Thursday, August 20, 2009

கருத்தரங்கம் -2

நாடு கடந்த ஈழத்தமிழ் மக்களின் ஜனநாயக அரசியலும், ஈழத்தில் நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல்களும்


உரையாற்றுவோர்;
பொன்.பாலராஜன்
சேரன்

உரைகளின் முடிவில் கலந்துரையாடல் நிகழும்.

இடம்; S&S Construction
3341 Markham Ave, Blue Building, Unit#15
காலம்; 22.08.2009, சனிக்கிழமை பிற்பகல் 6.30 மணி.

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தொடர்புகட்கு : (647) 237-3619 , (416) 500-9016

Monday, August 03, 2009

தமிழ் மக்கள் - நாடு கடந்த அரசியல்

-நடராஜா முரளிதரன்-

முள்ளிவாய்க்காலில் வைத்து எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டுத், தமிழ்மக்களுடைய சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான அடுத்த கட்டப்பயணம் அரசியல், இராஜதந்திர வழிமுறைகளுக்கூடாகத் தொடரும் என்ற நிலைப்பாட்டைக் கடந்த நாற்பது வருடகாலப் பட்டறிவினை எமது ஈழ அரசியல் குறித்துப் பெற்றுக் கொண்ட என் போன்றோர் ஏன் தீவிரமாக ஆதரிக்க வேண்டியுள்ளது என்பது தொடர்பாக அலசுவதே இப்பத்தியில் எனது நோக்கமாக இருக்கும்.

இன்றைய ஈழ அரசியல் சூழலில் அரசியல் இராஜதந்திரப் பாதையினை முன்னெடுத்துக் கொண்டு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. அது தற்கொலைக்கு ஒப்பானது. அவை சிறிலங்கா அரசுக்கு மேலும் சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுத்துத் தொடர்ச்சியான இராணுவ அழுத்தத்துக்குள் எம் மக்களை ஆழ்த்தி விடும் அபாயத்தை உள்ளடக்குகிறது. இறைமை படைத்த நாடு என்ற வகையில் அவ்வகை அணுகுமுறையானது சிறிலங்கா அரசுக்கு இன்னும் கூடுதலாக அதனது இராஜதந்திர நகர்வுகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் மேலும் கதவுகளை அகலத் திறந்து விடுதல் என்ற வகையில் அமைந்து விடும் என்ற கருத்தோட்டம் அரசியல் அரிச்சுவடி தெரிந்த அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதாகவே நான் கருதுகின்றேன்.

தற்போதய அனைத்துலக ஒழுங்கில் நாம் அரசியல் இராஜதந்திரப் பாதையில் பயணிக்கும் அதே வேளையில் ஆயுதப் போராட்டத்தினையும் சமகாலத்தில் முன்னெடுப்பது முரணான இரு திசைகளில் பயணிப்பதற்கு ஒத்ததாக இருக்கின்றது. இது எமது மக்களின் நலன்களை மையப்படுத்தும் விடுதலைப் போரினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்குப் பலவித நடைமுறைத் தடைகளை ஏற்படுத்தும் எனப் பத்மநாதன் கூறுகின்றார். தடுப்பு முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களையும், போராளிகளையும் பாதுகாத்து எவ்வாறு அந்த மக்களை இயல்பு வாழ்க்கைக்குள் இட்டுச் செல்வது, உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையின் கீழ் மக்களின் வாழ்விடங்களை, வயல்களை, தோட்டங்களை, கடற்கரையோரங்களை, வழிபாட்டிடங்களை, பாடசாலைகளை, நூல் நிலையங்களை, விளையாட்டு மைதானங்களைக் கையகப்படுத்தி நிற்கும் சிறிலங்கா அரச இராணுவயந்திரத்தின் கோரப்பிடியினில் இருந்து எவ்வாறு அவற்றையெல்லாம் மீட்டெடுத்து அவற்றின் சொந்தக்காரர்களான மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்பது போன்ற சங்கடங்களைத் தாங்கியவர்களாக நாமெல்லோரும் தவித்துப் போயிருக்கும் காலச்சூழல் இது. சிறிலங்கா அரசினால் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கிலான போராளிகளின் எதிர்காலம், பாதுகாப்பு என்பன அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையில் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டு அதனூடான அணுகுமுறையிலான நடவடிக்கைகள் அவர்கள் குறித்து மேற்கொள்ளப்படுமா என்பது குறித்த வலுவான சந்தேகங்கள் அனைத்துலக மட்டங்களில் எழுப்பப்படுகின்றன. எனவேதான் புத்திசாதுரியத்துடன் கூடிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டியவர்களாக புலம்பெயர்ந்த நாடுகளில் நாம் உள்ளோம். மக்கள் தமக்கான சொந்த இடங்களில் முடிந்தளவு விரைவாகக் குடியமர்த்தப்படுவதற்குரிய அரசியல் இராஜதந்திர அழுத்தங்களை முன்னெடுப்பதென்பது சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களை ஆதார தளமாகப் பயன்படுத்திக் கொண்டு மேற்கொள்ள வேண்டிய விடயமாகும். எனவே பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டுப் பலவீனமடைந்துள்ள எமது மக்கள் சமூகத்தை மனித உரிமைகள் என்ற தளத்தில் மீண்டும் ஜனநாயக விழுமியங்களை உள்வாங்கிய சமூகமாகக் கட்டமைத்து நிமிர்த்தி வைப்பதில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்களுக்கு மிகப் பாரிய பொறுப்பு இருக்கின்றது.

ஏனெனில் இறுதிக் கட்டச்சமரின் போது சிறிலங்கா அரசு எம்மக்கள் மீது புரிந்த மிகமோசமான மனித உரிமை மீறல்களே ஒருவகையில் எமக்கான அனுதாப அலைகளை மேற்குலகில் ஏற்படுத்தித் தந்துள்ளது. அவற்றின் விரிவாக்கம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில், சர்வதேச நாணய நிதியம் போன்ற உயர் தளங்களில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. இது போன்ற விடயங்களில் மேற்குலகின் அரசியல், இராணுவ, பொருளாதார, பூகோள நலன்களும் உள்ளடக்கம்.

எனவே வீணே உணர்ச்சி வசப்படுதல் என்பதும் ஆயுதப் போராட்டம்தான் தீர்க்கமான வழிமுறையென்று முரசறைவதும் புலம் பெயர் சூழலில் வாழும் எம்மில் சிலருக்கு தங்கள் இருப்பை நிலைநாட்டவும், தாம் குறித்துப் புகழ்பாடவும் வாய்ப்பான சூழ்நிலையை உருவாக்கலாம். ஆனால் இன்றைய இக்கட்டான பின்னடைவுச் சூழலில் நீண்டநாட்களுக்குத் தடுப்பு முகாம்களுக்குள் மக்களை முடக்குவதற்கான வழிமுறைகளையே இவ்வாறான நிலைப்பாடுகள் உருவாக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது.
மரணம் வாய் பிளந்து நிற்கும் அந்தப் பூமியில் சோகச்சிலுவைகளைச் சுமந்துகொண்டு வெறும் நடைப்பிணங்களாகக் காட்சியளிக்கும் எம் மக்களை மேலும் கொடிய துயரத்துக்குள்ளாக்கும் வாய்ப்புக்களைத் தேர்ந்தெடுத்தலைத் தவிர்த்து அந்த மக்கள் தமது வாழ்க்கையை மீளக் கண்டடைவதற்கும், கட்டமைப்பதற்கும் ஆதரவாய் ஐக்கியப்பட்டு உதவவேண்டியதே இன்று எம் தோள்களில் சுமத்தப்பட்டுள்ள பெரும் பொறுப்பு.

