இனவாதம்
-நடராஜா முரளிதரன்-
தமிழ், சிங்கள இரு தரப்பினரும் தத்தமது நிலைப்பாடுகளை விட்டுக் காடுக்காத சூழ்நிலையிலே காணப்பட்ட போதிலும் ஒஸ்லோப் பேச்சுவார்த்தைகளுக்கான நோர்வே அரசின் முயற்ச்சியைப் புறந்தள்ள முடியாத கட்டத்திலேயே இரு தரப்பினரும் அங்கு சென்றதாகக் கருதிக் கொள்ளலாம். அங்கு நோர்வே எதிர்பார்த்தது நிகழவில்லை. அதன் விளைவுகளை மக்கள் வேறு கட்டங்கள் வாயிலாக அனுபவிக்கும் சூழ்நிலை உருவாகி வருகின்றது. தொடர்ந்து கொண்டிருக்கும் படுகொலைகள் நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கின்றது. குறுங் காலத்துக்குள்ளாகவே அல்லைப்பிட்டி, வங்காலை, பேசாலைப் படுகொலைகள் என நீட்சி பெற்று உச்சக் கட்டமாக கெப்பிற்றிக்கொலாவைப் படுகொலைகள் என நடந்தேறியுள்ளன.கெப்பிற்றிக்கொலாவையில் அரசியல் அதிகாரத்தில் எத்தகைய பாத்திரங்களையும் வகிக்காத 15 குழந்தைகள் அடங்கலாக 65க்கும் அதிகமான சிங்கள மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.இந்தக் கொலைக்குக் காரணமானவர்களை யாராலும் கண்டுபிடித்துவிட முடியாது. எனவே இவ்வாறான மனிதப் படுகொலைகளைப் பயன்படுத்தி அரசியல் லாபம் பெறுவதற்கான முயற்ச்சிகளையே அரசியல் அதிகாரத்தை அனுபவிக்கும் அதிகார சக்திகள் மேற்கொள்ளும். உலக வரலாறுகள் எங்கணும் மனிதப் படுகொலைகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. இனத்தின் பேரால், மதத்தின் பேரால், மொழியின் பேரால், ஊரின் பேரால், உறவுகளின் பேரால் என இப் படுகொலைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. நாடுகள், இனங்கள், மக்கள் கூட்டம் போன்றவை பிறிதொரு ஆக்கிரமிப்பாளனால் ஆக்கிரமிக்கப்படும் போதும், பலம் பொருந்திய நாடுகள் பொருளாதாரச் சந்தை வாய்ப்புக்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்ற போதும் நிகழ்த்தப்படும் மனிதப் படுகொலைகள் மனித மாண்பினைச் சிதைக்கின்றன. காட்டுமிராண்டித்தனம் கட்டவிழ்த்து விடப்படுகின்றது.ஆகவேதான் நாகரீக சமுதாயங்கள் மனித உரிமைகளையும், மனித உயிர்களையும் காப்பதற்காகப் பல்வேறு உடன்படிக்கைகளை, யாப்புக்களை, சட்டங்களை இயற்றி வந்துள்ளன. ஆனாலும் ஆளுமை படைத்த சமுதாயங்களால் இத்தகைய சட்டங்கள் தங்கள் நலன் சார்ந்து வௌ;வேறு விதங்களில் பிரயோகிக்கப்படும் வழக்கத்தையும் இன்றைய உலகில் நாம் காணுகின்றோம்.இந்தச் சூழ்நிலையில் இன முரண்பாடு கூர்மையடைந்து முற்றிப் போயிருக்கும் இத் தருணத்தில் சராசரிச் தமிழ், சிங்கள மக்களிடையே இவ்வாறான மனிதப் படுகொலைகள் தீவிர இனவாதத்தையே மேலோங்கச் செய்யும். தமிழர் படுகொலைகளால் சிங்களவர்கள் மனம் மகிழ்வதும், சிங்கள உயிரிழப்புக்களால் தமிழர்கள் குதூகலம் அடைவதும் ஒப்பீட்டு அடிப்படையில் மேலோங்கி நிற்கும். எல்லா இனங்களையும் சேர்ந்த நல்ல மனிதர்கள் கூட இத்தகைய மனோபாவத்துள் ஆழ்ந்து, அமிழ்ந்து விடும் போது இனவாத அரசியல்வாதிகளுக்கு அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வது சுலபமாகி விடுகிறது. சிங்கள இனவாதம் மேலும், மேலும் தீவிரம் அடைதல் தமிழ் மக்களுடைய தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும், சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் என்பதை வலுவான வாதமாகத் தமிழ் தேசியவாதிகள் கருதுகிறார்கள். ஆனால் சிங்களப் பேரினவாதமானது ஓர் எல்லைக்கு அப்பால் சர்வதேச சக்திகளைப் பகைத்துக் கொள்ளாது காலத்தை இழுத்தடித்தும், தந்திரோபாய காய் நகர்த்தல்களில் ஈடுபட்டும், அரைகுறைத் தீர்வுகளுக்கு இணங்கியும் தனது அரசியல் சித்து விளையாட்டுக்களைத் தொடரும் என்ற உண்மையை நாம் வசதியாக மறந்து விடுகின்றோம். “சர்வதேசப் பாதுகாப்பு வலைப்பின்னல்” புரிந்த ரணிலிடமிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற முற்படுகையில் கிணறு வெட்டப் பூதம் எழுந்த கதையாய் இன்னுமொரு இனவாதப் பூதம் மேலும் வலுவான நிலையில் சர்வதேசத்தைத் தனக்குத் துணையாக அழைத்துள்ளமையை இங்கு நாம் நோக்க வேண்டும். மேலும் இலங்கைத் தமிழர் விடயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடுதான் தமிழக அரசின் நிலைப்பாடுமாகும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி வெளிப்படையாகக் கூறியுள்ளார். தமிழ் நாட்டுக்கு இந்த வருடம் இது வரையில் 3500க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் சென்றுள்ளார்கள். கடந்த பல வருடங்களாகத் தமிழகத்திற்குச் சென்று தஞ்சமடைந்து முகாம்களில் வாழும் பல்லாயிரக் கணக்கான அகதிகளின் துயர் தோய்ந்த வாழ்வு சொல்லில் விபரிக்க முடியாதது. ஆயினும் இந்திய மத்திய அரசானது இலங்கையின் இறைமைக்குட்பட்டு இலங்கையின் தமிழ் தேசிய இனப்பிரச்சினையில் இலங்கை அரசுடன் முரண்படாது செல்கின்ற போக்கையே இன்று பட்டும் படாமலும் கடைப்பிடித்து வருகின்றது. எதிர்காலத்திலும் இதே உத்தியையே இந்திய அரசு கையாளும். அதே சமயத்தில் இந்திய அரசானது மறை முகமாக ஈழப் பிரிவினைக் கோரிக்கையைப் பலவீனப்படுத்தும் வகையில் இலங்கை அரசுக்குத் தேவையான சகல இராணுவ உதவிகளையும் வழங்கும். குறிப்பாகக் கடல் பிராந்தியத்தில் கூடுதல் உதவியை இந்தியா இலங்கைக்கு வழங்கும்.எனவே இன்றைய உலகச் சூழலும், இந்தியச் சூழலும் ஈழத்தமிழ் மக்களுக்குச் சாதகமாயில்லாத சூழலில் எதைத்தான் செய்வது? ஏன்ற கேள்வி எழுகின்றது. மேற்குலகின் நண்பன் என்று கருதப்படும் ரணில் ஈழத் தமிழ்; மக்களுக்குத் தீர்வை வழங்கியிருப்பார் என்பதை நான் நம்ப மறுத்தாலும் ரணில் அதிகாரத்தில் இருந்திருந்தால் நிலைமைகள் மேலும் சிறப்பாகத் தமிழர் தரப்புக்கு அமைந்திருக்கும் என்பதையே இங்கு நான் கூற விரும்புகின்றேன். ஜனாதிபதித் தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பாக மிலிந்த மொறகொட வழங்கிய பத்திரிகைப் பேட்டியில் “சர்வதேசப் பாதுகாப்பு வலைப்பின்னல்” என்ற பொறி தமிழர் தரப்புக்கு எதிராக அமைக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். அதன் விளை பொருட்களில் ஒன்றுதான் “கருணா” என்பதும் அப் பேட்டியில் உள்ளடங்கியிருந்தது. இதனால் எழுந்த சர்ச்சையே ரணில் விக்கிரமசிங்கா சூட இருந்த மகுடத்தைக் குப்புறக் கவிழ்த்தது. ரணிலின் “பாதுகாப்பு வலைப்பின்னலில்” நாடு துண்டாடப்படுவதிலிருந்து காப்பாற்றப்படும் என்ற உறுதி மொழி மேற்குலகினால் வழங்கப்பட்டிருக்கும் என்ற உண்மைக்கு அப்பால் தமிழர் தரப்பு அச்சப்படுவதற்குப் பெரிதாக ஏதும் இல்லையென்றே நான் எண்ணுகின்றேன். “கருணா” குறித்த மிலிந்த மொறகொடவின் கூற்றுக்கள் சிங்களப் பேரினவாதத்தைத் திருப்திப்படுத்த மொழியப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட கூற்றுக்களாக அமையும் வாய்ப்புக்களையும் ஒதுக்கித் தள்ள முடியாது. ஆனால் மறுபுறத்தில் ரணில் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்தைக் கைப்பிடித்திருந்தால் தமிழர் தரப்பு சர்வ தேச மட்டங்களிலே இன்னும் ஆற்ற வேண்டியிருந்த அரசியல் பணிகளுக்கான கால அவகாசம் கிடைத்திருக்கும்.ஐரோப்பியத் தடை நிகழ்ந்திராது. உலகெலாம் புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கும், தாய் நிலத்துக்குமான உறவு அமைதிச் சூழல் காரணமாக அதிகரிக்கும் பயணப் போக்குவரத்துக்களினால் மேலும், மேலும் இறுக்கமடைந்திருக்கும்.சகல நிறைவேற்று அதிகாரங்களையும் ரணில் பெற்ற நிலையில் ரணிலை அம்பலப்படுத்துவதற்கான வாய்ப்பும் தமிழர் தரப்புக்குக் கிடைத்திருக்கும்.இதற்கும் அப்பால் இனவாதப் படுகொலைக் களங்களிலே தற்காலிக அமைதிக்கான கால இடைவெளி இன்னும் சிறிது நீண்டு விரிந்திருக்கும்.
Sunday, July 30, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment