தேசம், தேசியம்,
தேசிய இயக்கங்கள்
-நடராஜா முரளிதரன்-
''தேசம், தேசியம், தேசிய இயக்கங்கள் ஆகியன எந்தவொரு இறுக்கமான சூத்திரத்துக்கும் கட்டுப்பட்டவையல்ல. தேசங்கள் “இயற்கையாக” உருவாகின்றவையல்ல, மாறாகக் “கற்பிதம் செய்யப்பட்ட சமூகங்களே”.
-பெனடிக்ற் அன்டர்சன்-
இவ்வாறு “அன்டர்சன்” மொழிகின்ற போது “கற்பனைச் சமூகம்” என்ற உடனடி முடிதலுக்கு விரைந்திடாது இவ்வுலக நடைமுறை யதார்த்தங்களின் அக, புறக் காரணிகளின் அடிப்படையினால் கட்டமைந்த புரிதலுக்குள்ளான “கற்பிதமாகவே” மேற் கண்ட சொல்லாடல்களை நான் பொருள் கொள்ளவிழைகின்றேன்.
உலகப் போர்களின் போது பெரு வளர்ச்சி பெற்ற ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளில் இருந்து எழுந்த “தேசிய வெறி” அந்த நாடுகளைச் சேர்ந்த தொழிலாளி வர்க்கம் தனது தேசத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டுமா அல்லது தனது தொழிலாளி வர்க்கத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமா என்ற மாபெரும் வினாவைத் தொடுத்து நின்றது.
அசுர வளர்ச்சி கண்ட முதலாளித்துவம் ஏகாதிபத்திய விரிவு பெற்று சந்தைப் போட்டியில் இறங்கியதன் விளைவான உலகப் போர்கள் அந்தப் பேரரசுகள் சிதைந்து போகாமலே அவற்றைப் பொதுவுடமை அரசுகளாக மாற்றம் காணச் செய்து விடும் என்பதில் மார்க்சீய அறிஞர்களில் பலர் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
எனவே அவ்வாறான பேரரசுகளுக்குள் உள்ளடங்கியிருந்த தேசங்களுக்கும்,தேசிய இனங்களுக்கும் விடுதலை வழங்குவது குறித்து உரிய கோட்பாடுகளை நெறிப்படுத்துவதில் பொதுவுடமைசார் அறிஞர்களில் பெரும்பகுதியினர் மிகுந்த தயக்கம் காட்டியே வந்துள்ளார்கள்.
ஆனால் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து ஓடி வந்த எங்களுக்கு அந்த நாடுகளில் காணப்படும் தேசியங்களோ தாங்கொணாத சமூக, பொருளாதார, பண்பாட்டு ஒடுக்குமுறையின் வெளிப்பாடுகளாகவே கருதப்படுகின்றது.
தேசியம் என்பது “இடது” அல்லது “வலது” வகைப்பட்ட சித்தாந்த வலைக்குள் சிக்குண்டிருக்கலாம். புரட்சிகரமானதாகவோ அல்லது பழமை சார்பானதாகவோ கூட இருக்கலாம். ஆயினும் அரசியல் கருத்தாக்கம் என்ற வகையில் அது ஏற்கனவே சமூகத்தில் நிலைபெற்றுள்ள அரசியல் கேள்விக்குள்ளாக்கப்படும் வேளைகளில் தனது கருத்தாக்கச் சக்தியை நிறுவுவதற்கான வாய்ப்பான தளத்தில் எழுந்து நிற்கிறது.
பாசிசமாக எழுந்து நின்ற ஜேர்மனியத் தேசியவாதம் தொட்டு முற்போக்குப் பதாகைகளைத் தாங்கிய ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்கத் தேசியங்கள் ஈறாக அனைத்துத் தேசியங்களுமே தமது பண்டைய வரலாறுகளை, பழமை வாய்ந்த கலை - இலக்கியப் பெருமைகளை, இதிகாசத் தொன்மங்களை முரசறைவது வழக்கம்.
