Wednesday, June 13, 2007

பிரிவினைக் கோரிக்கைகள்

-நடராஜா முரளிதரன்-

“சமஸ்டி” வடிவங்களை ஆய்வு செய்வதனூடாக சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகளின் அடிப்படையில் தீர்வுகளை முன் வைப்பதன் மூலம் இனப்பதற்றம் நிலவும் சமூகச் சூழ்நிலைகளில் ஓரளவு தணிவுகளை ஏற்படுத்தும் வரலாற்றுக் கள நிலவரங்களை சமாதான ஏற்பாட்டாளர்கள் என்று கூறிக் கொள்வோர் ஊக்குவிக்கும் முறைமையை உலகெங்கணும் நாம் பரவலாகக் காணுகின்றோம்.

இதே வகையான அடிப்படையைக் கருத்திற் கொண்டு 2002களில் தமிழர் தரப்பும், சிறிலங்கா அரசும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்த வேளைகளில் “ஒஸ்லோ பிரகடனம்” என்ற பதம் ஊடகவியலாளர்கள் மத்தியில் மிகப் பிரபல்யம் அடைந்திருந்தது. இந்த “ஒஸ்லோ பிரகடனம்” மூலம் பிரிவினைக் கோரிக்கையை தமிழர் தரப்பு கைவிட்டுவிட்டதாகவே உலகப் பத்திரிகைகள் எல்லாம் தெரிவித்துக் கொண்டிருந்தன.

உள்ளக “சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய பிரதேச சுயாட்சிக்கு உரித்துடையவர்கள் என்ற முறைமையில் அது தொடர்பான தீர்வுத்திட்டங்களைப் பரிசீலிக்கத் தயார்” என்ற தமிழர் தரப்பின் அறிக்கைகள் திம்புப் பேச்சுவார்தைக் காலம் தொட்டு அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு வந்துள்ளன.

ஒஸ்லோவில் இடம்பெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைகளின் போது கனடாவைச் சேர்ந்த அரசியலமைப்பு அறிஞர் குழாம் ஒன்று “சமஸ்டி ஆட்சியமைப்பின்” அரசியலமைப்பு அடுக்கு முறைமைகள் தொடர்பாக இரு தரப்பினருக்கும் ஆலோசனைகளை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. இதில் முன்னாள் ஒன்ராறியோ மாகாண முதல்வர் “பொப் ரே”யும் அடங்கியிருந்தார்.

கனடா நாட்டின் அரசிலமைப்பு நிபுணர்கள் இரு தரப்பினரோடும் கருத்துக் கூறல்களையும், உரையாடல்களையும் நிகழ்த்தியதன் விளைவாகவே “உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகளின் அடிப்படையில், தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகத்தில் ஐக்கியமான இலங்கைக்குள் சமஸ்டி ஆட்சி முறை தழுவிய தீர்வு” ஒன்றை ஆராய்ந்து பார்ப்பதற்கு இரு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டது.

தேசங்கள் அமைக்கப்பட்டுவிட்டாலும் தேசத்துள் வாழும் மக்களுக்கான பிரச்சினைகள் வேறு ரூபங்களில் தொடரவே செய்யும் எனக் கருத்துக் கூறும் அறிஞர்கள் வலிமையுடைத்த தேசியம் சந்தையை விரிவு படுத்தவும், புவியியல் பரப்பு எல்லைகளைத் தக்க வைத்துக் கொள்ளவும், உள்ளக மக்களின் பிரச்சினைகளைத் திசைதிருப்பி விடவும் வன்முறை சார்ந்த வழித்தடத்திலேயே பயணிக்கின்றது என்பதில் நம்பிக்கை கொள்ளுகிறார்கள்.

பெரியார் ஓரிடத்தில் கூறுகிறார். “இந்தியா ஒரு தேசமா? அதற்கு மொழி ஏது? மதம் ஏது? இந்து மதத்தால் இந்தியா தேசம் ஆயிற்று என்றால்….இஸ்லாமியருக்கும், கிறீஸ்தவருக்கும், பௌத்தர்களுக்கும், பார்சிக்களுக்கும் இந்தியா தேசமாகுமா?....மொழியைக் கொண்டு தேசம் பிரிப்பது என்றால் மாகாணம் ஒன்றுக்கு நான்கு, ஐந்து தேசங்கள் ஆகிவிடாதா?”

