“கண்ணகி சிலை”
எஸ்.வி.ராஜதுரையும், ஞாநியும்
-நடராஜா முரளிதரன-
தமிழகத்தில் அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் இரண்டாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு நிறுவப்பட்ட கண்ணகி சிலை கடந்த ஜெயலலிதா அரசின் ஆட்சிக்காலத்தில் அப்புறப்படுத்தப்பட்டமை தொடர்பான செய்திகள் தமிழக ஊடகங்களால் அன்று பரபரப்பாகப் பேசப்பட்டவை.
பின்னர் இன்றைய கலைஞர் ஆட்சியில் மீண்டும் கண்ணகி சிலை நாட்டப்பட்ட போது அதே “பரபரப்பு” எழுந்து பல்வேறு வகை விவாதக் களங்களுக்கு வழிசமைத்துக் கொடுத்தது. அந்தக் களங்களின் வெளிப்பாடு உச்சத்தில் இருந்த அத் தருணங்களில் அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பாகக் கண்ணகி சிலை பற்றி “ஆனந்த விகடன்” வார இதழில் ஞாநி எழுதிய கட்டுரை சர்ச்சைக்குள்ளானதால் “ஆனந்த விகடன்” வார இதழ்கள் எரியூட்டப்பட்டன.
இதன் எதிர்வினையாக யூன் மாத 16-30, 2006 “புதிய பார்வை” மாதமிருமுறை இதழில் ஞாநி “தமிழ் பெண்களை கண்ணகியை பின்பற்றச் சொல்கிறதா கலைஞர் அரசு? என்ற தலைப்பில் மேலும் கலைஞர் மீது விமர்சனக் கணைகளை வீசி எறிந்திருந்தார்.
சில தினங்களுக்கு முன் எஸ்.வி.ராஜதுரை அவர்களின் “ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள்” கட்டுரைத் தொகுப்பினை வாசித்துக் கொண்டிருந்த போது “அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்” என்ற 5-1-2002 தினமணி நாளிதழில் பிரசுரமான அவரின் கட்டுரையும் அதில் உள்ளடங்கியிருந்தது. அக் கட்டுரை ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் “கண்ணகி சிலை நீக்கம்” குறித்து அச் சூழலில் அன்று எஸ்.வி.ஆரினால் தினமணியில் எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரையாகும். இந்த இரு கட்டுரைகள் எவற்றைச் சுட்டுகின்றன? எத்தகைய முரண்களைக் கிளப்புகின்றன? தொடர்பாக உள் நுழையும் முயற்சியை அடிப்படையாக வைத்து அலசல் ஒன்றை இங்கு மேற்கொள்ளுவதே எனது நோக்கம்.
“கண்ணகி என்ற பாத்திரம், இரத்தமும் சதையுமாய்த் திரிந்த ஒரு குறிப்பிட்ட மெய்யான பெண்மணி என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் ஏதுமில்லாமலிருக்கலாம். ஆனால் தமிழ் பண்பாட்டு வரலாற்றில் நீண்ட நெடுங்காலமாகவே இடம் பெற்றுள்ள பாத்திரமே “கண்ணகி” என்பதுதான் முக்கியமானது. மார்பகமொன்றைக் கிள்ளியெறிந்த கண்ணகியை “சிலப்பதிகாரம்” மட்டுமல்ல, “நற்றிணை”யும் குறிப்பிடுகிறது. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, கொடுமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் பெண்ணின் உருவகமாகவே “கண்ணகி” பார்க்கப்படுகிறாள். அநீதியை எதிர்த்துப் போராடுவதற்காகத் தனது மகப்பேறை, “தாய்மை”யைக் கூட இழக்கத் துணிபவளே அவள் என்பதைக் குறிப்பதுதான் மார்பகத்தைக் கிள்ளியெறிதல் என்பதாகும். சிலப்பதிகாரத்திலும் கூட “கண்ணகி”யின் “கற்பை” விவாதத்திற்குட்படுத்தும் நிகழ்வுகள் ஏதுமில்லை.” என்ற மையக்கருவை வலியுறுத்தும் வகையிலே எஸ்.வி.ஆரின் கட்டுரை அமைகிறது. மறுபுறத்தில் ஞாநி “புதிய பார்வை”யில் எழுப்பும் கேள்விகள்.
1) வேறு பெண்ணை நாடிப் போய் விட்டு, தன்னைப் பத்தாண்டுகளுக்கு மேலாகப் பிரிந்து வாழ்ந்த கோவலனைச் சகித்துக் கொண்டு, அவன் திரும்ப வந்ததும் ஏற்றுக் கொண்டதும், அதுவரை இன்னொரு ஆணின் துணையை நாடாமல் இருந்ததும்தான் கற்பு என்றால், அது கோவலன் போன்ற ஆண்களுக்கே வசதியான ஒரு தலைக் கற்பு. இது உண்மையா, இல்லையா?
2) அரசனுக்கு எதிராகக் கண்ணகி போராடிய விசயம், தனக்கு அநீதி செய்த கணவனுக்கு நீதி கேட்டுப் போராடிய பேதமைத்தனமா, இல்லையா? கணவனிடம் நீதிக்காகப் போராட முடியாதவள் அரசுக்கு எதிராகப் போராடிய கற்பனையெல்லோ இது.
3) கோவலனைத் தவறாகக் கொன்றதில் துளியும் சம்மந்தமில்லாத மதுரை மக்களை எரித்த கண்ணகியின் செயல், எங்கோ ஏற்பட்ட வேதனையை வேறெங்கோ வெளிப்படுத்துகிற இயலாமையா இல்லையா?
“பரந்துபட்ட மக்களால் சிக்கல் ஏதுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும் பண்பாட்டு விழுமியங்களை அந்த மக்களின் கூட்டு நினைவுகளிலிருந்து பிரித்தெடுக்க, பிய்த்தெடுக்க முனைபவர்கள் தற்காலிக வெற்றிகளை அவ்வப்போது பெறக் கூடும். எனினும் மானுட நாகரீகத்தின் வரலாறு அவர்களை “மூர்க்கர்கள்” என்றே பதிவு செய்து வந்துள்ளது.” என்ற எஸ்.வி.ஆரின் கூற்று மக்களினங்களின் வரலாறும், வாழ்வியலும் இலகுவில் பண்பாட்டு அடையாளங்களை இழப்பதற்கான தயார் நிலையில் இருப்பதில்லை. அவை மதிக்கப்படல் வேண்டும் என்ற மனித உரிமைகளுக்கான சாராம்சத்தைக் கோரி நிற்கிறது.
மாறாக ஞாநியோ “காட்டிலும் கழனியிலும் காலம், காலமாக உழைக்கும் தமிழ் பெண்களின் பிரதிநிதியா கண்ணகி? அவள் வண்ணச் சீரடியை மண்மகள் கண்டிலள் என்கிறது காப்பியம். அவள் உழைக்கும் பெண்ணல்ல. உழைக்கும் பெண்கள் சார்பாகப் போராடியவளுமல்ல. மதுரையைத் தீக்கிரையாக்கிய போது, பார்ப்பனரையும், பசுவையும் தீண்டாதே என்று தீக்கு உத்தரவிட்ட “இந்துத்துவக் குரல்” அவளுடையது. இந்தப் பண்பாட்டை தமிழர் பண்பாட்டின் அடையாளம் என்று நாங்கள் ஏன் ஏற்க வேண்டும்?” என்று குமுறுகிறார்.
“தி.மு.கவின் சொல்லாடல்களில் உள்ள “கற்பு”, “மானம்”, சிலப்பதிகாரம் குறித்த அதன் விளக்கங்கள் முதலியன விவாவதத்திற்குரியவை. எனினும் சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பொதுவான தமிழ் அடையாளத்தை உருவாக்குவதற்கு அக் கட்சி – குறிப்பாக அண்ணா – அன்று மேற்கொண்ட முயற்சியின் வெளிப்பாடாகவே அதன் ஒரு பகுதியாக கண்ணகி சிலை நிறுவியமை அமைந்தது. அதற்கு தமிழ் நாட்டு மக்களின் ஒப்புதலும் இருந்தது. அதனை ஒரே இரவில் துடைத்தெறிவது கொடூரமான மனித உரிமை மீறலாகும்” என்று எஸ்.வி.ஆர் தனது கட்டுரையில் சொல்லுகிறார்.
“கண்ணகி சிலை தமிழர் பண்பாட்டின் அடையாளம் என்று தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகிறது.” என்ற ஞாநியின் கூற்றையும், “ஆணாதிக்க, தந்தை வழிச் சமுதாய அமைப்பு விழுமியமான “கற்பு” என்பது சுமத்தப்பட்ட படிமமாக அல்லாமல் அநீதிக்கு எதிராகக் குரலெழுப்பும் சாமானியக் குடிமகளின் படிமமாகக் கண்ணகி உருவகிக்கப்பட்டிருப்பது தமிழ் மரபுகளின் சிறப்புக்களில் ஒன்றாகும்.” என்ற எஸ்.வி.ஆரின் வாதமும் எங்களது சிந்தைகளை ஆழக் கிழறுபவை.
வரலாற்று நிகழ்வுகளை, சமூகங்களின் கூட்டுக் கற்பனையில் ஆழ வேரோடி நிற்கும் உணர்வுப் பிரவாகங்களையெல்லாம் “பண்பாட்டுப் புரட்சி” போன்ற சுலோகங்களின் பெயரால் மறுதலிக்க முற்படுவது மக்களினங்களை மாபெரும் துயரங்களுக்கும், சோகங்களுக்கும் இட்டுச் சென்ற வரலாறு நம் கண் முன்னே விரிந்து கிடக்கிறது.
ஞாநி எம்மையெல்லாம் அந்தச் “சுத்தப்படுத்தல்களுக்கு” தயாராகுமாறு விரட்டுகிறார் போல் தென்படுகிறது எனக்கு.
No comments:
Post a Comment