Wednesday, September 27, 2006

“கைதுகள்”

-நடராஜா முரளிதரன்-

நான்கு வாரங்களுக்கு முன்பாக அமெரிக்காவில் ஆயுதக் கொள்வனவு முயற்சியில் ஈடுபட்டார்கள் என்று கூறியும், அதற்குத் துணை போனார்கள் என்று கூறியும் கனடாவிலும், அமெரிக்காவிலும் சில தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

அதையடுத்து கனடிய, அமெரிக்க பிரதான தகவல் தொடர்பு ஊடக சாதனங்கள் அது தொடர்பாக “சுவாரசியத்தோடு” கூடிய பல்வேறு செய்திகளை “விறுவிறுப்பாக” வாசகர்களுக்கு உடன் வழங்கியிருந்ததை எம்மில் யாரும் மறந்திருக்க முடியாது.

அச் சமயத்தில் கனடாவில் வாழும் தமிழர்கள் யாவரும் தமிழர்கள் அல்லாதோரால் பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்படுகிறார்கள், நோக்கப்படுகிறார்கள் என்பதாகவும், இந் நிலைக்கு வேறு யாரும் காரணம் அல்ல தமிழர் தரப்பு மட்டுமே காரணம் என்பது போலவும் அப்பாவித்தனமாகப் பத்திரிகைப் பத்திகள் எழுதப்பட்டமையை உங்களில் பலர் வாசித்திருக்கலாம்.

பலம் வாய்ந்த அரச முகவர்களின் அறிக்கைகள், பெரு முதலாளித்துவ ஊடக சாதனங்களின் பரப்புரைகளையெல்லாம் எவ்வித மறுதலிப்பும், விமர்சனமும் இன்றி உள்வாங்கிக் கொள்ளுங்கள் என்பதனை மறைமுகமாக வலியுறுத்துவது போலவும், அதை மீறுவுதும், கருத்துக் கூறுவதும் ஜனநாயக நெறிமுறை, விழுமியங்களுக்குள் அடங்கியிருந்த போதிலும் அவ்வாறு நடந்து கொள்வீர்களெனில் ஊடக அதர்மம் ஆகி விடும் என்பது போன்ற கருத்துக்களும் அப் பத்திகளின் வரிகளுக்கு இடையில் சொருகப்பட்டிருந்தன.

இவற்றையெல்லாம் நான் வாசித்துக் கொண்ட போது பழைய சில நினைவுகள் மீண்டு என் மூளையைக் குடைய ஆரம்பித்தது.
சுவிசில் 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் தேதி சுவிஸ் பொலீசாரால் நான் கைது செய்யப்பட்ட வேளைகளில் இடம்பெற்ற சில நிகழ்வுகளைப் இங்கே பகிர்ந்து கொள்வது எனக்குப் பொருத்தமாகப்படுகின்றது.

நான் கைது செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பாக அப்போதைய இலங்கை அரசின் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் சுவிசுக்கு விஜயம் செய்திருந்தார். அவர் தனிப்பட்ட முறையில் சுவிசுக்கு வந்திருக்கவில்லை. அன்றைய அவரது பயணம் இலங்கை அரசின் முக்கிய எதிர்பார்ப்பொன்றினை நிறைவேற்றும் பொறுப்புடன் கூடிய அரச பயணமாகவே அமைந்திருந்தது.

சுவிசில் தமிழ் அகதிகளின் அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர்கள் திருப்பி அனுப்பப்பட முற்படுகிற வேளைகளில் எல்லாம் அவர்களுக்கான கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதில் சுவிஸ் அரச அதிகாரிகளுக்கு பெரிய அளவில் நடைமுறைச் சங்கடங்கள்;, சிக்கல்கள் ஏற்படுவது வழக்கம். அதன் காரணமாக அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தலை எதிர்பார்த்துக் காத்திருந்த பல தமிழ் அகதிகள் தப்பிப்பிழைத்த வரலாறும் உண்டு.

ஆயினும் சுவிஸ் அரசின் அகதிகள் தொடர்பான கொள்கை எந்தக் காலத்திலுமே அகதிகள் அங்கு தொடர்ந்து வாழ்வதற்கான இயல்பு நிலையில் பதட்டத்தை, அச்ச உணர்வைத் தோற்றுவிக்கும் வகையிலானது எனலாம். எனவே அச் சூழலைப் பயன்படுத்திக் கதிர்காமர் சுவிஸ் அரசோடு பேரம் பேசியதன் பயன்பாடாகவே நான் சார்ந்த அமைப்புpன் மீதும், அந்த அமைப்பின் பொறுப்பாளர் என்ற வகையில் என் மீதும் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இலங்கை அரசு எம் மீது குறி வைப்பதற்கான எடுகோள் அங்கு பாரிய அளவில் எம்மால் திரட்டப்பட்ட நிதியின் அளவால் நிர்ணயமானதாகும். ஆனால் எம் மீது சுவிஸ் காவல் துறையினர் இவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னதாக அதற்கு வாய்ப்பான வகையில் சாதகமான பொது ஜன அபிப்பிராயத்தை நிறுவுவதற்கான தளத்தை உருவாக்கும் நோக்கோடு திட்டமிட்ட வகையில் என் மீதும், நான் சார்ந்த அமைப்பின் மீதும் தகவல் தொடர்பு சாதனங்களுக்கூடாக உண்மையைக் குழி தோண்டிப் புதைக்கும் வகையிலான பொய்யான பரப்புரைகள் நிகழ்த்தப்பட்டன.

அரசுகளும், ஆதிபத்தியத்தை கொண்ட அதிகார மையங்களும் தங்களது நலன்களுக்காக இவ்வாறான சித்து விளையாட்டுக்களை அரங்கேற்றுவது வரலாற்றுத் தொடர் நாடகக் காட்சிகளாகும்.

எனது எட்டுமாத சிறைவாசத்தின் பின் இறுதியில் எம் மீதான வழக்குகள் யாவும் தோற்கடிக்கப்பட்டு, பல வருடங்களின் பின் எமக்கான நட்ட ஈட்டுத் தொகைகளும் வழங்கப்பட்டன. இதை உணர்த்தும் சம்பவங்களில் ஒன்றாக சில தினங்களுக்கு முன்பாக சிரிய நாட்டைச் சேர்ந்தவரும் பின்பு கனடியப் பிரஜையாக ஆகிக் கொண்டவருமான “அரார்” அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக நீதிபதி டெனிஸ் ஓ’கார்னர் ஆர்.சி.எம்.பியினர் மீது அத்துமீறல்கள் நிகழ்ந்ததற்கான பொறுப்புக்களைச் சுமத்தி நீண்ட அறிக்கையொன்றினை வெளிப்படுத்திய சூழ்நிலையில் கனடியப் பாராளுமன்றமும் “அரார்” நடத்தப்பட்ட விதம் குறித்து ஏகமனதாக மன்னிப்புக் கோரியுள்ளதை நாம் நோக்க வேண்டும்.

ஒட்டாவாவை வசிப்பிடமாகக் கொண்ட இரு பிள்ளைகளுக்குத் தந்தையான “அரார்” என்ற கணணி பொறியியலாளர் 2001, செப்ரெம்பர் 11 அமெரிக்கத் தாக்குதலின் பின் மொரோக்கோவுக்கு விடுமுறைக்காகச் சென்றிருந்த நிலையில் பின் அமெரிக்கா ஊடாக கனடா திரும்பவிருந்த வேளையில் நியூயோர்க்கிலிருந்து சிரியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு அங்கு இரு வருடங்கள் வரையில் சிறையில் வைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டிருந்தார். அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட வேளைகளில் கனடிய அமைப்புக்கள் அமெரிக்க அரசுக்கு வழங்கிய தகவல்கள் குறித்த விடயங்களே மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகியிருந்தன.

1998 இல் அமைதியான வாழ்வு தேடி நான் எனது மனைவியோடும், எனது நான்கு பிள்ளைகளோடும் இணைவதற்காக கனடா வந்த போது 40 நாட்களின் பின் கனடிய காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட போதும், அதற்குப் பின்னரும் இங்குள்ள தகவல் தொடர்பு ஊடக சாதனங்களால் “பயங்கரவாதியாகவே” சித்தரிக்கப்பட்டு வந்துள்ளேன். இன்றும் கூட “அகதி அந்தஸ்து” மறுக்கப்பட்ட சூழ்நிலையிலேதான் நானும், எனது குடும்பமும் நாடுகடத்தல் உத்தரவை எதிர்கொண்டு “இமிக்கிரேசனும்”, கோர்ட்டுமாக அலைந்து வருகிறோம்.

ஒரு பத்திரிகையாளர் “ நான் கனடா வரும் பொழுது கொண்டு வந்த கொலைப் பட்டியலில் தனது பெயர் மூன்றாவதாக உள்ளதென காவல் துறையினர் தன்னிடம் கூறியதாக” என்னிடம் கூறினார். ஆனால் உண்மை நிலை என்ன? அது முற்றிலும் மாறுபட்டதாகவே உள்ளது.
இவ்வாறே கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களும் நீதிமன்றில் குற்றவாளிகளாகத் தீர்மானிக்கப்படும் கணங்கள் வரை அவர்கள் “சந்தேக நபர்கள்” மாத்திரமே. எனவே இவ்வாறான கைதுகளால் “தமிழ் மாணவர்களின் எதிர்காலமே பாழ்பட்டு விடுவதாக” ஓலம் போடுவது செய்தி மிகைப்படுத்தலாக அமைந்து விடும். அண்மைய செய்திகளின் படி அவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர்களில் பலர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் அறிகிறேன். அந்தச் செய்திகளையும் கூட தமிழ் ஊடகங்கள் எந்தளவு வெளியிட்டுள்ளன என்பது குறித்து எந்தத் தரவுகளும் என்னிடம் இல்லை.

கடந்த வாரம் துப்பாக்கி ஏந்திய இளைஞர் ஒருவர் மொன்றியலிலே “வெறியாட்டம்” போட்டுள்ளார். அதற்காக அவர் சார்ந்த சமூகத்தை சாட முடியுமா?

பத்திரிகைகளுக்கு “பரபரப்புச் செய்திகள்” விற்பனைக்கு அவசியமாகின்றன. அவை சமூகத்தில் மாறுபட்ட விளைச்சலை ஏற்படுத்துமாக அமையின் அதை எதிர்த்துப் போராடுவதுதான் எழுத்தாளனின் தர்மம்.

Tuesday, September 12, 2006

“கண்ணகி சிலை”
எஸ்.வி.ராஜதுரையும், ஞாநியும்

-நடராஜா முரளிதரன-

தமிழகத்தில் அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் இரண்டாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு நிறுவப்பட்ட கண்ணகி சிலை கடந்த ஜெயலலிதா அரசின் ஆட்சிக்காலத்தில் அப்புறப்படுத்தப்பட்டமை தொடர்பான செய்திகள் தமிழக ஊடகங்களால் அன்று பரபரப்பாகப் பேசப்பட்டவை.

பின்னர் இன்றைய கலைஞர் ஆட்சியில் மீண்டும் கண்ணகி சிலை நாட்டப்பட்ட போது அதே “பரபரப்பு” எழுந்து பல்வேறு வகை விவாதக் களங்களுக்கு வழிசமைத்துக் கொடுத்தது. அந்தக் களங்களின் வெளிப்பாடு உச்சத்தில் இருந்த அத் தருணங்களில் அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பாகக் கண்ணகி சிலை பற்றி “ஆனந்த விகடன்” வார இதழில் ஞாநி எழுதிய கட்டுரை சர்ச்சைக்குள்ளானதால் “ஆனந்த விகடன்” வார இதழ்கள் எரியூட்டப்பட்டன.

இதன் எதிர்வினையாக யூன் மாத 16-30, 2006 “புதிய பார்வை” மாதமிருமுறை இதழில் ஞாநி “தமிழ் பெண்களை கண்ணகியை பின்பற்றச் சொல்கிறதா கலைஞர் அரசு? என்ற தலைப்பில் மேலும் கலைஞர் மீது விமர்சனக் கணைகளை வீசி எறிந்திருந்தார்.

சில தினங்களுக்கு முன் எஸ்.வி.ராஜதுரை அவர்களின் “ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள்” கட்டுரைத் தொகுப்பினை வாசித்துக் கொண்டிருந்த போது “அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்” என்ற 5-1-2002 தினமணி நாளிதழில் பிரசுரமான அவரின் கட்டுரையும் அதில் உள்ளடங்கியிருந்தது. அக் கட்டுரை ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் “கண்ணகி சிலை நீக்கம்” குறித்து அச் சூழலில் அன்று எஸ்.வி.ஆரினால் தினமணியில் எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரையாகும். இந்த இரு கட்டுரைகள் எவற்றைச் சுட்டுகின்றன? எத்தகைய முரண்களைக் கிளப்புகின்றன? தொடர்பாக உள் நுழையும் முயற்சியை அடிப்படையாக வைத்து அலசல் ஒன்றை இங்கு மேற்கொள்ளுவதே எனது நோக்கம்.

