Thursday, November 09, 2006

தேர்தலும், தமிழ் வேட்பாளர்களும்

-நடராஜா முரளிதரன்-

நவம்பர் 13 ஆம் தேதி நடைபெற இருக்கும் நகரசபை, பிரதேச சபை, கல்விச் சபைத் தேர்தல்களில் வாக்களிப்பது தமிழர்களின் வரலாற்றுக் கடமையெனவும், கனடாவில் தமிழர்களுக்கு “அரசியல் தலைமைத்துவம்”, “பிரதிநிதித்துவம்” தேவையெனவும் கடந்த சில தினங்களாகப் பத்திரிகைப் பத்திகள் எழுதப்பட்டும் , பேட்டிகள் வழங்கப்பட்டும் உள்ளுராட்சிச் சபைத் தேர்தல்களுக்கான தேர்தல் பிரச்சாரப் பரப்புரைகள் ரொறொன்ரோ, மார்க்கம், மிசிசாகா எங்கணும் பரவலாக நடைபெற்ற வண்ணம் உள்ளன.

1977 இல் இடம்பெற்ற இலங்கைப் பொதுத் தேர்தலின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமிழீழத்துக்கான மக்கள் ஆணையைப் பெறுவதற்கான சர்வஜன வாக்கெடுப்;பாகவும், இறுதித் தேர்தலாகவும் அத் தேர்தலைப் பிரகடனப் படுத்துவதாகக் கூறி ஒட்டுமொத்ததாகத் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு அதற்கு ஆதரவாக வாக்களிப்பது வரலாற்றுக் கடமையென அழைப்பு விடுத்திருந்தார்கள். ஆனால் இன்று ஏறத்தாள மூன்று தசாப்தங்களைக் கடக்கின்ற சூழலிலும் சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியல் சாசனத்துக்குள் உட்பட்டுத் தமிழர் தரப்பின் அனைத்து வகையினரும் பங்கு கொண்ட தேர்தல் களங்களாகவே அண்மைய தேர்தல் களங்கள் யாவும் இலங்கைத் தீவில் அரங்கேறியிருந்தன.

எனவேதான் தேர்தல் காலத்து அரசியல்வாதிகளின் பிரச்சாரப் பரப்புரைகளின் போது வழங்கப்படும் வாக்குறுதிகள் குறித்த மக்களின் நம்பகத் தன்மை மேற்குலக நாடுகள் தொட்டு, மூன்றாம் உலக நாடுகள் ஈறாக எவ்வாறு அமையப் பெறுகின்றன என்பது மக்களைப் பொறுத்த வரையில் மிகச் சிக்கலான, சோகமான விடயமாக அமைந்து வருகின்றன.
கனடாவில் ரொறொன்ரோ (மார்க்கம், மிசிசாகா உட்பட) போன்ற பல்லினச் சமூகங்கள் நிறைந்து வாழும் பெரு நகரம் ஒன்றில் உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு வெற்றி பெறுவதன் மூலம் கனடியத் தமிழ் மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்கலாம் என்று மொழியப்படும் வாதங்களோ , அல்லது இங்கு வாழுகின்ற தமிழ் மக்களுடைய உணர்வுகளை, அபிலாசைகளைப் பிரதிபலிக்கலாம் என்பவை போன்ற கருத்துக்களோ மிகுந்த விவாதத்திற்கு உரியன என்றே நான் கருதுகின்றேன்.
சம~;டி ஆட்சி முறை அமுலில் இருக்கும் கனடா போன்ற நாட்டில் அதிகாரங்கள் தேசிய அரசு, மாகாண அரசு, உள்ளுராட்சிச் சபைகள் என்பவற்றுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் நகர சபைகள் போக்குவரத்து, சூழல், பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள், பாதுகாப்பு, வரி போன்ற பல விடயங்களைக் கையாளுகின்றது.

எனவே பல்லின மக்கள் செறிந்து வாழும் பெரு நகர மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யப் புறப்பட்டுத் “தேர்தல் களத்தில்” குதித்தவர்கள் தாம் சார்ந்த குறித்த ஓர் “இன” மக்களையோ, அவர்கள் சார்ந்த நலன்களையோ அடையாளப்படுத்த முனைவதாகக் கூறுவது தமிழ் “வாக்கு வங்கியினைக்” கவர்ந்திழுப்பதற்கான உத்தியாகவே கருத முடியும்.

மறு புறத்தே போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் இவ்வாறான தேர்தல்களில் வெற்றி பெறுவதன் மூலம் கனடா வாழ் தமிழ்ச் சமூகத்திற்கு கனடாவின் “தேசிய நீரோடையில்” இணைவதற்கான நம்பிக்கை ஊட்டத்தை வழங்க முடியும் என்பது ஏற்புடையதாக அமையும். பல்வேறு துறைகளில் கால் பதித்திருக்கும் தமிழர்களது வளர்ச்சி மேலும் வலுவடைவதற்கான படிக்கட்டுக்களில் ஒன்றாக அரசியலில் உட்புகுதலும் ஒன்று என்ற கணிப்பு அண்மைக் காலங்களில் தமிழ் பேசும் சிலரால் கூறப்பட்டு வருகிறது.

கனடா வாழ் தமிழ் சமூகம் என்பது கனடிய சிவில் சமுதாயத்தின் கூறுகளில் ஒன்று. உலக அரங்கில் கனடா ஜி-7 நாடுகளில் ஒன்று. அதாவது உற்பத்தித் தொழில் துறையில் அதி முன்னணியில் நிற்கும் உலக நாடுகளில் ஒன்று. ஐக்கிய நாடுகள் சபை பட்டியலிடும் உலகின் மிகச் சிறந்த நாடுகள் வரிசையில் பல தடவைகள் முதலிடத்தைத் தட்டிக் கொண்ட நாடு கனடா. அந்த வகையில் இன்றைய உலகு தழுவிய “முதலாளித்துவச் சமூக” முறைமைக்குள் பல்வேறு வகை “அனுகூலங்களைப்” பெற்றுத் திளைக்கும் நாடுகளில் கனடாவும், அங்கு வாழும் தமிழ்ச் சமூகமும் அமைகிறது.

எனவே மூன்றாம் உலக நாடுகளில் வாழும் 95 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட வறிய மக்களோடு ஒப்பிடுகின்ற போது எமது கனடா வாழ் தமிழ் சமூகம் வலுப்படைத்து விளங்குகிறது என்றே நான் எண்ணுவேன். ஆகவே அத்தகைய “வளம்” படைத்த சமூகத்தை மேலும் வலுப் படைத்தாக மாற்றி “வீறு” கொண்டெழுவதற்கான பயணமாக இங்கு நிகழும் உள்ளுராட்சித் தேர்தல் அரங்குகள் அமையப் போவதில்லை.

அரசியல் பிரவேசத்துக்கான ஆரம்ப கட்டமாக நகரசபை அரசியல் ஊடாக தமிழர்கள் அரசியல் நிகழ்த்தத் தயார் நிலையில் உள்ளதாக நாங்கள் “புல்லரித்துப்” போவதாலோ, “புளகாங்கிதம்” அடைவதாலோ தினந்தோறும் சொல்லொணாத் துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் எம் ஈழத்துத் தமிழ் சகோதரர்களுக்கு நல்லது எதுவும் நிகழப் போவதில்லை.

தனி மனிதர்களைப் பலப்படுத்துவதற்கான “வேட்டைக் களங்களில்”;, “அரசியல் சூதாட்டத்தில்” தேர்தல்கள் எவ்வாறு எமது சக தமிழ் வேட்பாளர்களால் அல்லது அவர்கள் சார்ந்தவர்களால் கையாளப்பட்டது என்பதை கடந்த உள்ளுராட்சித் தேர்தல்களின் போது தமிழ் வாக்காளர்கள் பட்டு உணர்ந்து கொண்டதையும் இச் சமயத்தில் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

மறு புறத்தில் வெற்றி பெற்ற பின் தமிழ் வேட்பாளர்கள் கர்வம் கொண்டும், மாலைக்கு அலையும் “பிரமுகர்களாக” மாறியும், முழங்கிய வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டும் “மூன்றாம் உலக” அரசியலை இங்கு இழுத்து வரும் அவலத்தையும் நிகழ்த்தி விடக் கூடாது.

ஆனால் இவ்வாறான குழப்பகரமான எனது “கருதுகோள்களுக்கு” மத்தியிலும் மார்க்கம் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் பேராசிரியர் இலகுப்பிள்ளையும், மார்க்கம் (7,8) வட்டாரத்துக்கான கல்விச் சபை வேட்பாளர் நீதன் சண்முகராஜாவும் தங்களது கடந்த காலச் சேவை வரலாற்றாலும், கல்வித் தகமைகளாலும் ஒப்பு நோக்கில் மற்றைய தமிழ் வேட்பாளர்களை விடவும் வேறுபடுத்தி நோக்கு நிலைப்படுத்தப் பட வேண்டியவர்களாக உள்ளார்கள் என்பதையும் இங்கு நான் மறைத்து விட முடியாது.