Sunday, July 30, 2006

தராக்கி- சில நினைவுகள்

-நடராஜா முரளிதரன்-

மட்டக்களப்பு வாவியின் மேலோடி நிற்கும் புளியந்தீவுப் பாலத்தில் உறைந்தவாறு கிழக்கின் தென்றலை சுகித்து சுவாசித்த, இன்பவசப்பட்ட அந்த மண்ணின் மைந்தன் அந்த மண்ணின் வளத்துக்காகவே புதைக்கப்டட்டான் போலும். உலகத்தின் திக்குகள் எல்லாம் அவன் பாதங்கள் பதிந்திருந்தாலும் அவன் தன் ஆழ்மனதின் அமைதி தேடி அந்த மட்டக்களப்பு மண்ணுக்கே ஓடிவந்து கொண்டிருந்தான். அந்த மண்ணிலே தமிழ் மக்களைத், தமிழ் மக்களே காயப்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் இரு வருடங்களுக்கு முன் ஆரம்பித்த கணங்களில் செங்குருதி சிந்தாத ஒருமைப்பாடு காண விரைவுகொண்டு விழைந்தவன் அவன். அவன்தான் தராக்கி என்று எம்மால் அழைக்கப்பட்ட தர்மரட்னம் சிவராம். தராக்கியின் உயிர் பறிக்கப்பட்டு ஓராண்டு கழிந்துவிட்டது. பட்டப்படிப்பைத் துறந்து மானுடத்துக்காகப் போரிடப் புறப்படுதல் என்ற சேனையில் அணிவகுத்தவன், துப்பாக்கிக்குழாயிலிருந்து பிறக்கும் அதிகாரத்தை பேனா முனைகளால் கேள்விக்குரியதாக்கும் மறுபிறப்பை அடைந்தவன் ஆனான். அதனால் அவன் ஈடுபாடு காட்டிய இதழியல் ஊடான கருத்துச்செறிவுக் குவிப்பு ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் நியாயத் தேடற்தளத்தில் சர்வதேசக் கவனிப்பைப் பெற்ற ஒன்றாக மாறியது. அதற்கு அவனது இருமொழிப் புலமை மேலும் வீறூட்டியது.
1997ம் ஆண்டு சுவிஸ் நாட்டின் ஏரிகள் சூழ்ந்த அழகிய நகரங்களில் ஒன்றான “லுசேர்ண்” நகரில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாகி பத்து வருடங்கள் முடிவடைந்ததையொட்டி ஓர் கருத்துக் குழும மாநாட்டை “இன்ரநாசனல் அலேர்ட்” என்ற அரசசார்பற்ற நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. அச் சமயம் சந்திரிகாவின் அக்கா சுனீத்திராவின் முன்னாள் கணவர் குமார் ரூபசிங்கா “இன்ரநாசனல் அலேர்ட்” அமைப்பின் தலைமைத்துவப் பதவியை வகித்திருந்தார். ஏறத்தாள முப்பது பேர் வரையில் இலங்கை இனப் பிரச்சினை தொடர்பான புலமையாளர்கள், வல்லுனர்கள், ஒப்பந்த ஈடுபாட்டாளர்கள் என்ற வகையில் அம் மாநாட்டில் பங்கேற்றிருந்தனர். “இந்து” பத்திரிகையின் ராம், இந்தியப் படைத்தளபதி கல்கத், ரோகான் குணரட்ணா, முன்னாள் வடகிழக்கு மாகாணசபை அமைச்சர் டயான் ஜயதிலகா, பிராட்மன்வீரக்கோன், ஜே.என்.டிக்சிற், அருட்தந்தை சந்திரகாந்தன் ஆகியோரெல்லாம் அந்த மாநாட்டிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். தராக்கி அவர்களும் இந்த மாநாட்டிலே உரையாற்றுவதற்காக சுவிஸ் வந்திருந்தார். மாநாடு மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. மாநாடு முடிவுற்ற பின்னர் தராக்கி சூரிச்சில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்த வேளையில் நான் பணிபுரிந்த அலுவலகத்திற்கு தினந்தோறும் வருவார்.அந்த வேளையிலேதான் எனக்கு அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அச் சந்தர்ப்பத்திலே ஒர் நாள் அவரைக் கேட்டேன்.“நீங்கள் ஐரோப்பிய நாடொன்றிலே நிரந்தரமாகத் தங்கியிருந்து ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாகப் பணிபுரியலாமே”?அவரது பதில் நீரை விட்டுப் பிரிந்து மீன் உயிர் வாழுதல் சாத்தியமா? என்ற தோரணையில் அமைந்தது.“எங்களைப் போலை ஆக்களுக்கு அங்கைதானே வேலை கிடக்கு” என்று சிரித்தபடியே பதிலளித்தார். தொடர்ந்து மட்டக்களப்பில் காத்திரமான தமிழ் பத்திரிகையொன்றின் தேவை குறித்த அக்கறையோடு தான் இருப்பதாகவும் அது விடயமாக மேற்கொண்டு அலுவல்கள் பார்க்க வேண்டும் என்றும் கூறியது இன்றும் என் நினைவுகளில் பசுமையாக உள்ளது. வெளிநாட்டு வாழ்க்கையில் அறவே விருப்புக் கொள்ளாத துறவுத்தனம் அவரை எனக்கு ஒரு சித்தராக உணர்த்தியது. “ஒரு வகையில் சிவராமின் மரணம் மூலம்தான், அவனை மீள் கண்டுபிடிப்புச் செய்தோம்,” என்று கூறுகிறார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.
தராக்கி இல்லாத வெற்றிடத்தில், சர்;வதேச தளத்தில் தமிழர் அல்லாதவர்களுக்கு தமிழ் பேசும் மக்களின் நியாயத் தேடல்களை எவ்வாறு புரியவைப்பது அல்லது இன்றைய பிரகடனப்படுத்தப்படாத போர் உத்திகளின் மூல உபாயங்களை போரியல் பின்புலத்தில் எப்படி ஆய்வுக்குள்ளாக்குவது என்ற சிக்கல்கள் எழுந்து நிற்கிறது. அவை தொடர்பாக தராக்கி என்ற தனி மனிதன் சாதித்தவைகளை அவனது அரசியல் எதிரிகளின் ஒப்புதல் வாக்குமூலங்களே சாட்சியங்களாக அமைந்து நிரூபித்து விடுகிறது.கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 24ம் தேதி வீரகேசரிப் பத்திரிகையில் பிரசுரமான அவர் எழுதிய கட்டுரையொன்றில்(கட்டுரையின் ஆங்கில வடிவமே என் கைக்கு எட்டியது) நோர்வே அனுசரணையாளர் எரிக் சொல்ஹைம் குறித்த விமர்சனம் ஒன்றின் சாரத்தை இங்கு சுட்டுதல் பொருத்தம் என்று எண்ணுகின்றேன்.நோர்வே அரசின் சமாதான ஏற்பாட்டாளர் சொல்ஹைம் அவர்கள் இலங்கைக்கு வரும் போதெல்லாம் தமிழ் பத்திரிகையாளர்கள் மட்டத்தில் அதிசயம் நிகழ்வதற்கான எதிர்பார்ப்புடன் கூடிய பரபரப்பு எழுவது வழக்கம். விளைவு ஊடகங்கள் வழியாக அதே புனைவு சிரு~;டிக்கப்பட்டு மக்கள் மனங்களையும் விளிம்பு நிலைக்கு இட்டுச் செல்லும்.

ஆனால், சொல்ஹைம் தனது நாடு திரும்பியவுடன் எல்லா எதிர்பார்ப்புகளும் வெளுத்து மக்கள் வழமையான வாழ்வியல் நீரோட்டத்திலே கலந்து விடுவார்கள்.சோல்ஹைம் அவர்களும் தனது வருகையின் பொழுது எப்போதும் போல நன்மைக்கான மாறுதல்கள் விரைவில் நிகழ்ந்து விடும் என்ற மந்திர உச்சாடனத்தை உரைப்பார்.அவ்வாறான வகையில் மிக அண்மையில் வெளிநாட்டுச் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு செவ்வி வழங்கிய சொல்ஹைம் அவர்கள் இன்னும் சில வாரங்களில் சுனாமி நிவாரணப் பணிகளுக்கான இரு தரப்பும் பிணைந்த இணைக்கட்டமைப்பு செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் அவை எவையுமே இன்று நடைமுறைப்படுத்தப்படவில்லை. யாருக்காவது அது குறித்த சந்தேகம் இருப்பின் ஜே.வி;.பியினர் “அப்படியொரு கட்டமைப்பு நிறுவப்படும் பட்சத்தில் நாம் அரசிலிருந்து வெளியேறி விடுவோம்” என்று அமெரிக்கப் பிரதிநிதியான கிறிஸ்டினா றொக்கா அம்மையாருக்கு அழுத்தம் திருத்தமாகக் கூறியதில் இருந்தே உண்மை நிலையினை புரிந்து கொள்ளலாம். சமாதானத் தூதுவர் என்பவர் நம்பிக்கை ஊட்டுபவராகவே காட்சியளிப்பார். ஆனால் அவரால் உருவகப்படுத்தப்படும் அக் காட்சிப் பிம்பத்தின் பொறிக்குள் விழுவதா, இல்லையா என்ற முடிவை எடுப்பது எம்மில்தான் தங்கியுள்ளது.மேலே எனது உரைநடை வடிவத்துக்கு உட்படுத்தப்பட்ட அவரது கருத்துச் சாரம் யதார்த்தபூர்வமான மெய்மையாக வரலாற்றுத்தடத்திலிருந்து வெளிக் கிழம்புவதை உய்த்துணர முடியும்.சில நாட்களின் பின் இறுதியாக ஜெனிவா நகரில் மனித உரிமைகள் மன்றின் முன்பாக சுவிஸ் வாழ் தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்வலத்தின் முடிவில் தராக்கி அவர்கள் என்னோடு உரையாடியிருந்தாhர்.அத் தருணத்தில், தமிழர் தரப்பில் விடுதலை என்ற கோசத்தோடு பல்வேறு அமைப்புக்கள் 80களின் முற் கூறுகளில் கிளர்ந்த போதும் அவை வீழ்ச்சிக்குள்ளான வரலாறு பற்றி இருவரும் விவாதித்துக் கொண்டோம். வுpவாதத்தின் இடையே “தமிழீழக் கோரிக்கையை கைவிட்டதாலேயே அவ் அமைப்புக்கள் அழிந்தன” என்றும் தமிழீழக் கோரிக்கையை கைவிடும் எந்த அமைப்பும் வரலாற்றின் இயங்கு தளத்திலிருந்து மறைந்து விடும் அல்லது அந்நியப்படுத்தப்படும் என்பதை தான் உணர்ந்துள்ளதாகவும் தராக்கி என்னிடம் தெரிவித்திருந்தார். அக் கருத்தினை அன்று அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் உரையாற்றும் போது தராக்கி அவர்களின் பெயரைக் குறிப்பிடாது ஓர் பத்திரிகையாளரின் கருத்தாக சொல்லியிருந்தேன்.
இன்று உலக அழுத்தங்கள் கூர்மைப்படுத்தப்பட்டு பல்வேறு முனைகளில் இருந்து புறப்பட்டு எம்மையே தாக்குகிற இத் தருணங்களில் தேசிய இனப்பிரச்சினையின் வடிகாலாக சம~;டியின் மாதிரி வடிவங்களை ஏற்றுக் கொள்ளலாம்தானே(எதிரி எதையுமே வழங்கத் தயார் இல்லாத நிலையில்) என்ற உபதேசங்கள் செவிப்பறைகளில் முட்டி மோதுகின்ற இவ் வேளைகளில் தராக்கி மேற் கூறிய கருத்து சாத்தியமானதா என்பதை
எதிர்கால வரலாற்றுப் பாடங்களில் இருந்து மட்டுமே நாம் கற்றுக் கொள்ளமுடியும். கற்றுத் தருவதற்கும் இப்போது தராக்கி எம்மிடம் இல்லை.தராக்கி அவர்களது வாழ்வுச் சரிதத்தை அமெரிக்க பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மார்க் விற்றேக்கர் என்பவர் எழுதிக் கொண்டிருக்கிறார். அச் சரிதத்துக்கு அவரால் இடப்பட்ட பெயர் “ Learning Politics from Sivaram”என்பதாகும். இப் பேராசிரியர் 1982 களில் மட்டக்களப்பிலே தங்கியிருந்து மட்டக்களப்பு தொடர்பான பண்பாடு, புதைபொருள் அகழ்வு ஆய்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளைகளிலேதான் முதன் முதலாக சிவராமைச் சந்தித்து நெருங்கிய நண்பராகிக் கொண்டார். இருவருமே தத்துவவியல் துறை சார்ந்த பொதுவான கண்ணோட்டத்தைக் கொண்டவர்களாக விளங்கியதனால் நட்பு மேலும் பலப்பட்டது.பேராசிரியர் மார்க் விற்றேக்கர் அவர்கள் சிவராமின் பாதுகாப்புக் குறித்துக் கவலைப்பட ஆரம்பித்த வேளைகளிலேதான் சிவராமின் சிந்தனைகளையும், முயற்ச்சிகளையும் பதிவு செய்து கொள்வது தனது கடமைகளில் ஒன்று என எண்ணுகின்றார். அதற்கான வேலைத் திட்டங்களை சிவராமின் மன ஒப்புதலுடனும், ஒத்துழைப்புடனும் 1997களிலேயே ஆரம்பித்தார்.சிவராமின் உயிருக்குக் குறி வைக்கப்படும் அபாயம் நெருங்கி வந்த வேளையில் எல்லாம் அவனுக்கு வேண்டியவர்கள் அது குறித்த அச்சம் கொண்டவர்களாக அவனை நாட்டை விட்டு இடம் பெயர்க்க முயற்ச்சித்த போதெல்லாம் அதற்கு அடங்காதவனாக, அச்சப்படாதவனாக வெகு சாவகாசமாக அவன் உலா வந்தான். அவன் மரணத்தைக் கண்டு அஞ்சவில்லை. தமிழ் மக்களின் அரசியல் தூதுவனாக உலகத் தலைநகர்கள் எங்கணும் இராஜதந்திரிகளை, புத்திஜீவிகளை அறிவியல் தளத்தில், போரியல் பின்புலத்தில் எதிர்கொண்ட சிவராம் துல்லியமாகவும், நுணுக்கமாகவும் சர்வதேச அரசியல் தாக்கங்களை கணிப்பவனாக இருந்தமையினால் அவனது இழப்பு ஈடு செய்ய முடியாத சமன்பாடாகிறது.

தடைகள் பல கடந்து
நடராஜா முரளிதரன்

உலகளாவிய தடைகள் தமிழர் தரப்பு மீது நெருக்குவாரங்களைத் தருவது குறித்துப் பல்வேறு வகை அபிப்பிராயங்கள், கருத்துக்கள், விமர்சனங்கள், கண்டனங்கள், எழுப்பப்பட்டு வரும் இச் சமகாலச் சூழலில் கனடிய மண்ணில் அண்மையில் இடம்பெற்ற சில நிகழ்வுகள் எனக்கு வியப்பை அளிப்பதாக இருந்தது. இது குறித்து இவ் வாரம் அலசலாம் என்று எண்ணுகின்றேன். தமிழர் தரப்பைப் பயங்கரவாதப் பட்டியலில் ஏப்பிரல் 8ம் தேதி கனடிய அரசு இட்டதைத் தொடர்ந்து கனடா வாழ் தமிழர்களில் கணிசமான பகுதியினர் குழப்பம் அடைந்த சூழ்நிலையிலேயே காணப்பட்டார்கள். ஏனெனில் தடையைத் தொடர்ந்து அரச காவல்துறையினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்(அலுவலகங்கள், கடை என்பன முற்றுகையிடப்பட்டன, கோப்புகள் மேலதிக புலனாய்வுகளுக்காக அதிகாரிகளினால் கொண்டு செல்லப்பட்டன) தமிழ் மக்களுக்கு ஒரு வகை அச்சத்தை ஊட்டுவதாக அமைந்தது எனலாம். சிலருக்கு இவை மகிழ்ச்சியையும் அளித்திருக்கலாம். இதன் விளைவாகத் தடை தொடர்பான ஆட்சேபணையைக் கிளப்பி அரச கவனத்தை ஈர்ப்பதற்காகவும், தமிழ் மக்களிடம் ஒன்றுபடுதல் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பதற்காகவும் கனடிய தமிழர் பேரவை மே 8ம் தேதி தொட்டு மே 14ம் தேதி வரை ஒற்றுமை வாரத்தை முன்னெடுத்திருந்தனர். ரொறொன்ரோவில் உள்ள தமிழ் வெகு சன தொடர்புச் சாதனங்களும் ஒற்றுமை வாரத்துக்கு ஆதரவு வழங்கிப் பரப்புரையை முன்னெடுத்திருந்தன.
ஆனால் எனது நோக்கில் கனடிய தமிழர் பேரவையினர் எதிர்பார்த்த வெற்றியை இதன் மூலம் சம்பாதித்துக் கொண்டதாகத் தெரியவில்லை. கனடியத் தமிழ் மாணவர்களின் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பான ஈடுபாட்டுக்கு இந் நிகழ்வு குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றியிருப்பது அல்லது வித்திட்டுள்ளது என்ற உண்மைக்கு அப்பால் பெரிதாக எதையும் இந்த ஒற்றுமை வாரம் சாதித்து விடவில்லை என்பதை நாமெல்லோரும் ஒத்துக்கொள்ள வேண்டும். மே 8இல் ஸ்காபுரோ “டெல்டா” ஹோட்டலில் இடம்பெற்ற கருத்தரங்கத்தில் பிரபல சட்டத்தரணிகளான பார்பரா ஜாக்மான், மார்லிஸ் எட்வேட் ஆகியோர் பங்குபற்றியிருந்தும் கனடிய தேசிய ஊடகங்கள் எதுவும் அந் நிகழ்வுக்கு சமூகமளித்திருக்கவில்லை. “டண்டாஸ்”; சதுக்கத்தில் மே 11ம் தேதி நடைபெற்ற மனிதச்சங்கிலியில் மிகக் குறைந்தளவு மக்களே கலந்து கொண்டிருந்தார்கள். அன்றைய நாளில் மழை பெய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஒப்பீட்டளவில் மே10ம் தேதி கனடிய தமிழ் மாணவர் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வும், மே13ம் தேதி கனடிய தமிழ் ஊடகவியலாளர் இணையம் நிகழ்த்திய ஒன்றுகூடலும் ஓரளவு நன்றாக அமைந்தன. ஆனால் இந்த ஒற்றுமை வாரம் முடிவடைந்து இரு வாரங்களின் பின் மே 29ல் நடைபெற்று முடிந்த “உரிமைக் குரல்” ஒன்றுகூடல் மிகக் குறைந்த கால இடைவெளியில் தயார் படுத்தப்பட்டதாயினும் மக்கள் மிகப் பெருமளவில் வருகை தந்த நிகழ்வாக, சிறப்புற நடைபெற்று முடிந்துள்ளது. இதுவே என்னை வியப்பில் ஆழ்த்தியது.
1) கனடிய அரசின் தடையினால் உந்தப்பெற்ற இனவெறி சிறிலங்கா அரசினால் தொடரும் தமிழினப் படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் கண்டிப்பதுடன், அவற்றை நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரியும்
2) ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமை, தாயகம், தேசியம் ஆகியவற்றை அங்கீகரிக்கக் கோரியும்
3) சமாதான முயற்சிக்குக் குந்தகமாக அமையும் பக்கச் சார்பான ஒருதரப்பு மீதான கனடிய அரசின் தடையையும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை முயற்ச்சியையும் உடன் தவிர்க்கக் கோரியும்
4) புலம் பெயர் தமிழரோடு கனடியத் தமிழர் சமூகமும் இணைந்து அல்லறும் எம் மக்களின் துயர் தீர்க்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே “உரிமைக்குரல்” ஒன்றுகூடல் நிகழ்வுக்கு அந் நிகழ்வின் அமைப்பாளர்கள் “ரொறொன்ரோ” வாழ் தமிழ் மக்களை அணிதிரளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்கள். அன்றைய நாள் ரொறொன்ரோ பொதுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாள். பொதுவாகவே எல்லோரும் வேலைக்குச் செல்லும் நாளான திங்கட் கிழமை. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களை அச்சமுற வைத்திருக்கும் கனடிய அரசின் தமிழர் தரப்பு மீதான தடை! இன்னும் ஒருபடி மேலே கணணி தமிழ் வலயத் தளங்களான தேனி, தாயகம் இன்னும் இவை போன்ற பலவற்றின் பரப்புரைகள், கதையாடல்கள். இவற்றையெல்லாம் மீறிப் பெருமளவிலான தொகையில் தமிழ் பேசும் மக்கள் இவ் ஒன்றுகூடலிலே பங்கெடுத்தார்கள் என்ற சூழ்நிலையில் அவை குறித்துப் பக்கச்சார்பற்ற தளத்தில் உரையாடலும், விவாதமும் நிகழ்த்தப்பட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.
“ஒற்றுமை வாரம்” என்ற சொல்லாடல் ரொறொன்ரோவில் வாழும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய தாக்கத்தை, சிந்தனை ஊக்கத்தை விடவும் “உரிமைக் குரல்” என்ற சொல்லாடலும், அது கிளப்பியிருந்த கேள்விகளும் அவர்கள் மனதைப் பாதித்திருக்கிறது. சிந்திக்க வைத்திருக்கிறது. அந்தக் கேள்விகளின் தார்மீக நியாயம் அவர்களைக் கிளர்ந்தௌ வைத்திருக்கின்றது என்று கூடக் கூறலாம்.
சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கெதிரான இனப்படுகொலை என்பது தொடர்ச்சியாகவே நிகழ்த்தப்பட்டு வருகின்றது.
உயர்கல்வி, வேலைவாய்ப்பு, குடியேற்றத்திட்டம் இன்னும் பிறபல துறைகளில் தமிழ் மக்கள் இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு பாரபட்சமாகவே நடத்தப்பட்டு வந்துள்ளார்கள். இன்று தமிழர் மீதான இராணுவ ஆக்கிரமிப்பாக சிங்கள பௌத்த பேரினவாதமானது உச்சக்கட்டத்தை அடைந்துள்ள வேளையில் அதை மறுதலித்து ஒதுங்கிப் போகும் நிலையில் எந்த சராசரித் தமிழ் மகனும் காணப்படவில்லை என்பதையே “உரிமைக் குரல்” பேரணி எத்தனையோ தடைகளையும் கடந்து நிலை நிறுத்தியிருக்கிறது. எந்த விடுதலைப் போராட்டமும் தனது சொந்த மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் பட்சத்தில் சர்வதேச அரசுகளின் தனிமைப்படுத்தலையும் தாண்டி முன்னோக்கி நகர முயற்ச்சிக்கும். (இந்த ஆதரவு என்பது யாழ்பாணிய உயர்சாதிய, மேலாதிக்க மனோபாவத்தில் கட்டமைக்கப்பட்ட குறுந்தேசிய வாதமாகவும் சிலரால் சித்தரிக்கப்படுகின்றது. இக் கருத்தமைவு குறித்து அடுத்;;த வார இதழில் உரையாடலாம் என்று எண்ணியுள்ளேன்.) அந்நியச் சக்திகளின் ஆதரவின்றிக் கட்டப்படும் படைபலம் என்பது நீண்ட காலத்துக்குத் தாக்குப் பிடிக்குமாயின் அங்கு தார்மீகபலம், அரசியல் அறங்கள் நிறையவே உள்ளன என்ற வரலாற்றுண்மையை யாரும் புறந் தள்ள முடியாது.
மற்றும் கபடத்தனங்கள், சூழ்ச்சிகள் நிறைந்த இன்றைய உலக அரசியல் புலத்தில் தர்மத்தை நிலைநாட்ட வேண்டிச் சாணக்கியத்தனங்கள் புரிய வேண்டிய வரலாற்றுச் சூழல் விடுதலை கோரிப் போராடுகின்ற எந்த மக்கள் கூட்டத்துக்கும் உண்டு.
இந்த நடைமுறை யதார்த்தத்தை மீறிக் கற்பனை உலகில் யாரும் திளைத்து விட முடியாது. ஆயினும் தமிழர் தரப்பு மேலும் சில செயற் திட்டங்ககளைத் துரித கதியில் முடுக்கி விடுவதன் மூலமும் ஆழ்ந்து ஆய்வுக்குள்ளாக்குவதன் மூலமும் தமது அரசியல் பலத்தை மேலும் விசாலமாக்கிக் கொள்ள முடியும். குறிப்பாகத் தென்னிலங்கையிலும், இந்தியாவிலும் உள்ள முற்போக்குச் சக்திகளுடன் இணைப்பை ஏற்படுத்தும் வகையிலான வேலைத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சிங்கள நேசசக்திகளுடனான உறவு பேணப்படவும், வலுப்படுத்தப்படவும் வேண்டும். தென்னிலங்கை வாழ் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பான பரப்புரை வீரியத்துடன் நிகழ்த்தப்படல் வேண்டும். தமிழக அரசுடனான உறவு விருத்தி செய்யப்படல் வேண்டும்.இந்தியாவில் உள்ள எந்த மதவாத சக்திகளுடனும் உறவுகளை வைத்துக் கொள்ளக் கூடாது. தமிழ் பேசும் முஸ்லீம்களின் தனி அடையாளத்தை ஏற்று அவர்களது உள்ளக சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் வேண்டும். தமிழ் பேசும் முஸ்லீம்களின் ஏகப் பிரதிநிதிகளாக தமிழர் தரப்பு இருக்க முடியாது என்ற நடைமுறை யதார்த்தத்தை உள்வாங்குதல் மூலமே தமிழ் பேசும் மக்களின் வரலாற்றை முன்நோக்கி நகர்த்த முடியும். போர்க் காலச் சூழல் பல்வேறு இடர்களைத் தந்த போதிலும் கலை இலக்கியவாதிகள், படைப்பாளிகள், அறிவுஜீவிகள், மாற்றுக் கருத்தாளர்கள் சுதந்திரமாகக் கருத்துக்களைக் கூறும் ஜனநாயகச் சூழலைத் தமிழர் தரப்பு தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முயல வேண்டும். இவ்வாறான நடைமுறைகள் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டவையாகவும், குறைபாடுகள் கொண்டவையாகவும் அமையலாம். எனவே அவை அடிக்கடி மீளாய்வுக்குட்படுத்தப்பட்டு அவற்றில் உள்ள குறைபாடுகள் களையப் பெற்று மேலும், மேலும் அவை செழுமைப்படுத்தப்பட வேண்டும்.

இனவாதம்

-நடராஜா முரளிதரன்-

தமிழ், சிங்கள இரு தரப்பினரும் தத்தமது நிலைப்பாடுகளை விட்டுக் காடுக்காத சூழ்நிலையிலே காணப்பட்ட போதிலும் ஒஸ்லோப் பேச்சுவார்த்தைகளுக்கான நோர்வே அரசின் முயற்ச்சியைப் புறந்தள்ள முடியாத கட்டத்திலேயே இரு தரப்பினரும் அங்கு சென்றதாகக் கருதிக் கொள்ளலாம். அங்கு நோர்வே எதிர்பார்த்தது நிகழவில்லை. அதன் விளைவுகளை மக்கள் வேறு கட்டங்கள் வாயிலாக அனுபவிக்கும் சூழ்நிலை உருவாகி வருகின்றது. தொடர்ந்து கொண்டிருக்கும் படுகொலைகள் நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கின்றது. குறுங் காலத்துக்குள்ளாகவே அல்லைப்பிட்டி, வங்காலை, பேசாலைப் படுகொலைகள் என நீட்சி பெற்று உச்சக் கட்டமாக கெப்பிற்றிக்கொலாவைப் படுகொலைகள் என நடந்தேறியுள்ளன.கெப்பிற்றிக்கொலாவையில் அரசியல் அதிகாரத்தில் எத்தகைய பாத்திரங்களையும் வகிக்காத 15 குழந்தைகள் அடங்கலாக 65க்கும் அதிகமான சிங்கள மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.இந்தக் கொலைக்குக் காரணமானவர்களை யாராலும் கண்டுபிடித்துவிட முடியாது. எனவே இவ்வாறான மனிதப் படுகொலைகளைப் பயன்படுத்தி அரசியல் லாபம் பெறுவதற்கான முயற்ச்சிகளையே அரசியல் அதிகாரத்தை அனுபவிக்கும் அதிகார சக்திகள் மேற்கொள்ளும். உலக வரலாறுகள் எங்கணும் மனிதப் படுகொலைகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. இனத்தின் பேரால், மதத்தின் பேரால், மொழியின் பேரால், ஊரின் பேரால், உறவுகளின் பேரால் என இப் படுகொலைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. நாடுகள், இனங்கள், மக்கள் கூட்டம் போன்றவை பிறிதொரு ஆக்கிரமிப்பாளனால் ஆக்கிரமிக்கப்படும் போதும், பலம் பொருந்திய நாடுகள் பொருளாதாரச் சந்தை வாய்ப்புக்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்ற போதும் நிகழ்த்தப்படும் மனிதப் படுகொலைகள் மனித மாண்பினைச் சிதைக்கின்றன. காட்டுமிராண்டித்தனம் கட்டவிழ்த்து விடப்படுகின்றது.ஆகவேதான் நாகரீக சமுதாயங்கள் மனித உரிமைகளையும், மனித உயிர்களையும் காப்பதற்காகப் பல்வேறு உடன்படிக்கைகளை, யாப்புக்களை, சட்டங்களை இயற்றி வந்துள்ளன. ஆனாலும் ஆளுமை படைத்த சமுதாயங்களால் இத்தகைய சட்டங்கள் தங்கள் நலன் சார்ந்து வௌ;வேறு விதங்களில் பிரயோகிக்கப்படும் வழக்கத்தையும் இன்றைய உலகில் நாம் காணுகின்றோம்.இந்தச் சூழ்நிலையில் இன முரண்பாடு கூர்மையடைந்து முற்றிப் போயிருக்கும் இத் தருணத்தில் சராசரிச் தமிழ், சிங்கள மக்களிடையே இவ்வாறான மனிதப் படுகொலைகள் தீவிர இனவாதத்தையே மேலோங்கச் செய்யும். தமிழர் படுகொலைகளால் சிங்களவர்கள் மனம் மகிழ்வதும், சிங்கள உயிரிழப்புக்களால் தமிழர்கள் குதூகலம் அடைவதும் ஒப்பீட்டு அடிப்படையில் மேலோங்கி நிற்கும். எல்லா இனங்களையும் சேர்ந்த நல்ல மனிதர்கள் கூட இத்தகைய மனோபாவத்துள் ஆழ்ந்து, அமிழ்ந்து விடும் போது இனவாத அரசியல்வாதிகளுக்கு அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வது சுலபமாகி விடுகிறது. சிங்கள இனவாதம் மேலும், மேலும் தீவிரம் அடைதல் தமிழ் மக்களுடைய தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும், சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் என்பதை வலுவான வாதமாகத் தமிழ் தேசியவாதிகள் கருதுகிறார்கள். ஆனால் சிங்களப் பேரினவாதமானது ஓர் எல்லைக்கு அப்பால் சர்வதேச சக்திகளைப் பகைத்துக் கொள்ளாது காலத்தை இழுத்தடித்தும், தந்திரோபாய காய் நகர்த்தல்களில் ஈடுபட்டும், அரைகுறைத் தீர்வுகளுக்கு இணங்கியும் தனது அரசியல் சித்து விளையாட்டுக்களைத் தொடரும் என்ற உண்மையை நாம் வசதியாக மறந்து விடுகின்றோம். “சர்வதேசப் பாதுகாப்பு வலைப்பின்னல்” புரிந்த ரணிலிடமிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற முற்படுகையில் கிணறு வெட்டப் பூதம் எழுந்த கதையாய் இன்னுமொரு இனவாதப் பூதம் மேலும் வலுவான நிலையில் சர்வதேசத்தைத் தனக்குத் துணையாக அழைத்துள்ளமையை இங்கு நாம் நோக்க வேண்டும். மேலும் இலங்கைத் தமிழர் விடயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடுதான் தமிழக அரசின் நிலைப்பாடுமாகும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி வெளிப்படையாகக் கூறியுள்ளார். தமிழ் நாட்டுக்கு இந்த வருடம் இது வரையில் 3500க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் சென்றுள்ளார்கள். கடந்த பல வருடங்களாகத் தமிழகத்திற்குச் சென்று தஞ்சமடைந்து முகாம்களில் வாழும் பல்லாயிரக் கணக்கான அகதிகளின் துயர் தோய்ந்த வாழ்வு சொல்லில் விபரிக்க முடியாதது. ஆயினும் இந்திய மத்திய அரசானது இலங்கையின் இறைமைக்குட்பட்டு இலங்கையின் தமிழ் தேசிய இனப்பிரச்சினையில் இலங்கை அரசுடன் முரண்படாது செல்கின்ற போக்கையே இன்று பட்டும் படாமலும் கடைப்பிடித்து வருகின்றது. எதிர்காலத்திலும் இதே உத்தியையே இந்திய அரசு கையாளும். அதே சமயத்தில் இந்திய அரசானது மறை முகமாக ஈழப் பிரிவினைக் கோரிக்கையைப் பலவீனப்படுத்தும் வகையில் இலங்கை அரசுக்குத் தேவையான சகல இராணுவ உதவிகளையும் வழங்கும். குறிப்பாகக் கடல் பிராந்தியத்தில் கூடுதல் உதவியை இந்தியா இலங்கைக்கு வழங்கும்.எனவே இன்றைய உலகச் சூழலும், இந்தியச் சூழலும் ஈழத்தமிழ் மக்களுக்குச் சாதகமாயில்லாத சூழலில் எதைத்தான் செய்வது? ஏன்ற கேள்வி எழுகின்றது. மேற்குலகின் நண்பன் என்று கருதப்படும் ரணில் ஈழத் தமிழ்; மக்களுக்குத் தீர்வை வழங்கியிருப்பார் என்பதை நான் நம்ப மறுத்தாலும் ரணில் அதிகாரத்தில் இருந்திருந்தால் நிலைமைகள் மேலும் சிறப்பாகத் தமிழர் தரப்புக்கு அமைந்திருக்கும் என்பதையே இங்கு நான் கூற விரும்புகின்றேன். ஜனாதிபதித் தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பாக மிலிந்த மொறகொட வழங்கிய பத்திரிகைப் பேட்டியில் “சர்வதேசப் பாதுகாப்பு வலைப்பின்னல்” என்ற பொறி தமிழர் தரப்புக்கு எதிராக அமைக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். அதன் விளை பொருட்களில் ஒன்றுதான் “கருணா” என்பதும் அப் பேட்டியில் உள்ளடங்கியிருந்தது. இதனால் எழுந்த சர்ச்சையே ரணில் விக்கிரமசிங்கா சூட இருந்த மகுடத்தைக் குப்புறக் கவிழ்த்தது. ரணிலின் “பாதுகாப்பு வலைப்பின்னலில்” நாடு துண்டாடப்படுவதிலிருந்து காப்பாற்றப்படும் என்ற உறுதி மொழி மேற்குலகினால் வழங்கப்பட்டிருக்கும் என்ற உண்மைக்கு அப்பால் தமிழர் தரப்பு அச்சப்படுவதற்குப் பெரிதாக ஏதும் இல்லையென்றே நான் எண்ணுகின்றேன். “கருணா” குறித்த மிலிந்த மொறகொடவின் கூற்றுக்கள் சிங்களப் பேரினவாதத்தைத் திருப்திப்படுத்த மொழியப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட கூற்றுக்களாக அமையும் வாய்ப்புக்களையும் ஒதுக்கித் தள்ள முடியாது. ஆனால் மறுபுறத்தில் ரணில் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்தைக் கைப்பிடித்திருந்தால் தமிழர் தரப்பு சர்வ தேச மட்டங்களிலே இன்னும் ஆற்ற வேண்டியிருந்த அரசியல் பணிகளுக்கான கால அவகாசம் கிடைத்திருக்கும்.ஐரோப்பியத் தடை நிகழ்ந்திராது. உலகெலாம் புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கும், தாய் நிலத்துக்குமான உறவு அமைதிச் சூழல் காரணமாக அதிகரிக்கும் பயணப் போக்குவரத்துக்களினால் மேலும், மேலும் இறுக்கமடைந்திருக்கும்.சகல நிறைவேற்று அதிகாரங்களையும் ரணில் பெற்ற நிலையில் ரணிலை அம்பலப்படுத்துவதற்கான வாய்ப்பும் தமிழர் தரப்புக்குக் கிடைத்திருக்கும்.இதற்கும் அப்பால் இனவாதப் படுகொலைக் களங்களிலே தற்காலிக அமைதிக்கான கால இடைவெளி இன்னும் சிறிது நீண்டு விரிந்திருக்கும்.


இந்தச் சர்வதேச சமூகம்

-நடராஜா முரளிதரன்-

கனடாத் தடைக்கு எங்களவர்கள் இங்கே கருத்தாதரவு தேடாததும் முக்கிய காரணங்களில் ஒன்று என்று பேராசிரியர் சிவத்தம்பி கூறிய பொழுது அது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கருப் பொருளாக எம்மவரால் எடுத்தாளப்பட்டதா? என்ற கேள்வியை என்னுள் புதைத்து மீட்க முனைகிறேன். ஏனெனில், அந்தக் கருப் பொருளைப் புறந்தள்ளி சர்வதேச சமூகம் என்ற கருத்துப் பொருளாடலை எள்ளி நகையாடி ஈற்றில் அது தொடர்பான பிரக்ஞையை நழுவ விடுவதற்கான சுலோகங்களைத் தாங்கியது மாதிரியான தமிழ்ப் பத்திரிகையின் கட்டுரையொன்றை அண்மையில் வாசிக்க நேர்ந்தது. சர்வதேச சமூகம் அல்லது அனைத்துலகம் என்ற சொல்லாடல் இன்றோ அல்லது நேற்றோ தமிழ் பேசும் உலகுள் திணித்து விடப்பட்டுப் பிரபலமான வார்த்தைப் பிரயோகம் அல்ல. “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்ற ஏங்கல்சின் மிகப் புகழ் வாய்ந்த அறைகூவலுக்கு முன்பாகவே “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற எல்லைகளைக் கடந்து உலக சமத்துவத்தைக் காணவிழைந்த “கணியன் பூங்குன்றனார்” என்ற தமிழ்ப் புலவனுடைய கவிதை வரிகளுக்கூடாக உலக நோக்கு என்பது தமிழ்ப் பரப்பில் அறிமுகம் செய்யப்பட்ட விடயம்தான். அவற்றையெல்லாம் கடந்து உலகம் சுருங்கிச் சிறுத்துக் கிராமம் ஆகிப் போய் விட்ட இன்றைய நிலையில் அந்த வார்த்தை எங்கு நோக்கினும், எங்கு கேட்கினும் உலகப் பரப்பில் எல்லோரது செவிகளையும் சுலபமாகச் சென்றடைந்து விடக்கூடிய இலகு வார்த்தையாகவே விளங்கும். எப்படித் தமிழ் பேசும் மக்கள் என்று கூறுகின்ற போது அல்லது அவர்களது கருத்து என்று கூறுகின்ற பொழுது பெரும்பான்மைத் தமிழ் பேசும் மக்களால் ஆதரிக்கப்படும் ஒரு அமைப்பையோ அல்லது கட்சியையோ அவர்களது பிரதிநிதிகளாக முன்வைப்பதும், அவர்களது உரையாடல்களை எமது மக்கள் நலன் சார்ந்த பரப்புரையாகக் கொள்வதும் போலவே “சர்வதேச சமூகம்” என்ற பதப் பிரயோகத்தையும் இங்கு நாம் நோக்கலாம். எவ்வாறு தமிழ் பேசும் மக்களுடைய தேசிய அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் கருத்துருவமாக 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளை ஆணையாகக் கருதி தமிழர் அமைப்புக்கள் செயற்பட்டன? எனவே சர்தேச சமூகம் என்பது உலக நாடுகளில் வாழும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கங்கள் என்ற கருதுகோளின் அடிப்படையில் சிந்திப்பதே இன்றைய உலகில் நடைமுறைச் சாத்தியமான விடயமாகும். இந்த உலக நாட்டு அரசாங்களிற்கு அப்பால் பேரரசுகளின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கின்ற, சர்வதேச ஒப்பந்தங்;களில் கைச்சாத்திட்ட அரசுகள் அந்த உடன்படிக்கைகளை மீறுகின்ற போது, மீற முனைகின்ற போது அதனை விமர்சிக்கின்ற,கண்டிக்கின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்கள் இந்த உலகில் நிறைய உண்டு.
இதற்கும் அப்பால் அறிவுஜீவிகள், கலை இலக்கியவாதிகள், இடதுசாரிகள், சூழலியலாளர்கள் என எந்த ஆளும் வர்க்கங்கங்களின் நலன்களுக்கும் விலை போகாமல் சுயமான மனித மேம்பாடுகளுக்கான நிலைப்பாடுகளை உலக அரங்கில் ஓங்கி ஒலிக்கவல்ல ஆற்றல் படைத்த மனிதர்கள் நிறையப் பேர் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவைகள் எல்லாம் இணைந்ததுதான் இந்தச் சர்வதேச சமூகம்.
கியூபாவும், கென்யாவும், சோமாலியாவும். மாலை தீவும், இலங்கைப் பிரச்சினையில் கருத்துக் கூறினால் அதற்கு அர்த்தம் இருப்பதாக யாரேனும் கருதுவார்களா? என்ற வினாவும் அக் கட்டுரையில் எழுப்பப்பட்டிருந்தது. ஒரு பேச்சுக்காகவேனும் இந்த நாடுகள் யாவும் எமது பிரச்சினை தொடர்பாக கருத்துக் கூறும் தளத்தில் இன்றைய சூழ்நிலையில் உள்ளனவா? என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மறுபுறத்தில் கியூபாவும், கென்யாவும், மாலை தீவும் இந்தியாவோடு மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டவை. எனவே அவை கருத்துக் கூற முற்பட்டாலும் இந்தியாவோடு பகைத்துக் கொள்ளும் வகையில் இலங்கைப் பிரச்சினை தொடர்பாகக் கருத்துக்களை வெளியிட்டுத் தங்களை வீண் வம்பில் மாட்டிக் கொள்ள விரும்பமாட்டாதவைதான் இந்த நாடுகள் என்ற சர்வதேச அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வுறிய நாடுகள், குட்டி நாடுகள் யாவுமே இந்தச் சர்வதேச அரசியலுக்குள் உள்ளடக்கம். எனவே இந்த எடுகோள் எல்லா நாடுகளுக்குமான வெளிவிவகார அரசியலில் ஏற்புடைய பொதுமையான குறியீடாக அமைந்து விடுகிறது. அடக்குமுறைக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் அறவியல் சார்ந்த போரியல் நிலைப்பாடுகளையும் பிற பணிகளையும் சர்வதேச அரங்கில் ஆணித்தரமாக நிலைநிறுத்த வேண்டிய பணி மனிதத்தை நேசிப்பவர்களது விட்டுக் கொடுப்பற்ற பணியாகிறது.இதனை சர்வதேச சமூகத்தின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள வைக்கும் பணிகளாகவோ, கூக்குரலிட்டுக் காலில் விழுந்து மண்டியிட்டுப் பரப்புரை செய்யும் பிச்சைத் தொழிலாகவோ கொச்சைப்படுத்தினால் சர்வதேசத் தளத்திலே நிகழ்த்தப்பட வேண்டிய கருத்தாதரவுப் போர் பற்றிய தேடலை அடம் பிடித்து மறுக்கின்ற அபாயம் ஏற்படுகின்றது. அதியுயர் உளவு மூளைகள், நவீன தொழில் நுட்ப வசதிகள், இராணுவ ஆயுத பொருளாதார பலங்கள் அரசுகளின் இருப்புக்கும், இலகுவான சுரண்டலுக்குமான பாதுகாப்புக் கவசங்களேயாயினும் மேற்கத்தேய நாடுகளில் நிலவும் தாராண்மை ஜனநாயகத்தை (Liberal Democracy) சாதகமாகப் பயன்படுத்துவதற்கான அறிவியலையும், உபாயங்களையும் கற்றுக் கொள்ளாத வரைக்கும், உலகத்தின் உன்னதங்களை உள்வாங்கத் தயாரில்லாத மனோபாவம் நீடிக்கும் வரைக்கும் ஈழ மக்களின் துயர் தோய்ந்த வாழ்வு நீடித்துக் கொண்டே செல்லுவதற்கு இதழியல் சார்ந்த வரட்டுக் கோட்பாளர்களும் காரணமாக அமைந்து விடக் கூடாது.
அளவெட்டியிலே 1982இல் இறைகுமாரனும், உமைகுமாரனும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு வயல்வெளிகளிலே வீசப்பட்ட வேளையிலே அந்தக் கொலைகளைக் கண்டித்து “விமர்சனங்களுக்குக் கொலைகள் தீர்வாகாது” என்ற துண்டுப் பிரசுரம் யாழ் குடாநாட்டிலே விநியோகிக்கப்பட்டிருந்தது. நானும் கூட அத் துண்டுப் பிரசுர விநியோகத்திலே ஈடுபட்டிருந்தேன்.
“விமர்சனங்களுக்குக் கொலைகள் தீர்வாகாது” என்ற சொல்லாடல் இப் பத்தியை எழுதும் போது என் மண்டையைக் குடைந்து அற்புதமான நினைவு மீட்டலைத் தர முனைகிறது.எத்தனையோ மணம் பரப்பிய மலர்கள் பறிக்கப்பட்ட பூமி எங்கள் ஈழ மண். ஆகவேதான் ஆரோக்கியமான விமர்சனங்களை முன் வைப்போர் கருத்துப் போர்க்களத்திலே கூட சாகடிக்கப்பட்டு விடக்கூடாது. அரசியல் ஆய்வாளர்களும், வியூக வகுப்பாளர்களும் நிறையவே எமது சமுதாயத்திற்குத் தேவைப்படுகிறார்கள். முரண்பாடுகளுக்கூடாக அதியுயர் தேர்வைக் காணவிழைவதே பண்பட்டுக் கொண்டிருக்கும் சமுதாயத்தின் செல்நெறியாக அமையும். ஆரவாரக் கூச்சல்களுக்கு மத்தியில் மனித முகத்தை நாம் இழந்து விடக் கூடாது. எந்த வஞ்சகமும், கோரமும் உருமறைப்புச் செய்யப்பட்டு மாய மானாகக் காட்சியளித்தாலும் அதனுடன் போர் புரிதலென்பதும், வெற்றி கொள்ளப்படுதலென்பதும் கருத்தாதரவுக் களத்தில் மாத்திரமே சாத்தியப்பாடானது. அக் கட்டுரையில் மேலும் கூறப்படும் உலகப் பெரு ஊடகங்களை ஒதுக்கித் தள்ளிவிடல் என்பது வெறும் உணர்ச்சி வெளிப்பாட்டால் உந்துதல் பெறும் முன்மொழிதலே ஆகும். வாய்ப்புக்கள் தரப்படும் கணப் பொழுதுகளை கருவியாகப் பயன்படுத்தி கருத்தாதரவுத் தளத்திலே உலகை வசப்படுத்தும் பேர் அதிசயத்தை ஏன் நிகழ்த்த முடியாது ? பி;.பி.ஸியை ஒட்டு மொத்தமாகவே சி.என்.என் உடன் ஒப்பிடுவதென்பது முட்டாள்தனமானது. பி;.பி.ஸியைச் சாதகமாகக் கையாளுவதற்கான வாய்ப்புக்கள் நிறையவே உண்டு. அது குறித்து ஆழ்ந்து சிந்திக்கவும், உழைக்கவும் தயாரில்லாத நிலையில் அவை குறித்த வசைபாடல் என்பது சில ஊடகவியலாளர்களுக்கு மிகுந்த சுலபமாகி விடுகிறது. 1960களில் ஆரம்பித்த அமெரிக்க-வியட்நாம் யுத்தத்தின் போது அமெரிக்க அரசு யுத்தத்திற்கு எதிராக உள்நாட்டில் கிளர்ந்தெழுந்த மக்கள் எழுச்சியைப் புறந்தள்ள முடியவில்லை.
உலக சமாதானத்திற்கு “பீற்றில்ஸ்” பாடகர்கள் ஆற்றிய பங்களிப்பை மறந்து விட முடியுமா?
எனவே வரலாற்றில் இருந்து நாம் நிறையவே பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.