“கண்ணகி என்ற பாத்திரம், இரத்தமும் சதையுமாய்த் திரிந்த ஒரு குறிப்பிட்ட மெய்யான பெண்மணி என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் ஏதுமில்லாமலிருக்கலாம். ஆனால் தமிழ் பண்பாட்டு வரலாற்றில் நீண்ட நெடுங்காலமாகவே இடம் பெற்றுள்ள பாத்திரமே “கண்ணகி” என்பதுதான் முக்கியமானது. மார்பகமொன்றைக் கிள்ளியெறிந்த கண்ணகியை “சிலப்பதிகாரம்” மட்டுமல்ல, “நற்றிணை”யும் குறிப்பிடுகிறது. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, கொடுமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் பெண்ணின் உருவகமாகவே “கண்ணகி” பார்க்கப்படுகிறாள். அநீதியை எதிர்த்துப் போராடுவதற்காகத் தனது மகப்பேறை, “தாய்மை”யைக் கூட இழக்கத் துணிபவளே அவள் என்பதைக் குறிப்பதுதான் மார்பகத்தைக் கிள்ளியெறிதல் என்பதாகும். சிலப்பதிகாரத்திலும் கூட “கண்ணகி”யின் “கற்பை” விவாதத்திற்குட்படுத்தும் நிகழ்வுகள் ஏதுமில்லை.” என்ற மையக்கருவை வலியுறுத்தும் வகையிலே எஸ்.வி.ஆரின் கட்டுரை அமைகிறது. மறுபுறத்தில் ஞாநி “புதிய பார்வை”யில் எழுப்பும் கேள்விகள்.

1) வேறு பெண்ணை நாடிப் போய் விட்டு, தன்னைப் பத்தாண்டுகளுக்கு மேலாகப் பிரிந்து வாழ்ந்த கோவலனைச் சகித்துக் கொண்டு, அவன் திரும்ப வந்ததும் ஏற்றுக் கொண்டதும், அதுவரை இன்னொரு ஆணின் துணையை நாடாமல் இருந்ததும்தான் கற்பு என்றால், அது கோவலன் போன்ற ஆண்களுக்கே வசதியான ஒரு தலைக் கற்பு. இது உண்மையா, இல்லையா?

2) அரசனுக்கு எதிராகக் கண்ணகி போராடிய விசயம், தனக்கு அநீதி செய்த கணவனுக்கு நீதி கேட்டுப் போராடிய பேதமைத்தனமா, இல்லையா? கணவனிடம் நீதிக்காகப் போராட முடியாதவள் அரசுக்கு எதிராகப் போராடிய கற்பனையெல்லோ இது.

3) கோவலனைத் தவறாகக் கொன்றதில் துளியும் சம்மந்தமில்லாத மதுரை மக்களை எரித்த கண்ணகியின் செயல், எங்கோ ஏற்பட்ட வேதனையை வேறெங்கோ வெளிப்படுத்துகிற இயலாமையா இல்லையா?

“பரந்துபட்ட மக்களால் சிக்கல் ஏதுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும் பண்பாட்டு விழுமியங்களை அந்த மக்களின் கூட்டு நினைவுகளிலிருந்து பிரித்தெடுக்க, பிய்த்தெடுக்க முனைபவர்கள் தற்காலிக வெற்றிகளை அவ்வப்போது பெறக் கூடும். எனினும் மானுட நாகரீகத்தின் வரலாறு அவர்களை “மூர்க்கர்கள்” என்றே பதிவு செய்து வந்துள்ளது.” என்ற எஸ்.வி.ஆரின் கூற்று மக்களினங்களின் வரலாறும், வாழ்வியலும் இலகுவில் பண்பாட்டு அடையாளங்களை இழப்பதற்கான தயார் நிலையில் இருப்பதில்லை. அவை மதிக்கப்படல் வேண்டும் என்ற மனித உரிமைகளுக்கான சாராம்சத்தைக் கோரி நிற்கிறது.

மாறாக ஞாநியோ “காட்டிலும் கழனியிலும் காலம், காலமாக உழைக்கும் தமிழ் பெண்களின் பிரதிநிதியா கண்ணகி? அவள் வண்ணச் சீரடியை மண்மகள் கண்டிலள் என்கிறது காப்பியம். அவள் உழைக்கும் பெண்ணல்ல. உழைக்கும் பெண்கள் சார்பாகப் போராடியவளுமல்ல. மதுரையைத் தீக்கிரையாக்கிய போது, பார்ப்பனரையும், பசுவையும் தீண்டாதே என்று தீக்கு உத்தரவிட்ட “இந்துத்துவக் குரல்” அவளுடையது. இந்தப் பண்பாட்டை தமிழர் பண்பாட்டின் அடையாளம் என்று நாங்கள் ஏன் ஏற்க வேண்டும்?” என்று குமுறுகிறார்.

“தி.மு.கவின் சொல்லாடல்களில் உள்ள “கற்பு”, “மானம்”, சிலப்பதிகாரம் குறித்த அதன் விளக்கங்கள் முதலியன விவாவதத்திற்குரியவை. எனினும் சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பொதுவான தமிழ் அடையாளத்தை உருவாக்குவதற்கு அக் கட்சி – குறிப்பாக அண்ணா – அன்று மேற்கொண்ட முயற்சியின் வெளிப்பாடாகவே அதன் ஒரு பகுதியாக கண்ணகி சிலை நிறுவியமை அமைந்தது. அதற்கு தமிழ் நாட்டு மக்களின் ஒப்புதலும் இருந்தது. அதனை ஒரே இரவில் துடைத்தெறிவது கொடூரமான மனித உரிமை மீறலாகும்” என்று எஸ்.வி.ஆர் தனது கட்டுரையில் சொல்லுகிறார்.

“கண்ணகி சிலை தமிழர் பண்பாட்டின் அடையாளம் என்று தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகிறது.” என்ற ஞாநியின் கூற்றையும், “ஆணாதிக்க, தந்தை வழிச் சமுதாய அமைப்பு விழுமியமான “கற்பு” என்பது சுமத்தப்பட்ட படிமமாக அல்லாமல் அநீதிக்கு எதிராகக் குரலெழுப்பும் சாமானியக் குடிமகளின் படிமமாகக் கண்ணகி உருவகிக்கப்பட்டிருப்பது தமிழ் மரபுகளின் சிறப்புக்களில் ஒன்றாகும்.” என்ற எஸ்.வி.ஆரின் வாதமும் எங்களது சிந்தைகளை ஆழக் கிழறுபவை.

வரலாற்று நிகழ்வுகளை, சமூகங்களின் கூட்டுக் கற்பனையில் ஆழ வேரோடி நிற்கும் உணர்வுப் பிரவாகங்களையெல்லாம் “பண்பாட்டுப் புரட்சி” போன்ற சுலோகங்களின் பெயரால் மறுதலிக்க முற்படுவது மக்களினங்களை மாபெரும் துயரங்களுக்கும், சோகங்களுக்கும் இட்டுச் சென்ற வரலாறு நம் கண் முன்னே விரிந்து கிடக்கிறது.

ஞாநி எம்மையெல்லாம் அந்தச் “சுத்தப்படுத்தல்களுக்கு” தயாராகுமாறு விரட்டுகிறார் போல் தென்படுகிறது எனக்கு.

Friday, September 01, 2006

கற்றுக் கொள்ள.....

-நடராஜா முரளிதரன்-

அமெரிக்கக் கண்டமெங்கணும் ஆங்கிலமும், ஸ்பானிசும், போர்த்துக்கீசும் (பிரேசில் நாட்டில் மட்டும்) பேசு மொழிகளாகக் கோலோச்சுவதை இன்று காணுகின்றோம். ஐரோப்பியர்கள் அமெரிக்க மண்ணில் காலடி வைப்பதற்கு முன்பாகவே இந்த நீண்ட பெரு தொடர் நிலப்பரப்பிலே பல்வேறு மொழிகளைப் பேசிய பல தரப்பட்ட கலாச்சார, பண்பாட்டு வாழ்க்கை அமைவுகளை வரித்துக் கொண்ட “மண்ணின் மைந்தர்கள்” திட்டுத், திட்டாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.

ஆயினும் அசுர பலம் படைத்த ஆக்கிரமிப்பாளர்கள், குடியேற்றவாதிகள் முன்னே தனித்துவம் வாய்ந்த தொன்மை கொண்ட அக் குடிகளின் வன்மம் அடக்கப்பட்டு, முறியடிக்கப்பட்ட வரலாறே எம் கண் முன் விரிந்து கிடக்கிறது. அந்த முறியடிக்கப்பட்ட மாந்தர்களின் மனக் குமுறல்களை, ஆதங்கங்களை வரலாற்றின் புதைகுழிகளிலிருந்து மீட்டெடுப்பதில், மறு வாசிப்புக்குள்ளாக்குவதில் எங்களில் அநேகருக்கு ஈடுபாடு இருக்கப் போவதில்லை.

ஆனாலும் கடந்த சனிக்கிழமை ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் நடைபெற்ற கருத்தரங்கமொன்றில் அந்தப் பழங்குடிகளின் சந்ததி வழி வந்த பெண் மனித உரிமைவாதியொருவர் அந்த மக்களின் உரிமைகள் குறித்ததோடல்லாமல் அதற்க்கும் மேலாக அந்த மக்களினங்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கான ஏக்கங்களைப் பிரதிபலித்த போது அந்த உணர்வுகள் நெஞ்சைப் பிழிந்தமையை என்னால் வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.

இந்தத் தளத்திலே உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பிய பழங்குடி மக்களது போராட்ட வாழ்வுக் களங்களில் கனடாவிற்கு மிகவும் அண்மையில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான மெக்சிக்கோவின் “சியாப்பாஸ்” பிரதேசத்தில் வாழ்ந்து வரும் பழங்குடி மாயன் இந்தியர்களின் துயரம் தோய்ந்த வரலாற்றுச் சுவடுகள் ஆழ்ந்து பரிசீலிக்கப்பட வேண்டியவை என்பதை அண்மையில் நான் வாசித்துக் கொண்டிருந்த விடியல் பதிப்பகம் பிரசுரித்த “எதிர்ப்பும் எழுத்தும்- துணைத் தளபதி மார்க்கோஸ்”(தமிழில் மொழிபெயர்ப்பு: எஸ்.பாலச்சந்திரன்) என்ற நூல் எனக்கு உணர்த்தியது.

இந்த நூலின் 36வது அத்தியாயத்தில் “சியாப்பாஸ் பழங்குடிகளின் போராட்டத் தலைவர்களில் மிக முக்கியமானவர் என்று கருதப்படும் துணைத் தளபதி மார்க்கோஸ் காடுகளில் ஒழிந்தவாறான 17 ஆண்டு கால போராட்டத் தலைமறைவு வாழ்க்கையின் பின் 2001ஆம் ஆண்டு மார்ச் மாத நடுக் கூறில் மெக்சிக்கோ அதிபரின் அழைப்பையேற்றுப் பெருமளவு மக்கள் நிறைந்த மாபெரும் பேரணியொன்றை வழிநடத்திப் பல நூறு மைல்கள் கடந்து மெக்சிக்கோ நகரத் திடலை வந்தடைவதும், அச் சமயத்தில் தங்களது குறிக்கோளை வென்றெடுப்பதற்கான அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக “காம்பியோ” என்ற பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியும் கூறப்பட்டுள்ளது.” அரசியல் வன்முறைகள் உச்சம் பெற்றிருக்கும் முரண்பாட்டுக் களத்தில் ஒடுக்கப்பட்ட மக்களது தளைகளை அறுப்பதற்காக அமைதியைப் பேணிக்கொண்டு அடக்குமுறையாளனோடு தீர்வுக்காகப் பேசப் புறப்படுவது குறித்த வளர்ச்சிப் போக்கினை துணைத் தளபதி “மார்க்கோஸ்” எவ்வாறான அரசியல் பார்வையூடு அளவிடுகிறார் அல்லது அளவிட முனைந்தார் என்பது குறித்து இங்கு உரையாடவிழைவதே எனது நோக்கமாகும்.

காம்பியோ பத்திரிகைப் பேட்டியின் போது “ இனவெறிக்கு நிச்சயமாக ஏற்படப் போகின்ற தோல்வியைப் பற்றிய கருத்தானது அரசுக் கொள்கையின் பிரச்சினை, கல்விப் பிரச்சினை, மெக்சிக்கோ சமூகம் முழுவதினுடைய பிரச்சினை. இந்தப் பிரச்சினைக்கான தீர்வை நாங்கள் மிகவும் நெருங்கி விட்டோம்;, எனினும் இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது.

போர் வீரர்களான நாங்கள் கூறுவதைப் போல, போரில் வெற்றி கிடைத்திருக்கலாம். ஆனால் இன்னும் சில யுத்தங்களைப் புரிய வேண்டியிருக்கிறது. சமூகத்துடன் எங்களைப் பிணைப்பது இராணுவரீதியான எங்களது வலிமை அல்ல என்பதாலும், நல்ல விளைவுகளைத் தரப்போவது அமைதி வழியிலான போராட்டமே என்று நாங்கள் உறுதியாக நம்புவதாலும், எங்களுடைய ஆயுதங்களை நாங்கள் கீழே போட வேன்டும் என்பதே மார்ச் 11ம் தேதி எங்களுக்கு உணர்த்தும் செய்தி என்று நான் நினைக்கிறேன்.

மெக்சிக்கோ அரசு மட்டும்தான் இதைப் புரிந்து கொள்ளவில்லை.” என்று “மார்க்கோஸ்” கூறுகின்ற வார்த்தைகளானது சொல்லும் தீர்மானகரமான அரசியல் செய்தி என்ன என்பது பற்றிய புரிதலிலேதான் மக்களின் சுதந்திரம், அமைதியான வாழ்வு பிறப்பெடுத்தல் சாத்தியமாகும்.

மேலும் இன்னுமொரு பதிலில் “ஒரு படை என்ற விதத்தில் அது மறைந்து போய் விட வேண்டும். இராணுவத் தன்மை கொண்ட ஒருவனாக – ஒரு படை வீரனாக – வாழ்வது ஓர் அபத்தமாகும். ஏனென்றால், ஒருவன் தனது கருத்துக்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று மற்றவர்களை வற்புறுத்தி ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு, ஆயுதங்களையே எப்போதும் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இந்த அர்த்தத்தில், எங்களுடைய படை இராணுவத் தன்மையைக் கொண்டிருக்குமானால், அதற்கு எதிர்காலம் என்பதே கிடையாது. எமது தேசிய விடுதலைப் படை ஓர் இராணுவரீதியான அமைப்பாகவே தொடர்ந்து நீடிக்குமானால், அது தோல்வியடையப்போவது உறுதி. உலகத்தைப் பற்றிய ஒரு நிலைப்பாடு என்ற முறையில், ஒரு கருத்தியல் ரீதியான தேர்வு என்ற முறையில், அது நிச்சயமாகத் தோல்வியடையும். அது அதிகாரத்தைக் கைப்பற்றித், தன்னை புரட்சிகரமான இராணுவம் என்ற பெயரில் நிலை நிறுத்திக் கொள்ள முயலுமானால், அது இந்தத் தோல்வியை விட மோசமானதாயிருக்கும். தேசிய விடுதலை இயக்கங்களாக உருவான, 60- களையும் 70- களையும் சேர்ந்த அரசியல்- இராணுவ அமைப்புக்களினால் வெற்றி என்று கருதப்பட்டது எதுவோ, அது எங்களால் தோல்வியென்று கருதப்படுகின்றது.” என்றும் கூறுகின்றார்.

இங்கு துணைத் தளபதி “மார்க்கோஸ்” வியாக்கியானம் செய்யும் தத்துவார்த்தச் சிந்தனை முறைமைகள் இலத்தீன் அமெரிக்கச் சூழலில் மாத்திரமே பொருத்திப் பார்க்க முடிந்த நிகழ்வுகளா? அல்லது உலகளாவிய விரிந்த சமூகப் பரப்பில் மீள் வாசிப்புக்குரிய விடயங்களா?

சமூகத்திலே மேலே இருந்தவாறு அதிகாரம் செலுத்துகிற சூழல் புரட்சியை வெற்றி கொண்டவர்களுக்குக் கிடைத்தபோது சமூகத்திற்கான நன்மை, தீமைகளை அக் குழுவே தீர்மானிக்கும் பொழுது உலகத்தையோ, சமூகத்தையோ மாற்றியமைத்துவிட முடியாது என்பதாகவே “மார்க்கோஸ்” தனது வாதத்தை நிகழ்த்துகிறார்.

ஒரு புறத்தில் ஆயுதங்களை ஏந்தாமல் அணிதிரள்வது ஒரு விதத்தில் நிம்மதி அளிக்கும் செயல்பாடாக மாறிவிடுகிறது என்று அவர் சொல்வது இராணுவச் சொல்லாடல்கள் குறித்த அவரது விமர்சனப் பார்வை இவற்றிலிருந்து ஏதாவது நாம் கற்றுக் கொள்ள முடியுமா?