இங்குதான் உருவாக்கப்பட்ட, மற்றும் உருவாகி வரும் தேசங்களுக்குள்ளேயும் மேலும் புதிய வகைப் பிரச்சினைகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. கனடாவில் பிரஞ்சு மொழி பேசும் மக்களின் கியூபெக் பிரிவினைப் போராட்டத்தின் போது இப் பிரச்சினை ஒட்டாவோவின் அதி உயர் நீதிமன்றத்தால் கையாளப்பட்ட போது அதன் தீர்ப்பின்; சாரமானது இவ்வாறு கூறுகின்றது.

“அரசியல் சுதந்திரத்தைத் தேர்ந்தெடுக்கும் அல்லது நிறுவிக் கொள்ளும் உரிமையான வெளியக சுயநிர்ணய உரிமை, மேலாட்சிக்கு உட்பட்டு வாழும் எல்லாத் தரப்பு மக்களுக்கும் உரித்தானதாகும். ஒரு மக்கள் சமூகம் இன்னொரு சமூகத்தின் மேலாதிக்கத்தினுள் சிக்குண்டு தவிக்கும் போது அடக்குதலுக்கு உள்ளான சமூகமானது வெளியக சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டலாம்.” “மேலும் ஒரு மக்கள் சமூகம் தனது உள்ளக சுயநிர்ணய உரிமையை அர்த்தபூர்வமான முறையில் அடைவதற்குத் தடை ஏற்படுமானால் இறுதி வழிமுறையாகப் பிரிந்து செல்லும் உரிமையைப் பிரகடனப்படுத்த அந்த மக்களுக்கு உரிமையுண்டு.”

இதே வகையிலான அம்சங்களை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை தொடர்பான பிரகடனங்களையும் நாம் கண்டு கொள்ள முடியும். இங்கு வெளியக சுயநிர்ணய உரிமையென்பது ஒரு மக்கள் சமூகமானது தனது அரசியல் தலைவிதியைத் தானே நிர்ணயித்துக் கொள்ளுமுகமாகப் பிரிந்து சென்று தனது அரசை நிறுவிக் கொள்ளுதல் என்பதாகும்.

அவ்வாறு ஓர் அரசைத் தமிழ்த் தேசியம் நிறுவ முற்படுகையில் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியப் பிரதேசம் என்று பிரகடனப்படுத்துகின்ற வடக்கு-கிழக்கு இணைந்த நிலப்பிரதேசத்தில் கிழக்கின் புவியியல் அமைவிடம் தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் பரவலாகவும், செறிவாகவும் வாழும் சூழ்நிலை காணப்படுகின்றது.

எனவே இங்கு தமிழ்த் தேசியத்தின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையின் அடிப்படை சார்ந்து கட்டமைக்கப்படும்(எதிர்காலத்தில் கட்டமைக்கப்படுமாயின்) தமிழ் அரச நிறுவனமானது எவ்வாறு முஸ்லீம், சிங்கள மக்களின் அரசியல் இருப்புக்களையும், எதிர்பார்ப்புக்களையும் எத்தகைய சவால்களுக்கூடாக கையாள முனையும் என்பதிலேயே தமிழ்த் தேசத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் தீர்மானகரமாக வெளிப்படுத்தப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இந்கு உள்ளக, வெளியக சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைகளை தமிழ்த் தேசத்துக்குள் வாழும் சிறுபான்மை இனங்களுக்கு வழங்குவதில் எவ்வாறான அணுகுமுறையைப் பிரயோகித்தல் என்ற மாபெரும் கேள்வி எம் முன்னே கிளர்ந்தெழுகின்றது.

இவ்வாறான சிறுபான்மை இனங்களின் நியாமான அபிலாசைகளை அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையில் கையாள மறுத்து நிற்கும் போக்கே ஏற்கனவே கட்டப்பட்ட தேசங்களிலும், தேசியங்களிலும் பல்வேறு வகையான குழப்பகரமான நிலைகளுக்குத் தோற்றுவாய்களாய் அமைந்தன. தேசங்களின் கட்டமைவானது உலகப் போர்களாகவும், இனங்களுக்கிடையேயான வன்முறைக் களங்களாவும் மாறுண்ட போது மனிதநேயம், மானுடம் போன்றவை தூக்கி வீசியெறியப்பட்டன.

தேசங்கள் உடைகின்றன. எல்லைகள் இல்லாத, கடவுச் சீட்டுக்களின் தேவையேற்படாத ஒரு உலகம் குறித்த கனவுகள் பிறக்கின்றன.

எனவேதான் அமைய முற்படும் “தமிழ்த் தேசமும்” தமிழ் வெறியும், இன்னும் பல “வெறிகளும்” கொண்ட தேசமாக மாறி விடக் கூடாது.

No comments: