Sunday, July 30, 2006

தடைகள் பல கடந்து
நடராஜா முரளிதரன்

உலகளாவிய தடைகள் தமிழர் தரப்பு மீது நெருக்குவாரங்களைத் தருவது குறித்துப் பல்வேறு வகை அபிப்பிராயங்கள், கருத்துக்கள், விமர்சனங்கள், கண்டனங்கள், எழுப்பப்பட்டு வரும் இச் சமகாலச் சூழலில் கனடிய மண்ணில் அண்மையில் இடம்பெற்ற சில நிகழ்வுகள் எனக்கு வியப்பை அளிப்பதாக இருந்தது. இது குறித்து இவ் வாரம் அலசலாம் என்று எண்ணுகின்றேன். தமிழர் தரப்பைப் பயங்கரவாதப் பட்டியலில் ஏப்பிரல் 8ம் தேதி கனடிய அரசு இட்டதைத் தொடர்ந்து கனடா வாழ் தமிழர்களில் கணிசமான பகுதியினர் குழப்பம் அடைந்த சூழ்நிலையிலேயே காணப்பட்டார்கள். ஏனெனில் தடையைத் தொடர்ந்து அரச காவல்துறையினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்(அலுவலகங்கள், கடை என்பன முற்றுகையிடப்பட்டன, கோப்புகள் மேலதிக புலனாய்வுகளுக்காக அதிகாரிகளினால் கொண்டு செல்லப்பட்டன) தமிழ் மக்களுக்கு ஒரு வகை அச்சத்தை ஊட்டுவதாக அமைந்தது எனலாம். சிலருக்கு இவை மகிழ்ச்சியையும் அளித்திருக்கலாம். இதன் விளைவாகத் தடை தொடர்பான ஆட்சேபணையைக் கிளப்பி அரச கவனத்தை ஈர்ப்பதற்காகவும், தமிழ் மக்களிடம் ஒன்றுபடுதல் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பதற்காகவும் கனடிய தமிழர் பேரவை மே 8ம் தேதி தொட்டு மே 14ம் தேதி வரை ஒற்றுமை வாரத்தை முன்னெடுத்திருந்தனர். ரொறொன்ரோவில் உள்ள தமிழ் வெகு சன தொடர்புச் சாதனங்களும் ஒற்றுமை வாரத்துக்கு ஆதரவு வழங்கிப் பரப்புரையை முன்னெடுத்திருந்தன.
ஆனால் எனது நோக்கில் கனடிய தமிழர் பேரவையினர் எதிர்பார்த்த வெற்றியை இதன் மூலம் சம்பாதித்துக் கொண்டதாகத் தெரியவில்லை. கனடியத் தமிழ் மாணவர்களின் ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பான ஈடுபாட்டுக்கு இந் நிகழ்வு குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றியிருப்பது அல்லது வித்திட்டுள்ளது என்ற உண்மைக்கு அப்பால் பெரிதாக எதையும் இந்த ஒற்றுமை வாரம் சாதித்து விடவில்லை என்பதை நாமெல்லோரும் ஒத்துக்கொள்ள வேண்டும். மே 8இல் ஸ்காபுரோ “டெல்டா” ஹோட்டலில் இடம்பெற்ற கருத்தரங்கத்தில் பிரபல சட்டத்தரணிகளான பார்பரா ஜாக்மான், மார்லிஸ் எட்வேட் ஆகியோர் பங்குபற்றியிருந்தும் கனடிய தேசிய ஊடகங்கள் எதுவும் அந் நிகழ்வுக்கு சமூகமளித்திருக்கவில்லை. “டண்டாஸ்”; சதுக்கத்தில் மே 11ம் தேதி நடைபெற்ற மனிதச்சங்கிலியில் மிகக் குறைந்தளவு மக்களே கலந்து கொண்டிருந்தார்கள். அன்றைய நாளில் மழை பெய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஒப்பீட்டளவில் மே10ம் தேதி கனடிய தமிழ் மாணவர் அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வும், மே13ம் தேதி கனடிய தமிழ் ஊடகவியலாளர் இணையம் நிகழ்த்திய ஒன்றுகூடலும் ஓரளவு நன்றாக அமைந்தன. ஆனால் இந்த ஒற்றுமை வாரம் முடிவடைந்து இரு வாரங்களின் பின் மே 29ல் நடைபெற்று முடிந்த “உரிமைக் குரல்” ஒன்றுகூடல் மிகக் குறைந்த கால இடைவெளியில் தயார் படுத்தப்பட்டதாயினும் மக்கள் மிகப் பெருமளவில் வருகை தந்த நிகழ்வாக, சிறப்புற நடைபெற்று முடிந்துள்ளது. இதுவே என்னை வியப்பில் ஆழ்த்தியது.
1) கனடிய அரசின் தடையினால் உந்தப்பெற்ற இனவெறி சிறிலங்கா அரசினால் தொடரும் தமிழினப் படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் கண்டிப்பதுடன், அவற்றை நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரியும்
2) ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமை, தாயகம், தேசியம் ஆகியவற்றை அங்கீகரிக்கக் கோரியும்
3) சமாதான முயற்சிக்குக் குந்தகமாக அமையும் பக்கச் சார்பான ஒருதரப்பு மீதான கனடிய அரசின் தடையையும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை முயற்ச்சியையும் உடன் தவிர்க்கக் கோரியும்
4) புலம் பெயர் தமிழரோடு கனடியத் தமிழர் சமூகமும் இணைந்து அல்லறும் எம் மக்களின் துயர் தீர்க்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே “உரிமைக்குரல்” ஒன்றுகூடல் நிகழ்வுக்கு அந் நிகழ்வின் அமைப்பாளர்கள் “ரொறொன்ரோ” வாழ் தமிழ் மக்களை அணிதிரளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்கள். அன்றைய நாள் ரொறொன்ரோ பொதுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாள். பொதுவாகவே எல்லோரும் வேலைக்குச் செல்லும் நாளான திங்கட் கிழமை. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களை அச்சமுற வைத்திருக்கும் கனடிய அரசின் தமிழர் தரப்பு மீதான தடை! இன்னும் ஒருபடி மேலே கணணி தமிழ் வலயத் தளங்களான தேனி, தாயகம் இன்னும் இவை போன்ற பலவற்றின் பரப்புரைகள், கதையாடல்கள். இவற்றையெல்லாம் மீறிப் பெருமளவிலான தொகையில் தமிழ் பேசும் மக்கள் இவ் ஒன்றுகூடலிலே பங்கெடுத்தார்கள் என்ற சூழ்நிலையில் அவை குறித்துப் பக்கச்சார்பற்ற தளத்தில் உரையாடலும், விவாதமும் நிகழ்த்தப்பட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.
“ஒற்றுமை வாரம்” என்ற சொல்லாடல் ரொறொன்ரோவில் வாழும் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய தாக்கத்தை, சிந்தனை ஊக்கத்தை விடவும் “உரிமைக் குரல்” என்ற சொல்லாடலும், அது கிளப்பியிருந்த கேள்விகளும் அவர்கள் மனதைப் பாதித்திருக்கிறது. சிந்திக்க வைத்திருக்கிறது. அந்தக் கேள்விகளின் தார்மீக நியாயம் அவர்களைக் கிளர்ந்தௌ வைத்திருக்கின்றது என்று கூடக் கூறலாம்.
சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கெதிரான இனப்படுகொலை என்பது தொடர்ச்சியாகவே நிகழ்த்தப்பட்டு வருகின்றது.
உயர்கல்வி, வேலைவாய்ப்பு, குடியேற்றத்திட்டம் இன்னும் பிறபல துறைகளில் தமிழ் மக்கள் இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு பாரபட்சமாகவே நடத்தப்பட்டு வந்துள்ளார்கள். இன்று தமிழர் மீதான இராணுவ ஆக்கிரமிப்பாக சிங்கள பௌத்த பேரினவாதமானது உச்சக்கட்டத்தை அடைந்துள்ள வேளையில் அதை மறுதலித்து ஒதுங்கிப் போகும் நிலையில் எந்த சராசரித் தமிழ் மகனும் காணப்படவில்லை என்பதையே “உரிமைக் குரல்” பேரணி எத்தனையோ தடைகளையும் கடந்து நிலை நிறுத்தியிருக்கிறது. எந்த விடுதலைப் போராட்டமும் தனது சொந்த மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் பட்சத்தில் சர்வதேச அரசுகளின் தனிமைப்படுத்தலையும் தாண்டி முன்னோக்கி நகர முயற்ச்சிக்கும். (இந்த ஆதரவு என்பது யாழ்பாணிய உயர்சாதிய, மேலாதிக்க மனோபாவத்தில் கட்டமைக்கப்பட்ட குறுந்தேசிய வாதமாகவும் சிலரால் சித்தரிக்கப்படுகின்றது. இக் கருத்தமைவு குறித்து அடுத்;;த வார இதழில் உரையாடலாம் என்று எண்ணியுள்ளேன்.) அந்நியச் சக்திகளின் ஆதரவின்றிக் கட்டப்படும் படைபலம் என்பது நீண்ட காலத்துக்குத் தாக்குப் பிடிக்குமாயின் அங்கு தார்மீகபலம், அரசியல் அறங்கள் நிறையவே உள்ளன என்ற வரலாற்றுண்மையை யாரும் புறந் தள்ள முடியாது.
மற்றும் கபடத்தனங்கள், சூழ்ச்சிகள் நிறைந்த இன்றைய உலக அரசியல் புலத்தில் தர்மத்தை நிலைநாட்ட வேண்டிச் சாணக்கியத்தனங்கள் புரிய வேண்டிய வரலாற்றுச் சூழல் விடுதலை கோரிப் போராடுகின்ற எந்த மக்கள் கூட்டத்துக்கும் உண்டு.
இந்த நடைமுறை யதார்த்தத்தை மீறிக் கற்பனை உலகில் யாரும் திளைத்து விட முடியாது. ஆயினும் தமிழர் தரப்பு மேலும் சில செயற் திட்டங்ககளைத் துரித கதியில் முடுக்கி விடுவதன் மூலமும் ஆழ்ந்து ஆய்வுக்குள்ளாக்குவதன் மூலமும் தமது அரசியல் பலத்தை மேலும் விசாலமாக்கிக் கொள்ள முடியும். குறிப்பாகத் தென்னிலங்கையிலும், இந்தியாவிலும் உள்ள முற்போக்குச் சக்திகளுடன் இணைப்பை ஏற்படுத்தும் வகையிலான வேலைத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சிங்கள நேசசக்திகளுடனான உறவு பேணப்படவும், வலுப்படுத்தப்படவும் வேண்டும். தென்னிலங்கை வாழ் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை தொடர்பான பரப்புரை வீரியத்துடன் நிகழ்த்தப்படல் வேண்டும். தமிழக அரசுடனான உறவு விருத்தி செய்யப்படல் வேண்டும்.இந்தியாவில் உள்ள எந்த மதவாத சக்திகளுடனும் உறவுகளை வைத்துக் கொள்ளக் கூடாது. தமிழ் பேசும் முஸ்லீம்களின் தனி அடையாளத்தை ஏற்று அவர்களது உள்ளக சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் வேண்டும். தமிழ் பேசும் முஸ்லீம்களின் ஏகப் பிரதிநிதிகளாக தமிழர் தரப்பு இருக்க முடியாது என்ற நடைமுறை யதார்த்தத்தை உள்வாங்குதல் மூலமே தமிழ் பேசும் மக்களின் வரலாற்றை முன்நோக்கி நகர்த்த முடியும். போர்க் காலச் சூழல் பல்வேறு இடர்களைத் தந்த போதிலும் கலை இலக்கியவாதிகள், படைப்பாளிகள், அறிவுஜீவிகள், மாற்றுக் கருத்தாளர்கள் சுதந்திரமாகக் கருத்துக்களைக் கூறும் ஜனநாயகச் சூழலைத் தமிழர் தரப்பு தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முயல வேண்டும். இவ்வாறான நடைமுறைகள் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டவையாகவும், குறைபாடுகள் கொண்டவையாகவும் அமையலாம். எனவே அவை அடிக்கடி மீளாய்வுக்குட்படுத்தப்பட்டு அவற்றில் உள்ள குறைபாடுகள் களையப் பெற்று மேலும், மேலும் அவை செழுமைப்படுத்தப்பட வேண்டும்.

No comments: