Sunday, August 10, 2008

வட-கிழக்கு மண்ணின் மைந்தர்கள் எழுகவே!

-நடராஜா முரளிதரன்-

கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமிழ் “மசாலா” படத்துக்கே உரிய விறுவிறுப்புக் காட்சிகளோடு கூடிய முடிவிலி வரை நீளக்கூடியதுமான நாடகத்தொடர் போன்றே கிழக்கரசியல் நீளுவதாக என் கண்களுக்குத் தோற்றம் தருகின்றது. அண்மையில் கிழக்கின் முதல்வராகப்பட்ட “பிள்ளையான்” எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை நோக்கும்போது ஏறத்தாள இன்றைக்குப் பத்து வருடங்களுக்கு முன்பாக இரவல் படையின் கடாட்சத்தினால் வட-கிழக்கு மாகாணசபையின் முதல்வராகப் “பட்டாபிசேகம்” செய்து முடியையும் சூடிக்கொண்ட வரதராசப்பெருமாள் அவர்களையே எண்ணிப் பார்க்க வேண்டிய நிலையேற்படுகின்றது. அவர் “மணிமகுடத்தையும்” இழந்து ஏன் “பரிவாரங்களோடு” ஒரிசாவுக்குக் கப்பல் ஏறினார் என்ற கடந்த காலக் கதையை யாமெல்லோரும் நன்கு அறிவோம். அதை முற்கூட்டியே அன்றைய சூழ்நிலையில் யாராவது “அரசியல் ஆய்வாளர்கள்” ஆருடம் கூறியிருந்தார்களோ? என்பதும் இன்று எனக்கு நினைவில் இல்லை.

கட்டுக்கோப்பு, தியாகம், தலைமை விசுவாசம் போன்ற எவையுமே ஒரு குறிக்கோளுக்கான பயணத்தில் அக் குறிக்கோளுக்கான பயணத்தை மனசார வரித்துக் கொண்டவர்களால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படுபவை. இவையெல்லாம் ஒரு சமன்பாட்டின் மாறிலிக்கான பரிமாணத்தை எப்போதும் கொண்டமைவதாகக் கட்டமைக்கப்படுவது சதா என்றுமே சுழற்ச்சிக்குள்ளாகும் மனித மனங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சமூகக் கட்டுமானங்களுக்கு எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொருத்தமாக அமைந்துவிட முடியாது.

கடந்த 25 வருடங்களாக நடைபெற்றுவரும் போரில் மிகப் பலம் வாய்ந்த எதிரிக்கு எதிராகப் பலவீனமான மக்கள் கூட்டம்(தமிழ் பேசும் மக்கள்) ஒன்று போராடுகின்றது என்பதே வரலாற்று உண்மையாகும்.. எதிரியின் பலம் என்பது அவனது பிரமாண்டமான மக்கள் தொகை, அவன் வசிக்கும் பாரிய நிலப்பரப்பு, இறைமை படைத்த அரசு என்ற வகையில் அவனுக்குக் கிடைக்கும் உலகளாவிய அரசுகளின் அரவணைப்பு என எதிரியின் பலத்துக்கான, மேலாண்மைக்கான பட்டியல் தொடர்ந்து நீண்டு கொண்டேயிருக்கும். எனவே பலம் பொருந்திய பகைவன் அவ்வப்போது பெறுகின்ற வெற்றிகள் என்ற தலைப்புக்குள் போராட்டத்தின் அறம் குறித்த நியாயத்தேடலைப் புதைத்துவிட முடியுமா?

பலவீனமான பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டம் அசுரபலம் பொருந்திய இஸ்ரேலினால் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகிறது என்ற உண்மையினால் பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டம் அறத்தின் பாற்பட்டதல்ல என்று கூக்குரல் இட்டுவிட முடியுமா? மேற்குக்கரையென்றும், காசாவென்றும் பூகோள, புவியியல் தொடர்ச்சியற்ற நிலையிலும் அந்த மக்கள் தங்களை பாலஸ்தீனர்களாகக் காணுவதை எந்த வகையறாவுக்குள் இட்டு நிரப்ப முடியும்? ஏன் அந்த மக்கள் பிரதேசவாதிகளாக அறுந்துபடவில்லை?


“ஒஸ்லோ” உடன்படிக்கையும், “உலக நாயகன்” அமெரிக்காவும் தாரை வார்த்தளித்த வரையறுக்கப்பட்ட சுயாட்சியதிகாரங்களை உள்ளடக்கிய பாலஸ்தீன அரசு என்ற கட்டமைப்பு பாலஸ்தீன மக்களின் அடிப்படைத் தேவைகளையே வழங்க முடியாது ஏன் தோல்வியுறுகின்றது? என்ற பாடங்களை வரலாற்றின் சகதிக்குள் மீண்டும், மீண்டும் தமிழ் மக்களாகிய நாம் சுழியோடித் தேட வேண்டியிருக்கிறது. கிழக்கு மாகாணசபையின் தேர்தல் பட்டாசு வெடிச்சத்தங்களின் அதிர்வுகள் ஓயு முன்னரே கிழக்கு மாகாணத் தமிழ்மக்களுக்கும், முஸ்லீம் மக்களுக்குமான இனப்போரின் ஆரம்ப கட்டங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுவிட்டன. இரு புறமும் வீழ்த்தப்பட்ட பிணங்கள் வரிசையாக அடுக்கப்படுகின்றன. இந்த இலடச்சணத்தில் தொப்புள் கொடி உறவை அறுத்தவர்கள், அறுந்து பட்டவர்கள் சனநாயக அரசியல் நீரோட்டத்தில் உள் இழுக்கப்பட்டதாகவோ அல்லது உள் நுழைந்து கொண்டதாகவோ வீண் வார்த்தைகள் உரைக்கப்படுகின்றது.

முன்னாள் முதல்வர் “பெருமாள்” மாகாணசபைக்கான மேசை கதிரைகளை வாங்குவதற்கே கொழும்புக்கு ஏறியும், இறங்கவும், அலையவும் வேண்டியுள்ளதே எனப் புலம்பியடித்தது நேற்று முளைத்த பிள்ளையானுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. 1956ஜூன் 5ம் தேதி பண்டாரநாயக்கா தலைமையிலான அரசு தனிச் சிங்களச்சட்டத்தை விவாதிப்பதற்காக நாடளுமன்றில் கூடிய போது கிழக்கின் மைந்தர்கள் தமிழ்த் தேசிய உணர்வின் தீப்பிழம்பானமைதான் உண்மை வரலாறு. திருமலை இராஜவரோதயம், பட்டிருப்பு இராசமாணிக்கம், அறப்போரணித் தலைவர் அரியநாயகம், இராஜதுரை, சம்மந்தன், ஜோசப் பரராஜசிங்கம், காசி ஆனந்தன் போன்றோர் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் ஆரம்பமாவாதத்திற்கு வெகுகாலத்திற்கு முன்னரே கிழக்கு மாகாணமெங்கும் தமிழ்த் தேசிய உணர்வுவாதப் பிரச்சாரத்தில் தீவிர பங்கெடுத்துக்கொண்ட கிழக்கின் மைந்தர்கள்.

