Tuesday, July 14, 2009

தேடும் என் தோழா
-நடராஜா முரளிதரன்-

சூரியப் பந்தத்தைக்
கைகளால் பொத்தி
அணைத்து விட்டு
சந்திரனுக்கு ஒளியைப்
பாய்ச்சி விடும்
கைங்கரியத்தில்
ஆழ்ந்து போயிருக்கும்
என் தோழா

நீ புனைவுக்காரன்
சூனியமான சந்திரனைப்
பிரவாகம் கொள்ள
வைத்தது
உனது கவிதைகள்தான்
என்று கூறுவாய்

பாய்ந்து வந்த
கோடானுகோடி
கதிர் வெள்ளத்தின்
நதிமூலத்தை
அங்கீகரிக்க மறுத்த
கற்பனாவாதி நீ

சாவுக் களங்களில்
கொள்ளிக் குடங்கள்
துளையுண்டு
தண்ணீர் கொட்டும்
வேளைகள்
வாய்க்கரிசி நிறைந்து
வழியும் கணங்கள்
நட்சத்திரங்கள்
எரிந்து வீழும்
பொழுதுகள்
எனது கனவுகளைக்
குலைத்து விடுகின்றன

எனவேதான்
நித்தியத்தைத்
தேடியலைய
என் ஆன்மா
மறுத்து விடுகின்றது

ஆழ்ந்து மோனித்து
கடைந்தெடுத்து
உன்னையும் காணாது
என்னையும் கண்டடையாது
இறுமாப்பில் பெருமிதம்
கொள்ளும் என் தோழா

யுகங்களாய்
தொடரும் தேடல்கள்
முற்றுப்புள்ளியைத் தேடி
முடிவிலி வரை
பயணம் புரிகின்றன

1 comment:

சாந்தி நேசக்கரம் said...

//யுகங்களாய்
தொடரும் தேடல்கள்
முற்றுப்புள்ளியைத் தேடி
முடிவிலி வரை//

காலமிட்ட வரைகோடுகள் அழிபடாமலும் அழியாமலும் யுகங்கள் தாண்டியலையும் தேடல்களொடு தோழமைகளும் இலட்சியங்களும் இழுபடுகின்றன.....

சாந்தி