அண்மைக் காலத் தமிழகத்தின் வரலாறு கூட சாதியொழிப்புப் போராட்டமாக, பார்ப்பனீய எதிர்ப்புப் போராட்டமாக, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டமாக வீரியம் பெற்று ஈற்றில் தமிழ்த் தேசியமாக மாற்றம் பெற்றதை உற்றுப் பார்க்கையில் உள்ளக உணர்வுக் கிடக்கைகளான மொழியுணர்வு, பண்பாட்டுணர்வு போன்றவை சமூகங்களை ஈர்ப்பதில், அணி கொள்ள வைப்பதில் அபரிமித ஆற்றல் கொண்டவையாகக் காட்சியளிக்கின்றன.
ஆகவேதான் சமுதாயப் பிரச்சினையைத் தேசியப் பிரச்சினையிலிருந்து முற்றாகப் பிரித்துப் பார்ப்பதென்பது அந்த சமூகத்தின் அரசியல், சமூக, பொருளாதாரப் பரிமாணங்களை விளங்கிக் கொள்வதில் சிக்கல்களை ஏற்படுத்தி விடக் கூடும்.
நவீன தமிழகத்தில் எழுச்சியடைந்திருக்கும் தலித் விடுதலை உணர்வுகளும் கூட அதன் தமிழ்த் தேசியக் கலப்பிலிருந்து விடுபடவே முடியாத சம கால வரலாற்றுச் சூழலை நாம் அவதானிக்கலாம்.
தேசியம் பற்றிய எந்தவொரு கோட்பாட்டையும் வகுக்காததுதான் மார்க்சீயத்தின் மிகப் பெரும் தோல்வியாகும் என மார்க்சிய அறிஞர் ஒருவர் கூறியிருந்தார். ஆயினும் மார்க்சீய வழித் தடத்திலே பயணித்த “லெனின்” பின்வருமாறு கூறியிருந்தார்.
“ சுய நிர்ணய உரிமை என்ற அரசியல் சுதந்திரத்தை நாம் ஏற்கிறோம். அதாவது ஒடுக்கும் தேசங்களிலிருந்து பிரிவினையைக் கோருகின்றோம். அதற்குக் காரணம் நாம் பொருளாதார அடிப்படையில் நாட்டைப் பிரிப்பதற்குக் கனவு கண்டோம் என்பதாலோ அல்லது சிறிய அரசுகளை உருவாக்குதல் என்ற இலட்சியத்தைக் கொண்டிருக்கிறோம் என்பதாலோ அல்ல. மாறாக உண்மையான ஜனநாயக அடிப்படையில், உண்மையான சர்வ தேசிய அடிப்படையில், மேலும் பெரிய அரசுகளையும் மேலும் நெருக்கமான ஒற்றுமையையும் ஏன், தேசங்கள் இரண்டறக் கலந்து விடுவதையும் கூட விரும்புகின்றோம் என்பதால்தான். பிரிந்து போகும் சுதந்திரமில்லாமல் இதை நினைத்துப் பார்க்கவே முடியாது.”
“மார்க்சீயத்திற்கும் தேசியத்திற்கும் இடையேயான உறவு ஒரு சிக்கல் மிகுந்த உரையாடலாகவே தொடருகின்றது” என்று இன்னுமொரு மார்க்சீய அறிஞர் குறிப்பிட்டிருந்தார்.
எனவேதான் பொதுவுடமைச் சித்தாந்தத்தின் பேரால் உலகெங்கணும் பொதுவுடமையாளர்களும், பொதுவுடமை இயக்கங்களும் தேசிய இனப் பிரச்சினை தொடர்பாகப் புரிந்த வரலாற்றுத் தவறுகளையும், குற்றங்களையும் மறந்து விடாது மீண்டுமொரு முறை வரலாற்றின் குப்பைத் தொட்டிகளுக்குள் ஆழ்ந்து அவற்றை மீண்டுமொரு முறை புரட்டிப் பார்க்க வேண்டியுள்ளது.
சகல சித்தாந்தங்களின் பேரால் அமைக்கப்பட்ட அரசுகள் யாவுமே மக்களின் தனித்துவங்களை, அவர் தம் அடையாளங்களைப் புறந்தள்ளித் தீர்வுகளை மேலிருந்தவாறு திணித்து ஒடுக்குதலுக்குள்ளாக்கியதன் விளைவாகவே தேசியமும், தேசிய இயக்கங்களும் தோன்றின. புதிய தேசங்களும் பிறந்தன.
(துணை நூல்; : எஸ்.வி.ஆர் எழுதிய “தேசிய இனப்பிரச்சினை” என்ற கட்டுரை)
No comments:
Post a Comment