மக்கள் நடமாட்டம் அற்ற சூனியப்பரப்பாகக் காட்சியளிக்கும் வன்னிப்பெரு நிலப்பரப்பினைத் தான் விரும்பியவாறு மாற்றியமைப்பதற்கான இராணுவ மேலாண்மையை அப்பிரதேசத்திலே கொண்டுள்ள சிறிலங்கா அரசினைச் சர்வதேசத்தின் துணையுடன் எதிர்கொள்வதே மிகச்சிறந்த இராஜதந்திரமாகும். அதனைக் கட்டமைத்துக் கொள்வதற்கான வியூகத்தில் வன்முறையற்ற அரசியலும், ஜனநாயகமும் மிகச் சக்தி பொருந்திய கோட்பாடுகள் மட்டுமல்லாது எம்மை ஆரோக்கியமான அரசியலுக்குள் அழைத்துச் செல்லும் அரசியல் பண்பாட்டுப் பலம் மிக்கவையுமாகும். தொடர்ச்சியான உரையாடல் களமும், வாதப்பிரதிவாதங்களும், பன்மைத்துவமும், பல்வேறு வகைப்பட்ட அபிப்பிராயக் குவிப்புக்களும் அந்தத் தளத்திலே நடைபெறுவதற்கான திறந்தவகை மனோபாவம் அங்கு ஊக்குவிக்கப்படுகின்றது. அந்த அறுவடை மூலம் மிகப் பெரிய விளைச்சலை தமிழ் பேசும் மக்களாகிய நாம் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

இன்றைய உலக ஒழுங்கில் இறைமை படைத்த அரசு தவிர்ந்த ஏனைய அமைப்புக்கள் முன்னெடுக்கும் தேசிய விடுதலையை நோக்கிய ஆயுதப்போராட்டங்கள் பனிப்போர் காலத்துச் சாதக அம்சங்களை இழந்து நிற்கின்றன. இன்றைய உலகம் இரு முகாம்களாகப் பிளவுண்ட நிலையில் இல்லை. முன்னொரு காலத்தில் சோவியத் யூனியன் தலைமையிலான சோசலிச முகாம் என்று அழைக்கப்பட்ட அணியினரால் இவ்வாறான பல்வகைப்பட்ட போராட்டங்களுக்கு ஆதரவின் பேரிலான உந்துதல் வழங்கப்பட்டமையை நாம் காணலாம். அப்படியிருந்தும் அவ்வாறான ஆதரவு வழங்கலுக்கான காரணிகள் குறித்து உலகத்துச் சிந்தனையாளர்களால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களையும் நாம் புறந்தள்ளிவிட முடியாது. எனவேதான் இன்றைய உலகச் சூழல் அணுகுமுறைமையில் ஆயுதம் தாங்கிய அரசியல் செயற்பாட்டால் எவ்விதமான அரசியல் இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ளவோ அல்லது அரசியல் இராஜதந்திர அழுத்தங்களை சிறிலங்கா அரசுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்படுத்தவோ முடியாமற் போகின்றது.

எனவேதான் அடுத்த கட்டத் தீர்மானமாக அரசியல் வழிப்பயணம் அமைகின்ற வேளையில் சமகால உலக உறவுகள், அரசியல், பொருளாதார நிலைப்பாடுகள் தொடர்பான புரிதல்களின் அடிப்படையில் அரசியற் செயற்பாடுகளைக் கட்டுதல் அவசியம். தியாகங்களாலும், அர்ப்பணிப்புக்களாலும் வளர்த்தெடுக்கப்பட்ட எமது உரிமைகளைப் பெற்றெடுப்பதற்கான கட்டுமானம் தார்மீக அடிப்படையில் தமிழ் மக்களுக்கான அறஞ்சார் அரசியல் நிலைப்பாட்டின் ஆதார அடித்தளத்தில் மீண்டும் பற்றியெழ வேண்டியுள்ளது. எனவேதான போராட்ட வடிவத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது பற்றிய சிந்தனையில் அரசியல் விஞ்ஞான அணுகுமுறையினைக் கையாள்வதற்கு தமிழ்புலத்தில் உள்ள அரசியல் சிந்தனையாளர்களும், புத்திஜீவிகளும் கடுமையாக உழைக்க வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்து நிற்கிறது.
ஆகவேதான் நம் மக்களுக்கு மெய்யாக இருப்பதும், அதற்கான உணர்வுபூர்வமான செயல்முறை வழிப்பாட்டின் அடிப்படையில் போராட்ட வடிவத்தை மாற்ற வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தைக் கொண்டவர்களாக நாம் உள்ளோம.; எனவே அதனைப் புறந்தள்ள நாம் முனைவதானது எமது மக்களுக்கு நாம் செய்யும் துரோகமாக அமைந்து விடும். அனைத்துலகத்தின் நலன்களும் நமது நலன்களும் ஒரே கோட்டில் சந்திக்காமையால் திறக்கப்பட்ட அனைத்துலக அரசியல் இராஜதந்திரக் கதவுகள் ஊடாக நம்மை நன்மைகள் பெரியளவில் வந்தடையவில்லை. இறுதியில் சிறிலங்கா அரசு அனைத்துலக சமூகத்தை தன்வசப்படுத்தியவாறே போரை முன்னெடுத்தது என்று மிகச்சரியாகவே பத்மநாதன் தன் வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாசியாவினதும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தினதும் புவிசார் அரசியல் நலன்களின் அடிப்படையில் இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற வல்லாண்மைச் சக்திகள் இலங்கைத் தீவினை ஒரே நாடாகப் பேணியவாறு தமது நலன்களை அடைந்து கொள்வதை உசிதமானதாகக் கருதியமை, இலங்கைத் தீவில் ஆயுதப்போராட்டம் ஏதோ ஒரு வழியில் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் அனைத்துலகம் ஒரே முடிவைக் கொண்டிருந்தமை, எனப் பத்மநாதன் சுட்டும் காரணங்களின் அடிப்படையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகம் வன்முறையற்ற அரசியல், ஜனநாயகம் ஆகிய கோட்பாடுகளை வரித்துக் கொண்டு தமிழ் மக்களுக்கான வரலாற்றுப் பாதையில் முன்னொக்கிப் பயணிக்க வேண்டியுள்ளது.

எனவே தமிழ் மக்களின் சமகாலச் சூழலைக் கருத்திற் கொண்டு போராட்ட வடிவத்தை மாற்றியே ஆக வேண்டியுள்ளது. இலங்கைத் தீவினை ஒரே நாடாகப் பேணியவாறு தமது நலன்களை அடைந்து கொள்ள முனையும் பேரரசுகளின் புவிசார் அரசியல் தோல்வியினை அடையும் சூழலில் அந்த மாற்றங்களின் ஊடாகத் தமிழீழ மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை நாம் வென்றெடுத்துக் கொள்வதற்கான நிலைமைகள் உருவாகும். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் நமது விடுதலைப் போராட்டத்தை அரசியல் இராஜதந்திரப் பாதையின் ஊடாக நாம் நகர்த்த வேண்டுமென்பது என்ற கருத்தியலுக்கு அப்பால் ஒடுக்குமுறைக்குள்ளாகியுள்ள எந்த சமூகமும், எந்த மனிதனும் நேர் கொள்ளும் யதார்ததத்;தைக் கருத்திற் கொண்டு தனது இலக்கினைச் சென்றடையத் தந்திரோபாயங்களை அடிக்கடி மாற்றியமைத்துக் கொண்டே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான லரலாற்றை முன்னோக்கி நகர்த்தலாம். எனவே பத்மநாதன் கூறுவது போல அரசியல் இராஜதந்திரப் பாதையின் ஊடாகப் பயணம் செய்வn தன்பது இலகுவான ஒரு விடயம் அல்ல. பல சவால்களை எதிர்கொண்டு மிகுந்த சகிப்புத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய நீண்ட தூரப் பயணம் ஆகும்.