Thursday, August 17, 2006

ஐரோப்பிய யூனியன் இன்று தடை செய்யுமா?

-நடராஜா முரளிதரன்-

இன்று மே வெள்ளி 19ல் ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு(யூனியன்) தமிழர் தரப்புத் தொடர்பாக எடுக்கவுள்ள முடிவு தமிழ் பேசும் ஈழத்தவர்களுக்கு எத்தகைய தாக்கத்தை, பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது ஏற்படுத்தாது என்பது பற்றிய வாதப்பிரதிவாதங்கள் தமிழ் மக்கள் மத்தியில் சூடு பிடிக்கப்போகிறது.

ஏறத்தாள 4 இலட்சம் இலங்கைத் தமிழ் மக்கள் மேற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் செறிந்தும், பரவலாகவும் வாழ்வதால் அந்த நாட்டு அரசியலாளர்கள் அது குறித்து அக்கறைப்பட வேண்டியவர்களாக உள்ளார்கள்.

மேலும் தமிழ் அகதிகள் வருகை அதிகரிப்பினால் எழக்கூடிய சிக்கல்களை எவ்வாறு மட்டுப்படுத்துவது என்பது குறித்து மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சில கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டவர்களாக உள்ளார்கள். மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அனைத்துலக உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ள மேற்படி நாடுகளுக்கு சிறிலங்காவிலே இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த அவதானங்களை, அபிப்பிராயங்களை வெளிப்படுத்த வேண்டிய சூழ்நிலை உண்டு.

எல்லாவற்றையும் விட மேலானதாக அந்தந்த நாடுகளின் பூகோள, இராணுவ, பொருளாதார, தேசிய அரசியல் நலன்களின் பெறுபேறுகளை மையமாகவே வைத்து கொள்கை வகுப்பாய்வாளர்கள் வகுக்கும் கோட்பாடுகளின் அடிப்படையில் நாடுகளின் வெளிவிவகாரக் கொள்கை தீர்மானிக்கப்படுகின்றது என்று கூறுவதே மிகப் பொருத்தமானது.

எனவே நாடுகளின் வெளிநாட்டுக் கொள்கையைப் பொறுத்த வகையில் எமக்குச் சாதகமாக அமைவது மற்றவருக்குப் பாதகமாக அமையலாம். எமக்குப் பாதகமாக அமைவது மற்றவருக்குச் சாதகமாக அமையலாம்.

அண்மையில்; இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தென்னாசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க அமைச்சின் செயலாளர் டொனால்ட் காம்ப் தமிழர் தரப்பைத் தடை செய்வதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐரோப்பிய யூனியனைக் கோரியுள்ளதாக கூறியிருந்தார்.

உலகப் பெரு வல்லரசான அமெரிக்கா ஐரோப்பிய யூனியன் மீது கொடுக்கும் அழுத்தமானது மிகவும் முக்கியமானதொன்றாகவே கருதப்படும்.25 அங்கத்துவ நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் புருசெல்சில் எடுக்க உள்ள இந்த முடிவானது தமிழ் பேசும் மக்களுக்குப் பாதகமாக அமைந்து விடும் தமிழர் தரப்பைப் பயங்கரவாதப் பட்டியலில் இட்டுவிடும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஐரோப்பிய இராஜதந்திரிகள்
மட்டத்திலிருந்து செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன.

ஏதாவது பேரதிசயங்கள் நிகழ்ந்து முடிவுகள் ஒத்திவைக்கப்பட்டோ அல்லது சாதகமான வாய்ப்புக்கள் நிகழ்ந்தோ மாறுதல் அமைவதற்கான சூழ்நிலை மிகவும் அரிதாகவே காணப்படுகின்றது. ஐரோப்பியச் சூழ்நிலையில் ஏற்கனவே பிரிட்டன் தமிழர் தரப்பைத் தடை செய்து விட்டது. ஐரோப்பிய யூனியன் கடந்த வருடம் செப்ரம்பர் மாதம் தழிழர் தரப்பின் மீதான பிரயாணத் தடையை அமுல்படுத்திருந்தது.உலக அளவில் தடைகள் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா,கனடா போன்ற நாடுகளில் ஏலவே அமுல்படுத்தப்பட்டுள்ளன.

தடைகள் என்பது அடக்கப்பட்ட மக்கள் மீது பிரயோகிக்கப்படும் போதெல்லாம் அதன் விளைவுகள் இன்னும் அதன் எல்லைகளைத் தாண்டி வன்முறைகள் மோசமாக நிகழ்வதற்கான தள நிலைமைகளை உருவாக்கிவிடுகிறது என்பதுதான் உண்மை.

1978 ஆம் ஆண்டு ஜே.ஆர் அரசு அமுல்படுத்திய தடை தமிழர்களின் அரசியல் வன்முறை ஈடுபாட்டை மேலும் துரிதப்படுத்திய வரலாற்றுண்மையை இங்கு நோக்கலாம்.இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கு வடகிழக்கு மாகாணசபையை வழங்குவதாகக் கூறிக் கொண்டு வந்த இந்திய இராணுவம் நடுநிலையாளர் ஸ்தானத்திலிருந்து விலகி தாக்குதலாளனாக மாறிய போது ஏது நிகழ்ந்தது?

இலங்கை அரசு, இந்திய அரசு, மாற்று அமைப்புக்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து ஜே.ஆர் ஆட்சிக் காலத்தில் அமைத்த முக்கூட்டு பலமானதாக ஏன் அமையவில்லை? அடக்குமுறையைத் தனது மேலாதிக்கத்துக்காகப் பிரயோகிக்கும் எந்தப் பலம் பொருந்திய அமைப்பும் ஈற்றில் தகர்ந்து விடுகிறது.

ஐரோப்பிய யூனியன் ஏற்புடுத்த உள்ள இத்தடையானது கீழ்கண்ட பிரச்சினைகளைக் கிளப்பி விடும் என அரசியல் அவதானிகள் கருத்துக் கூறுவது ஆழ்ந்து கவனிக்கத்தக்கது.

1) சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு தமிழர் தரப்பை ஊக்குவிப்பதற்குப் பதிலாக மேலும் தமிழர் தரப்பை அந்நியப்படுத்தும் நிகழ்வாக அமைந்து விடும்.

2) சிறிலங்கா அரசானது இதனைத் தமக்குச் சாதகமான சமிக்ஞையாகக் கருதிக் கொண்டுவிட ஜே.வி;.பியும், ஜாதிகஹெல உறுமய போன்ற போன்ற பேரினவாதக் கட்சிகளின் கூட்டும், முன்னெடுப்பும் முழு அளவிலான போரைத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடுவதற்கான வாய்ப்புகளை அரசுக்கு ஏற்படுத்திவிடும்.

3) தமிழ்-சிங்கள இனங்கள் மத்தியில் தற்போது காணப்படும் பதட்ட சூழ்நிலையானது தமிழ்-சிங்கள இனக் கலவரம் நடைபெறுவதற்கான ஏதுக்களை இட்டுச் சென்று விடும்.

4) ஐரோப்பாவில் இத் தடை அமுல்படுத்தப்படும்போது அங்கு வாழ்ந்து வரும் தமிழ் பேசும் மக்களுக்கு பல சிரமங்களையும், தொல்லைகளையும் நடைமுறை வாழ்வில் விளைவித்து விடும்.

நடைமுறையில் இவ்வாறான தடைகள், அழுத்தங்கள் எதைச் சாதித்தன என்பது குறித்து ஆராயும் சில ஆய்வாளர்களது வியாக்கியானங்கள் வேறுவகையில் அமைகிறது.

1995 ஒக்ரோபரில் கனடா நாட்டில் மாணிக்கவாசகம் சுரேஸ் அவர்கள் கைது செய்யப்பட்டு தமிழர் தரப்பு மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டபோது அதனால் பாரதூரமான பாதிப்பு ஏதும் நிகழ்ந்து விடவில்லையே என்று என்னிடம் ஓர் ஆய்வாளர் கூறினார்.

1996 ஏப்ரல் 10ம் தேதி சுவிஸ் நாட்டில் தமிழர் தரப்புச் செயற்பாட்டாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு இலட்சக்கணக்கிலான பணம் வங்கியில் முடக்கப்பட்டுப் பாரிய அளவில் பொலீஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் விளைவு பொது மக்களிடம் அனுதாபமும், எழுச்சியும் மேலோங்கியது. நீதிமன்ற விசாரணைகளின் முடிவில் அரச தரப்பு தோல்வியைத் தழுவிக் கொண்டது மட்டுமல்லாது குற்றஞ் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டு ந~;டஈடும் பெற்றுக் கொண்டார்கள்.

தடைக்குள்ளான நாடுகளான அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலே கூட தமிழர் தரப்புச் செயற்பாடுகள் ஓரளவு தொடருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனவேதான் நோய்க்கான காரண காரியங்களை அறிதலின் மூலம் நோயைக் கட்டுப்படுத்துவதும், நோயாளியைக் குணப்படுத்துவதும் சிறந்த வைத்தியனின் சேவையாக அமைகிறது.

எனவே தடைகள் மூலம் தமிழர் தரப்பின் மீது பிரயோகிக்;கப்படும் அழுத்தங்கள் முற்றிலுமாக செயற்பாடுகளை நிறுத்திவிடுமா? என்பது போன்ற கேள்விகள் மக்கள் மனங்களில் இயல்பாக எழுவதும் அதற்கான பதில்கள் அவரவர் நிலைப்பாட்டில் வழங்கப்படுவதும் புலம் பெயர் வாழ்வில் பொதுவானதாகும்.

இந்த அடிப்படையில் ஐரோப்பியத்தடை நிகழுமாயின் போர் மேகங்கள் ஈழ வானில் இடிகளை முழக்கும். இரத்த ஆறு பெருக்கெடுத்தோடும்.

No comments: