“மறை பொருள்” குறுந் திரைப்படம்
-நடராஜா முரளிதரன்-
பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், படைப்புச் சுதந்திரம் போன்ற ஜனநாயக விழுமியங்கள் எத்தகைய விட்டுக் கொடுப்புகளுக்கும், சமரசங்களுக்கும் உட்படுத்தப்படாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்ற குரல்கள் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் ஓங்கி ஒலித்து வரும் இன்றைய உலகச் சூழலில் ஒரு படைப்பை மறுக்கும் உரிமையை தனி மனிதர்; ஒருவர் மேற்கொள்ளுகிற போது சமூகம் எத்தகைய அவலத்துக்குள் சிக்குண்ண நிகழ்கிறது என்பதையே இரு வாரங்களுக்கு முன் ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் நிகழ்ந்த குறுந் திரைப்பட விழா தொடர்பான விமர்சனங்களில் “மறை பொருள்” குறுந் திரைப்படம் தொடர்பான “தர்சனின்” விமர்சனத்தை கடந்த வாரத்துக்கு முந்தைய “வைகறை” இதழ் ஒன்றில் வாசித்துக் கொண்ட போது என்னால் உணரக் கூடியதாக இருந்தது.
“மறை பொருள்” குறுந் திரைப்படம் சித்தரிக்கும் கருப் பொருள் “முஸ்லீம் பெண்கள் “பர்தா” அணிவதை ஒடுக்குமுறையாகப் பார்க்கிறார்கள் என்பதே” என்றும் அவ் விமர்சனத்தில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக நானும் எழுத்தாளர் தேவகாந்தனும் உரையாடிக் கொண்ட போது அவர் தெரிவித்த கருத்தொன்றினை இங்கு குறித்தல் பொருத்தம் என்று எண்ணுகின்றேன். “மறை பொருள்” என்ற படைப்பாக்கத்தில் உருவகிக்கப்படும் அப் பெண் பாத்திரம் அத்தகைய (“பர்தா” அணிவதை ஒடுக்குமுறையாகக் கருதும்) கருத்து நிலைப்பாட்டைக் கொண்டவளாக இருப்பின் அதில் ஏதும் தவறில்லையே? ஏன்று என்னிடம் சொல்லியிருந்தார்.
படைப்பாளியொருவன் தனது புனைவில் முழுச் சுதந்திரங்களோடு செயற்பாடு கொள்வது சமூக நிர்பந்தங்களால் பாதிப்புக்குள்ளாகுமானால் அதையும் மீறி அவன் முழு வீச்சோடு “சிருஸ்டி” புரியும் போது அதைச் சமூகக் காரணிகளைச் சுட்டிக்காட்டி மறுதலிப்பதானது எவ்வளவு தூரம் அபாயகரமானது என்பதையே இங்கு நான் எண்ணிப் பார்க்கின்றேன். இக் கருப்பொருள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக அமையலாம். ஆனாலும் “இது ஏற்கக் கூடிய கருப்பொருள் அல்ல” என்று எப்படிக் கூறிவிட முடியும்?எனக்குத் தெரிந்த வரையில் முஸ்லீம் பெண்கள் “முக்காடு” அணிவதையோ, “பர்தா” அணிவதையோ ஒடுக்குமுறையாகப் பார்க்கவில்லை என்பதற்காக அவ்வாறான கருத்துடைய “முஸ்லீம் பெண்கள்” இவ்வுலகில் வாழவேயில்லை என்று அர்த்தப்படுத்தி விட முடியுமா?
நடுவர்கள் இப் படத்திற்கு விருது வழங்கவில்லை என்பதை இங்கு பிரச்சினைக்கு உரியதாக நான் கருதவில்லை.
ஆனாலும் “பர்தா” அணிவதை எப்படி உணர்கிறேன் என்பதை ஒரு முஸ்லீம் பெண் மட்டுமே சொல்ல வேண்டும், சொல்ல முடியும் என்ற கட்டளைகளைத் “தர்சன்” பிறபிப்பது படைப்பாக்கத்துக்கான எல்லைகளை வரையறை செய்து விடுவதில், மட்டுப்படுத்துவதில் படைப்பாளியை அல்லது கலைஞனைக் கொண்டு போய்ச் சேர்க்கிறது என்பதையே இங்கு நான் எடுத்துக் கூற விழைகின்றேன்.
முஸ்லீம் பெண்கள் எல்லோருமே “பர்தா” அணிவதில்லை. இந்தியாவிலே, துருக்கியிலே, பாலஸ்தீனத்திலே “பர்தா” அணியாத எத்தனையோ முஸ்லீம் பெண்களை நாம் காண முடியும். ஒரு குறுந் திரைப்படத்துக்கான மொழியைப் பேசுவதில், மாற்றுச் சினிமாவிற்கான பிரக்ஞையைக் கட்டுவதில் “மறை பொருள்” என்ற குறுந் திரைப்படம் கணிசமான வெற்றியைப் பெற்றுக் கொண்டதாகவே நான் கருதுவேன். படத்தைப் பார்த்த சிலரது கருத்துக்களும் அதற்கு வலுச் சேர்ப்பதற்கான சாட்சியமாக அமைந்ததை இங்கு குறிப்பிடலாம்.
உரையாடல் எதுவுமே இடம்பெறாது ஒற்றைப் பாத்திரத்தைக் கொண்டு நகர்ந்த அக் குறுந் திரைப்படத்தில் பருவப் பெண்ணொருத்தி கண்ணுக்கு மை தீட்டி, அழகான உடை தேர்ந்து நிலைக் கண்ணாடி முன்னே நின்று, நிமிர்ந்து அழகுப் பதுமையாகத் தன்னை அழகு செய்து கொள்ளுகிறாள். தன் அழகு மேலும் பூரித்திட மெருகூட்டும் முயற்சியிலே தன் கவனத்தையெல்லாம் குவித்து மேலும், மேலும் அது குறித்து அவள் முயன்று கொண்டிருந்தாள். ஏற்றத் தாழ்வுகள் படைத்த இச் சமூகச் சூழலிலும் கூட பால் பேதங்கள், வர்க்க பேதங்களையெல்லாம் கடந்து நாமெல்லாரும் ஓடிப் பிடிக்க முனைவதில், வெறி கொண்டு அலைவதில், விரட்டிச் செல்வதில் “அழகுணர்ச்சியும்” முக்கியமான ஒன்று.
எனவே அந்த அழகுக்கு உரியவள் தனக்கான ஒப்பனைகள் அனைத்தையும் பூர்த்தி செய்த மறு கணங்களிலே கரிய “பர்தாவினால்” தனது உடலை உடுத்திப் போர்த்திக் கொள்ளுகிறாள். போர்த்தி முடித்த கையோடு நிலைக் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்ளுகிறாள். பின் தனது கண்களை முடிக் கொள்ளுகிறாள். “மறை பொருள்” குறுந் திரைப்படமும் அத்தோடு முடிந்து கொள்கிறது.
அந்த முடிவோடு அது ஏற்படுத்திய தாக்கம் என்னை, எனது உணர்வுகளை உறைந்து போக வைத்தது. ஏன் அவள் தனது கண்களை இறுக மூடிக் கொண்டாள்? அந்த உளவியல் அர்த்தப்படுத்த விழையும் செய்திதான் என்ன? மொழியே பேசப்படாத அந்தக் “குறுஞ் சினிமா” வெளிப்படுத்திய சேதியால் மதம், பண்பாடு சார்ந்த முஸ்லீம் உணர்வுகள் காயப்படுத்தப்படுவதாக, மறுக்கப்படுவதாகக் “தர்சனால்” கிளப்பப்படும் கூற்றுக்களுக்கு பதிலாக அமைவதெல்லாம் “சினிமா” என்பது எப்போதும் சமூகத்தின் கதையை மாத்திரம் சொல்வதல்ல. மாறாக சமூகத்தின் தனிமாந்தர்களின் விருப்பு, வெறுப்புக்களையும் அவர்களது சொந்தக் கதைகளையும் கூட நல்ல சினிமா சொல்ல விழைகிறது.
மத அடிப்படை வாதத்தையும், அதன் கட்டுமானத்தில் இருந்து எழுப்பப்படும் பிற்போக்கான பெண் ஒடுக்குமுறை சார்ந்த கருத்தியல் நிலைப்பாடுகளையும் கடுமையாக விமர்சிக்கும் எத்தனையோ முஸலீம் அறிஞர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகமிது.
என்னைப் பொறுத்தவரையில் “மறை பொருள்” குறுந் திரைப்படத்தை விழாவுக்கான திரைப்படங்களில் ஒன்றாகத் தேர்வு செய்த துணிச்சலையிட்டு குறுந் திரைப்பட விழா ஏற்பாட்டாளர்கள் காத்திரமான பங்களிப்பொன்றை குறுந் திரைப்படத் துறைக்கு ஆற்றியுள்ளார்கள் என்றே கருதுகின்றேன்.
1993 ஆம் ஆண்டு பங்களாதேசைச் சேர்ந்த “தஸ்லீமா நஸ்ரீன்” என்ற முஸ்லீம் பெண் எழுத்தாளர் “லஜ்ஜை“ என்ற நாவலை வெளியிட்ட போது “பங்களாதேஸ்” அரசு மதவெறியர்களுக்கு இசைந்து அந்த நாவலைத் தடை செய்தது. அதை முஸ்லீம் விரோத நாவல் என்று கூறிய மத வெறியர்கள் அவரைக் கொல்பவர்களுக்கு பரிசு வழங்குவதாகவும் அறிவித்திருந்தார்கள். மதங்களால் மனித சமுதாயத்திற்கு விமோசனமில்லை என்ற கருத்துடைய “தஸ்லீமா” “மனித நேயம் என்பது மதத்திற்கான மற்றொரு பெயராக இருக்கட்டும்” என்று கூறினார். பெண்ணின் உடல் ஆணினால் உடமை கொள்ளப்பட்டு ஆணின் அதிகாரம் அங்கு நிறுவப்படுகிற போது பெண் தன் உடல் மீது தான் கொண்டுள்ள உரிமையை இழந்து விடுகிறாள்.
அதற்கு மேலாக ஆணாதிக்க சமூக மனோபாவமும் “பண்பாடு சார்ந்த அடையாளங்கள்” என்ற கட்டளைகளை பிறப்பிப்பதன் மூலம் இலகுவான இன்பம் சார் நுகர்வுப் பொருளாக பெண்ணை ஆக்குவதில் வெற்றி கண்டு விடுகிறது. எனவே அதனைக் கலை வடிவம் ஒன்றுக்கூடாகப் புரிய வைப்பதில் பெரு வெற்றி பெற்ற “மறை பொருள்” குறுந் திரைப்பட இயக்குனர் பொன்.சுதாவை மெச்சுவதற்கு எனது மனம் அவாவுறுகிறது.
No comments:
Post a Comment