Wednesday, September 27, 2006

“கைதுகள்”

-நடராஜா முரளிதரன்-

நான்கு வாரங்களுக்கு முன்பாக அமெரிக்காவில் ஆயுதக் கொள்வனவு முயற்சியில் ஈடுபட்டார்கள் என்று கூறியும், அதற்குத் துணை போனார்கள் என்று கூறியும் கனடாவிலும், அமெரிக்காவிலும் சில தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

அதையடுத்து கனடிய, அமெரிக்க பிரதான தகவல் தொடர்பு ஊடக சாதனங்கள் அது தொடர்பாக “சுவாரசியத்தோடு” கூடிய பல்வேறு செய்திகளை “விறுவிறுப்பாக” வாசகர்களுக்கு உடன் வழங்கியிருந்ததை எம்மில் யாரும் மறந்திருக்க முடியாது.

அச் சமயத்தில் கனடாவில் வாழும் தமிழர்கள் யாவரும் தமிழர்கள் அல்லாதோரால் பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்படுகிறார்கள், நோக்கப்படுகிறார்கள் என்பதாகவும், இந் நிலைக்கு வேறு யாரும் காரணம் அல்ல தமிழர் தரப்பு மட்டுமே காரணம் என்பது போலவும் அப்பாவித்தனமாகப் பத்திரிகைப் பத்திகள் எழுதப்பட்டமையை உங்களில் பலர் வாசித்திருக்கலாம்.

பலம் வாய்ந்த அரச முகவர்களின் அறிக்கைகள், பெரு முதலாளித்துவ ஊடக சாதனங்களின் பரப்புரைகளையெல்லாம் எவ்வித மறுதலிப்பும், விமர்சனமும் இன்றி உள்வாங்கிக் கொள்ளுங்கள் என்பதனை மறைமுகமாக வலியுறுத்துவது போலவும், அதை மீறுவுதும், கருத்துக் கூறுவதும் ஜனநாயக நெறிமுறை, விழுமியங்களுக்குள் அடங்கியிருந்த போதிலும் அவ்வாறு நடந்து கொள்வீர்களெனில் ஊடக அதர்மம் ஆகி விடும் என்பது போன்ற கருத்துக்களும் அப் பத்திகளின் வரிகளுக்கு இடையில் சொருகப்பட்டிருந்தன.

இவற்றையெல்லாம் நான் வாசித்துக் கொண்ட போது பழைய சில நினைவுகள் மீண்டு என் மூளையைக் குடைய ஆரம்பித்தது.
சுவிசில் 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் தேதி சுவிஸ் பொலீசாரால் நான் கைது செய்யப்பட்ட வேளைகளில் இடம்பெற்ற சில நிகழ்வுகளைப் இங்கே பகிர்ந்து கொள்வது எனக்குப் பொருத்தமாகப்படுகின்றது.

நான் கைது செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பாக அப்போதைய இலங்கை அரசின் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் சுவிசுக்கு விஜயம் செய்திருந்தார். அவர் தனிப்பட்ட முறையில் சுவிசுக்கு வந்திருக்கவில்லை. அன்றைய அவரது பயணம் இலங்கை அரசின் முக்கிய எதிர்பார்ப்பொன்றினை நிறைவேற்றும் பொறுப்புடன் கூடிய அரச பயணமாகவே அமைந்திருந்தது.

சுவிசில் தமிழ் அகதிகளின் அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர்கள் திருப்பி அனுப்பப்பட முற்படுகிற வேளைகளில் எல்லாம் அவர்களுக்கான கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதில் சுவிஸ் அரச அதிகாரிகளுக்கு பெரிய அளவில் நடைமுறைச் சங்கடங்கள்;, சிக்கல்கள் ஏற்படுவது வழக்கம். அதன் காரணமாக அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தலை எதிர்பார்த்துக் காத்திருந்த பல தமிழ் அகதிகள் தப்பிப்பிழைத்த வரலாறும் உண்டு.

ஆயினும் சுவிஸ் அரசின் அகதிகள் தொடர்பான கொள்கை எந்தக் காலத்திலுமே அகதிகள் அங்கு தொடர்ந்து வாழ்வதற்கான இயல்பு நிலையில் பதட்டத்தை, அச்ச உணர்வைத் தோற்றுவிக்கும் வகையிலானது எனலாம். எனவே அச் சூழலைப் பயன்படுத்திக் கதிர்காமர் சுவிஸ் அரசோடு பேரம் பேசியதன் பயன்பாடாகவே நான் சார்ந்த அமைப்புpன் மீதும், அந்த அமைப்பின் பொறுப்பாளர் என்ற வகையில் என் மீதும் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இலங்கை அரசு எம் மீது குறி வைப்பதற்கான எடுகோள் அங்கு பாரிய அளவில் எம்மால் திரட்டப்பட்ட நிதியின் அளவால் நிர்ணயமானதாகும். ஆனால் எம் மீது சுவிஸ் காவல் துறையினர் இவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னதாக அதற்கு வாய்ப்பான வகையில் சாதகமான பொது ஜன அபிப்பிராயத்தை நிறுவுவதற்கான தளத்தை உருவாக்கும் நோக்கோடு திட்டமிட்ட வகையில் என் மீதும், நான் சார்ந்த அமைப்பின் மீதும் தகவல் தொடர்பு சாதனங்களுக்கூடாக உண்மையைக் குழி தோண்டிப் புதைக்கும் வகையிலான பொய்யான பரப்புரைகள் நிகழ்த்தப்பட்டன.

அரசுகளும், ஆதிபத்தியத்தை கொண்ட அதிகார மையங்களும் தங்களது நலன்களுக்காக இவ்வாறான சித்து விளையாட்டுக்களை அரங்கேற்றுவது வரலாற்றுத் தொடர் நாடகக் காட்சிகளாகும்.

எனது எட்டுமாத சிறைவாசத்தின் பின் இறுதியில் எம் மீதான வழக்குகள் யாவும் தோற்கடிக்கப்பட்டு, பல வருடங்களின் பின் எமக்கான நட்ட ஈட்டுத் தொகைகளும் வழங்கப்பட்டன. இதை உணர்த்தும் சம்பவங்களில் ஒன்றாக சில தினங்களுக்கு முன்பாக சிரிய நாட்டைச் சேர்ந்தவரும் பின்பு கனடியப் பிரஜையாக ஆகிக் கொண்டவருமான “அரார்” அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக நீதிபதி டெனிஸ் ஓ’கார்னர் ஆர்.சி.எம்.பியினர் மீது அத்துமீறல்கள் நிகழ்ந்ததற்கான பொறுப்புக்களைச் சுமத்தி நீண்ட அறிக்கையொன்றினை வெளிப்படுத்திய சூழ்நிலையில் கனடியப் பாராளுமன்றமும் “அரார்” நடத்தப்பட்ட விதம் குறித்து ஏகமனதாக மன்னிப்புக் கோரியுள்ளதை நாம் நோக்க வேண்டும்.

ஒட்டாவாவை வசிப்பிடமாகக் கொண்ட இரு பிள்ளைகளுக்குத் தந்தையான “அரார்” என்ற கணணி பொறியியலாளர் 2001, செப்ரெம்பர் 11 அமெரிக்கத் தாக்குதலின் பின் மொரோக்கோவுக்கு விடுமுறைக்காகச் சென்றிருந்த நிலையில் பின் அமெரிக்கா ஊடாக கனடா திரும்பவிருந்த வேளையில் நியூயோர்க்கிலிருந்து சிரியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு அங்கு இரு வருடங்கள் வரையில் சிறையில் வைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டிருந்தார். அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட வேளைகளில் கனடிய அமைப்புக்கள் அமெரிக்க அரசுக்கு வழங்கிய தகவல்கள் குறித்த விடயங்களே மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகியிருந்தன.

1998 இல் அமைதியான வாழ்வு தேடி நான் எனது மனைவியோடும், எனது நான்கு பிள்ளைகளோடும் இணைவதற்காக கனடா வந்த போது 40 நாட்களின் பின் கனடிய காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட போதும், அதற்குப் பின்னரும் இங்குள்ள தகவல் தொடர்பு ஊடக சாதனங்களால் “பயங்கரவாதியாகவே” சித்தரிக்கப்பட்டு வந்துள்ளேன். இன்றும் கூட “அகதி அந்தஸ்து” மறுக்கப்பட்ட சூழ்நிலையிலேதான் நானும், எனது குடும்பமும் நாடுகடத்தல் உத்தரவை எதிர்கொண்டு “இமிக்கிரேசனும்”, கோர்ட்டுமாக அலைந்து வருகிறோம்.

ஒரு பத்திரிகையாளர் “ நான் கனடா வரும் பொழுது கொண்டு வந்த கொலைப் பட்டியலில் தனது பெயர் மூன்றாவதாக உள்ளதென காவல் துறையினர் தன்னிடம் கூறியதாக” என்னிடம் கூறினார். ஆனால் உண்மை நிலை என்ன? அது முற்றிலும் மாறுபட்டதாகவே உள்ளது.
இவ்வாறே கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களும் நீதிமன்றில் குற்றவாளிகளாகத் தீர்மானிக்கப்படும் கணங்கள் வரை அவர்கள் “சந்தேக நபர்கள்” மாத்திரமே. எனவே இவ்வாறான கைதுகளால் “தமிழ் மாணவர்களின் எதிர்காலமே பாழ்பட்டு விடுவதாக” ஓலம் போடுவது செய்தி மிகைப்படுத்தலாக அமைந்து விடும். அண்மைய செய்திகளின் படி அவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர்களில் பலர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் அறிகிறேன். அந்தச் செய்திகளையும் கூட தமிழ் ஊடகங்கள் எந்தளவு வெளியிட்டுள்ளன என்பது குறித்து எந்தத் தரவுகளும் என்னிடம் இல்லை.

கடந்த வாரம் துப்பாக்கி ஏந்திய இளைஞர் ஒருவர் மொன்றியலிலே “வெறியாட்டம்” போட்டுள்ளார். அதற்காக அவர் சார்ந்த சமூகத்தை சாட முடியுமா?

பத்திரிகைகளுக்கு “பரபரப்புச் செய்திகள்” விற்பனைக்கு அவசியமாகின்றன. அவை சமூகத்தில் மாறுபட்ட விளைச்சலை ஏற்படுத்துமாக அமையின் அதை எதிர்த்துப் போராடுவதுதான் எழுத்தாளனின் தர்மம்.

1 comment:

nmuralitharan said...

I expect the openion from everybody.