1977ஆம் ஆண்டு மிதவாதத் தமிழ்த் தலைமைகளால் பிரகடனப்படுத்தப்பட்ட தமிழீழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு என்று கருதப்பட்ட தேர்தலில் திருமலை, மூதூர், மட்டக்களப்பு, அம்பாறை அடங்கலாகப் பெருவாரியான தமிழ்மக்கள் “தமிழீழ ஆணைக்கு” ஆதரவாக வாக்களித்த வரலாற்றுண்மையை யாரும் மறுதுரைக்க முடியாது.
தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்குள் வெட்டிப் பிரிக்க முடியாத இரட்டைக் குழந்தைகளாக விளங்கியவர்களே வட-கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்கள். முஸ்லீம் மக்களின் சுயத்தையும், தனித்துவத்தையும் அங்கீகரிக்க வேண்டிய கடப்பாடு அந்த இருபகுதித் தமிழ்மக்களுக்கும் உண்டு. தேங்காய்பூவும், பிட்டுமாக ஒன்றி வாழ்ந்த சமூகமாகத் தமிழ் முஸ்லீம் சமூகங்களின் கடந்த கால உறவுகளை மேடைகள் தோறும், பத்திகள் தோறும் பிரகடனப்படுத்துகின்றோம். ஆனால் இன்றைய சமகால தமிழ், முஸ்லீம் சமூகங்களுக்கிடையிலான மெய்யான யதார்த்தம் என்ன? இரு சமூகங்களுக்கும் இடையிலான மத,பண்பாட்டு, கலாச்சார இடைவெளிகளுக்கு அப்பால் பாரிய பிரிவினை கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் வேரோடி நிற்கிறது. அப் பிரிவினைக்கான பெரு மையம்பொருளாதா ஏற்றத்தாழ்வேயாகும்.

பாரம்பரியமாகவே முஸ்லீம்கள் வியாபாரிகள். ஆதனால் வரலாற்று ரீதியாகப் பெரு வளர்ச்சியடைந்த தமிழ்-சிங்கள முரண்பாடு இயல்பாகவே வியாபார சமூகத்ததைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கு சாதகமான வாய்ப்புக்களைத் தோற்றுவித்திருக்கின்றது. அதற்கும் அப்பால் முஸ்லீம்களின் அரசியல் தலைமை கொழும்பின் அரசியல் அதிகார மையத்தோடு காலத்திற்குக் காலம் சமரச அரசியல் உறவினைப் பூணுவதன் மூலமே தனது நலன்களை மாத்திரமல்லாமல் தனது சமூகத்தின் நலன்களையும் தக்க வைத்துக் கொள்ள முயன்று வந்துள்ளது. இத்தகைய அணுகுமுறை முஸ்லீம்களை ஒப்பீட்டுரீதியில் பொருளாதார ரீதியில் கிழக்குத் தமிழர்களுக்கு மேலாக வளர்த்துச் சென்றுள்ளது.

எனவே இயல்பாய் எழுந்த இந்த முரண்பாடுகளுக்கும் அப்பால் சிங்களப் பேரினவாதம் முஸ்லீம் அடிப்படைவாதிகளை தமிழ்த் தேசியத்தின் எழுச்சியை முறியடிப்பதற்கு பயன்படுத்திய நீண்ட கதையும் இங்குண்டு எனவே இவற்றின் வெளிப்பாடுகளான மோதலையும், முரணையும் எவ்வாறு கையாள்வது என்பதும் பொது எதிரியை வென்றெடுப்பதில் எவ்வாறு “ஐக்கிய முன்னணியைக்” கட்டுவது என்பதில் அரசியல் பாடங்களைக் கற்றுக் கொள்வதும் ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்கள் என்ற வகையில் தமிழ்த் தேசியர்கள் முன் உள்ள வரலாற்றுக் கடமையாகும். அதற்கும் அப்பால் எங்களுக்கு எந்தப் பிரச்சினைகளுமே கிடையாது என்பதும் குறிப்பிட்ட பிரதேசத்தைச் சார்ந்தவர்களால் நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்டோம் என்பதும் குறிப்பிட்ட சில தனிமனிதர்களின் அபிப்பிராயங்களாக, கருத்துக்களாக அமையலாம். அவர்களின் கருத்துச் சுதந்திரத்தை மறுதலிப்பதில் எள்ளளவும் பிரியப்படுபவன் அல்ல நான். ஆனால் மலையகத் தமிழ்மக்களின் குடியுரிமை பறிப்பு, ஆண்டாண்டு காலமாகத் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பெற்ற தமிழ்மக்கள் மீதான இனப் படுகொலைகள், சிறைகளிலே தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கும், மரணத்திற்கும் உள்ளாக்கப்படும் தமிழ் இளைஞர்கள், தமிழ் பேசும் இனத்தின் பாரம்பரிய பிரதேசங்களில் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்கள், உயர்கல்வி வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் கடைப்பிடிக்கப்பட்ட பாரபட்சங்கள், அந்நிய இராணுவ ஆக்கிரமிப்பு போன்றவை அனைத்தும் (சிறிய வேறுபாடுகள் தவிர்ந்து) வட-கிழக்கு மாகாணங்கள் முழுமைக்கும் பொதுமையாகவும் மலையகம் அடங்கலாகவும் நடைபெற்றன. இன்றும் நடைபெறுகின்றன.

ஆகவேதான் ஓர் இனத்துக்கான சுயநிர்ணய உரிமை என்ற சர்வதேச சட்ட வரையறையின் பிரகாரம் தமிழ் பேசும் மக்களுக்கு உரித்துடைய சுயநிர்ணய உரிமைக்காக வட-கிழக்கு மண்ணின் மைந்தர்கள் எழுகவே! என்று வாய் விட்டுக் கத்த வேண்டும் போலுள்ளது எனக்கு. .

Saturday, February 23, 2008

அன்றைய யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி

நடராஜா முரளிதரன்

கடந்த சில வாரங்களுக்கு முன்பாகக் “குறமகள்”(வள்ளிநாயகி) அவர்களினால் எழுதி வெளியீடு செய்யப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி – ஓர் ஆய்வு என்ற நூலை அந்நூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்ற போது வாங்கிக் கொண்டேன். பின்பு அந்நூலை வாசித்தபோது அதனூடகக் கிடைத்த தகவல்களில் சிலவற்றை இங்கு மீட்பதே இப்பத்தியில் எனது நோக்கம்.

யாழ்ப்பாணச் சமூகம் என்பது பெரும் படிப்பைப் பாரம்பரியமாகக் கொண்டது என்ற “பெரும் புழுகுக்குள்” தோய்ந்து மூழ்கி எழும் பழக்கமும். வழக்கமும் வாய்க்கப் பெற்ற பாரம்பரியத்தில் வந்துதித்த என் போன்றோருக்கு வெறும் 175 வருட காலங்களுக்கு முன்னேதான் விரல் விட்டு எண்ணக் கூடிய யாழ்ப்பாணப் பெண்கள் சிலர் எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலே எழுதவும், வாசிக்கவுமான ஆரம்பக் கல்வியை கற்க ஆரம்பித்தார்கள் என்ற வரலாற்றுண்மையை அந் நூலின் வாயிலாகப் பெறக்கூடியதாக அமைந்த போது பெரும் வியப்பை ஏற்படுத்தியது. எனவேதான் இங்கு ஓர் கேள்வி எம்முள் இயல்பாகவே எழுப்பப்படுகிறது.

எமது பாரம்பரிய இந்துச் சமூகத்தில் காலங்காலமாக கடைக் கொள்ளும் அல்லது பேணப்படும் பெண் பற்றிய கருத்து நிலைப்பாடு என்பது யாது? இந்துக்களுக்கும் இந்துக்கள் என்ற அணியினுள் இன்று உள் அழுத்தப்பட்ட சைவ, சமண, சாக்த, வைணவ மதத்தவர் யாவருக்கும் “மனு தர்மமே” நெறிகாட்டும் வழிகாட்டியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த “மனு தர்மத்தில்”; பெண் என்றவள் இழிந்தவளாக, மிகக் கொடூரமான கட்டுக்குள் வளர்த்தெடுக்கப்படவேண்டியவளாக, ஆடை-ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட வேண்டியவளாக சித்தரிக்கப்பட்டுள்ளாள்.

அன்றைய நூல் வெளியீட்டு வைபவத்தில் இது தொடர்பாக கவிஞர் சேரன் விரிவாக எடுத்துக் கூறியும் இருந்தார். “இந்து” என்ற வார்த்தையை இந்திய சமூகக் கட்டுமானத்துக்குள் ஒர் பதப் பிரயோகமாகப் பயன்படுத்தியவர்கள் அல்லது கொணர்ந்தவர்கள் பர்சியர்கள் மற்றும் பிரிட்டிசார் என்றே வரலாறு கூறுகிறது. ஆனால் இன்று “இந்து” என்ற அந்த வார்த்தை பரந்து, விரிந்த இந்திய உபகண்ட சமூகங்களை ஒரு குடையின் கீழ் அணிதிரட்டும் வலுப்படைத்த “தேசிய” ஆயுதமாகப் பிரயோகிக்கப்பட்டு வருகிறது. எனவே இவ்வாறான வளர்ச்சியடையாத இறுக்கமான சமூகக் கட்டுமானத்துக்குள் இருந்து வெளிக்கிளம்புதல் என்பது அன்றைய யாழ்ப்பாணப் பெண்களைப் பொறுத்தவரையில் மிகக் கடினமானதாகவே இருந்திருக்கும்.

பெண்ணை ஆணிலும் பார்க்கத் தாழ்ந்தவளாகக் கருதும் கருத்துநிலையின் தளம் இந்தியச் சமூகத்திற்கு மாத்திரம் உரியதொன்றன்று. அது மேல்நாட்டுச் சமூகங்களுக்கும் உரிய ஒன்றாகும். இதற்கான காரணம், இச்சிந்தனை மரபு தந்தை வழி அதிகாரச் சமூகத்தின் நியமமாகும் என்று அந்நூலின் முகவுரையில் பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுகிறார்.

1820களின் ஆரம்பத்தில் தெல்லிப்பளை, உடுவில் ஆகிய பகுதிகளிலேதான் முதன்முதலாகத் தமிழ்ப் பெண்களுக்கான கல்வி அமெரிக்க மிசனறிகளால் அறிமுகப்படுத்தப்படுகிறது. எனவே இங்கு குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இயங்கிய மெதடிஸ்த திருச்சபையும், அங்கிளிக்கன் திருச்சபையும் இங்கிலாந்தைத் தளமாகக் கொண்டு இயங்குகையில் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிசன்களது கல்விசார் தொழிற்பாடு பிரிட்டனின் காலனித்துவக் கொள்கைகளோடு முரண்படுகின்ற கல்விப் போக்கினைக் கொண்டிருந்தது எனக் கூறப்படுகின்றது.

ஒரு பெண் கிறீஸ்தவளாக மாற்றப்பட்டுவிட்டால்; அவளது குடும்பத் தொடர்ச்சியே கிறீஸ்தவ மயப்பட்டுவிடும். ஏனவே மத விரிவாக்கலுக்கு பெண் கல்வி அத்தியாவசியமானது என்ற அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்ட கிறீஸ்தவ மதக் குழுக்கள் தங்களது மனித நேய அணுகுமுறையினூடாக யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்களுக்கான சமூக அசைவியக்கத்தினை உந்தித் தள்ளுவதில் குறிப்பிடத்தக்க பாத்திரத்தினை வகித்திருந்தனர். ஆனாலும் இந்தக் கிறீஸ்தவ மதக் குழுக்களை காலனியாதிக்க விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகவும் கொள்ள முடியும். ஏனெனில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுக் காலனியாதிக்கத்தின் விஸ்தீரணத்தை விரிவுபடுத்துகின்ற அதியுச்ச அதிகாரம் படைத்த மன்னனுக்கும் இந்த மத நிறுவனங்களுக்கும் இடையிலான நெருக்கங்கள் மிகவும் பின்னிப் பிணைந்தவை.

யாழ்ப்பாணப் பெண்கல்வியின் ஆரம்பகால வளர்ச்சிப்போக்கு புரட்டஸ்தாந்து மதநிறுவனங்களால் குடும்பங்களுக்குள் கிறீஸ்த்துவத்தை வலுப்படுத்தும் நோக்கினால் ஆனதாக ஏற்படுத்தப்பட்டதாக அமைந்தாலும் சமூக வரலாற்று வளர்ச்சிப் போக்கில் புரட்டஸ்தாந்து மதபோதகர்களும், அவர்களது சமூகம் பற்றிய கண்ணோட்டங்களும் ஏற்கனவே யாழ்ப்பாண மண்ணில் வேரூன்றியிருந்த இந்து, சைவப் பாரம்பரியங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் முன்னேறியவையே. ஆங்கிலேய காலனித்துவம் தனது நிர்வாக இயந்திரத்தை வலுப்படுத்துவதற்காக ஆங்கிலக்கல்வி பெற்ற அரசாங்க உத்தியோகங்களில் ஆண்களை அமர வைத்தபோது அங்கு ஒருவகைப் புதிய நடுத்தர வர்க்கம் தோற்றம் பெற்று வந்ததையும் இங்கு நாம் கண் கொள்ள வேண்டியதாக உள்ளது. எனவே அத்தகைய புதிய வர்க்கத்திலே பெண் தனது புதிய பாத்திரத்தைச் செம்மையாக வகுத்துக் கொள்ள அவளினதும் அவள் சார்ந்த குடும்பத்தினதும் ஆங்கிலக்கல்வி தொடர்பான அணுகுமுறை புதிய பரிமாணத்தைப் பெற்றது என்றும் கூறிவிடலாம். அத்துடன் ஆங்கிலக் கல்வி பெற்ற பெண் ஏற்கனவே நிலவி வந்த சமுதாயக் கட்டுமானங்களை உடைத்தெறியும் முழு உத்வேகம் பெற்றவளாக மாறிவிடாமலும் அதனோடு சார்ந்து பயணிப்பவளாகவும் அமைகிறாள். மேலும் அந்தப் பெண்ணானவள் தனது பிள்ளைகளை மேலும் கல்வியறிவு பெற்றவர்களாக உருவாக்கிவிடுவதன் மூலம் அரச உத்தியோகங்களை அவர்கள் பெறுவதற்கான வாய்ப்புக்களினால் சமூக அந்தஸ்த்து படிநிலையேற்றத்தை வேண்டி நிற்பதான சமூகப்பிராணியாகவும் மாற்றம் பெற்றவளாகி விடுகிறாள். இது இன்றைய கட்டம் உட்பட எல்லாக் காலகட்டங்களுக்கும் பொருத்திப் பார்க்கக் கூடியதாகவே அமைகிறது. மேலும் காலனித்துவம் உண்டாக்கியிருந்த பெண்களுக்கான இவ்வாறான படிநிலையேற்றத்தைச் சமூக,பண்பாட்டு,கருத்தியல் ஊடுருவலாகக் கட்டமைத்துக் கொண்ட ஆறுமுகநாவலர் போன்றோர் சைவமும், தமிழும் ஒருங்கே இணைந்த உணர்வு அலைகளைத் தோற்றுவித்தபோதும் சாதீயம், பெண்ணைக் கட்டுப்படுத்துதல் போன்ற விடயங்களில் புதிய சிந்தனைகளைப் பெற மறுத்தவர்களாகளாக அமைந்தமையினால் தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குவதற்கும், பெண்களை மேலும் கடுமையான விதிமுறைகளுக்குள் ஆழ்த்துவதற்குமான கோட்பாடுகளை அதிதீவிரப்படுத்துவதற்கான வழிமுறைகளுக்குள் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்களாகவும் அதை நோக்கிய திசைமுகத்தையே யாழ்ப்பாணச் சமூகத்திற்கு காட்டுபவர்களாகவுமே அமைந்தார்கள்.

“பாரம்பரிய பேணுகையை மேல்நாட்டுப் மத. பண்பாட்டு ஊடுருவலுக்கு எதிரான ஒரு கேடயமாகக் பயன்படுத்த விரும்பிய ஆறுமுகநாவலரிடம் கிறீஸ்தவப் பாதிரிகளிடமிருந்து எதிர்பார்ப்பதைப் போன்று பெண் கல்வியை எதிர்நோக்குவது சிரமமே” என்று பேராசிரியர் சிவத்தம்பி கூறுகின்றார். ஆனால் குடும்பத்திற்கான பொறுப்புக்களை மாத்திரம் அல்ல அவளது உணர்வுகளைச் சிதறடிக்கும் வகையில் கட்டுப்பாடுகளையும் ஆறுமுகநாவலர் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளார். 1865இல் அவரால் எழுதப்பட்ட “நான்காம் பாலபாடம்” என்னும் நூலில் அவரால் எழுதப்பட்ட நல்லொழுக்கம், கற்பு போன்ற விடயங்கள் வரலாற்றைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் பத்தாம் பசலித்தனமான பிற்போக்குக் கருத்துக்களால் நிறைந்து வழிவதாக நூலாசிரியர் சுட்டுவதை ஆழ்ந்த கவனத்தக்கு இட்டுச் செல்ல வேண்டிய அவசியத்தை இந்நூல் ஏற்படுத்துகிறது. “விதவைகள் மொட்டையடித்தல்” யாழ்ப்பாணச் சமூக மரபில் காணப்படாத போதிலும் இந்தியப் பிராமணியக் கருத்தியல்களை “இறக்குமதி” செய்து கொண்ட ஆறுமுகநாவலர் அதனை யாழ்ப்பாணச் சைவத் தமிழ்சமூக மரபிலும் ஒட்டுவதற்கு முனைந்துள்ளார்.

காலமாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு மரபு செழிப்புறுதலா அல்லது மரபுகளை உடைத்துக் கொண்டு சமூகம் மாறுதலுக்குள்ளாவதா அல்லாவிடின் இரண்டும் இணைந்தும், முரண்பட்டும் வரலாறு இயங்கியலுக்குள்ளாவதா என்பது போன்ற வாதப்பிரதிவாதங்கள் சமூகங்களில் தொடர்ச் சக்கரமாக நிகழ்ந்து கொண்டேயிருக்கும். ஒருவகையில் ஆறுமுகநாவலரது அடுத்த கட்டத் தொடர்ச்சியாகவே சைவத்தமிழ்ப் பாரம்பரியத்தோடு வந்த சேர்.பொன்.இராமநாதனை (ஆங்கிலேயப் பெண்மணியை அவர் மணம் முடித்தபோதும்) நோக்க முடியும். இலங்கை முழுமைக்குமான தேசிய அரசியலில் நாட்டம் கொண்டு பிரபல்யம் அடைந்திருந்த இராமநாதனே முதன்முதலாகப் பெண்களுக்கான சைவப்பாடசாலையை அதுவும் விடுதிப்பாடசாலையாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் மத்தியில் அமைந்த மருதனாமடத்தில் 1913இல் நிறுவினார். 1820 களின் ஆரம்பத்தில் கிறீஸ்தவ மதக் குழுக்களினால் பெண் விடுதிப் பாடசாலைகள் ஏற்படுத்தப்பட்ட வேளைகளில் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்பிள்ளைகள் அப் பாடசாலைகளில் சேர்க்கப்படுவதற்கும், கல்வி பெறுவதற்கும் யாழ்ப்பாண உயர் வேளாள குலம் பல்வேறுவகைகளில் தடைகளையும், குளறுபடிகளையும் விளைவித்திருக்கின்றது.