக்கவில்லை. ஆனாலும் அவர் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று கூறப்படுகின்ற இந்திய தேசத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். ஆயினும் அன்று அவர் உயிரோடு இருந்திருந்தால் கொல்லப்பட்ட சில தினங்கள் கழித்து நடைபெற இருந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுப் பாரதப் பிரதமராக முடிசூடிக் கொண்டிருந்திருப்பார். விமான விபத்தில் சஞ்சய் காந்தி கொல்லப்பட்ட போது வலுக்கட்டாயமாக அரசியலுக்கு இழுத்து வரப்பட்டவர்தான் ராஜீவ் காந்தி. பின் இந்திரா காந்தியின் படுகொலையை அடுத்து அவரது வெற்றிடத்தை ராஜீவ் காந்தி நிரப்ப முற்பட்ட போது நவீன இந்தியாவின் நிர்மாணம் தொடர்பான சிந்தனைகள் இந்தியாவில் வலுப்பெறத் தொடங்கியிருந்த காலகட்டமாகும்.

நேரு, இந்திரா காந்தி போன்றவர்கள் இந்திய மக்களுக்குத் தலைமை தாங்கிய காலகட்டங்களில் சோசலிச முகாம் சார்ந்த அணிசேரா நாடுகள் அணியில் இந்தியா வகித்த பாத்திரம் “பனிப்போர்” உலகு சார்ந்த வகையில் மிகவும் முக்கியமானது. ஆயினும் ராஜீவ் காந்தி வருகையின் பின்னர் கணணி மயப்படுத்தப்பட்ட நவீன இந்தியா, திறந்த பொருளாதாரம் என மேற்குலகு நோக்கிய சாய்வினை இந்தியா துரித கதியில் மேற் கொள்ள ஆரம்பித்து விட்டது எனலாம்.

எனவே 1991 மேயில் எதிர்பார்க்கப்பட்ட ராஜீவின் மீள்வருகை இந்தியாவினை “உலகமயமாதல்” நிகழ்ச்சி நிரலுக்குள் மேலும் உந்தித் தள்ளும் நிகழ்வினை உள்ளடக்கிய வாய்ப்பினைப் பெரும்பாலும் கொண்டிருந்தது. எனவே உலக முதலாளித்துவமும், இந்தியத் தரகு முதலாளி வர்க்கமும் பெரும் எதிர்பார்ப்புடன் உறுதியான அரசியல் தலைமையை எதிர்பார்த்துக் கிடந்த காலகட்டத்திலே நடைபெற்ற ராஜீவ் படுகொலையானது இந்திய உபகண்டத்தில் சில மாற்றங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்கியது.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டுப் 15 வருடங்களுக்குப் பின்னரும் அக் கொலையினால் எழுகின்ற அரசியல் நிலைப்பாடுகள், அரசியல் தீர்மானங்கள், கொள்கை வகுப்பாய்வுகள் ஆகியவற்றின் பாதிப்புக்குள்ளாhன சமூகமாக ஈழத் தமிழர் சமூகம் தொடர்ந்தும் ஆட்படுத்தப்பட்டுள்ளதா? அல்லது இந்திய ஆளும் வர்க்கங்களின் வெளிவிவகாரக் கொள்கையின் அடிப்படையில் அமைந்த அரசியல் என்ற வகையறாவுக்குள் மட்டுமே உள்ளடக்கப்பட்ட பிரச்சினைதான் ஈழத்தமிழர் பிரச்சினையா? என்பதை முடிவுறா விவாதமாக ஈழத்தமிழர்களாகிய நாம் இன்றும் சுமந்து கொண்டு திரிகிறோம்.

அண்மையில் தமிழர் தரப்பு நிலைப்பாடுகளை உலகளாவிய ரீதியில் பரப்புரை செய்வதில் முதன்மைப் பிரதிநிதியாகத் திகழும் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ராஜீவ் படுகொலை குறித்து இந்தியத் தொலைக்காட்சிக்குத் தெரிவித்திருந்த கருத்துக்கள் கடந்த வாரங்களில் இலங்கை-இந்திய அரசியல் அரங்கில் சூடு பிடித்து ஒரு கலக்குக் கலக்கியமையை இங்கு நோக்கலாம்.

ராஜீவ் காந்தி படுகொலையை “மாபெரும் துயரம்” என வர்ணித்த அவர் சோகம் ததும்பிய இத்தகைய வரலாற்றுப் பெருந் துன்பியல் நிகழ்வுக்காக நாங்கள் மிகுந்த துயர் அடைவதாகவும் அத் தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியிருந்தார். மேலும் அவர் தொடர்கையில் “இந்திய அரசாங்கத்திடமும், இந்திய மக்களிடமும் நாம் வேண்டுவது யாதெனில் பெருந்தன்மையுடன் கடந்த காலத்தை ஒரு புறம் வைத்து விட்டு இலங்கை இனப்பிரச்சினையில் புதிய அணுகுமுறையுடன் கூடிய கையாளுதலை மேற்கொள்ளுங்கள் என்பதே” என்றும் சொல்லியிருந்தார்.

இந்திய இராணுவத்தின் சீக்கியப் புனிதப் “பொற் கோவில்” மீதான தாக்குதல் நடவடிக்கையைக் கண்டித்துப் பழிவாங்குதல் நடவடிக்கையாகவே சீக்கிய மெய்ப் பாதுகாவலர்களால் 1984 ஒக்ரோபரில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அந்தப் படுகொலையின் எதிரொலியாக இந்திய நாடெங்கணும் வாழ்ந்து வந்த பல்லாயிரக்கணக்கிலான சீக்கிய அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டும், அவர்களது சொத்துக்கள் எரித்து நாசமாக்கப்பட்டும் மனித சமூகமே வெட்கித் தலைகுனியும் வகையிலான வெறியாட்டம் சீக்கிய மக்களுக்கு எதிராக இந்திய மக்களால் (அதற்கான பொறுப்பை முழு இந்திய இந்திய சமூகத்திடமும் நாம் திணித்து விட முடியாது) நிகழ்த்தப்பட்டது.

அந்தச் சம்பவங்கள் எல்லாம் நிகழ்ந்து 20 வருடங்களுக்கும் மேலாகி விட்டன. ஆனால் இன்று சோனியா காந்தி வழங்கிய ஆசீர்வாதத்தால் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த மன்மோகன் சிங் அவர்கள் இந்திய நாட்டின் பிரதமராகப் பதவியில் உள்ளார். அதை ஏற்றுக் கொள்ளுமளவுக்கு இந்திய மக்களின் மனோநிலை மிகத் தாராள நிலையிலுள்ளது என்பதே இங்கு உற்று நோக்கப்பட வேண்டிய விடயமாகும்.

ஈழத் தமிழ் மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்குமான உறவு “தொப்புள் கொடி உறவு” என்று கூறுவார்கள். ஐந்து கோடிக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ் நாட்டில் வசித்து வந்த போதும் ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசு ஈழத் தமிழ் மக்கள் மீது இராணுவ அடக்குமுறையிலான மேலாதிக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கையை ஜே.ஆர் அரசுக்கு சாதகமாக ஏன் மேற்கொண்டது? என்பது சராசரித் தமிழ் மக்களது பார்வையில் பெரும் புதிராகவே தோன்றும்.

1987 யூலை மாதத்தில் ராஜீவ் காந்தியினால் உருவாக்கப்பட்ட “இந்திய-இலங்கை ஒப்பந்தம்” ஈழத் தமிழ் மக்களுக்காக இதுவரை காலமும் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களில் மிகவும் வலுவானது, தமிழ் மக்களுக்கு கூடுதல் உரிமைகளை வழங்க வல்லது என வாதிப்போரை இன்றும் எம்மிடையே நாம் காணலாம். இவர்கள் முன் வைக்கும் வாதமானது

(1) இலங்கை நாடென்பது பல்லின, பல் மத நாடாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இவ் அங்கீகாரமானது சிங்கள, பௌத்த பேரினவாதிகளின் பேரினவாதச் சிந்தனைக்கு சாவு மணி அடிப்பதாகும்.

(2) இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் படி இலங்கை என்ற நாட்டின் வட-கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களினதும், முஸ்லீம் மக்களினதும் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட தொடர்ச்சியான வாழ்நிலைப் பிரதேசங்களாகும்.

(3) இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் படி வடக்கு-கிழக்கு மாகாணங்களின் இணைப்பு என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது.

(4) இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் படி தமிழ் மொழி உத்தியோக மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

(5) அதி உச்சமாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 13வது அரசியலமைப்புச் சட்டச் சீர்திருத்தத்தின் மூலம் இலங்கை என்ற நாட்டில் அதிகாரப் பரவலாக்கல் முறை ஏற்படுத்தப்படுகின்றது. இதனூடாக மாகாண சபைகள் பிறப்பெடுக்கின்றன என்ற ஐந்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக அமைகிறது.

மறுபுறத்தில் ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானதைத் தொடர்ந்து இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான இந்திய அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த பல விமர்சனங்களும் உண்டு. இந்திரா காந்தியின் மரணச்சடங்குக்காக ஜே.ஆர் டில்லி சென்றிருந்த வேளையில் சம்பிரதாய முறைப்படி ராஜீவை சந்தித்துக் கொண்டார். அந்த முதற் சந்திப்பிலேயே ஜே.ஆரின் அரசியல் சாணக்கிய அணுகுமுறைக்குள் ராஜீவ் விழுந்து கொண்டதாகவும் அதனால் ராஜீவுக்கு ஜே.ஆரை நன்கு பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ராஜீவ் காந்தி பிரதமர் பதவியேற்று சிறிது காலத்துக்குள்ளாகவே இந்திராவுக்கு நெருக்கமாயிருந்த பார்த்தசாரதி போன்ற வெளிவிவகாரக் கொள்கை ஆலோசகர்களையும், இராஜதந்திரிகளையும் புறக்கணிக்கத் தொடங்கியிருந்தார். புதியவர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.

இதன் பின்னர் இலங்கை தொடர்பான இந்திய அணுகுமுறை கடுமையான போக்கிலிருந்து இலங்கை அரசு மீதான மென்மையான நட்புறவுடன் கூடிய புதியவகை அணுகுமுறையாக மாற்றம் பெற ஆரம்பித்தது. இதன் தொடர் விளைவாகவே போர்நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டு பூட்டானின் தலைநகரான திம்புவில் தமிழர் தரப்புக்கும், சிறிலங்கா அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகள் 1985 யூலை 8ம் தேதி ஆரம்பித்து ஆறு நாட்கள் வரை நடைபெற்றன.

இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு முன்பாக இந்திய அரசிடம் ஈழத் தேசிய விடுதலை முன்னணியானது ( புளொட், கூட்டணி தவிர்ந்த ஏனைய முக்கிய 4 தமிழ் அமைப்புக்களின் கூட்டு) ஆரம்பிக்கப்படவிருக்கும் திம்புப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையாக சிறிலங்கா அரசானது தமிழரின் இனப்பிரச்சினை குறித்து ஒரு உருப்படியான தீர்வுத் திட்டத்தை முன் வைக்க வேண்டும் எனச் சிறிலங்கா அரசினைக் கோருமாறு எடுத்தியம்பியது. அவ்வாறுகோரியமை இந்திய அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தியமையால் ஈழத் தேசிய விடுதலை முன்னணியானது இந்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளால் எச்சரிக்கப்பட்டு பல்வேறு வகையான அழுத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டமை என்பது வரலாறு. இவ்வாறு நிகழ்ந்த திம்புப் பேச்சுவார்த்தையின் போது தமிழர் தரப்பு ஒருங்கிணைந்து தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையின் அடிப்படையான பின்வரும் நான்கு மூலக் கோட்பாடுகளை முன் வைத்தார்கள்.

(1) தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனக் கட்டமைப்பைக் கொண்டவர்கள்.

(2) தமிழ் மக்களுக்கு இனம் காணக் கூடிய தனித்துவமான தாயகம் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளுதல்.

(3) தமிழர் தேசத்துக்கு எவராலும் பறித்தெடுக்க முடியாத சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளுதல்.

(4) சகல தமிழ் மக்களுக்கும் முழுமையான குடியுரிமை மற்றும் அடிப்படையான உரிமைகளும் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளுதல்.

இந்தக் கோட்பாடுகளைத் திம்புப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்ட சிறிலங்காத் தரப்பு ( ஜே.ஆரின் சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனா சிறிலங்கா அரச தூதுக் குழுவுக்குத் தலைமை வகித்திருந்தார்) இறுதிக் கோட்பாடு நீங்கலாக அனைத்தையும் முற்றாக நிராகரித்ததினாலும், அக் காலகட்டப் பகுதியில் வட-கிழக்கு மாகாணங்களில் அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட யுத்த நிறுத்த மீறல்களாலும் வரலாற்றிலே முதன்முதலாக இலங்கையின் எல்லைகளுக்கு அப்பால் இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக இடம்பெற்ற திம்புப் பேச்சுக்கள் முறிவடைந்து போயின.

இந்த முதலாவது (திம்புப் பேச்சுவார்த்தைகளில்) தோல்விக்குப் பின்னர் மீண்டும் ராஜீவ் தலைமையிலான இந்திய அரசு 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் தெற்காசிய நாடுகளின் ( சார்க் ) உச்சி மாநாடு பெங்க@ரில்">பெங்க@ரில் ஏற்பாடாகியிருந்த வேளையில் தமிழர் தரப்புக்கு மீண்டுமொரு நெருக்குதலைக் கொடுத்து ஜே.ஆரினால் முன் வைக்கப்பட்ட பிறிதொரு தீர்வுத்திட்டத்தை ( இத் தீர்வுத் திட்டத்தில் கிழக்கு மாகாணம் மூன்று கூறுகளாகாகப் பிரிக்கப்பட்டன) ஏற்குமாறு பலவந்தப்படுத்தியது.

இதன் மூலம் பெங்க@ர்">பெங்க@ர் சார்க் உச்சி மாநாட்டில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக இராஜதந்திர சாதனை படைத்து ராஜீவினதும், இந்தியாவினதும் ஆளுமை முத்திரையைப் பதித்து விட இந்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் எண்ண்pயிருந்தார்கள். விளைவு – தமிழர் தரப்பின் பிரதான அமைப்பு இவ் அரைகுறைத் தீர்வுத்திட்டம் தமிழ் பேசும் மக்களின் தாயகத்தைக் கூறு போடுகிறது என்று கூறி அத் திட்டத்தை அடியோடு நிராகரித்தது.

இந்தச் சந்தர்ப்பத்திலே நான் குறித்த ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது என எண்ணுகின்றேன். ஏறத்தாள 31 மாதங்கள் சிறிலங்காவின் இராணுவச் சிறைகளில் வாடிவதங்கிய நான் இறிதியாக 1986 டிசம்பர் 23ம் தேதி வெலிக்கடைச் சிறையிலிருந்து விடுதலையானேன்.

இரு நாட்களின் பின் யாழ்பாணம் சென்ற எனக்கு 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாத முற்பகுதியில் யாழ் நல்லூர் கோவிலின் அருகே அமைந்துள்ள அலுவலகத்தில் தமிழர் தரப்பின் பெருந் தலைவரை சந்தித்துப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.

அந்தச் சந்திப்பின் போது “கூறு போட்டுச் சிதைக்கப்பட்டதும், அதிகாரமற்றதுமான மாகாண அரசின் முதல்வராக முடிசூடுமாறு இந்திய அரசு வலிந்து என்னை அழைத்த போதும் அதனை நான் நிராகரித்தேன்” என்று என்னிடம் கூறியதை என்னால் நினைவு மீட்டுக் கொள்ள முடிகிறது.

No comments: