Wednesday, August 16, 2006

புஸ்பராஜாஓர் நோக்கு-4

-நடராஜா முரளிதரன்-

1971ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி அல்பிரட் துரையப்பாவுக்கு இலக்கு வைத்து அவரின் காரில் வைக்கப்பட்ட குண்டு, நேரம் முந்தி வெடித்ததால் துரையப்பா உயிர் தப்பியிருந்தார். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட சிவகுமாரன் முயற்ச்சியில் தோல்வியுற்றாலும் அவரால் நிகழ்த்தப்பட்ட அந்தத் தாக்குதல் நிகழ்வானது அன்றைய காலகட்டத்தில் தமிழ் பேசும் மக்களால் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இன்னும் ஒருபடி மேலே கூறுவதானால் தமிழ்-சிங்கள தேசிய முரண்பாடு அரசியல் வன்முறையாக மாற்றம் பெற்றுக் கொண்டிருப்பதை இத்தகைய நிகழ்வுகளுக்கூடாக ஊடறுத்துக் காண முடியும். 1974ம் ஆண்டு தை மாதம் 10ம் தேதி நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள்; மாலை நிகழ்வுக்காக யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு வெளியே பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தார்கள். மாநாட்டு மேடையிலே தமிழ் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் நயினார் முகமது பேசிக் கொண்டிருந்தார். அவ் வேளையிலே தான் யாழ் பொலீஸ் உதவி அதிபர் சந்திரசேகரா தலைமையில் பொலீஸார் குழப்பம் விளைவிக்க ஆரம்பித்தனர். இந்தக் குழப்பம் ஏன் உண்டானது? என்பது குறித்து பல்வேறு வகையான வதந்திகள் அன்று உலாவின. அவற்றில் முக்கியமான ஒன்றை இங்கு குறிப்பிட எண்ணுகின்றேன்.

வீரசிங்கம் மண்டபத்தின் முன்றலில் பொதுக்கூட்டம் ஒன்றை நிகழ்த்துவதற்கான அனுமதியை பொலீஸார் வழங்கவில்லையென்றும் ஆனாலும் மாநாட்டின் இறுதி நாளன்று மக்கள் பெருந்திரளாக எழுச்சியுடன் அங்கு கூடியிருந்தமையால் கூட்டத்தை மண்டபத்துக்கு வெளியே நடத்த வேண்டிய நிர்ப்பந்தம் மாநாட்டு அமைப்பாளர்களுக்கு ஏற்ப்பட்டதாகவும் என்பது அதில் ஒன்று. திரண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு பிரமித்த பொலீஸார் ஆரம்பத்தில் நடவடிக்கை எதனையும் எடுக்கத் துணிச்சல் பெறாதவர்களாக தத்தளித்துக் கொண்டிருந்தனர். இரவு பத்தரை மணியளவில் ஏ.எஸ்.பி சந்திரசேகரா மேலிடத்து ஆலோசனையைப் பெற்றுக்கொண்டு மாநாட்டு அமைப்பாளர்களுக்கு நேரம் தாண்டிக் கொண்டிருப்பதான பிரச்சினையை முன்வைத்து கூட்டத்தை மேலும் நீடிக்காமல் நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தார். மேலிடத்து ஆலோசனையின் பின்னணியில் அல்பிரட் துரையப்பா செயற்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஆனால் அங்கு குழுமியிருந்த மக்கள் திரள் ஏ.எஸ்.பியின் அழுத்தத்துக்கு அடிபணிய மறுத்துக் கூட்டத்தை தொடர்ந்து நடத்துமாறு கூட்ட அமைப்பாளர்களுக்கு கூக்குரல் இடத் தொடங்கியது. அவ்வேளையிலேதான் வெறி கொண்டவராக மாறிய சந்திரசேகரா கூட்டத்தைக் கலைத்து விரட்டுமாறு பொலீஸ் படைக்குக் கட்டளையிடுகிறார். பின்பு தான் எல்லா விபரீதங்களும் நிகழ்ந்தன.

புஸ்பராஜாவின் நூலிலே ஷஷநான் சுபாஸ் கபேயில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தேன். பெருந்திரளான சனங்கள் அங்கும் இங்கும் எனக் கதறிய வண்ணம் ஓடிக் கொணடிருந்தனர். அவர்கள் உயிருக்குப் பயந்து ஓடுவது போல தென்பட்டனர். உடனே வெளியே வந்து என்ன நடந்தது என அறிய முயன்றேன். பொலீஸ் சுடுகின்றனர், பொலீஸ் குண்டெறிகின்றனர் என ஆளுக்கொரு தகவல் சொல்லிக்கொண்டு சிதறி ஓடிக்கொணடிருந்தனர்……….. சனங்கள் முண்டியடித்துக்கொண்டு ஒருவரையொருவர் தள்ளிவிட்டபடி, ஏறி மிதித்தபடி ஓடினர். அப்பொழுது எனது தங்கை புஸ்பராணி, சிவகுமாரன் போன்றவர்கள் வருவதைக் கண்டேன். விபரம் கூறிய சிவகுமாரன், சனங்களைப் பாதுகாப்பாக பஸ்களில் ஏற்றி அனுப்புவோம், வாருங்கள் ஒழுங்குகள் செய்வோம் என்றார். ……………சனங்களை ஏற்றி ஒரு பஸ்ஸை சிவகுமாரன் எடுத்தார்………..அன்றைய இரவு 9 தமிழர்களைப் பலி கொண்டது. 100 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இந் நிகழ்ச்சியால் இளைஞர்கள் கொதித்துப் போனர். சிவகுமாரன் பைத்தியம் பிடித்தவர் போல் காணப்பட்டார். இந்தக் கொலைகளுக்குக் காரணமான ஏ.எஸ்.பி சந்திரசேகராவைக்…………….எனச் சிவகுமாரன் சபதம் போட்டார். (பக்-97,99) என உள்ளது.

சந்திரசேகரா யாழ்ப்பாணம் கைலாசப்பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அண்மையில் குடியிருந்தார். தினமும் யாழ் பொலீஸ் நிலையத்துக்குக் கைலாசப் பிள்ளையார் கோவிலைக் கடந்தே போவார். இதன்படி தாக்குதல் நிகழ்த்துவதற்கான இடமாக கைலாசபிள்ளையார் கோவிலடி தேர்ந்தெடுக்கப்பட்டது. பிரான்சிஸ், அளவெட்டி ஆனந்தன், நடேசானந்தன் ஆகியவர்களை சிவகுமாரன் தேர்ந்தெடுத்திருந்தார். கையால் தயாரிக்கப்பட்ட சன்னங்கள் போட்ட துப்பாக்கியால் சந்திரசேகரா மீது தாக்குதல் நிகழ்த்த சிவகுமாரனால் மேற்கொள்ளப்பட்ட முயற்ச்சி, அது வெடிக்காததால் வீணானது. ஆயினும் மனந்தளராத சிவகுமாரன் சந்திரசேகராவை ஜீப்பில் இருந்து வெளியே இழுத்துத் தாக்குதல் நிகழ்த்த முற்படுகிறார். சென்றவர்களின் ஒத்துழைப்பு முழுமையாகக் கைகூடாததால் அவரது முயற்ச்சி தோல்வியைத் தழுவிக் கொள்கிறது. தப்பிச் சென்றுவிடுகிறார். இவ்வாறு சிவகுமாரன் முன்னெடுத்த தாக்குதல் நடவடிக்கைகள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் முழுவெற்றியை ஈட்டிக் கொள்ளவில்லை. நான் சிவகுமாரனுடன் அவர் இறக்கும் வரைக்கும் மிக நெருக்கமாகப் பழங்கியவன். இந்த ரீதியில் எனக்குப் பல உண்மைகள் தெரியும். சிவகுமாரனின் அனைத்து முயற்ச்சிகளும் தோல்வியில் முடிந்தது. சிவகுமாரனின் தூய்மையான எண்ணமும், விசுவாசமும், நேர்மையும், திறமையும், வீரமும் எப்படி எல்லா முயற்ச்சிகளிலும் தோல்வியைக் கொடுத்தன என்பதை ஆய்வு செய்ய வேண்டியது மிக முக்கியமான விடயமாகும். சிவகுமாரன் தனது தளபதிகளாக தேர்ந்தெடுத்தவர்களின் விவேகமின்மையே அவரின் தோல்விக்குக் காரணம் என எம்மால் ஒரு முடிவுக்கு வரக் கூடியதாக உள்ளதென(பக்-117) இந்தத் தோல்விகளுக்கான முழுக்காரணங்களையும் புஸ்பராஜா தனது நூலில் சிவகுமாரனைச் சூழவிருந்த சகாக்கள் அல்லது அவரோடு இணைந்து பங்கேற்றவர்கள் தலைகளில் பொறித்து விடுதல் ஏற்புடையதாக இல்லை.

வென்றால் உரிமை தலைவனுக்கு. தோற்றால் தொண்டன் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்பது போல அல்லவா இருக்கிறது. கட்டுப்பாடு, சிறந்த பயிற்ச்சி, ஒருங்கிணைப்பு, தகவல் சேகரிப்பு, சிறந்த உபகரணங்கள் போன்ற விடயங்களை உள்வாங்கி நீண்ட கால அடிப்படையில் நிதானித்து செயற்படுவதன் மூலமே எந்த விடுதலை வரலாறும் வெற்றிக் கனிகளைப் பறித்திருக்கும்.

தமிழ் பேசும் மக்களுடைய உரிமைப் போராட்ட வரலாற்றிலே சிவகுமாரனது வரலாற்றினை பதிவுக்குள்ளாக்குவது, முன்னிலைப்படுத்துதல் என்ற தளத்தில் புஸ்பராஜா தனது நூலிலே சிவகுமாரனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் குறித்து எனக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.

சிவகுமாரன் தலைமை தாங்கிய இறுதி நடவடிக்கை கோப்பாய் கிராமிய வங்கிக் கொள்ளை முயற்ச்சியாகும். இதில் சிவகுமாரனோடு இணைந்து கொண்டவர்கள் ஜீவராஜா, மகேந்திரன், பிரான்சிஸ் போன்றவர்கள். மருதனாமடம் சந்தியிலிருந்து கடத்தப்பட்ட காரினை வெளியே நிறுத்தி விட்டு வங்கியின் உள்ளே சிவகுமாரன் தலைமையிலான குழு கொள்ளையிட நுழைந்தது. ஆனால் வங்கி ஊழியர்கள் உசாரடைந்து மக்கள் போட்ட கூக்குரலில் பொலீசுக்கும் தகவல் சென்று விட்டது. வெளியே ஓடி வந்தவர்கள் நிறுத்தி வைக்கப்பட்ட கார் மூலம் தப்ப முயன்றும் முடியவில்லை. வெறும் காலால் ஓட்டம் பிடித்தார்கள்.

புகையிலைத் தோட்டங்களுக்கு ஊடாக ஓடிக்கொண்டிருந்த வேளையில் சிவகுமாரன் சுலபமாக பொலீசாரினால் சுற்றி வளைக்கப்பட்டார். இறுதியாக சிவகுமாரன் தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியைப் பயன்படுத்திச் சண்டையிடுகிறார். ஆனால் ரவைகள் தீர்ந்து விடுகின்றன. தப்ப முடியாத நிலையில் சயனைட் சாப்பிடுகின்றார். சயனைட் சாப்பிட்ட நிலையில் மயங்கிய சிவகுமாரன் பொலீசாரினால் கைது செய்யப்பட்டு யாழ் அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பொலீஸ் காவல் தொடர்கிறது. மருத்துவர்கள் அளித்த சிகிச்சையை பலர் வற்புறுத்தியும் பெற்றுக்கொள்ள மறுத்த சிவகுமாரன் ஈற்றில் வீரச்சாவை அறுவடை செய்து கொண்டார்.

அந்த நாள் 1974ம் ஆண்டு ஆனி மாதம் 5ம் நாள். ஈழத் தமிழினம் இச் சோக நாளை தம் வரலாறு முழுவதும் காவித் திரிவர்.

No comments: