முள்ளிவாய்க்காலின் பின்னான தமிழ் அரசியல்
-நடராஜா முரளிதரன்-
இலங்கைத் தீவில் தமிழ்மக்களுக்கான அரசியல் என்பது இன்னமும் தொடங்கவில்லையென்று சமீபத்தில் எழுதியிருந்தார் தமிழ் எழுத்தாளர் ஒருவர். என்ன நிகழ்ந்தது, ஏன் இவ்வாறு தமிழ் மக்கள் இவ் இடரில் மாட்டிக்கொண்டார்கள் என்று தமிழ்மக்கள் அங்கலாய்த்து நிற்கிறார்கள். தமிழ் மக்களுக்கான அரசியல் என்பது இப்பொழுது ஒரு இடைமாறு காலகட்டத்தில்தான் உள்ளது என்று உரைக்கப்படுவது எத்துணை நம்பகத்தன்மை வாய்ந்தது என்றவாறெல்லாம் கேள்விகள் எழுகின்றது.
தங்களுக்கான அரசியல்வெளி வெற்றிடமாகிய சூழலில் பித்துப் பிடித்து அரசியல் சலிப்பு ஏற்பட்டு எதையும் உள்வாங்க முடியாதவர்களாக, எவற்றையும் சந்தேகக் கண்ணோடு நோக்குபவர்களாகவே தமிழர்கள் அதிகமாகத் தென்படுகிறார்கள். மறுபுறம் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் சிறிலங்கா அரசு அரங்கேற்றியிருந்த பல்வேறு சித்து விளையாட்டுகளுக்கப்பால் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பெற்றிருந்த வாக்குகளை வகுத்துப் பகுத்து, ஆய்ந்து அதன் நம்பிக்கை நூலிழையில் தொங்கிக்கொண்டு ஊசலாடி நிற்கிறார்கள் தமிழ்த் தேசியர்கள்.
மூன்று இலட்சம் மக்களும், பல்லாயிரக்கணக்கில் போராளிகளும் சிறிலங்கா அரசின் பிடியில் மாட்டி நிற்கையில் தப்பிக் கொண்ட, காடுகளில் ஒழிந்து கொண்டுள்ள போராளிகள் மீண்டும் தங்களைச் சுதாகரித்துக் கொண்டு எழுவார்களா என்பது குறித்த ஊகங்களைத் தத்தமது அரசியல் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப நாமெல்லாம் மொழிந்து கொண்டிருக்கின்றோம். ஆயுதப்போராட்ட யுகம் முடிந்துவிட்டது, நவீன தமிழ் அரசியலில் தோன்றிய ஒரு வீரயுகம் முடிந்துவிட்டது போன்ற விமர்சனச் சொல்லாடல்கள் எழுத்துருவம் பெறத் தொடங்கிவிட்டன.
போராளிகள் தம் மீது உடுத்தியிருந்த வீரம், தியாகம் போன்ற அணிகலன்கள் யாவுக்கும் நான்காம் கட்ட ஈழப்போரில் ஏது நிகழ்ந்தது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. முடிவில்லாத கேள்விகளும், பதில்களும் வெளிப்பட்ட வண்ணம் அதன் சாத்தியங்களைத் தக்க வைப்பதற்கான சூதாட்டத்தில் நாங்கள் பகடைகளை உருட்டிய வண்ணம் இருக்கின்றோம்.
நான்காம் கட்ட ஈழப்போரில் மாவிலாறு, முகமாலை போன்ற சமர்களங்களில் தமிழ்படைகள் பின்வாங்கியதில் ஆரம்பித்த மக்கள் இன்னல்கள் இறுதியில் முள்ளிவாய்க்காலில் முடங்கிய சுமார் மூன்று இலட்சம் மக்கள் போரின் கோரங்களால் வதையுண்ட விதம் ஈறாகத் தமிழ் மக்கள் அநுபவித்த கொடுமைகள் இன்றும் உலகின் மனச்சாட்சி படைத்த மாந்தர்களின் இதயங்களைப் பிளிந்து கொண்டேயிருக்கிறது. நவீன தமிழ் அரசியலில் மாத்திரமல்லாது மூன்றாம் உலக நாடுகளின் அரசியல் எங்கணும் தனிநபர் தலைமை உச்சமாகக் காணப்படுவது நாமெல்லொரும் அறிந்த உண்மைதான். நவீன தமிழ் அரசியலென்பது மூன்றாம் உலக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்கப்பட இயலாத பல்வேறு வகையிலான உளவியல் அம்சங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குவதைப் புறந்தள்ளிவிட்டு எவ்வகையிலான மீளாய்வுகளையும் ஆரோக்கியமான விமர்சன வரையறைகளுடன் நாம் கட்டமைக்க இயலாது.
ஆயுதப் போராட்டம்தான் தமிழ்மக்களுக்கான விடிவைப் பெற்றுத் தரும் ஒரே வழி என்று நம்பிக்கை கொண்டவர்களாகவே தமிழ்மக்களில் பெரும்பாலானோர் நேற்றுவரை அசைக்க முடியாத நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள். ஆனால் இன்று வகைதொகையான கேள்விகளை எங்களுக்குள் எழுப்பிக் கொண்டு புலம்புகின்றோம். 40 ஆண்டுகாலத் தமிழ்த் தீவிரவாத அரசியல் வெறுமனே ஈழத்தமிழ் மக்களால் மாத்திரம் கட்டியெழுப்பப்பட்டதல்ல. அதற்கு 83களிலிருந்து 87வரை இந்தியா பல வழிகளிலும் உதவியிருக்கின்றது. அதற்குள் தமிழக அரசும், தமிழக மக்களும் அளித்த உதவிகள் உள்ளடக்கம். அவ்வாறு உதவிய இந்தியா எம்மோடு முரண்பாடுகள் கொள்ள ஆரம்பித்த வேளைகள் தமிழ்த் தீவிரவாத அரசியலின் முக்கியமான திருப்புமுனை. தமிழின் நவீன வீரயுகம் ஒன்று இந்த முரண்களைக் கட்டவிழ்ப்பதில் ஏற்பட்ட பலாபலன்களுக்குள் சிக்குண்டு விட்டது. இனி வரும் காலம் எவ்வாறாக அமையும்? என்ற கேள்வியே இன்று எம்முன் எழுந்து நிற்கின்றது.
யுத்தத்தின் படிப்பினைகளிலிருந்து அறிவு படைத்து இயங்க வைக்கும் ஒரு புதிய வீர மரபின் எழுச்சி அதாவது மரபு மாற்றம் குறித்து சிலர் கட்டியம் கூறுகின்றார்கள். தமிழ் மக்களின் வீழ்ச்சியிலிருந்து பெற்ற படிப்பினைகளிலிருந்து ஒரு புதிய தமிழ் அரசியல் வெளியை உருவாக்குவது என்ற அர்த்தத்தில் அவை கூறப்படுவதாகப் பொருள்படும். அண்மைக் காலங்களில் நான் மிகவும் தீவிரமாகப் பேசமுனையும் பேசுபொருட்களான ஜனநாயகம், வன்முறையற்ற அரசியல், அரசியல் இராஜதந்திர அணுகுமுறைகள் ஆகிய கருத்தியல்கள் எவ்வாறு இத்தகைய அரசியல் வெளியோடு அது தொடர்பான விவாதங்களை அல்லது உரையாடல்களை அல்லது கெடுபிடிகளை ஏற்படுத்தும் என்பதை அரசியலாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விட்டுவிடுகின்றேன்.
80களின் உலக அரசியல் சோவியத்-அமெரிக்க பனிப்போர் சிந்தாந்தத்தின் அடிப்படையிலே அலசி ஆராயப்பட்ட பின்னணியைக் கொண்டது. எம்மில் பலர் அன்று இவ்வாறான பனிப்போர் யுகத்தின் அரசியலுக்கு ஊடாகவே ஈழ அரசியலைப் புரிந்து கொள்ள முனைந்தோம். ஆனால், 90 களின் போது ஏற்பட்ட சோவியத் யூனியனின் உடைவின் பின்னரான புதிய உலக ஒழுங்கைப் புரிந்துகொள்ளவதில் எம்மில் பலருக்கும் புத்திஜீவிகள் உட்பட சிரமமிருந்திருக்கின்றது.
முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சியின் தாற்பரியம் புதிய உலக ஒழுங்கைச் சரியாக உள்வாங்காததன் விளைவுதான் என்ற விமர்சனத்தை முன்வைக்கும் எந்த ஆய்வாளர்களாலுமே சிறிலங்காவின் இறுதி ஜனாதிபதித் தேர்தலின் போது சிறிலங்காவின் ஆளும் வர்க்கத்தைக் கூறு போட்டு இரு பெரும் சிங்களக் கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சிக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் அரசியல் சமநிலையை உருவாக்குவதன் மூலம் அவ்விரு கட்சிகளுக்கும் இடையில் பெரும் மோதலை ஏற்படுத்துவதனால் தமிழர் தரப்பு அடைய இருந்த சாதகச் சூழல் சுட்டிக் காட்டப்படவில்லை என்பதை இந்தப் பத்தியில் முன்வைத்து அன்றைய சந்தர்ப்பத்தில் அதனை இடித்துக் கூறிக் கொண்டிருந்த என்னால் ஜனாதிபதித் தேர்தல் முடிவின் பின்னர் "இனவாதம்" என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையின் குறிப்பிட்ட பகுதியினை இங்கு முன்வைப்பது மிகவும் பொருத்தமானது என எண்ணுகின்றேன். மேற்கொண்டு அதனை வாசியுங்கள். (ஏனெனில் அன்றைய சந்தர்ப்பத்தில் சந்திரிகாவினால் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டு முன்னணி கைப்பற்றியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது).
“இவ்வாறான மனிதப் படுகொலைகளைப் பயன்படுத்தி அரசியல் லாபம் பெறுவதற்கான முயற்சிகளையே அரசியல் அதிகாரத்தை அனுபவிக்கும் அதிகார சக்திகள் மேற்கொள்ளும். உலக வரலாறுகள் எங்கணும் மனிதப் படுகொலைகள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. இனத்தின் பேரால், மதத்தின் பேரால், மொழியின் பேரால், ஊரின் பேரால், உறவுகளின் பேரால் என இப் படுகொலைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. நாடுகள், இனங்கள், மக்கள் கூட்டம் போன்றவை பிறிதொரு ஆக்கிரமிப்பாளனால் ஆக்கிரமிக்கப்படும் போதும், பலம் பொருந்திய நாடுகள் பொருளாதாரச் சந்தை வாய்ப்புக்களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்ற போதும் நிகழ்த்தப்படும் மனிதப் படுகொலைகள் மனித மாண்பினைச் சிதைக்கின்றன. காட்டுமிராண்டித்தனம் கட்டவிழ்த்து விடப்படுகின்றது. ஆகவேதான் நாகரீக சமுதாயங்கள் மனித உரிமைகளையும், மனித உயிர்களையும் காப்பதற்காகப் பல்வேறு உடன்படிக்கைகளை, யாப்புக்களை, சட்டங்களை இயற்றி வந்துள்ளன.
ஆனாலும் ஆளுமை படைத்த சமுதாயங்களால் இத்தகைய சட்டங்கள் தங்கள் நலன் சார்ந்து வௌ;வேறு விதங்களில் பிரயோகிக்கப்படும் வழக்கத்தையும் இன்றைய உலகில் நாம் காணுகின்றோம். இந்தச் சூழ்நிலையில் இன முரண்பாடு கூர்மையடைந்து முற்றிப் போயிருக்கும் இத் தருணத்தில் சராசரிச் தமிழ், சிங்கள மக்களிடையே இவ்வாறான மனிதப் படுகொலைகள் தீவிர இனவாதத்தையே மேலோங்கச் செய்யும். தமிழர் படுகொலைகளால் சிங்களவர்கள் மனம் மகிழ்வதும், சிங்கள உயிரிழப்புக்களால் தமிழர்கள் குதூகலம் அடைவதும் ஒப்பீட்டு அடிப்படையில் மேலோங்கி நிற்கும். எல்லா இனங்களையும் சேர்ந்த நல்ல மனிதர்கள் கூட இத்தகைய மனோபாவத்துள் ஆழ்ந்து, அமிழ்ந்து விடும் போது இனவாத அரசியல்வாதிகளுக்கு அரசியல் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வது சுலபமாகி விடுகிறது.
சிங்கள இனவாதம் மேலும், மேலும் தீவிரம் அடைதல் தமிழ் மக்களுடைய தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும், சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் என்பதை வலுவான வாதமாகத் தமிழ் தேசியவாதிகள் கருதுகிறார்கள். ஆனால் சிங்களப் பேரினவாதமானது ஓர் எல்லைக்கு அப்பால் சர்வதேச சக்திகளைப் பகைத்துக் கொள்ளாது காலத்தை இழுத்தடித்தும், தந்திரோபாய காய் நகர்த்தல்களில் ஈடுபட்டும், அரைகுறைத் தீர்வுகளுக்கு இணங்கியும் தனது அரசியல் சித்து விளையாட்டுக்களைத் தொடரும் என்ற உண்மையை நாம் வசதியாக மறந்து விடுகின்றோம்.
“சர்வதேசப் பாதுகாப்பு வலைப்பின்னல்” புரிந்த ரணிலிடமிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற முற்படுகையில் கிணறு வெட்டப் பூதம் எழுந்த கதையாய் இன்னுமொரு இனவாதப் பூதம் மேலும் வலுவான நிலையில் சர்வதேசத்தைத் தனக்குத் துணையாக அழைத்துள்ளமையை இங்கு நாம் நோக்க வேண்டும்.
மேலும் இலங்கைத் தமிழர் விடயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடுதான் தமிழக அரசின் நிலைப்பாடுமாகும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி வெளிப்படையாகக் கூறியுள்ளார். தமிழ் நாட்டுக்கு இந்த வருடம் இது வரையில் 3500க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் சென்றுள்ளார்கள். கடந்த பல வருடங்களாகத் தமிழகத்திற்குச் சென்று தஞ்சமடைந்து முகாம்களில் வாழும் பல்லாயிரக் கணக்கான அகதிகளின் துயர் தோய்ந்த வாழ்வு சொல்லில் விபரிக்க முடியாதது.
ஆயினும் இந்திய மத்திய அரசானது இலங்கையின் இறைமைக்குட்பட்டு இலங்கையின் தமிழ் தேசிய இனப்பிரச்சினையில் இலங்கை அரசுடன் முரண்படாது செல்கின்ற போக்கையே இன்று பட்டும் படாமலும் கடைப்பிடித்து வருகின்றது. எதிர்காலத்திலும் இதே உத்தியையே இந்திய அரசு கையாளும். அதே சமயத்தில் இந்திய அரசானது மறை முகமாக ஈழப் பிரிவினைக் கோரிக்கையைப் பலவீனப்படுத்தும் வகையில் இலங்கை அரசுக்குத் தேவையான சகல இராணுவ உதவிகளையும் வழங்கும். குறிப்பாகக் கடல் பிராந்தியத்தில் கூடுதல் உதவியை இந்தியா இலங்கைக்கு வழங்கும். எனவே இன்றைய உலகச் சூழலும், இந்தியச் சூழலும் ஈழத்தமிழ் மக்களுக்குச் சாதகமாயில்லாத சூழலில் எதைத்தான் செய்வது? ஏன்ற கேள்வி எழுகின்றது.
மேற்குலகின் நண்பன் என்று கருதப்படும் ரணில் ஈழத் தமிழ்; மக்களுக்குத் தீர்வை வழங்கியிருப்பார் என்பதை நான் நம்ப மறுத்தாலும் ரணில் அதிகாரத்தில் இருந்திருந்தால் நிலைமைகள் மேலும் சிறப்பாகத் தமிழர் தரப்புக்கு அமைந்திருக்கும் என்பதையே இங்கு நான் கூற விரும்புகின்றேன்.
ஜனாதிபதித் தேர்தலுக்குச் சில நாட்களுக்கு முன்பாக மிலிந்த மொறகொட வழங்கிய பத்திரிகைப் பேட்டியில் “சர்வதேசப் பாதுகாப்பு வலைப்பின்னல்” என்ற பொறி தமிழர் தரப்புக்கு எதிராக அமைக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். அதன் விளை பொருட்களில் ஒன்றுதான் “கருணா” என்பதும் அப் பேட்டியில் உள்ளடங்கியிருந்தது. இதனால் எழுந்த சர்ச்சையே ரணில் விக்கிரமசிங்கா சூட இருந்த மகுடத்தைக் குப்புறக் கவிழ்த்தது.
ரணிலின் “பாதுகாப்பு வலைப்பின்னலில்” நாடு துண்டாடப்படுவதிலிருந்து காப்பாற்றப்படும் என்ற உறுதி மொழி மேற்குலகினால் வழங்கப்பட்டிருக்கும் என்ற உண்மைக்கு அப்பால் தமிழர் தரப்பு அச்சப்படுவதற்குப் பெரிதாக ஏதும் இல்லையென்றே நான் எண்ணுகின்றேன். “கருணா” குறித்த மிலிந்த மொறகொடவின் கூற்றுக்கள் சிங்களப் பேரினவாதத்தைத் திருப்திப்படுத்த மொழியப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட கூற்றுக்களாக அமையும் வாய்ப்புக்களையும் ஒதுக்கித் தள்ள முடியாது.
ஆனால் மறுபுறத்தில் ரணில் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்தைக் கைப்பிடித்திருந்தால் தமிழர் தரப்பு சர்வ தேச மட்டங்களிலே இன்னும் ஆற்ற வேண்டியிருந்த அரசியல் பணிகளுக்கான கால அவகாசம் கிடைத்திருக்கும். ஐரோப்பியத் தடை நிகழ்ந்திராது. உலகெலாம் புலம் பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கும், தாய் நிலத்துக்குமான உறவு அமைதிச் சூழல் காரணமாக அதிகரிக்கும் பயணப் போக்குவரத்துக்களினால் மேலும், மேலும் இறுக்கமடைந்திருக்கும். சகல நிறைவேற்று அதிகாரங்களையும் ரணில் பெற்ற நிலையில் ரணிலை அம்பலப்படுத்துவதற்கான வாய்ப்பும் தமிழர் தரப்புக்குக் கிடைத்திருக்கும். இதற்கும் அப்பால் இனவாதப் படுகொலைக் களங்களிலே தற்காலிக அமைதிக்கான கால இடைவெளி இன்னும் சிறிது நீண்டு விரிந்திருக்கும்.
No comments:
Post a Comment