இந்தச் சர்வதேச சமூகம்-நடராஜா முரளிதரன்-
கனடாத் தடைக்கு எங்களவர்கள் இங்கே கருத்தாதரவு தேடாததும் முக்கிய காரணங்களில் ஒன்று என்று பேராசிரியர் சிவத்தம்பி கூறிய பொழுது அது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கருப் பொருளாக எம்மவரால் எடுத்தாளப்பட்டதா? என்ற கேள்வியை என்னுள் புதைத்து மீட்க முனைகிறேன். ஏனெனில், அந்தக் கருப் பொருளைப் புறந்தள்ளி சர்வதேச சமூகம் என்ற கருத்துப் பொருளாடலை எள்ளி நகையாடி ஈற்றில் அது தொடர்பான பிரக்ஞையை நழுவ விடுவதற்கான சுலோகங்களைத் தாங்கியது மாதிரியான தமிழ்ப் பத்திரிகையின் கட்டுரையொன்றை அண்மையில் வாசிக்க நேர்ந்தது. சர்வதேச சமூகம் அல்லது அனைத்துலகம் என்ற சொல்லாடல் இன்றோ அல்லது நேற்றோ தமிழ் பேசும் உலகுள் திணித்து விடப்பட்டுப் பிரபலமான வார்த்தைப் பிரயோகம் அல்ல. “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்ற ஏங்கல்சின் மிகப் புகழ் வாய்ந்த அறைகூவலுக்கு முன்பாகவே “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற எல்லைகளைக் கடந்து உலக சமத்துவத்தைக் காணவிழைந்த “கணியன் பூங்குன்றனார்” என்ற தமிழ்ப் புலவனுடைய கவிதை வரிகளுக்கூடாக உலக நோக்கு என்பது தமிழ்ப் பரப்பில் அறிமுகம் செய்யப்பட்ட விடயம்தான். அவற்றையெல்லாம் கடந்து உலகம் சுருங்கிச் சிறுத்துக் கிராமம் ஆகிப் போய் விட்ட இன்றைய நிலையில் அந்த வார்த்தை எங்கு நோக்கினும், எங்கு கேட்கினும் உலகப் பரப்பில் எல்லோரது செவிகளையும் சுலபமாகச் சென்றடைந்து விடக்கூடிய இலகு வார்த்தையாகவே விளங்கும். எப்படித் தமிழ் பேசும் மக்கள் என்று கூறுகின்ற போது அல்லது அவர்களது கருத்து என்று கூறுகின்ற பொழுது பெரும்பான்மைத் தமிழ் பேசும் மக்களால் ஆதரிக்கப்படும் ஒரு அமைப்பையோ அல்லது கட்சியையோ அவர்களது பிரதிநிதிகளாக முன்வைப்பதும், அவர்களது உரையாடல்களை எமது மக்கள் நலன் சார்ந்த பரப்புரையாகக் கொள்வதும் போலவே “சர்வதேச சமூகம்” என்ற பதப் பிரயோகத்தையும் இங்கு நாம் நோக்கலாம். எவ்வாறு தமிழ் பேசும் மக்களுடைய தேசிய அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் கருத்துருவமாக 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளை ஆணையாகக் கருதி தமிழர் அமைப்புக்கள் செயற்பட்டன? எனவே சர்தேச சமூகம் என்பது உலக நாடுகளில் வாழும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கங்கள் என்ற கருதுகோளின் அடிப்படையில் சிந்திப்பதே இன்றைய உலகில் நடைமுறைச் சாத்தியமான விடயமாகும். இந்த உலக நாட்டு அரசாங்களிற்கு அப்பால் பேரரசுகளின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கின்ற, சர்வதேச ஒப்பந்தங்;களில் கைச்சாத்திட்ட அரசுகள் அந்த உடன்படிக்கைகளை மீறுகின்ற போது, மீற முனைகின்ற போது அதனை விமர்சிக்கின்ற,கண்டிக்கின்ற அரச சார்பற்ற நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்கள் இந்த உலகில் நிறைய உண்டு.
இதற்கும் அப்பால் அறிவுஜீவிகள், கலை இலக்கியவாதிகள், இடதுசாரிகள், சூழலியலாளர்கள் என எந்த ஆளும் வர்க்கங்கங்களின் நலன்களுக்கும் விலை போகாமல் சுயமான மனித மேம்பாடுகளுக்கான நிலைப்பாடுகளை உலக அரங்கில் ஓங்கி ஒலிக்கவல்ல ஆற்றல் படைத்த மனிதர்கள் நிறையப் பேர் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவைகள் எல்லாம் இணைந்ததுதான் இந்தச் சர்வதேச சமூகம்.
கியூபாவும், கென்யாவும், சோமாலியாவும். மாலை தீவும், இலங்கைப் பிரச்சினையில் கருத்துக் கூறினால் அதற்கு அர்த்தம் இருப்பதாக யாரேனும் கருதுவார்களா? என்ற வினாவும் அக் கட்டுரையில் எழுப்பப்பட்டிருந்தது. ஒரு பேச்சுக்காகவேனும் இந்த நாடுகள் யாவும் எமது பிரச்சினை தொடர்பாக கருத்துக் கூறும் தளத்தில் இன்றைய சூழ்நிலையில் உள்ளனவா? என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மறுபுறத்தில் கியூபாவும், கென்யாவும், மாலை தீவும் இந்தியாவோடு மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டவை. எனவே அவை கருத்துக் கூற முற்பட்டாலும் இந்தியாவோடு பகைத்துக் கொள்ளும் வகையில் இலங்கைப் பிரச்சினை தொடர்பாகக் கருத்துக்களை வெளியிட்டுத் தங்களை வீண் வம்பில் மாட்டிக் கொள்ள விரும்பமாட்டாதவைதான் இந்த நாடுகள் என்ற சர்வதேச அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வுறிய நாடுகள், குட்டி நாடுகள் யாவுமே இந்தச் சர்வதேச அரசியலுக்குள் உள்ளடக்கம். எனவே இந்த எடுகோள் எல்லா நாடுகளுக்குமான வெளிவிவகார அரசியலில் ஏற்புடைய பொதுமையான குறியீடாக அமைந்து விடுகிறது. அடக்குமுறைக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் அறவியல் சார்ந்த போரியல் நிலைப்பாடுகளையும் பிற பணிகளையும் சர்வதேச அரங்கில் ஆணித்தரமாக நிலைநிறுத்த வேண்டிய பணி மனிதத்தை நேசிப்பவர்களது விட்டுக் கொடுப்பற்ற பணியாகிறது.இதனை சர்வதேச சமூகத்தின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள வைக்கும் பணிகளாகவோ, கூக்குரலிட்டுக் காலில் விழுந்து மண்டியிட்டுப் பரப்புரை செய்யும் பிச்சைத் தொழிலாகவோ கொச்சைப்படுத்தினால் சர்வதேசத் தளத்திலே நிகழ்த்தப்பட வேண்டிய கருத்தாதரவுப் போர் பற்றிய தேடலை அடம் பிடித்து மறுக்கின்ற அபாயம் ஏற்படுகின்றது. அதியுயர் உளவு மூளைகள், நவீன தொழில் நுட்ப வசதிகள், இராணுவ ஆயுத பொருளாதார பலங்கள் அரசுகளின் இருப்புக்கும், இலகுவான சுரண்டலுக்குமான பாதுகாப்புக் கவசங்களேயாயினும் மேற்கத்தேய நாடுகளில் நிலவும் தாராண்மை ஜனநாயகத்தை (Liberal Democracy) சாதகமாகப் பயன்படுத்துவதற்கான அறிவியலையும், உபாயங்களையும் கற்றுக் கொள்ளாத வரைக்கும், உலகத்தின் உன்னதங்களை உள்வாங்கத் தயாரில்லாத மனோபாவம் நீடிக்கும் வரைக்கும் ஈழ மக்களின் துயர் தோய்ந்த வாழ்வு நீடித்துக் கொண்டே செல்லுவதற்கு இதழியல் சார்ந்த வரட்டுக் கோட்பாளர்களும் காரணமாக அமைந்து விடக் கூடாது.
அளவெட்டியிலே 1982இல் இறைகுமாரனும், உமைகுமாரனும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு வயல்வெளிகளிலே வீசப்பட்ட வேளையிலே அந்தக் கொலைகளைக் கண்டித்து “விமர்சனங்களுக்குக் கொலைகள் தீர்வாகாது” என்ற துண்டுப் பிரசுரம் யாழ் குடாநாட்டிலே விநியோகிக்கப்பட்டிருந்தது. நானும் கூட அத் துண்டுப் பிரசுர விநியோகத்திலே ஈடுபட்டிருந்தேன்.
“விமர்சனங்களுக்குக் கொலைகள் தீர்வாகாது” என்ற சொல்லாடல் இப் பத்தியை எழுதும் போது என் மண்டையைக் குடைந்து அற்புதமான நினைவு மீட்டலைத் தர முனைகிறது.எத்தனையோ மணம் பரப்பிய மலர்கள் பறிக்கப்பட்ட பூமி எங்கள் ஈழ மண். ஆகவேதான் ஆரோக்கியமான விமர்சனங்களை முன் வைப்போர் கருத்துப் போர்க்களத்திலே கூட சாகடிக்கப்பட்டு விடக்கூடாது. அரசியல் ஆய்வாளர்களும், வியூக வகுப்பாளர்களும் நிறையவே எமது சமுதாயத்திற்குத் தேவைப்படுகிறார்கள். முரண்பாடுகளுக்கூடாக அதியுயர் தேர்வைக் காணவிழைவதே பண்பட்டுக் கொண்டிருக்கும் சமுதாயத்தின் செல்நெறியாக அமையும். ஆரவாரக் கூச்சல்களுக்கு மத்தியில் மனித முகத்தை நாம் இழந்து விடக் கூடாது. எந்த வஞ்சகமும், கோரமும் உருமறைப்புச் செய்யப்பட்டு மாய மானாகக் காட்சியளித்தாலும் அதனுடன் போர் புரிதலென்பதும், வெற்றி கொள்ளப்படுதலென்பதும் கருத்தாதரவுக் களத்தில் மாத்திரமே சாத்தியப்பாடானது. அக் கட்டுரையில் மேலும் கூறப்படும் உலகப் பெரு ஊடகங்களை ஒதுக்கித் தள்ளிவிடல் என்பது வெறும் உணர்ச்சி வெளிப்பாட்டால் உந்துதல் பெறும் முன்மொழிதலே ஆகும். வாய்ப்புக்கள் தரப்படும் கணப் பொழுதுகளை கருவியாகப் பயன்படுத்தி கருத்தாதரவுத் தளத்திலே உலகை வசப்படுத்தும் பேர் அதிசயத்தை ஏன் நிகழ்த்த முடியாது ? பி;.பி.ஸியை ஒட்டு மொத்தமாகவே சி.என்.என் உடன் ஒப்பிடுவதென்பது முட்டாள்தனமானது. பி;.பி.ஸியைச் சாதகமாகக் கையாளுவதற்கான வாய்ப்புக்கள் நிறையவே உண்டு. அது குறித்து ஆழ்ந்து சிந்திக்கவும், உழைக்கவும் தயாரில்லாத நிலையில் அவை குறித்த வசைபாடல் என்பது சில ஊடகவியலாளர்களுக்கு மிகுந்த சுலபமாகி விடுகிறது. 1960களில் ஆரம்பித்த அமெரிக்க-வியட்நாம் யுத்தத்தின் போது அமெரிக்க அரசு யுத்தத்திற்கு எதிராக உள்நாட்டில் கிளர்ந்தெழுந்த மக்கள் எழுச்சியைப் புறந்தள்ள முடியவில்லை.
உலக சமாதானத்திற்கு “பீற்றில்ஸ்” பாடகர்கள் ஆற்றிய பங்களிப்பை மறந்து விட முடியுமா?
எனவே வரலாற்றில் இருந்து நாம் நிறையவே பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
Sunday, July 30, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment