Monday, July 13, 2009

அலைதலின் பின்னான குற்றச்சாட்டு
-நடராஜா முரளிதரன்-



எனது இருப்புக்கான
ஒரு கூடு தேடி
அலைதலில்
எத்தனை புனைவுகளை
இழிபேச்சுக்களை
ஒப்புதல் வாக்குமூலங்களை
கழுத்தை நெரித்த
மாலைசூடல்களை
இன்னும் என்னென்னவோ
எல்லாவற்றையும்
நான் காவிச் செல்லுகின்றேன்

நீயோ
எனைப் பார்த்து
எக்காளமிட்டுச் சிரிக்கின்றாய்
ஏனெனில்
மாட்சிமை தங்கிய
மகாராணிக்குப்
பிரியமானதைப்
படைத்துவிட்ட
குதூகலிப்பு உனக்கு

நான் அன்று
விட்டுப் புறப்பட்ட
கூடு
இன்றும்
சிறைப்பட்டே
சிதைந்து
போய்க் கிடக்கின்றது

இறக்கைகளை விரித்து
ஏகாந்தத்தைக் கிழித்து
மேலெழும்
என் அவா
என் நண்பர்களாலேயே
கேள்விக்கு
உட்படுத்தப்படுகின்றது

கோசங்களை ஓங்கியுரைத்து
உணர்ச்சிகளுக்குள்
உட்புகுந்து மறைவதில்தான்
எனது மக்கள்
எவ்வளவு
பிரியமாயிருக்கின்றார்கள்

இவற்றையெல்லாம்
போட்டுடைத்துப்
புதியவைகளை
நான் கூறப்
புறப்படுகையில்
காதுகளை அவர்கள்
அறைந்து மூடுகிறார்கள்

நான்
உரையாற்றுவதற்கெனத்
தயார்படுத்தப்பட்ட
மேடை குப்புறக்
கவிழ்க்கப்படுகின்றது
ஒலிவாங்கிகள்
பறித்தெடுக்கப்படுகின்றது
காற்று
எனது கருத்துக்களை
பறித்துச் செல்கிறது

முதுகுப் பின்னால்
இருந்து இன்னுமொருவர்
நீயும்
முன்னொரு காலத்திலே
இத்தகைய அடாவடித்தனங்களில்
ஈடுபட்டதாகக்
குற்றச்சாட்டு உள்ளதே
என்று குசுகுசுக்கின்றார்

சிவம்; மானுடத்தின் மீது காதல் கொண்ட மகத்தான மனிதர்

-நடராஜா முரளிதரன்-

என்னோடு கடந்த வாரம் சனிக்கிழமை இரவு ஏறத்தாள ஒன்றரை மணிநேரம் “சென்ற்.ஜோர்ஜ்” சப்வேக்கு அருகாமையில் இருந்த “ரொறன்ரோ” பல்கலைக்கழக மண்டபத்திலே நடைபெற்ற கூட்டத்தை முடித்துக் கொண்டு “ஸ்காபுரோ ரவுண்சென்ரர்” கார்த்தரிப்பிடம் வரை நடந்து கொண்டும், “சப்வேயிலே” பயணித்தபடியும் உரையாடிக்கொண்டே வந்த “சிவம்” என்ற கலை, இலக்கிய நண்பர் அதற்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை உயிர் பிரிந்திருக்கின்றார். பத்து வருடங்களுக்கு முன்னரே நான் அவரைக் கண்டிருக்கின்றேன். அப்போது அவர் பெயர் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆயினும் கரககரத்த அவர் “குரல் ஒலி” அவரை மற்றையோரிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்ற அடையாளமாக ஒலித்ததை என்னால் இன்னும் ஞாபகப்படுத்திக் கொள்ள முடிகிறது. அந்த நிகழ்வு ஏதோ ஓர் நூல் தொடர்பான “விமர்சனக் கூட்டத்தில்” ஏற்பட்ட சந்திப்பு என நினைக்கின்றேன். அன்று நான் அவரோடு அதிகம் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் கடந்த மூன்று வருடங்களாக அவரை அவ்வப்போது அடிக்கடி சந்திக்கும்படியான வாய்ப்புக்கள் ஏற்பட்ட வண்ணமேயிருந்தது. அவையெல்லாம் “இலக்கியச் சந்திப்புக்களாகவோ”, “நூல் வெளியீட்டு விழாக்களாகவோ”, “படைப்பிலக்கிய விமர்சனக் கூட்டங்களாகவோ” அல்லது இலங்;கையின் இனப்பிரச்சினை தொடர்பான “கருத்தரங்கங்களாகவோ” இருந்தன. அவற்றில் சில எனது வீட்டிலே கூட நடைபெற்றன. அந்தச் சந்திப்புக்களின் போதெல்லாம் அவர் என்னை நோக்கி வந்து “உரையாடலை” ஆரம்பிப்பது வழக்கமாயிருந்தது. அவர் என்னை நோக்கி, நோக்கியே வந்து கொண்டிருந்தார் என்பதே பொருத்தமான சொற்றொடர்.

முழுக்க முழுக்க இடதுசாரிச் சிந்தனைகளோடு பொதுவாழ்வுக்குள் பிரவேசித்த மனிதர் சிவம். தொழிலாளர்கள் தலைமையிலான “வர்க்கப் போராட்டத்தை” முன்னெடுத்து அதனை வெற்றிகொள்ளச் செய்வதன் மூலம் மனித சமூகத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் ஓரளவு வெற்றி கொள்ள முடியும் என்ற “பொதுவுடமைச் சித்தாந்தத்தின்” அடித்தளத்தில் வேரூன்றியிருந்த நம்பிக்கையின் பாற்பட்டது அது. “இடதுசாரிச் சிந்தனைகள்” பரந்தும், “தேசிய இன ஒடுக்குமுறைக்கு” எதிரான உணர்வுகள் மேலோங்கியும் ஒருங்கிணைந்த நிலையில் அரசியலுக்குள் உந்தப்பட்டவன் நான். இன ஒடுக்குமுறையின் கொடூரத்தால் பாதிக்கப்பட்டு அரசியலுக்குள் ஈர்க்கப்பட்ட பலரை “இடதுசாரிக் கருத்தியல்கள்” ஆகர்சித்திருக்கின்றன. அண்மைக்கால உலக வரலாறுகள் எங்கணும் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களது விடிவு குறித்துப் பிரக்ஞை கொள்ளவோ, போராடவோ புறப்படுகின்ற வேளைகளில் பல்வேறு காரணங்களை முன்வைத்துப் பொதுவுடமைக் கோட்பாடுகளைப் புறந்தள்ள முடியாத அக, புறச்சூழ்நிலகள் அவர்களுக்கு ஏற்பட்டுவிடுகின்றன. அந்த வகையில் இங்கு என்னை விடப் பத்து வருடங்களுக்கு முன்னால் பிறந்திருந்த சிவம் அவர்கள் இளவயதிலேயே “சமதர்மக் கருத்துக்களால்” ஈர்க்கப்பட்டு அன்று அவர் வாழ்ந்த யாழ்ப்பாணச் சமூகத்தில் நிலவிய சாதீய அடக்குமுறைகளுக்கு எதிரான “சமூகப் போராளியாகப்” பொதுவுடமைக் கட்சியொன்றின் பின்னணியோடு முகிழ்த்தெழுகின்றார்.

1949களில் இந்திய-பாகிஸ்தானியப் பிரஜாவுரிமைச் சட்டம் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் 1960 களில் “தமிழ்த் தேசியம்” மிகவும் வலுப்படைத்ததாக மாறுகின்ற தருணங்களிலேயும் தமிழ் பேசும் மக்களிடையே தம்மின மக்கள் என்று கூறிகொள்வோரிடையே ஒரு சாரார் பிறிதோர் சாராரை மனிதநேயத்திற்கு அப்பாற்பட்ட வகையில் சாதியின் பேரால் இழிநிலைக்கு உள்ளாக்குகின்ற கொடுமைகள் நிகழ்த்தப்பட்ட வண்ணமே இருந்தன. அவற்றின் கொடூரம் தற்போது தணிந்து காணப்பட்டாலும் நம்மவரிடையே சாதீயம் பல்வேறு வடிவங்களில் தொடரவே செய்கின்றன. சிவம் அவர்கள் வாழ்ந்த வடமராட்சிப் பிரதேசத்தில் சாதீய ஒடுக்குமுறைகள் உச்சம் பெற்றிருந்த காலகட்டத்திலே “தாழ்த்தப்பட்டவர்கள்” என்று கூறப்படுபவர்களுக்கு எதிராக மேல் சாதியினர் இழைத்த கொடுமைகளையெல்லாம் நேரிலேயே கண்டுகொள்ளும் வாய்ப்பு அவருக்கு இருந்திருக்கும். மற்றும் அவரது குடும்பப் பின்னணியில் பெரிய தந்தையார் பொன்.கந்தையா பொதுவுடமை இயக்கத்தின் தலைமைப்பீடத்தில் இருந்தவர். பருத்தித்துறைப் பாராளுமன்றத் தொகுதியில் பொதுவுடமைக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே தமிழர். அப்பகுதி மக்களிடையே பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த தன்னலமற்ற தியாகி அவர். எனவே இயல்பாகவே “மனிதநேயம்” கொண்ட எவரையும் பற்றியிழுக்கக் கூடிய பொதுவுடமைக் கருத்தியல் கோட்பாடுகள் சிவம் என்ற மனிதரையும் காலூன்ற வைத்திருக்கின்றது சமூக ஒடுக்குமுறைத் தளத்தில்.

ஆனாலும் 1980களில் சிறுபான்மையினரான தமிழ்பேசும் மக்களுக்கு எதிராகச் சிங்களப் பேரினவாதம் கொடுஞ் சூறாவளியாக சுழன்று சூறையாடிய வேளைகளில் சிவம் போன்ற சமதர்மப் போராளிகள் இன,மத,மொழி பேதமற்றுத் தொழிலாள வர்க்கம் தலைமை தாங்க வேண்டிய வர்க்கப் போராட்டத்திற்;கும் அப்பால் அசுரபலம் கொண்டு ஆர்ப்பரிக்கின்ற தேசிய இன ஒடுக்குமுறை குறித்துத் தீவிரமாகச் சிந்திப்பவர்களாக மாற்றம் பெறுகின்றார்கள் என்பதையே என்னால் உய்த்துணரக் கூடியதாக இருக்கின்றது. எனவே அத்தகைய தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுகின்ற தேசிய விடுதலைப் போராட்டம்; பொதுவுடமைக் கருத்தியல்கள் என்ற விழுதுகளைப் பற்றிக்கொண்டு எழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் கொண்டவர்களில் ஒருவராகவே சிவம் அவர்கள் அமைந்திருந்திருப்பார் அல்லது அமைந்துள்ளார்.

அவர் என்னை நோக்கி ஓடியோடி வந்த வேளையில் எல்லாம் குறைந்த பட்ச வேலைத்திட்டத்தின் அடிப்படையில்; மானுடத்தின் விடுதலையை நேசிக்கின்ற சக்திகளுக்கிடையில் ஓர் புரிந்துணர்வை, ஐக்கியத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்ற ஓயாத உந்துதல் அவர் மன ஆழத்தில் இருந்திருக்க வேண்டும். எனவேதான் அவர் என்னை மாத்திரமல்லாமல் இன்னும் பலரையும் நோக்கி ஓடிக்கொண்டே இருந்திருப்பார். இன்னும் சிலரை அவர் துரத்திக்கொண்டும் இருந்திருப்பதற்கான வாய்ப்புக்களைக் குறைத்து மதிப்பிடவும் முடியாமல் இருக்கின்றது. வெறுமனே தத்துவங்களை மாத்திரம் பேசிக்கொண்டிராமல் அரசியல், சமூக விடுதலைக்கான வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டுமென்று எண்ணுகின்ற நடவடிக்கையாளர்கள் வரலாற்றை முன்நோக்கி நகர்த்துவதற்கான அதீத ஆவலினால் இவ்வாறு உந்தப்பெற்று மிகச் சரியானவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அலைந்து கொண்டிருப்பார்கள். இவர்கள் தங்களை முன்னிறுத்திப் பிரபல்யம் பெறுகின்ற, இலாபம் தேடுகின்ற அரசியலுக்குள் தங்கள் மூக்கை நுழைத்துக் கொள்வதில்லை. இவர்களில் ஒருவராக “யார் குத்தியும் அரிசி ஆக வேண்டும்” என்பதால் தன் உளவியலை நிறைத்துக் கொண்டு திருப்தியடையும் மனிதராகவே சிவம் இப்போதும் என்முன் காட்சியளிக்கின்றார். சோவியத்யூனியன் சிதறுண்டு, பொதுவுடமை அரசுகள் வீழ்ந்து, செஞ்சீனத்துக்குள் திறந்த பொருளாதாரம் நுழைந்து பொதுவுடமைச் சித்தாந்தத்திற்கு என்னென்னவோ ஆகியபோதிலும், எப்படியிருந்த போழ்தும் சிவத்தின் ஆழ்மனம் அந்தச் சிந்தாந்தங்களை வலுவாக அணைத்தபடியே இருந்தது. அவை தொடர்பான விவாதங்கள் எங்கள் இருவரினதும் சம்பாசணைகளுக்குள் அகப்படாதபோதும் என்னால் அதை உறிதியாகக் கூறமுடியும். சிவம் என்ற மனிதரது வாழ்வியல் பரப்பென்பது எனது கண் நோக்கும் காட்சியெல்லைகளைக் கடந்தது. அவற்றில் நான் உற்று நோக்கும் சிறு துளிப்பிரதேசங்களைத் துல்லியப்படுத்துவதே இங்கு நான் மேற்கொள்ளும் வலிதான முயற்சி.;
கடந்த வருடம் நான் மற்றும் டானியல் ஜீவா, மெலிஞ்சிமுத்தன் ஆகிய மூவருமாக இணைந்து இலக்கியம் சார் உரையாடல்களுக்கான களத்தை இங்கு ரொறன்ரோவில் வேறோர் தளத்தில் திறப்பதற்கான முயற்சியை ஆரம்பித்திருந்தோம். பல்வேறு இலக்கிய நண்பர்கள் இலக்கியம் தொடர்பாக வௌ;வேறு வேலைத்திட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்கள் என்பதையும் இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும். இதன் முதற்கட்டமாக சில நூல்கள் குறித்த விமர்சனக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்கள் அனைத்திற்க்கும் சிவம் அவர்கள் உரிய நேரத்திற்கு வருகை தந்து விடுவதோடு மட்டுமல்லாமல் தனக்குத் தெரிந்த இலக்கிய ஈடுபாடு கொண்டவர்களையும் அழைத்துக் கொண்டு வருவார். இளங்கோ எழுதிய “நாடற்றவனின் குறிப்புகள்” என்ற கவிதைத் தொகுப்பிற்கான விமர்சன உரையாடலை நாங்கள் ஓர் நாள் நிகழ்த்திக் கொண்டிருந்தோம். அப்பொழுது எனது முறை வந்தபோது கவிதை விமர்சனத்துக்குள் நுழைவதற்கு முன்பாக நான் கவிதை என்பதை எவ்வாறு வரையறுத்துக் கொள்வது, எழுதப்படும் எல்லா வரிகளையும் கவிதைகளாகக் கொள்ளலாமா? என்பது குறித்துக் கருத்துக்களை கூற ஆரம்பித்திருந்தேன். நான் தொடங்கிச் ஒரு,சில நிமிடங்கள் ஆகியிருக்கும். சிவம் அவர்கள் வாயை ஒருபக்கம் இழுத்து முகத்தைக் கோணலாக்கிக் கொண்டு “முரளி உதை விட்டிட்டு விசயத்துக்குப் வோவம்” என்றார். அன்று நான் அந்த விமர்சனக் கூட்டத்திற்கு மயிலிட்டியைச் சேர்ந்த எனது நண்பன் அருளையும் அழைத்து வந்திருந்தேன். கூட்டம் முடிவடைந்து வீட்டுக்குச் சென்ற அருள் “ஏன் மச்சான் அவர் உன்னோடை உப்பிடிக் கதைச்சவர்” என்று தொலைபேசி மூலம் என்னிடம் விசாரித்தான். எனது நண்பன் இலக்கியப் பரிச்சயம் இல்லாதவன். அதற்கும் அப்பால் ஏன் அவர் அவ்வாறு சொன்னார் என்பதற்குப் பதிலாக நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் நோக்கில் பல்வேறு விடைகளையிறுத்து விடலாம். அவ்வாறு சொல்லப்படும் விடைகளில் சிலவோ, பலவோ என்னைக் கசப்பில் ஆழ்த்துவதாகவும் அமையலாம். எதுவாக இருந்தபோதிலும் விசயத்துக்குள் துரிதமாகச் சென்று விடவேண்டும் என்ற அந்தரமே அவ்வாறு அவர் கூறியதற்கான காரணமாக என்னால் கற்பித்துக் கொள்ள முடிகிறது.

மீண்டும் இக்கட்டுரையின் முதல் பந்திக்கு வருகின்றேன். என்னோடு கடந்த வாரம் சனிக்கிழமை இரவு ஏறத்தாள ஒன்றரை மணிநேரம் நடந்து கொண்டும், “சப்வேயிலே” பயணித்தபடியும் உரையாடிக்கொண்டே வந்த “சிவம்” எதையெல்லாம் பற்றி என்னோடு உரையாடிக்கொண்டு வந்தார் என்பதை பதிவுக்குள்ளாக்க வேண்டிய பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவே நான் கருதுகின்றேன். அப்போது எங்களோடு சிவத்தின் நண்பரான அருளும் உடனிருந்தார். அதில் ஓர் பகுதியை அவருடைய இறுதி அஞ்சலிக்கான கூட்டத்தின் போது உரையாற்றியவேளையில் நிறைவேற்றிவிட்டேன். மீண்டும் எழுத்தில் பதிவுக்குள்ளாக்க வேண்டியுள்ளது மிகச்சுருக்கமாக சில வரிகளில். “முரளி இன்று வன்னிப்பிரதேசங்களி;ல் வாழும், போராடும் பொதுமக்களோ , போராளிகளோ அல்லது போராளித் தலைவர்களோ கொல்லப்படக் கூடாது. அவர்கள் அனைவரையும் காப்பாற்றுவதற்கு எங்களால் முடிந்ததைச் செய்யவேண்டும்” என்ற வார்த்தைகளே சிவம் அவர்கள் என்னிடம் விட்டுச் சென்றவை.
எனவேதான் எம்மையெலாம் விட்டுப்பிரிந்து போன சிவம் என்ற அந்த மனிதரை “மானுடத்தின் மீது காதல் கொண்ட மகத்தான மனிதர்” என்று அழைக்க எனது மனம் அவாவுறுகின்றது.

அலைதலின் பின்னான குற்றச்சாட்டு
-நடராஜா முரளிதரன்-

எனது இருப்புக்கான
ஒரு கூடு தேடி
அலைதலில்
எத்தனை புனைவுகளை
இழிபேச்சுகளை
ஒப்புதல் வாக்குமூலங்களை
கழுத்தை நெரித்த
மாலைசூடல்களை
இன்னும் என்னென்னவோ
எல்லாவற்றையும்
நான் காவிச் செல்லுகின்றேன்

நீயோ
எனைப் பார்த்து
எக்காளமிட்டுச் சிரிக்கின்றாய்
ஏனெனில்
மாட்சிமை தங்கிய
மகாராணிக்குப்
பிரியமானதைப்
படைத்துவிட்ட
குதூகலிப்பு உனக்கு

நான் அன்று
விட்டுப் புறப்பட்ட
கூடு
இன்றும்
சிறைப்பட்டே
சிதைந்து
போய்க் கிடக்கின்றது

இறக்கைகளை விரித்து
ஏகாந்தத்தைக் கிழித்து
மேலெழும்
என் அவா
என் நண்பர்களாலேயே
கேள்விக்கு
உட்படுத்தப்படுகின்றது

கோசங்களை ஓங்கியுரைத்து
உணர்ச்சிகளுக்குள்
உட்புகுந்து மறைவதில்தான்
எனது மக்கள்
எவ்வளவு
பிரியமாயிருக்கின்றார்கள்

இவற்றையெல்லாம்
போட்டுடைத்துப்
புதியவைகளை
நான் கூறப்
புறப்படுகையில்
காதுகளை அவர்கள்
அறைந்து மூடுகிறார்கள்

நான்
உரையாற்றுவதற்கெனத்
தயார்ப்படுத்தப்பட்ட
மேடை குப்புறக்
கவிழ்க்கப்படுகின்றது
ஒலிவாங்கிகள்
பறித்தெடுக்கப்படுகின்றது
காற்று
எனது கருத்துகளை
பறித்துச் செல்கிறது

முதுகுக்குப் பின்னால்
இருந்து இன்னுமொருவர்
நீயும்
முன்னொரு காலத்திலே
இத்தகைய அடாவடித்தனங்களில்
ஈடுபட்டதாகக்
குற்றச்சாட்டு உள்ளதே
என்று குசுகுசுக்கின்றார்
என்னவர்களை நோக்கியே...
-நடராஜா முரளிதரன்-

தொடைகளுக்குள்
அழுந்தி நெரியும்
யோனிகளை
அளவளாவவே
எனது பார்வை
தெறித்தோடுகின்றது

முனைதள்ளி நிற்கும்
மேடுகளையும்
நுனிப்புல் மேய்ந்தவாறே

மனைவியோடு
பிள்ளையோடு
நண்பனோடு
பேசாத
கனிவான வார்த்தைகள்
அங்கு கொட்டுகின்றன

அன்றொரு நாள்
யேசு வாங்கிப்
பெற்றுக்கொண்ட
கற்களைக் கூடைகளில்
சேகரித்துக்கொண்டு
எறிவதற்காய்
எல்லோரையும் நோக்கி
குறிபார்த்தல்
தொடருகிறது.

வார்த்தைகளை
இரவல் வாங்கியவனாகி
விடக்கூடாது
என்பதற்காய்
வாசித்தலையே மறுத்து
துறவறம் பூணுகின்றேன்

ஆயினும்
பிரபஞ்சமெங்கணும் இருந்து
எனக்கான
படிமங்களை வேண்டியும்
இன்னும் அதற்கு மேலாயும்
இரந்து வேண்டி
இன்னுமோர் தவத்தில்
மோனித்திருப்பதாய்
கூறிக்கொள்ளுகின்றேன்

எனினும்
ஓங்கியொலிக்கும்
மனித ஓலம்
பெருக்கெடுத்தோடும்
மனிதக் குருதி
மூச்சுக் குழல்களை
அடைத்து நிற்கும்
பிணவாடை
என்னை மீண்டும்
என்னவர்களை
நோக்கியே
அழைத்துச் செல்கிறது
பிரிவினை கோரியதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன
-நடராஜா முரளிதரன்-



1962இல் இந்தியப் பிரதமராக இருந்த நேரு இந்தியா மீதான சீனப் படையெடுப்பின் போது இந்தியப் பாராளுமன்றத்தில் பிரிவினை கோருகின்ற, பிரிவினை வாதம் பேசுகின்ற கட்சிகள் தடை செய்யப்படும் என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றுகின்றார். அப்போது “அண்ணா” தலைமையிலான “திராவிடமுன்னேற்றக்கழகம்” அது வரை முழங்கிய, கோசித்த “திராவிடநாடு” தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டுக் கொண்டது.

காஞ்சிபுரத்தில் உள்ள தன் வீட்டுத் திண்ணையில் குந்தியிருந்து கொண்டாவது திராவிடத் தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிடாது இறுதிவரைக்கும் போராடுவேன் என்று கூறிய “அண்ணா” ஆயுதப் போராட்டத்தைத் தனது போராட்ட நெறியாக வரித்துக் கொள்ளாதவர். ஆயினும் அந்தக் கோசத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு தமிழகத்தில் உள்ள இடதுசாரி இயக்கங்களால் சாதிக்க முடியாத “மக்கள் அமைப்பைக் கட்டுதல்” என்ற வியாக்கியானத்தைத் தமிழகத்தில் செயற்படுத்திய வலுப்படைத்தவராக அண்ணா அவர்களைக் கருத முடியும்.

இவ்வாறான அண்ணா திராவிடநாடு பிரிவினைக் கோரிக்கையைக் கைவிடுகின்ற அவ்வேளையில் கூறிய வாசகம் இந்தியக் கூட்டாட்சி வரலாற்றிலே மிகப் பிரசித்தமானது. இன்றும் கூடத் தமிழக வரலாற்று ஆய்வாளர்களால் அவ்வாசகம் எடுத்தியம்பப்படுகின்றது.
நாங்கள் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம். ஆனால் பிரிவினை கோரியதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன என்ற கூற்றே அண்ணா கூறிய அந்தப் பிரசித்தி பெற்ற வாசகமாகும்.

மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி அதிகாரங்களை உள்ளடக்கிய மொழி வழி மாநிலங்களைக் கொண்ட இந்தியக் கூட்டாட்சி அமைப்பின் கீழ் தமிழ்மக்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட அன்றைய சென்னை மாநிலத்தின் சார்பிலே அண்ணா அந்த வாதத்தை முன்னெடுத்திருந்தார். எனினும் திராவிடத்தின் உள்ளடக்கமான ஆந்திர,கர்னாடக,கேரள மக்களது ஆதரவு கிஞ்சித்தும் அந்தக் கோரிக்கைக்குக் கிடைத்திருக்கவில்லை.

அந்த வாதம் முன்னெடுக்கப்படும் அவ்வேளைகளில் இந்திய இராணுவம் தமிழகத்தின் எந்த மூலைகளுக்குள்ளும் நுழைந்திருக்கவில்லை. அடக்குமுறை வெறியாட்டம் காட்டுமிராண்டித்தனமான வகையில் தமிழகத்து மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கவில்லை. உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான மனித உரிமை மீறல்கள் உச்சம் பெற்றதற்கான சாட்சியங்கள் அங்கு ஏதுமில்லை. அதற்காக அங்கு எல்லாம் இனிதே நிகழ்ந்தன என்று கூறவும் நான் முற்படவில்லை. அத்தகைய சூழ்நிலையிலே தொடர்ந்து அண்ணா எழுப்பிய முக்கிய கோசமானது “மத்தியிலே கூட்டாட்சி, மாநிலத்திலே சுயாட்சி” என்ற முக்கிய சுலோகமாகும். அந்தச் சென்னை மாநிலம்தான் பின்னர் அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் பெறுகின்றது.

இதைக் கூறிவிட்டு அறுத்துக் கொண்டு உடனே பின்னடைவுக்குள்ளான ஈழவிடுதலைக்கான போராட்டம் குறித்துக் கருத்துக் கூறுகின்ற குர்திஸ் தேசியவாதி “ஷெக்ஸ்முஸ் ஆமெட்” அவர்களிடம் செல்லவிரும்புகின்றேன். கடந்த சில வாரங்களாக இவர் ஈழப் போராட்டத்திற்கு இன்று ஏற்பட்டுள்ள நிலை குறித்துக் கூறிய கருத்துக்கள் இணையத்தள, மின் ஊடகங்கள் பலவற்றில் வெளியாகிப் பிரபலமடைந்துள்ளன. பின்னால் இந்த இருவர் கருத்துக்களுக்குமான தொடர்புகள் பற்றிப் பார்ப்போம். “ளூநஒஅரஒ யுஅநவ” அவர்கள் கூறுகின்றார், இன்று விடுதலைப் புலிகளின் ஈழ விடுதலைப் போராட்டம் பின்னடைவுக்குள்ளானது போன்று வரலாற்றில் குர்திஸ் மக்களும் தங்கள் விடுதலைக்கான போராட்டத்தில் பல்வேறு தடவைகள் தோல்வியடைந்துள்ளார்கள் என்று.

1925, 1938, 1946, 1975, 1988, 1991 என குர்திஸ் மக்கள் அடைந்த தோல்விகளின் வரலாற்றுப் பட்டியல் நீளுகின்றது. அது மட்டுமல்லாது இன்றும் அவர்கள் “குர்திஸ்தான்” என்ற தனிநாட்டை அமைப்பதில் வெற்றி பெற்றுக் கொள்ளவில்லை. அமெரிக்கத் தலையீட்டின் காரணமாக ஈராக்கில் அமைந்துள்ள “குர்திஸ்தான்” மாத்திரம் ஈராக்கிய மத்திய ஆட்சிக்குட்பட்ட வரையறுக்கப்பட்ட அதிகாரங்களையுடைய சுயாட்சிப் பிரதேசமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. அவர் மேலும் கூறுகையில் உங்கள் போராளிகள் இறுதிவரை நெஞ்சுரத்தோடு போராடி மரணித்த இவ்வரலாறானது உங்கள் மொழியில் அமையப்பெறும் பாடல்களிலும் , இலக்கியங்களிலும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் சாட்சியங்களாக எதிர்கால வரலாற்றில் அமையப் பெறும் என்று குறிப்பிடுகின்றார்.

தொடர்ந்து அவர் முன் வைக்கும் விமர்சனத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல் எதிர்பார்ப்புகள் மிக இறுக்கமானவை என்று கூறுகின்றார். “தங்களது தமிழீழத் தாயகக் கோரிக்கைக்குப் பரந்துபட்ட பன்னாட்டு ஆதரவு திரளாத நிலையில் இலங்கையில் தமக்கான சுயாட்சியை உறுதிசெய்யும் ஒரு கூட்டாட்சிக்கான ஒப்;பந்தத்தை ஏற்பதே யதார்த்த நிலையை ஒட்டிய தீர்வாக இருந்திருக்கும். அதே சமயம் இலங்கை அரசானது தொடர்ந்து தமிழ்மக்களின் ஆதார உரிமைகளை மீறும் பட்சத்தில் இந்தப் போராட்டத்தைத் தமிழ்மக்களின் அடுத்த தலைமுறையினர் முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றிருக்கவும் வழிவகுத்திருக்கும். அந்தக் கட்டத்தில் கூட்டாட்சி அடிப்படையில் அமைந்த தமிழர்களின் சுயாட்சி அரசுக்கு மேலதிக பன்னாட்டு அங்கீகாரம் கிட்டியிருக்க முடியும். தவிர, விடுதலைப்புலிகள் அமைப்பு “பயங்கரவாத அமைப்பு” என்ற முத்திரையுடன் மேற்கத்தேய அரசுகளால் தனிமைப்பட்டுப் போகாமல் இருந்திருக்கலாம்” என்ற வகையிலெல்லாம் அவருடைய விமர்சனம் அமைகின்றது.

ஆனால் தமிழ்த்தேசியத்தின் தீவிர ஆதரவாளர்களால் முன்வைக்கப்படும் வாதமானது சிறிலங்கா அரசானது எந்தச் சூழ்நிலையிலும் இனப்பிரச்சினைக்கு மாற்றுத்தீர்வாக ஒற்றையாட்சிக்கு அப்பாற்பட்டுத் தமிழ் பேசும் மக்களது பிரச்சினைகளுக்குத் தீர்வாக இதயசுத்தியுடன் “சமஸ்டி” அடிப்படையிலான எந்த அரைகுறைத் தீர்வையும் கூட நடைமுறைப்படுத்தத் தயாராக இருக்கவில்லை என்பதேயாகும். அதற்கான ஆதாரங்கள் வரலாற்றில் நிரம்பவே இருக்கின்றன. எனவேதான் “ஷெக்ஸ்முஸ் ஆமெட்” அவர்களின் மேற்கூறிய விமர்சனத்தில் உள்ள இலங்கையில் தமிழர்கள் தமக்கான சுயாட்சியை உறுதிசெய்யும் ஒரு கூட்டாட்சிக்கான ஒப்;பந்தத்தை ஏற்பதே யதார்த்த நிலையை ஒட்டிய தீர்வாக இருந்திருக்கும் என்ற விமர்சனத்தை நடைமுறைச் சாத்தியமானதுதானா என்ற தர்க்கத்த்pன் அடிப்படையோடு ஒப்பிட்டு நோக்க வேண்டியுள்ளது.

“உயிரோடு இருப்பதற்காக வெட்கப்படுகிறேன், எவ்வளவு இழப்புகள். எவ்வளவு குருதிப்பெருக்கு. யாவும் ஒடுக்கப்பட்ட, சொல்லமுடியாத துயரம் இந்த ஒரு வரியில் வெளிப்படுகிறது. நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நமது எதிரியே முடிவு செய்கிறான் என்று சொன்ன புரட்சிக் கருத்துகளை நேற்று வரை கொண்டாடி வந்த பலரும் இன்று வன்முறையிலான பாதை தவறானது. வன்முறையில்லாமல் நாம் அமைதியாகப் போராடி வெற்றி பெற வேண்டும் என்ற யோசனைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் .ரத்தம் சிந்தாமல் எந்த சமூகமும் மாறியதில்லை என்பதே வரலாறு திரும்பத் திரும்பச் சொல்லும் உண்மை. காந்தி வழியில் தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது என்ற பள்ளிபாடச் சரித்திரம் உண்மையில்லை என்பதை இந்திய சுதந்திரப் போரில் வெள்ளையர்களால் அடிபட்டும், வன்கொலைக்கு உள்ளாகியும் இறந்தவர்களின் எலும்புகள் என்றும் சொல்லும். நான் வன்முறையை வளர்க்கச் சொல்லவில்லை. ஆனால் வன்முறை என்பது ஆயுதங்கள் ஏந்திப் போரிடுவது மட்டுமில்லை. அதிகாரம் மேற்கொள்ளும் அத்தனை செயல்களிலும் வன்முறை பீறிட்டுக் கொண்டுதானே இருக்கிறது” என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஸ்ணன் தனது இணையத்தளத்தில் பின்னடைவுக்குள்ளான ஈழப்போராட்டம் குறித்து எழுதுகிறார்.

ஏனவேதான் “ஷெக்ஸ்முஸ் ஆமெட்” அவர்களின் இறுதி விமர்சன வார்த்தைகளான “அறிவும் திறமையும் ஆற்றலும் கொண்ட ஈழத்தமிழ் மக்களே, இந்தச் தீயின் சாம்பலிலிருந்து நீங்கள் எழுவது நிச்சயம்! உம் கனவுகள் உயிரோட்டத்துடன் இருக்கட்டும், அப்போது துப்பாக்கித்தோட்டாக்களோ, வாக்குச்சீட்டுகளோ கொண்டு நீங்கள் ஈழத்தை அடைவதும் நிச்சயம்!” என்ற சொல்லாடல்களையும் பொருத்திக் கொண்டு அண்ணா மொழிந்த “நாங்கள் பிரிவினைக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டோம். ஆனால் பிரிவினை கோரியதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்ற வார்த்தைகளுக்குள் நுழைவதற்கான சாத்தியங்கள் குறித்து சிந்திக்கத் தலைப்படுகின்றேன்.

Monday, March 23, 2009



நண்பர்கள்


-நடராஜா முரளிதரன்-

நண்பர்கள்
வர மறுத்தார்கள்
எதிரிகளாய்
பிரகடனப்
படுத்தப்பட்டவர்கள்
வந்து கொண்டிருந்தார்கள்

வர மறுத்தோர்
தங்கள் சுயத்தினை
அறைகூவுவதற்கான வெளியாக
அது அமையாது
என்று நினைத்தார்களோ

இலைகள் உதிர்ந்த மரங்கள்
நெடிதே உயர்ந்து நிற்கின்றன
இன்னும் இறக்காமல்
அதனூடே மொட்டையாக
வானை எட்ட முனையும்
கட்டிடக் காடுகள்

அடிவானைத் தொட்டு
அலையும் எனக்கு
புத்துயிர்ப்புத் தர
எந்த வண்ணங்களும்
குழைந்த காட்சி
எழுதப்படவில்லை அங்கு

Saturday, February 21, 2009

தீபச்செல்வனின் கவிதைகளை வாசித்தல்

மானுட சோகத்தை இலக்கியத்திற்கூடாகப் புரிந்து கொள்வதென்பது சரித்திரம் குறித்த வரலாற்று ஆவணங்களுக்கப்பால் மனிதசமூகத்தை எதிர்கொள்ளும் முறைமைகளில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அதுவும் நாம் வாழும் காலத்தில் நாம் வாழ்ந்த சமூகமானது சொல்லொணாத் துன்பங்களுக்கும், தாங்கொணா அடக்குமுறைகளுக்கும் உட்படுத்தப்பட்டு மிலேச்சத்தனமான இனப்படுகொலை மூலம் அழித்தொழிக்கப்படுகின்ற வேளையில் அச் சமூகத்துக்குள் வாழும் படைப்பாளி ஒருவனால் அவை குறித்த இலக்கியப்பதிவுகள் வெளிப்பாடு கொள்ளும் வேளைகள் அபூர்வமானவை. அத்தகைய அபூர்வதளத்துக்குள் அறுபடாச் சங்கிலியால் தன்னைப் பிணைத்துக் கொண்டு கவி புனையும் தீபச்செல்வன் வன்னி மண்ணின் அவலங்களை உலகத்தின் முகத்தில் ஓங்கியுரைக்கும் சாட்சியமாய் எழுந்து நிற்கிறார். எனவே அவரது கவிதைகளை வாசித்தலும், கேட்டலும் இன்றைய ஈழத்தமிழ்ச் சமூகத்தின் அவலம் நிறைந்த வாழ்வின் மத்தியில் நாம் வாழும் புலம்பெயர் மண்ணில் எமக்கு அத்தியாவசியமாகிறது. ஆகவே இலக்கியத்தையும், மானுடத்தையும் நேசிக்கும் தங்களையும் இவ்வாசிப்பில் கலக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

காலம் - 22-02-2009 (மாலை 6.00 மணி)
இடம்;; - 36 Salamander Street Scarborough
தொலைபேசி இலக்கம்- (647) 237-3619

வாசிப்பு ஏற்பாடு சார்பாக

murali

Sunday, August 10, 2008

வட-கிழக்கு மண்ணின் மைந்தர்கள் எழுகவே!

-நடராஜா முரளிதரன்-

கடந்த நான்கு ஆண்டுகளாகத் தமிழ் “மசாலா” படத்துக்கே உரிய விறுவிறுப்புக் காட்சிகளோடு கூடிய முடிவிலி வரை நீளக்கூடியதுமான நாடகத்தொடர் போன்றே கிழக்கரசியல் நீளுவதாக என் கண்களுக்குத் தோற்றம் தருகின்றது. அண்மையில் கிழக்கின் முதல்வராகப்பட்ட “பிள்ளையான்” எனும் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களை நோக்கும்போது ஏறத்தாள இன்றைக்குப் பத்து வருடங்களுக்கு முன்பாக இரவல் படையின் கடாட்சத்தினால் வட-கிழக்கு மாகாணசபையின் முதல்வராகப் “பட்டாபிசேகம்” செய்து முடியையும் சூடிக்கொண்ட வரதராசப்பெருமாள் அவர்களையே எண்ணிப் பார்க்க வேண்டிய நிலையேற்படுகின்றது. அவர் “மணிமகுடத்தையும்” இழந்து ஏன் “பரிவாரங்களோடு” ஒரிசாவுக்குக் கப்பல் ஏறினார் என்ற கடந்த காலக் கதையை யாமெல்லோரும் நன்கு அறிவோம். அதை முற்கூட்டியே அன்றைய சூழ்நிலையில் யாராவது “அரசியல் ஆய்வாளர்கள்” ஆருடம் கூறியிருந்தார்களோ? என்பதும் இன்று எனக்கு நினைவில் இல்லை.

கட்டுக்கோப்பு, தியாகம், தலைமை விசுவாசம் போன்ற எவையுமே ஒரு குறிக்கோளுக்கான பயணத்தில் அக் குறிக்கோளுக்கான பயணத்தை மனசார வரித்துக் கொண்டவர்களால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படுபவை. இவையெல்லாம் ஒரு சமன்பாட்டின் மாறிலிக்கான பரிமாணத்தை எப்போதும் கொண்டமைவதாகக் கட்டமைக்கப்படுவது சதா என்றுமே சுழற்ச்சிக்குள்ளாகும் மனித மனங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சமூகக் கட்டுமானங்களுக்கு எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொருத்தமாக அமைந்துவிட முடியாது.

கடந்த 25 வருடங்களாக நடைபெற்றுவரும் போரில் மிகப் பலம் வாய்ந்த எதிரிக்கு எதிராகப் பலவீனமான மக்கள் கூட்டம்(தமிழ் பேசும் மக்கள்) ஒன்று போராடுகின்றது என்பதே வரலாற்று உண்மையாகும்.. எதிரியின் பலம் என்பது அவனது பிரமாண்டமான மக்கள் தொகை, அவன் வசிக்கும் பாரிய நிலப்பரப்பு, இறைமை படைத்த அரசு என்ற வகையில் அவனுக்குக் கிடைக்கும் உலகளாவிய அரசுகளின் அரவணைப்பு என எதிரியின் பலத்துக்கான, மேலாண்மைக்கான பட்டியல் தொடர்ந்து நீண்டு கொண்டேயிருக்கும். எனவே பலம் பொருந்திய பகைவன் அவ்வப்போது பெறுகின்ற வெற்றிகள் என்ற தலைப்புக்குள் போராட்டத்தின் அறம் குறித்த நியாயத்தேடலைப் புதைத்துவிட முடியுமா?

பலவீனமான பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டம் அசுரபலம் பொருந்திய இஸ்ரேலினால் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகிறது என்ற உண்மையினால் பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டம் அறத்தின் பாற்பட்டதல்ல என்று கூக்குரல் இட்டுவிட முடியுமா? மேற்குக்கரையென்றும், காசாவென்றும் பூகோள, புவியியல் தொடர்ச்சியற்ற நிலையிலும் அந்த மக்கள் தங்களை பாலஸ்தீனர்களாகக் காணுவதை எந்த வகையறாவுக்குள் இட்டு நிரப்ப முடியும்? ஏன் அந்த மக்கள் பிரதேசவாதிகளாக அறுந்துபடவில்லை?


“ஒஸ்லோ” உடன்படிக்கையும், “உலக நாயகன்” அமெரிக்காவும் தாரை வார்த்தளித்த வரையறுக்கப்பட்ட சுயாட்சியதிகாரங்களை உள்ளடக்கிய பாலஸ்தீன அரசு என்ற கட்டமைப்பு பாலஸ்தீன மக்களின் அடிப்படைத் தேவைகளையே வழங்க முடியாது ஏன் தோல்வியுறுகின்றது? என்ற பாடங்களை வரலாற்றின் சகதிக்குள் மீண்டும், மீண்டும் தமிழ் மக்களாகிய நாம் சுழியோடித் தேட வேண்டியிருக்கிறது. கிழக்கு மாகாணசபையின் தேர்தல் பட்டாசு வெடிச்சத்தங்களின் அதிர்வுகள் ஓயு முன்னரே கிழக்கு மாகாணத் தமிழ்மக்களுக்கும், முஸ்லீம் மக்களுக்குமான இனப்போரின் ஆரம்ப கட்டங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுவிட்டன. இரு புறமும் வீழ்த்தப்பட்ட பிணங்கள் வரிசையாக அடுக்கப்படுகின்றன. இந்த இலடச்சணத்தில் தொப்புள் கொடி உறவை அறுத்தவர்கள், அறுந்து பட்டவர்கள் சனநாயக அரசியல் நீரோட்டத்தில் உள் இழுக்கப்பட்டதாகவோ அல்லது உள் நுழைந்து கொண்டதாகவோ வீண் வார்த்தைகள் உரைக்கப்படுகின்றது.

முன்னாள் முதல்வர் “பெருமாள்” மாகாணசபைக்கான மேசை கதிரைகளை வாங்குவதற்கே கொழும்புக்கு ஏறியும், இறங்கவும், அலையவும் வேண்டியுள்ளதே எனப் புலம்பியடித்தது நேற்று முளைத்த பிள்ளையானுக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. 1956ஜூன் 5ம் தேதி பண்டாரநாயக்கா தலைமையிலான அரசு தனிச் சிங்களச்சட்டத்தை விவாதிப்பதற்காக நாடளுமன்றில் கூடிய போது கிழக்கின் மைந்தர்கள் தமிழ்த் தேசிய உணர்வின் தீப்பிழம்பானமைதான் உண்மை வரலாறு. திருமலை இராஜவரோதயம், பட்டிருப்பு இராசமாணிக்கம், அறப்போரணித் தலைவர் அரியநாயகம், இராஜதுரை, சம்மந்தன், ஜோசப் பரராஜசிங்கம், காசி ஆனந்தன் போன்றோர் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் ஆரம்பமாவாதத்திற்கு வெகுகாலத்திற்கு முன்னரே கிழக்கு மாகாணமெங்கும் தமிழ்த் தேசிய உணர்வுவாதப் பிரச்சாரத்தில் தீவிர பங்கெடுத்துக்கொண்ட கிழக்கின் மைந்தர்கள்.

1977ஆம் ஆண்டு மிதவாதத் தமிழ்த் தலைமைகளால் பிரகடனப்படுத்தப்பட்ட தமிழீழத்துக்கான சர்வஜன வாக்கெடுப்பு என்று கருதப்பட்ட தேர்தலில் திருமலை, மூதூர், மட்டக்களப்பு, அம்பாறை அடங்கலாகப் பெருவாரியான தமிழ்மக்கள் “தமிழீழ ஆணைக்கு” ஆதரவாக வாக்களித்த வரலாற்றுண்மையை யாரும் மறுதுரைக்க முடியாது.
தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்குள் வெட்டிப் பிரிக்க முடியாத இரட்டைக் குழந்தைகளாக விளங்கியவர்களே வட-கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்கள். முஸ்லீம் மக்களின் சுயத்தையும், தனித்துவத்தையும் அங்கீகரிக்க வேண்டிய கடப்பாடு அந்த இருபகுதித் தமிழ்மக்களுக்கும் உண்டு. தேங்காய்பூவும், பிட்டுமாக ஒன்றி வாழ்ந்த சமூகமாகத் தமிழ் முஸ்லீம் சமூகங்களின் கடந்த கால உறவுகளை மேடைகள் தோறும், பத்திகள் தோறும் பிரகடனப்படுத்துகின்றோம். ஆனால் இன்றைய சமகால தமிழ், முஸ்லீம் சமூகங்களுக்கிடையிலான மெய்யான யதார்த்தம் என்ன? இரு சமூகங்களுக்கும் இடையிலான மத,பண்பாட்டு, கலாச்சார இடைவெளிகளுக்கு அப்பால் பாரிய பிரிவினை கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் வேரோடி நிற்கிறது. அப் பிரிவினைக்கான பெரு மையம்பொருளாதா ஏற்றத்தாழ்வேயாகும்.

பாரம்பரியமாகவே முஸ்லீம்கள் வியாபாரிகள். ஆதனால் வரலாற்று ரீதியாகப் பெரு வளர்ச்சியடைந்த தமிழ்-சிங்கள முரண்பாடு இயல்பாகவே வியாபார சமூகத்ததைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கு சாதகமான வாய்ப்புக்களைத் தோற்றுவித்திருக்கின்றது. அதற்கும் அப்பால் முஸ்லீம்களின் அரசியல் தலைமை கொழும்பின் அரசியல் அதிகார மையத்தோடு காலத்திற்குக் காலம் சமரச அரசியல் உறவினைப் பூணுவதன் மூலமே தனது நலன்களை மாத்திரமல்லாமல் தனது சமூகத்தின் நலன்களையும் தக்க வைத்துக் கொள்ள முயன்று வந்துள்ளது. இத்தகைய அணுகுமுறை முஸ்லீம்களை ஒப்பீட்டுரீதியில் பொருளாதார ரீதியில் கிழக்குத் தமிழர்களுக்கு மேலாக வளர்த்துச் சென்றுள்ளது.

எனவே இயல்பாய் எழுந்த இந்த முரண்பாடுகளுக்கும் அப்பால் சிங்களப் பேரினவாதம் முஸ்லீம் அடிப்படைவாதிகளை தமிழ்த் தேசியத்தின் எழுச்சியை முறியடிப்பதற்கு பயன்படுத்திய நீண்ட கதையும் இங்குண்டு எனவே இவற்றின் வெளிப்பாடுகளான மோதலையும், முரணையும் எவ்வாறு கையாள்வது என்பதும் பொது எதிரியை வென்றெடுப்பதில் எவ்வாறு “ஐக்கிய முன்னணியைக்” கட்டுவது என்பதில் அரசியல் பாடங்களைக் கற்றுக் கொள்வதும் ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்கள் என்ற வகையில் தமிழ்த் தேசியர்கள் முன் உள்ள வரலாற்றுக் கடமையாகும். அதற்கும் அப்பால் எங்களுக்கு எந்தப் பிரச்சினைகளுமே கிடையாது என்பதும் குறிப்பிட்ட பிரதேசத்தைச் சார்ந்தவர்களால் நயவஞ்சகமாக ஏமாற்றப்பட்டோம் என்பதும் குறிப்பிட்ட சில தனிமனிதர்களின் அபிப்பிராயங்களாக, கருத்துக்களாக அமையலாம். அவர்களின் கருத்துச் சுதந்திரத்தை மறுதலிப்பதில் எள்ளளவும் பிரியப்படுபவன் அல்ல நான். ஆனால் மலையகத் தமிழ்மக்களின் குடியுரிமை பறிப்பு, ஆண்டாண்டு காலமாகத் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பெற்ற தமிழ்மக்கள் மீதான இனப் படுகொலைகள், சிறைகளிலே தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கும், மரணத்திற்கும் உள்ளாக்கப்படும் தமிழ் இளைஞர்கள், தமிழ் பேசும் இனத்தின் பாரம்பரிய பிரதேசங்களில் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட குடியேற்றங்கள், உயர்கல்வி வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் கடைப்பிடிக்கப்பட்ட பாரபட்சங்கள், அந்நிய இராணுவ ஆக்கிரமிப்பு போன்றவை அனைத்தும் (சிறிய வேறுபாடுகள் தவிர்ந்து) வட-கிழக்கு மாகாணங்கள் முழுமைக்கும் பொதுமையாகவும் மலையகம் அடங்கலாகவும் நடைபெற்றன. இன்றும் நடைபெறுகின்றன.

ஆகவேதான் ஓர் இனத்துக்கான சுயநிர்ணய உரிமை என்ற சர்வதேச சட்ட வரையறையின் பிரகாரம் தமிழ் பேசும் மக்களுக்கு உரித்துடைய சுயநிர்ணய உரிமைக்காக வட-கிழக்கு மண்ணின் மைந்தர்கள் எழுகவே! என்று வாய் விட்டுக் கத்த வேண்டும் போலுள்ளது எனக்கு. .

Saturday, February 23, 2008

அன்றைய யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி

நடராஜா முரளிதரன்

கடந்த சில வாரங்களுக்கு முன்பாகக் “குறமகள்”(வள்ளிநாயகி) அவர்களினால் எழுதி வெளியீடு செய்யப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி – ஓர் ஆய்வு என்ற நூலை அந்நூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்ற போது வாங்கிக் கொண்டேன். பின்பு அந்நூலை வாசித்தபோது அதனூடகக் கிடைத்த தகவல்களில் சிலவற்றை இங்கு மீட்பதே இப்பத்தியில் எனது நோக்கம்.

யாழ்ப்பாணச் சமூகம் என்பது பெரும் படிப்பைப் பாரம்பரியமாகக் கொண்டது என்ற “பெரும் புழுகுக்குள்” தோய்ந்து மூழ்கி எழும் பழக்கமும். வழக்கமும் வாய்க்கப் பெற்ற பாரம்பரியத்தில் வந்துதித்த என் போன்றோருக்கு வெறும் 175 வருட காலங்களுக்கு முன்னேதான் விரல் விட்டு எண்ணக் கூடிய யாழ்ப்பாணப் பெண்கள் சிலர் எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலே எழுதவும், வாசிக்கவுமான ஆரம்பக் கல்வியை கற்க ஆரம்பித்தார்கள் என்ற வரலாற்றுண்மையை அந் நூலின் வாயிலாகப் பெறக்கூடியதாக அமைந்த போது பெரும் வியப்பை ஏற்படுத்தியது. எனவேதான் இங்கு ஓர் கேள்வி எம்முள் இயல்பாகவே எழுப்பப்படுகிறது.

எமது பாரம்பரிய இந்துச் சமூகத்தில் காலங்காலமாக கடைக் கொள்ளும் அல்லது பேணப்படும் பெண் பற்றிய கருத்து நிலைப்பாடு என்பது யாது? இந்துக்களுக்கும் இந்துக்கள் என்ற அணியினுள் இன்று உள் அழுத்தப்பட்ட சைவ, சமண, சாக்த, வைணவ மதத்தவர் யாவருக்கும் “மனு தர்மமே” நெறிகாட்டும் வழிகாட்டியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த “மனு தர்மத்தில்”; பெண் என்றவள் இழிந்தவளாக, மிகக் கொடூரமான கட்டுக்குள் வளர்த்தெடுக்கப்படவேண்டியவளாக, ஆடை-ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட வேண்டியவளாக சித்தரிக்கப்பட்டுள்ளாள்.

அன்றைய நூல் வெளியீட்டு வைபவத்தில் இது தொடர்பாக கவிஞர் சேரன் விரிவாக எடுத்துக் கூறியும் இருந்தார். “இந்து” என்ற வார்த்தையை இந்திய சமூகக் கட்டுமானத்துக்குள் ஒர் பதப் பிரயோகமாகப் பயன்படுத்தியவர்கள் அல்லது கொணர்ந்தவர்கள் பர்சியர்கள் மற்றும் பிரிட்டிசார் என்றே வரலாறு கூறுகிறது. ஆனால் இன்று “இந்து” என்ற அந்த வார்த்தை பரந்து, விரிந்த இந்திய உபகண்ட சமூகங்களை ஒரு குடையின் கீழ் அணிதிரட்டும் வலுப்படைத்த “தேசிய” ஆயுதமாகப் பிரயோகிக்கப்பட்டு வருகிறது. எனவே இவ்வாறான வளர்ச்சியடையாத இறுக்கமான சமூகக் கட்டுமானத்துக்குள் இருந்து வெளிக்கிளம்புதல் என்பது அன்றைய யாழ்ப்பாணப் பெண்களைப் பொறுத்தவரையில் மிகக் கடினமானதாகவே இருந்திருக்கும்.

பெண்ணை ஆணிலும் பார்க்கத் தாழ்ந்தவளாகக் கருதும் கருத்துநிலையின் தளம் இந்தியச் சமூகத்திற்கு மாத்திரம் உரியதொன்றன்று. அது மேல்நாட்டுச் சமூகங்களுக்கும் உரிய ஒன்றாகும். இதற்கான காரணம், இச்சிந்தனை மரபு தந்தை வழி அதிகாரச் சமூகத்தின் நியமமாகும் என்று அந்நூலின் முகவுரையில் பேராசிரியர் சிவத்தம்பி குறிப்பிடுகிறார்.

1820களின் ஆரம்பத்தில் தெல்லிப்பளை, உடுவில் ஆகிய பகுதிகளிலேதான் முதன்முதலாகத் தமிழ்ப் பெண்களுக்கான கல்வி அமெரிக்க மிசனறிகளால் அறிமுகப்படுத்தப்படுகிறது. எனவே இங்கு குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இயங்கிய மெதடிஸ்த திருச்சபையும், அங்கிளிக்கன் திருச்சபையும் இங்கிலாந்தைத் தளமாகக் கொண்டு இயங்குகையில் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிசன்களது கல்விசார் தொழிற்பாடு பிரிட்டனின் காலனித்துவக் கொள்கைகளோடு முரண்படுகின்ற கல்விப் போக்கினைக் கொண்டிருந்தது எனக் கூறப்படுகின்றது.

ஒரு பெண் கிறீஸ்தவளாக மாற்றப்பட்டுவிட்டால்; அவளது குடும்பத் தொடர்ச்சியே கிறீஸ்தவ மயப்பட்டுவிடும். ஏனவே மத விரிவாக்கலுக்கு பெண் கல்வி அத்தியாவசியமானது என்ற அடிப்படை உண்மையைப் புரிந்து கொண்ட கிறீஸ்தவ மதக் குழுக்கள் தங்களது மனித நேய அணுகுமுறையினூடாக யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்களுக்கான சமூக அசைவியக்கத்தினை உந்தித் தள்ளுவதில் குறிப்பிடத்தக்க பாத்திரத்தினை வகித்திருந்தனர். ஆனாலும் இந்தக் கிறீஸ்தவ மதக் குழுக்களை காலனியாதிக்க விரிவாக்கத்தின் ஒரு பகுதியாகவும் கொள்ள முடியும். ஏனெனில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுக் காலனியாதிக்கத்தின் விஸ்தீரணத்தை விரிவுபடுத்துகின்ற அதியுச்ச அதிகாரம் படைத்த மன்னனுக்கும் இந்த மத நிறுவனங்களுக்கும் இடையிலான நெருக்கங்கள் மிகவும் பின்னிப் பிணைந்தவை.

யாழ்ப்பாணப் பெண்கல்வியின் ஆரம்பகால வளர்ச்சிப்போக்கு புரட்டஸ்தாந்து மதநிறுவனங்களால் குடும்பங்களுக்குள் கிறீஸ்த்துவத்தை வலுப்படுத்தும் நோக்கினால் ஆனதாக ஏற்படுத்தப்பட்டதாக அமைந்தாலும் சமூக வரலாற்று வளர்ச்சிப் போக்கில் புரட்டஸ்தாந்து மதபோதகர்களும், அவர்களது சமூகம் பற்றிய கண்ணோட்டங்களும் ஏற்கனவே யாழ்ப்பாண மண்ணில் வேரூன்றியிருந்த இந்து, சைவப் பாரம்பரியங்களோடு ஒப்பிடுகையில் மிகவும் முன்னேறியவையே. ஆங்கிலேய காலனித்துவம் தனது நிர்வாக இயந்திரத்தை வலுப்படுத்துவதற்காக ஆங்கிலக்கல்வி பெற்ற அரசாங்க உத்தியோகங்களில் ஆண்களை அமர வைத்தபோது அங்கு ஒருவகைப் புதிய நடுத்தர வர்க்கம் தோற்றம் பெற்று வந்ததையும் இங்கு நாம் கண் கொள்ள வேண்டியதாக உள்ளது. எனவே அத்தகைய புதிய வர்க்கத்திலே பெண் தனது புதிய பாத்திரத்தைச் செம்மையாக வகுத்துக் கொள்ள அவளினதும் அவள் சார்ந்த குடும்பத்தினதும் ஆங்கிலக்கல்வி தொடர்பான அணுகுமுறை புதிய பரிமாணத்தைப் பெற்றது என்றும் கூறிவிடலாம். அத்துடன் ஆங்கிலக் கல்வி பெற்ற பெண் ஏற்கனவே நிலவி வந்த சமுதாயக் கட்டுமானங்களை உடைத்தெறியும் முழு உத்வேகம் பெற்றவளாக மாறிவிடாமலும் அதனோடு சார்ந்து பயணிப்பவளாகவும் அமைகிறாள். மேலும் அந்தப் பெண்ணானவள் தனது பிள்ளைகளை மேலும் கல்வியறிவு பெற்றவர்களாக உருவாக்கிவிடுவதன் மூலம் அரச உத்தியோகங்களை அவர்கள் பெறுவதற்கான வாய்ப்புக்களினால் சமூக அந்தஸ்த்து படிநிலையேற்றத்தை வேண்டி நிற்பதான சமூகப்பிராணியாகவும் மாற்றம் பெற்றவளாகி விடுகிறாள். இது இன்றைய கட்டம் உட்பட எல்லாக் காலகட்டங்களுக்கும் பொருத்திப் பார்க்கக் கூடியதாகவே அமைகிறது. மேலும் காலனித்துவம் உண்டாக்கியிருந்த பெண்களுக்கான இவ்வாறான படிநிலையேற்றத்தைச் சமூக,பண்பாட்டு,கருத்தியல் ஊடுருவலாகக் கட்டமைத்துக் கொண்ட ஆறுமுகநாவலர் போன்றோர் சைவமும், தமிழும் ஒருங்கே இணைந்த உணர்வு அலைகளைத் தோற்றுவித்தபோதும் சாதீயம், பெண்ணைக் கட்டுப்படுத்துதல் போன்ற விடயங்களில் புதிய சிந்தனைகளைப் பெற மறுத்தவர்களாகளாக அமைந்தமையினால் தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்குவதற்கும், பெண்களை மேலும் கடுமையான விதிமுறைகளுக்குள் ஆழ்த்துவதற்குமான கோட்பாடுகளை அதிதீவிரப்படுத்துவதற்கான வழிமுறைகளுக்குள் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்களாகவும் அதை நோக்கிய திசைமுகத்தையே யாழ்ப்பாணச் சமூகத்திற்கு காட்டுபவர்களாகவுமே அமைந்தார்கள்.

“பாரம்பரிய பேணுகையை மேல்நாட்டுப் மத. பண்பாட்டு ஊடுருவலுக்கு எதிரான ஒரு கேடயமாகக் பயன்படுத்த விரும்பிய ஆறுமுகநாவலரிடம் கிறீஸ்தவப் பாதிரிகளிடமிருந்து எதிர்பார்ப்பதைப் போன்று பெண் கல்வியை எதிர்நோக்குவது சிரமமே” என்று பேராசிரியர் சிவத்தம்பி கூறுகின்றார். ஆனால் குடும்பத்திற்கான பொறுப்புக்களை மாத்திரம் அல்ல அவளது உணர்வுகளைச் சிதறடிக்கும் வகையில் கட்டுப்பாடுகளையும் ஆறுமுகநாவலர் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளார். 1865இல் அவரால் எழுதப்பட்ட “நான்காம் பாலபாடம்” என்னும் நூலில் அவரால் எழுதப்பட்ட நல்லொழுக்கம், கற்பு போன்ற விடயங்கள் வரலாற்றைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் பத்தாம் பசலித்தனமான பிற்போக்குக் கருத்துக்களால் நிறைந்து வழிவதாக நூலாசிரியர் சுட்டுவதை ஆழ்ந்த கவனத்தக்கு இட்டுச் செல்ல வேண்டிய அவசியத்தை இந்நூல் ஏற்படுத்துகிறது. “விதவைகள் மொட்டையடித்தல்” யாழ்ப்பாணச் சமூக மரபில் காணப்படாத போதிலும் இந்தியப் பிராமணியக் கருத்தியல்களை “இறக்குமதி” செய்து கொண்ட ஆறுமுகநாவலர் அதனை யாழ்ப்பாணச் சைவத் தமிழ்சமூக மரபிலும் ஒட்டுவதற்கு முனைந்துள்ளார்.

காலமாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு மரபு செழிப்புறுதலா அல்லது மரபுகளை உடைத்துக் கொண்டு சமூகம் மாறுதலுக்குள்ளாவதா அல்லாவிடின் இரண்டும் இணைந்தும், முரண்பட்டும் வரலாறு இயங்கியலுக்குள்ளாவதா என்பது போன்ற வாதப்பிரதிவாதங்கள் சமூகங்களில் தொடர்ச் சக்கரமாக நிகழ்ந்து கொண்டேயிருக்கும். ஒருவகையில் ஆறுமுகநாவலரது அடுத்த கட்டத் தொடர்ச்சியாகவே சைவத்தமிழ்ப் பாரம்பரியத்தோடு வந்த சேர்.பொன்.இராமநாதனை (ஆங்கிலேயப் பெண்மணியை அவர் மணம் முடித்தபோதும்) நோக்க முடியும். இலங்கை முழுமைக்குமான தேசிய அரசியலில் நாட்டம் கொண்டு பிரபல்யம் அடைந்திருந்த இராமநாதனே முதன்முதலாகப் பெண்களுக்கான சைவப்பாடசாலையை அதுவும் விடுதிப்பாடசாலையாக யாழ்ப்பாணக் குடாநாட்டின் மத்தியில் அமைந்த மருதனாமடத்தில் 1913இல் நிறுவினார். 1820 களின் ஆரம்பத்தில் கிறீஸ்தவ மதக் குழுக்களினால் பெண் விடுதிப் பாடசாலைகள் ஏற்படுத்தப்பட்ட வேளைகளில் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்பிள்ளைகள் அப் பாடசாலைகளில் சேர்க்கப்படுவதற்கும், கல்வி பெறுவதற்கும் யாழ்ப்பாண உயர் வேளாள குலம் பல்வேறுவகைகளில் தடைகளையும், குளறுபடிகளையும் விளைவித்திருக்கின்றது.

Wednesday, June 13, 2007

தேசம், தேசியம்,
தேசிய இயக்கங்கள்

-நடராஜா முரளிதரன்-

''தேசம், தேசியம், தேசிய இயக்கங்கள் ஆகியன எந்தவொரு இறுக்கமான சூத்திரத்துக்கும் கட்டுப்பட்டவையல்ல. தேசங்கள் “இயற்கையாக” உருவாகின்றவையல்ல, மாறாகக் “கற்பிதம் செய்யப்பட்ட சமூகங்களே”.

-பெனடிக்ற் அன்டர்சன்-

இவ்வாறு “அன்டர்சன்” மொழிகின்ற போது “கற்பனைச் சமூகம்” என்ற உடனடி முடிதலுக்கு விரைந்திடாது இவ்வுலக நடைமுறை யதார்த்தங்களின் அக, புறக் காரணிகளின் அடிப்படையினால் கட்டமைந்த புரிதலுக்குள்ளான “கற்பிதமாகவே” மேற் கண்ட சொல்லாடல்களை நான் பொருள் கொள்ளவிழைகின்றேன்.

உலகப் போர்களின் போது பெரு வளர்ச்சி பெற்ற ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளில் இருந்து எழுந்த “தேசிய வெறி” அந்த நாடுகளைச் சேர்ந்த தொழிலாளி வர்க்கம் தனது தேசத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டுமா அல்லது தனது தொழிலாளி வர்க்கத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமா என்ற மாபெரும் வினாவைத் தொடுத்து நின்றது.

அசுர வளர்ச்சி கண்ட முதலாளித்துவம் ஏகாதிபத்திய விரிவு பெற்று சந்தைப் போட்டியில் இறங்கியதன் விளைவான உலகப் போர்கள் அந்தப் பேரரசுகள் சிதைந்து போகாமலே அவற்றைப் பொதுவுடமை அரசுகளாக மாற்றம் காணச் செய்து விடும் என்பதில் மார்க்சீய அறிஞர்களில் பலர் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

எனவே அவ்வாறான பேரரசுகளுக்குள் உள்ளடங்கியிருந்த தேசங்களுக்கும்,தேசிய இனங்களுக்கும் விடுதலை வழங்குவது குறித்து உரிய கோட்பாடுகளை நெறிப்படுத்துவதில் பொதுவுடமைசார் அறிஞர்களில் பெரும்பகுதியினர் மிகுந்த தயக்கம் காட்டியே வந்துள்ளார்கள்.

ஆனால் மூன்றாம் உலக நாடுகளிலிருந்து ஓடி வந்த எங்களுக்கு அந்த நாடுகளில் காணப்படும் தேசியங்களோ தாங்கொணாத சமூக, பொருளாதார, பண்பாட்டு ஒடுக்குமுறையின் வெளிப்பாடுகளாகவே கருதப்படுகின்றது.

தேசியம் என்பது “இடது” அல்லது “வலது” வகைப்பட்ட சித்தாந்த வலைக்குள் சிக்குண்டிருக்கலாம். புரட்சிகரமானதாகவோ அல்லது பழமை சார்பானதாகவோ கூட இருக்கலாம். ஆயினும் அரசியல் கருத்தாக்கம் என்ற வகையில் அது ஏற்கனவே சமூகத்தில் நிலைபெற்றுள்ள அரசியல் கேள்விக்குள்ளாக்கப்படும் வேளைகளில் தனது கருத்தாக்கச் சக்தியை நிறுவுவதற்கான வாய்ப்பான தளத்தில் எழுந்து நிற்கிறது.

பாசிசமாக எழுந்து நின்ற ஜேர்மனியத் தேசியவாதம் தொட்டு முற்போக்குப் பதாகைகளைத் தாங்கிய ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்கத் தேசியங்கள் ஈறாக அனைத்துத் தேசியங்களுமே தமது பண்டைய வரலாறுகளை, பழமை வாய்ந்த கலை - இலக்கியப் பெருமைகளை, இதிகாசத் தொன்மங்களை முரசறைவது வழக்கம்.

அண்மைக் காலத் தமிழகத்தின் வரலாறு கூட சாதியொழிப்புப் போராட்டமாக, பார்ப்பனீய எதிர்ப்புப் போராட்டமாக, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டமாக வீரியம் பெற்று ஈற்றில் தமிழ்த் தேசியமாக மாற்றம் பெற்றதை உற்றுப் பார்க்கையில் உள்ளக உணர்வுக் கிடக்கைகளான மொழியுணர்வு, பண்பாட்டுணர்வு போன்றவை சமூகங்களை ஈர்ப்பதில், அணி கொள்ள வைப்பதில் அபரிமித ஆற்றல் கொண்டவையாகக் காட்சியளிக்கின்றன.

ஆகவேதான் சமுதாயப் பிரச்சினையைத் தேசியப் பிரச்சினையிலிருந்து முற்றாகப் பிரித்துப் பார்ப்பதென்பது அந்த சமூகத்தின் அரசியல், சமூக, பொருளாதாரப் பரிமாணங்களை விளங்கிக் கொள்வதில் சிக்கல்களை ஏற்படுத்தி விடக் கூடும்.

நவீன தமிழகத்தில் எழுச்சியடைந்திருக்கும் தலித் விடுதலை உணர்வுகளும் கூட அதன் தமிழ்த் தேசியக் கலப்பிலிருந்து விடுபடவே முடியாத சம கால வரலாற்றுச் சூழலை நாம் அவதானிக்கலாம்.

தேசியம் பற்றிய எந்தவொரு கோட்பாட்டையும் வகுக்காததுதான் மார்க்சீயத்தின் மிகப் பெரும் தோல்வியாகும் என மார்க்சிய அறிஞர் ஒருவர் கூறியிருந்தார். ஆயினும் மார்க்சீய வழித் தடத்திலே பயணித்த “லெனின்” பின்வருமாறு கூறியிருந்தார்.

“ சுய நிர்ணய உரிமை என்ற அரசியல் சுதந்திரத்தை நாம் ஏற்கிறோம். அதாவது ஒடுக்கும் தேசங்களிலிருந்து பிரிவினையைக் கோருகின்றோம். அதற்குக் காரணம் நாம் பொருளாதார அடிப்படையில் நாட்டைப் பிரிப்பதற்குக் கனவு கண்டோம் என்பதாலோ அல்லது சிறிய அரசுகளை உருவாக்குதல் என்ற இலட்சியத்தைக் கொண்டிருக்கிறோம் என்பதாலோ அல்ல. மாறாக உண்மையான ஜனநாயக அடிப்படையில், உண்மையான சர்வ தேசிய அடிப்படையில், மேலும் பெரிய அரசுகளையும் மேலும் நெருக்கமான ஒற்றுமையையும் ஏன், தேசங்கள் இரண்டறக் கலந்து விடுவதையும் கூட விரும்புகின்றோம் என்பதால்தான். பிரிந்து போகும் சுதந்திரமில்லாமல் இதை நினைத்துப் பார்க்கவே முடியாது.”

“மார்க்சீயத்திற்கும் தேசியத்திற்கும் இடையேயான உறவு ஒரு சிக்கல் மிகுந்த உரையாடலாகவே தொடருகின்றது” என்று இன்னுமொரு மார்க்சீய அறிஞர் குறிப்பிட்டிருந்தார்.

எனவேதான் பொதுவுடமைச் சித்தாந்தத்தின் பேரால் உலகெங்கணும் பொதுவுடமையாளர்களும், பொதுவுடமை இயக்கங்களும் தேசிய இனப் பிரச்சினை தொடர்பாகப் புரிந்த வரலாற்றுத் தவறுகளையும், குற்றங்களையும் மறந்து விடாது மீண்டுமொரு முறை வரலாற்றின் குப்பைத் தொட்டிகளுக்குள் ஆழ்ந்து அவற்றை மீண்டுமொரு முறை புரட்டிப் பார்க்க வேண்டியுள்ளது.

சகல சித்தாந்தங்களின் பேரால் அமைக்கப்பட்ட அரசுகள் யாவுமே மக்களின் தனித்துவங்களை, அவர் தம் அடையாளங்களைப் புறந்தள்ளித் தீர்வுகளை மேலிருந்தவாறு திணித்து ஒடுக்குதலுக்குள்ளாக்கியதன் விளைவாகவே தேசியமும், தேசிய இயக்கங்களும் தோன்றின. புதிய தேசங்களும் பிறந்தன.

(துணை நூல்; : எஸ்.வி.ஆர் எழுதிய “தேசிய இனப்பிரச்சினை” என்ற கட்டுரை)
பிரிவினைக் கோரிக்கைகள்

-நடராஜா முரளிதரன்-

“சமஸ்டி” வடிவங்களை ஆய்வு செய்வதனூடாக சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகளின் அடிப்படையில் தீர்வுகளை முன் வைப்பதன் மூலம் இனப்பதற்றம் நிலவும் சமூகச் சூழ்நிலைகளில் ஓரளவு தணிவுகளை ஏற்படுத்தும் வரலாற்றுக் கள நிலவரங்களை சமாதான ஏற்பாட்டாளர்கள் என்று கூறிக் கொள்வோர் ஊக்குவிக்கும் முறைமையை உலகெங்கணும் நாம் பரவலாகக் காணுகின்றோம்.

இதே வகையான அடிப்படையைக் கருத்திற் கொண்டு 2002களில் தமிழர் தரப்பும், சிறிலங்கா அரசும் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்த வேளைகளில் “ஒஸ்லோ பிரகடனம்” என்ற பதம் ஊடகவியலாளர்கள் மத்தியில் மிகப் பிரபல்யம் அடைந்திருந்தது. இந்த “ஒஸ்லோ பிரகடனம்” மூலம் பிரிவினைக் கோரிக்கையை தமிழர் தரப்பு கைவிட்டுவிட்டதாகவே உலகப் பத்திரிகைகள் எல்லாம் தெரிவித்துக் கொண்டிருந்தன.

உள்ளக “சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய பிரதேச சுயாட்சிக்கு உரித்துடையவர்கள் என்ற முறைமையில் அது தொடர்பான தீர்வுத்திட்டங்களைப் பரிசீலிக்கத் தயார்” என்ற தமிழர் தரப்பின் அறிக்கைகள் திம்புப் பேச்சுவார்தைக் காலம் தொட்டு அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு வந்துள்ளன.

ஒஸ்லோவில் இடம்பெற்ற மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைகளின் போது கனடாவைச் சேர்ந்த அரசியலமைப்பு அறிஞர் குழாம் ஒன்று “சமஸ்டி ஆட்சியமைப்பின்” அரசியலமைப்பு அடுக்கு முறைமைகள் தொடர்பாக இரு தரப்பினருக்கும் ஆலோசனைகளை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. இதில் முன்னாள் ஒன்ராறியோ மாகாண முதல்வர் “பொப் ரே”யும் அடங்கியிருந்தார்.

கனடா நாட்டின் அரசிலமைப்பு நிபுணர்கள் இரு தரப்பினரோடும் கருத்துக் கூறல்களையும், உரையாடல்களையும் நிகழ்த்தியதன் விளைவாகவே “உள்ளக சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகளின் அடிப்படையில், தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகத்தில் ஐக்கியமான இலங்கைக்குள் சமஸ்டி ஆட்சி முறை தழுவிய தீர்வு” ஒன்றை ஆராய்ந்து பார்ப்பதற்கு இரு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டது.

தேசங்கள் அமைக்கப்பட்டுவிட்டாலும் தேசத்துள் வாழும் மக்களுக்கான பிரச்சினைகள் வேறு ரூபங்களில் தொடரவே செய்யும் எனக் கருத்துக் கூறும் அறிஞர்கள் வலிமையுடைத்த தேசியம் சந்தையை விரிவு படுத்தவும், புவியியல் பரப்பு எல்லைகளைத் தக்க வைத்துக் கொள்ளவும், உள்ளக மக்களின் பிரச்சினைகளைத் திசைதிருப்பி விடவும் வன்முறை சார்ந்த வழித்தடத்திலேயே பயணிக்கின்றது என்பதில் நம்பிக்கை கொள்ளுகிறார்கள்.

பெரியார் ஓரிடத்தில் கூறுகிறார். “இந்தியா ஒரு தேசமா? அதற்கு மொழி ஏது? மதம் ஏது? இந்து மதத்தால் இந்தியா தேசம் ஆயிற்று என்றால்….இஸ்லாமியருக்கும், கிறீஸ்தவருக்கும், பௌத்தர்களுக்கும், பார்சிக்களுக்கும் இந்தியா தேசமாகுமா?....மொழியைக் கொண்டு தேசம் பிரிப்பது என்றால் மாகாணம் ஒன்றுக்கு நான்கு, ஐந்து தேசங்கள் ஆகிவிடாதா?”

இங்குதான் உருவாக்கப்பட்ட, மற்றும் உருவாகி வரும் தேசங்களுக்குள்ளேயும் மேலும் புதிய வகைப் பிரச்சினைகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. கனடாவில் பிரஞ்சு மொழி பேசும் மக்களின் கியூபெக் பிரிவினைப் போராட்டத்தின் போது இப் பிரச்சினை ஒட்டாவோவின் அதி உயர் நீதிமன்றத்தால் கையாளப்பட்ட போது அதன் தீர்ப்பின்; சாரமானது இவ்வாறு கூறுகின்றது.

“அரசியல் சுதந்திரத்தைத் தேர்ந்தெடுக்கும் அல்லது நிறுவிக் கொள்ளும் உரிமையான வெளியக சுயநிர்ணய உரிமை, மேலாட்சிக்கு உட்பட்டு வாழும் எல்லாத் தரப்பு மக்களுக்கும் உரித்தானதாகும். ஒரு மக்கள் சமூகம் இன்னொரு சமூகத்தின் மேலாதிக்கத்தினுள் சிக்குண்டு தவிக்கும் போது அடக்குதலுக்கு உள்ளான சமூகமானது வெளியக சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டலாம்.” “மேலும் ஒரு மக்கள் சமூகம் தனது உள்ளக சுயநிர்ணய உரிமையை அர்த்தபூர்வமான முறையில் அடைவதற்குத் தடை ஏற்படுமானால் இறுதி வழிமுறையாகப் பிரிந்து செல்லும் உரிமையைப் பிரகடனப்படுத்த அந்த மக்களுக்கு உரிமையுண்டு.”

இதே வகையிலான அம்சங்களை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை தொடர்பான பிரகடனங்களையும் நாம் கண்டு கொள்ள முடியும். இங்கு வெளியக சுயநிர்ணய உரிமையென்பது ஒரு மக்கள் சமூகமானது தனது அரசியல் தலைவிதியைத் தானே நிர்ணயித்துக் கொள்ளுமுகமாகப் பிரிந்து சென்று தனது அரசை நிறுவிக் கொள்ளுதல் என்பதாகும்.

அவ்வாறு ஓர் அரசைத் தமிழ்த் தேசியம் நிறுவ முற்படுகையில் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியப் பிரதேசம் என்று பிரகடனப்படுத்துகின்ற வடக்கு-கிழக்கு இணைந்த நிலப்பிரதேசத்தில் கிழக்கின் புவியியல் அமைவிடம் தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் பரவலாகவும், செறிவாகவும் வாழும் சூழ்நிலை காணப்படுகின்றது.

எனவே இங்கு தமிழ்த் தேசியத்தின் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையின் அடிப்படை சார்ந்து கட்டமைக்கப்படும்(எதிர்காலத்தில் கட்டமைக்கப்படுமாயின்) தமிழ் அரச நிறுவனமானது எவ்வாறு முஸ்லீம், சிங்கள மக்களின் அரசியல் இருப்புக்களையும், எதிர்பார்ப்புக்களையும் எத்தகைய சவால்களுக்கூடாக கையாள முனையும் என்பதிலேயே தமிழ்த் தேசத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் தீர்மானகரமாக வெளிப்படுத்தப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இந்கு உள்ளக, வெளியக சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைகளை தமிழ்த் தேசத்துக்குள் வாழும் சிறுபான்மை இனங்களுக்கு வழங்குவதில் எவ்வாறான அணுகுமுறையைப் பிரயோகித்தல் என்ற மாபெரும் கேள்வி எம் முன்னே கிளர்ந்தெழுகின்றது.

இவ்வாறான சிறுபான்மை இனங்களின் நியாமான அபிலாசைகளை அனைத்துலகச் சட்டங்களின் அடிப்படையில் கையாள மறுத்து நிற்கும் போக்கே ஏற்கனவே கட்டப்பட்ட தேசங்களிலும், தேசியங்களிலும் பல்வேறு வகையான குழப்பகரமான நிலைகளுக்குத் தோற்றுவாய்களாய் அமைந்தன. தேசங்களின் கட்டமைவானது உலகப் போர்களாகவும், இனங்களுக்கிடையேயான வன்முறைக் களங்களாவும் மாறுண்ட போது மனிதநேயம், மானுடம் போன்றவை தூக்கி வீசியெறியப்பட்டன.

தேசங்கள் உடைகின்றன. எல்லைகள் இல்லாத, கடவுச் சீட்டுக்களின் தேவையேற்படாத ஒரு உலகம் குறித்த கனவுகள் பிறக்கின்றன.

எனவேதான் அமைய முற்படும் “தமிழ்த் தேசமும்” தமிழ் வெறியும், இன்னும் பல “வெறிகளும்” கொண்ட தேசமாக மாறி விடக் கூடாது.

Sunday, May 27, 2007

தேசியம் என்பது கதையாடலா?

-நடராஜா முரளிதரன்-

தேசம், தேசியம் என்ற சொல்லாடல்கள் மிகப் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வரும் உலகச் சூழலே இன்று மேலோங்கியுள்ளது. இன்றைய உலக நெருக்கடிகள் பலவும் இந்தச் சொற்பதங்களின் உச்சக்கட்டத் தாக்கங்களை உள்ளடக்கியதாகவே கிளர்ந்த வண்ணம் உள்ளன.

நாடுகளுக்கு நாடுகள், தேசங்களுக்குத் தேசங்கள் இச் சொற்றொடர் குறித்த வியாக்கியானங்களோ அல்லது வரைவிலக்கணங்களோ வேறுபட்டுக் காணப்படுகின்றன. மொழித் தேசியத்தை அடிப்படையாகக் கொண்டு தேசங்களும், தேசியங்களும் நவீன வரலாற்றில் பிறப்பெடுத்தமை குறித்த வரலாறுகளைப் பதினெட்டாம்; நுற்றாண்டு கால ஐரோப்பிய அரசியல், அறிவியல் புரட்சிகளின் வெளிப்பாடுகளாகவே ஆய்வாளர்கள் நோக்குகின்றனர். தேசியத்தின் எழுச்சியும், மதச் சிந்தனைகளின் வீழ்ச்சியும் சமகால அளவில் நிகழ்ந்ததன் விளைவாகப் பதினெட்டாம் நூற்றாண்டு கால ஐரோப்பாவில் நவீன தேசங்கள் தொடர்பான கட்டுமானங்கள் வலுப்பெறத் தொடங்கியிருந்தமையை உணர முடியும்.

இத்தகைய நவீன தேசங்களின் எழுச்சியில் காலனியாதிக்கம், மத நிறுவனங்களின் ஏகபோகம், முடியாட்சி போன்ற அதிகாரபீடங்களுக்கெதிரான கிளர்வுகளின், எழுச்சிகளின் உணர்வுகள் ஊட்டம் பெற்றிருந்தன. ஆயினும் தேசியம் என்பதானது மரபு, இனம், மதம், மொழி போன்ற ஒருமைப்பாடுகளிலிருந்து எழும் அல்லது கட்டப்படும் பொதுவான உளவியல் சார்ந்த உணர்வுத்தளத்தையே பெரிதும் சார்ந்து நிற்கிறது.

அவரவர் முகிழ்த்து வந்த அரசியல் அடியினையொற்றித் தேசிய இனம் தொடர்பான கருத்துருவாக்கங்கள் எம்மால் பேசப்பட்டு வந்துள்ளன. இந்த வகையில் தேசிய இனம் தொடர்பாக நான் வரித்துக் கொண்டிருந்த கருத்தமைவானது மொழி, பண்பாடு, தொடர்ச்சியாக வாழ்ந்த நிலப்பிரதேசம், தங்களுக்கேயுரித்தான பொருளாதார வாழ்வு போன்ற வரைமுறைகளைக் கொண்டிருக்கும் மக்கள் குழுமங்களைத் தேசிய இனங்களாக வரையறுத்துக் கொள்ளலாம் என்பதாகவே அமைந்தது. இங்கு மதம் இணைந்து கொள்ளவில்லை. ஏனெனில் ஈழத்தமிழ்த் தேசியத்தின் பரிமாணங்களுக்கு வலுவூட்டுவதே நான் சார்ந்திருந்த அரசியல் போக்கின் நலன்களுக்கு அமைவாக இருந்தன.

“தேசியவாதம் உச்சத்திலிருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பியத் தேசியங்களால் அவற்றிற்கு முட்டுக்கொடுப்பதற்காக உருவான சமூகவிஞ்ஞானக் கற்கைநெறிகள் இன்று முற்றாக மறக்கப்பட வேண்டியவை, மாற்றியமைக்கப்பட வேண்டியவை என்பது உலகப் பொதுக் கல்விக் கருத்து” எனத் தனது உரையொன்றில் பேராசிரியர் பொ.இரகுபதி குறிப்பிட்டிருந்தார்.

மொழி, மதம், வரலாறு, பொருளாதாரம், புவியியல் அமைவிடம் போன்ற பொதுக் காரணிகளை அடிப்படையில் வைத்துக் கட்டப்பட்ட தேசங்களுக்குள்ளேயும் புதியவகைச் சிக்கல்கள் எழுந்த வண்ணமே இருந்தன.

வர்க்கப்பிரச்சினை தீர்க்கப்படுழ் சமூகங்களில் இன, மத, மொழி முரண்பாடுகளுக்கான வாய்ப்புக்கள் அழிந்தொழிந்து போய்விடும் என்பதான சூத்திரத்தையே இடதுசாரிகளில் பெரும்பாலோனோர் ஒப்புவித்துக் கொண்டிருந்தார்கள்.

மார்க்சீய-லெலினியக் கோட்பாடுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதாகக் கூறப்பட்ட சோசலிச நாடுகளிலேயும் கூட சிறுபான்மைத் தேசிய இனங்கள் அடக்குதலுக்கு உள்ளான வரலாறுகள் கண் முன்னே விரிந்து கிடக்கின்றது.

இவ்வாறான சூழ்நிலைகளுக்கு இடையே இங்கு நான் விசாரிப்புக்கு உட்படுத்த முனையும் விடயமானது ஈழத்திலே வாழுகின்ற தமிழ்பேசும் மக்களைத் தேசியம் என்ற வேலிக்குள் அடைப்பது தொடர்பான விடயத்தை ஒட்டியதெனலாம்.

ஈழத்தமிழ்த் தேசியமாக உச்ச வளர்ச்சியுற்ற யாழ்ப்பாணியம் கீழ்த்தட்டு மக்கள் குறித்துக் கவலை கொள்ளவில்லை - கிழக்கு மக்கள் குறித்தோ, முஸ்லீம் மக்கள் குறித்தோ அக்கறைப்படவில்லை - தலித்துக்கள் ஒடுக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்ற வகையில் இவ்வாறான தொடர் குற்றச்சாட்டுக்கள் மாற்றுக்கருத்தாளர்களால் ஈழத்தமிழ்த் தேசியத்தை நோக்கி முன்வைக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது.

வளர்ச்சியுறும் எத்தேசியத்துக்குள்ளும் அதிகாரசக்திகள் தங்கள் நலன்களைப் பேணுமுகமாக மரபுகளின் காத்தலை, பழமையின் தொடர்ச்சியை நிறுவுதலுக்கான அவாவினைக் கொண்டிருப்பர்.

மறுபுறத்தில் தேசிய இனவிடுதலையென்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த விடுதலையல்ல. விடுதலை குறித்த பயணத்தில் ஒரு படிக்கட்டமாக அதனை ஊடறுத்தலே ஏற்புடையதாக அமையும்.

“உலகம் கிராமமாகச் சுருங்கிவிட்டது”, “தேசம் என்ற கருத்தமைவு உடைந்து நெடு நாளாயிற்று” என்பது போன்ற கருத்துருவாக்கங்கள் வீரியம் பெற்றுவரும் இன்றைய உலகச் சூழுலிலும் கூடத் தேசங்களுக்குள்ளும், தேசியங்களுக்குள்ளும் காலகாலமாக நசிக்கப்பட்ட மக்கள் குழுமங்கள் தங்கள் நியாயத்தீர்ப்புக்காக குரலெழுப்புவதைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாதுதான்.

அதேவேளை இந்த முரண்பாடுகளையெல்லாம் வெளித்தாண்டிப் பலம் பொருந்திய இன்னுமோர் சக்தி இந்த முரண்தழைகளுக்குள் சிக்குண்ட சமூகங்களை அடக்குதலுக்கு உட்படுத்த முனையுமாக இருந்தால் அவ்வாறான சமூகங்கள் எடுத்தாள வேண்டிய நிலைப்பாடுதான் என்ன? இவ்வாறான எனது கூறலைப் “பச்சை யாழ்ப்பாணியம்” என்று பிரகடனப்படுத்த உங்களில் பலர் துடித்தெழலாம்.

எவ்வாறு ஒடுக்குதலுக்கு உட்பட்டதால் விழைந்த தேசியவாதம் குறுந்தேசியவாதமாக மாறிவிடக்கூடாதோ அதே சமாந்தரத்தில் வரலாற்றுச் சக்கரங்களைப் பின்னோக்கி இழுத்து நிறுத்துகின்ற குளறுபடிகளையும் அதிகாரத்தை நோக்கி உண்மை பேசுவதாகக் கூறிக்கொள்வோர் நிகழ்த்தி விடக் கூடாது.

கடந்த 25 வருடங்களாக மக்களே மகத்தான சக்திகள், அவர்களே இறுதியில் வரலாற்றைத் தீர்மானிப்பார்கள் என்று மொழிந்து வந்தபோது ஏற்படாத சந்தேகம் இன்று வரலாறு திட்டமிட்டுக் கட்டமைக்கப்படுவதாகவோ அன்று யாழ் குடாநாட்டு மத்தியதர வர்க்கத்தின் அபிலாசைகளுக்காகத் திணிக்கப்பட்ட “பெருங்கதையாடலாகவோ” தமிழ்த் தேசியம் சித்தரிக்கப்படுவதும் பல முனைகளில் வiலாற்றுத்திரிபுகளும், மிகைப்படுத்தல்களுமாய் நிறைந்து வழிகின்றது.

சமூக விடுதலைக்கான போர்த்தொடுப்பில் தேசியக் கருத்தமைவின் பெறுமானங்களைக் கேள்விக்குட்படுத்துதல் அதன் குறைபாடுகள் குறித்த பரிமாணங்களை அளவைப்படுத்துதல் என்பவை குறித்து எனக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது.

மாறாக அவற்றை முற்றிலும் நிராகரிப்பது குறித்தோ அவையுள்ளடக்கி வைத்திருக்கும் முற்போக்குக் குணாம்சங்களை மறுதலிப்பது குறித்தோ பெரிதும் அச்சப்படுகின்றேன்.

Friday, December 08, 2006

நான் போக முடியாத “மாவீரர் நாள்”

-நடராஜா முரளிதரன்-

1998 இன் நடுக்கூறில் நான் கனடாவிற்குள் நுழைந்த பின் அரசியல் தஞ்சம் கேட்டு 40 நாட்களின் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தேன். அதன் பின் ஏறத்தாள இரண்டரை மாதங்கள் வரை கனடியச் சிறைகளுள் அடைக்கப்பட்ட பின்னர் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் கனடிய டாலர்கள் பிணை(ஒரு இலட்சம் வீடு, ஐம்பதினாயிரம் பணம்) அரசியல் செயல்பாடுகள் தொடர்பான 14 நிபந்தனைகள் உட்பட இரு வாரங்களுக்கு ஒரு தடவை “இமிக்கிரேசன்” அலுவலகத்திற்குச் சென்று கையெழுத்திடல் போன்ற கண்டிப்பான நீதிமன்ற உத்தரவுகளின் பேரிலேயே நான் விடுதலை செய்யப்பட்டிருந்தேன்.

அதன் பின் ஏழரை வருடங்களின் பின் இவ்வருட மத்தியில் எனது பெயருக்கு முதற் தடவையாக ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகக் கூடிய வேலை செய்ய அனுமதிக்கும் பத்திரம் வழங்கப்பட்டது. ஆயினும் இது வரை இலவச மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கான “ஹெல்த் கார்ட்” எனக்கு வழங்கப்படவில்லை.

எனது மகள் உயர் கல்வி பெறுவதற்காக பல்கலைக் கழகத்துள் உட் புகுந்த போது அவளால் எந்தக் கடனுதவியையும் “ஒன்ராரியோ” அரசிடமிருந்து பெற முடியாமல் போனது. மாறாக “வெளிநாட்டு மாணவர்” என்ற இலச்சினை பொறிக்கப்பட்டு இரண்டரை மடங்குக்கு மேலான (குடியுரிமை பெற்ற அல்லது நிரந்தர வதிவிட உரிமை பெற்ற மாணவர்களோடு ஒப்பிடுகையில்) கட்டணத்தைப் பல்கலைக்கழகத்திற்குச் செலுத்துமாறு நிர்பந்திக்கப்பட்டாள்.

இவ்வாறான கழுத்தை நெரிக்கும் பொருளாதார நெருக்கடிகள் ஒரு புறமிருக்க அரசியல் செயல்பாடுகள் தொடர்பான நீதிமன்றத்தின் கண்டிப்பான 14 நிபந்தனைகளும் எத்தகைய மீறல்களுக்கும் உட்படுத்தப்படாமல் என்னால் பேணப்பட வேண்டியவை. அல்லாவிட்டால் எனது பிணைகள் யாவும் பறிமுதல் செய்யப்பட்டு நானும் சிறையுள் மீண்டும் தள்ளப்படலாம்.

அத்தகைய நிபந்தனைகளுள் “விடுதலை புலிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாக ஆதரிக்கும் கூட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள் போன்றவற்றில் நான் பார்வையாளனாகவோ அல்லது பங்காளனாகவோ கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை என்பது முக்கியமான ஒன்று.

அரசியல் வேலைத் திட்டங்களை ஆழ் மனதில் புதைத்துக் கொண்டு கனடாவுக்கு நான் வந்ததாக யாரும் என்னை சந்தேகிக்கத் தேவையில்லை. ஆயினும் “மாவீரர் நாள்” வந்து போகும் வேளைகளில் அவ்வாறான நிகழ்வொன்றுக்கு நான் போக முடியாதது குறித்து எனது மனம் துயருறுவது வழக்கம்.

இத்தகைய எனது துயரத்துக்கு “அரசியல் முலாம்” பூசி விட முடியாது. நான் சார்ந்த அல்லது சார முயலுகின்ற அரசியல் சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டுச் சாதாரண தனி மனிதனாவே அந்த வேதனையின் வெளிப்பாடுகளைச் சுமந்து செல்ல நேருகிறது. ஈழப் போராட்ட களம் பல்லாயிரக்கணக்கான மக்களின் உடல்களில் இருந்து கொப்பளித்துப் பாய்ந்த குருதி வெள்ளத்தினால் சேறாகிய “குருN~த்திரமாகவே” கடந்த இரு தசாப்தங்களாகக் காட்சியளிக்கிறது.

அந்த மண்ணில் வாழ்ந்த, வாழும், வீழ்ந்த, வெளியேறிய மண்ணின் மைந்தர்கள் யாவருக்கும் அந்த மண்ணோடு பிணைந்த சொல்ல முடிந்த, சொல்லில் வடிக்க இயலாச் சரிதங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்றாக என்னை மிகவும் பாதித்து நிற்கின்ற ஈழப் போர்க்களத்தில் வீழ்ந்து மடிந்த எனது நண்பன் “லிங்கம்” பற்றிய எண்ண அலைகள் சிலவற்றையே இங்கு மீட்க முயலுகின்றேன்.

1970 களில் காங்கேசன்துறை, தையிட்டியிலுள்ள “பொன்னுச்சாமி” வீட்டிற்கு மலையகத்திலிருந்து பத்து வயசு வேலைக்காரச் சிறுவனாக யாழ்ப்பாண “மேலாதிக்கப்” பேச்சு வழக்கில் “வடக்கத்தைப் பெடியனாக” லிங்கம் வந்திருந்தான்.

பொன்னுச்சாமி குடும்பத்தினர் கோவில், திருமண விழாக்களுக்கு சப்பறம் கட்டுதல், மாலை கட்டுதல், சிறிய கோவில்கள் சிலவற்றுக்குப் பூசை செய்தல் போன்ற பணிகளைப் புரிந்து கொண்டு “பாஸ்கரன் கோ~;டி” என்ற பெயரில் சிறிய இசைக் குழுவொன்றையும் இயக்கிக் கொண்டிருந்தார்கள்.

வந்த ஆரம்பத்தில் “லிங்கம்” அந்தக் குடும்பத்திற்குத் தேவையான எடுபிடி வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். அந்த வேளைகளில் மாலை கட்டுவதற்குத் தேவையான முல்லை மலர்களைக் கொய்வதற்காக அடிக்கடி அவன் எனது வீட்டுக்கு வர ஆரம்பித்தான். அந்த வேளைகளில்தான் அவனுக்கும், எனக்குமான நட்பு மலர ஆரம்பித்தது. பின்பு அவை வாசிகசாலைச் சந்திப்பு, மாலை நேரங்களில் விளையாட்டு மைதானங்களில் சந்திப்பு எனவும் அவ் வேளைகளில் எங்களுக்குத் தெரிந்த அரசியல் குறித்துப் பேசிக் கொள்ளுதல் எனவும் நீண்டு விரிந்து சென்றது.

வழமையான யாழ்ப்பாண நடைமுறைகளுக்கு மாறாகப் “பொன்னுச்சாமி” குடும்பத்தினர் “லிங்கத்தை” தங்களில் ஒருவனாகக் கருதி அவனது பெயரை “பாஸ்கரன்” எனப் பெயர் மாற்றப் பதிவும் செய்து கொண்டனர்.

யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கு முன் மிகச் சிறிய வயதுகளில் வசதி படைத்த பரங்கிய, சிங்களக் குடும்பங்களின் வீடுகளில் வீட்டு வேலைகள் புரிந்தமையினாலும், மலயகப் பின்னணியில் பிறந்து வளர்ந்தமையினாலும் “லிங்கம்” அந்தச் சின்ன வயதுகளிலேயே சிங்களம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் மிகச் சரளமாகப் பேசக் கூடியவனாக இருந்தமை எங்களில் பலரைப் பிரமிக்க வைத்தது.

எங்கள் இருவரையும் பிணைத்துக் கொண்ட அந்தப் பால்ய சிநேகிதம் காரணமாக நாளடைவில் நான் சார்ந்த அரசியல் கருத்துக்கள் பால் அவன் ஈர்க்கப்படலானான் என்று கூறுவதை விடவும் என்னால் அதை நோக்கி இழுக்கப்பட்டான் என்று கூறுவது மிகப் பொருத்தமான உண்மையாக அமையுமோ எனச் சில வேளைகளில் நான் எனக்குள் நினைத்துக் கொள்வது வழக்கம்.

அவனுக்குத் தாய், தந்தையர், சகோதரர்கள், சொந்த உறவுகள் என யாரும் இருந்ததில்லை. எங்களோடு சேர்ந்து நாடகம் நடிப்பது, இசைக்குழுவில் “தபேலா” வாசிப்பது, ஓய்வான மாலைப் பொழுதுகளில் “கிரிக்கெட்” ஆடுவது போன்றவைகள் அவனைப் பரவசப்படுத்தின. சில வேளைகளில் நானும், லிங்கமும், எங்களது இன்னுமொரு நெருங்கிய நண்பனுமான நிமலேந்திரனும் சேர்ந்து கொண்டு காங்கேசன்துறைக் கடற்கரையில் “பனங்கள்” அருந்திப் “பார்ட்டி” கொண்டாடினோம். எனது மனைவியைக் குரும்பசிட்டியிலிருந்து நான் தூக்கிக் கொண்டோடி வருவதற்கு என்னோடு கூடவே அவனும் வந்திருந்தான்.

ஆனாலும் 80களில் வரலாறு இறுக்கிய “இன முரண்” சிக்கல்கள் வரலாற்றில் என்றுமேயில்லாத வகையில் இலங்கைத் தீவைப் பிரளயத்தை நோக்கித் தங்குதடையின்றிப் பயணிக்குமாறு உந்தித் தள்ளியது.

நாங்களும் அதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. நான் ஏற்கனவே இரகசியமாகப் பணிபுரிந்து கொண்டிருந்த அமைப்பை நியாயப்படுத்துவதிலும், அதன் அமைப்பு வேலைகளைக் கட்டுவதிலும் தீவிரமாக ஈடுப்டிருந்த வேளைகளில் இயல்பாகவே “உணர்ச்சிவசப்படும்” இயல்பு படைத்த “லிங்கம்” எனக்கு உதவ முன் வந்தான்.

நாள் தோறும் இரவுகளைப் பகலாக்கி எம்மால் முடிந்தளவு அரசியல் வேலைத்திட்டங்களில் எங்களை ஈடுபடுத்திக்கொண்டிருந்தோம். அவ்வேளைகளில்தான் ஓர் நாள் இரவு “கர்ப்பிணியாக” இருந்த எனது மiவியைப் பார்க்கச் சென்ற சமயம் பார்த்து பலாலி இராணுவத்தினரால் நான் கைது செய்யப்பட்டேன்.

எனது கைது ஏற்படுத்திய காயம், அதனால் எழக்கூடிய சிக்கல்கள் அனைத்துமே “லிங்கத்தை” போர்க் கோலம் பூணுமுகமாக தமிழ்நாட்டுப் பயிற்ச்சி முகாமை நோக்கிப் படகேற வைத்தது. பயிற்ச்சி முடிந்து ஆயுதம் தாங்கிய “போராளியாக” மீண்ட “லிங்கம்” “யஸ்ரின்” என்ற புதிய பெயர் கொண்டு அழைக்கப்பட்டான்.

நான் சிறைக்குள் கம்பிகளை எண்ணிக்கொண்டிருந்த வேளைகளில் களங்கள் பல புகுந்த “யஸ்ரின்” பல விழுப்புண்களைத் தனதாக்கிக் கொண்டிருந்தான்.

அந்த “யஸ்ரின்” ஆகிய எனது “லிங்கம்” காலச் சூறாவளி என்னைச் “சுவிசில்” கரை சேர்த்த 90 களில் மணலாற்றில் இடம்பெற்ற “போர் விமானக் குண்டுவீச்சில்” பொடித் துகள்களாக்கப்பட்டான். சுக்கு நூறாக்கப்பட்ட அவனது தசைப் பிண்டங்களையோ, நொருங்கி முறிந்த அவனது எலும்புத் துண்டங்களையோ யாராலும் சேகரிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

என் மண் குறித்த “பிரக்ஞையை” தூண்டிவிட்ட “யாழ்ப்பாணத்தவன்” நான் தப்பிவிட, இழப்பதற்கு “உயிர்” தவிர ஏதுமற்ற அசல் பாட்டாளியான மலை நாட்டுத் தோட்டத் தொழிலாளி குடும்பத்தின் “லயனுகளுக்குள்” பிறந்து வளர்ந்த “லிங்கம்” தன்னை ஏன் ஆகுதியாக்கிக் கொண்டான்?

அவனது இறப்புக் குறித்து அழுவதற்கு இரத்த உறவுகள் எவருமே அற்ற இந்த உலகில் “லிங்கம்” அவன் மரியாதைக்கு உட்படுத்தப்படும் அன்றைய நாளிலாவது தனி மனிதனாக என்னால் சென்று சில கணங்கள் தொழப்படுதற்கான தடைகளை ஏன் என்னால் வெற்றி கொள்ள முடியாதுள்ளது?

Thursday, November 09, 2006

தேர்தலும், தமிழ் வேட்பாளர்களும்

-நடராஜா முரளிதரன்-

நவம்பர் 13 ஆம் தேதி நடைபெற இருக்கும் நகரசபை, பிரதேச சபை, கல்விச் சபைத் தேர்தல்களில் வாக்களிப்பது தமிழர்களின் வரலாற்றுக் கடமையெனவும், கனடாவில் தமிழர்களுக்கு “அரசியல் தலைமைத்துவம்”, “பிரதிநிதித்துவம்” தேவையெனவும் கடந்த சில தினங்களாகப் பத்திரிகைப் பத்திகள் எழுதப்பட்டும் , பேட்டிகள் வழங்கப்பட்டும் உள்ளுராட்சிச் சபைத் தேர்தல்களுக்கான தேர்தல் பிரச்சாரப் பரப்புரைகள் ரொறொன்ரோ, மார்க்கம், மிசிசாகா எங்கணும் பரவலாக நடைபெற்ற வண்ணம் உள்ளன.

1977 இல் இடம்பெற்ற இலங்கைப் பொதுத் தேர்தலின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமிழீழத்துக்கான மக்கள் ஆணையைப் பெறுவதற்கான சர்வஜன வாக்கெடுப்;பாகவும், இறுதித் தேர்தலாகவும் அத் தேர்தலைப் பிரகடனப் படுத்துவதாகக் கூறி ஒட்டுமொத்ததாகத் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு அதற்கு ஆதரவாக வாக்களிப்பது வரலாற்றுக் கடமையென அழைப்பு விடுத்திருந்தார்கள். ஆனால் இன்று ஏறத்தாள மூன்று தசாப்தங்களைக் கடக்கின்ற சூழலிலும் சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியல் சாசனத்துக்குள் உட்பட்டுத் தமிழர் தரப்பின் அனைத்து வகையினரும் பங்கு கொண்ட தேர்தல் களங்களாகவே அண்மைய தேர்தல் களங்கள் யாவும் இலங்கைத் தீவில் அரங்கேறியிருந்தன.

எனவேதான் தேர்தல் காலத்து அரசியல்வாதிகளின் பிரச்சாரப் பரப்புரைகளின் போது வழங்கப்படும் வாக்குறுதிகள் குறித்த மக்களின் நம்பகத் தன்மை மேற்குலக நாடுகள் தொட்டு, மூன்றாம் உலக நாடுகள் ஈறாக எவ்வாறு அமையப் பெறுகின்றன என்பது மக்களைப் பொறுத்த வரையில் மிகச் சிக்கலான, சோகமான விடயமாக அமைந்து வருகின்றன.
கனடாவில் ரொறொன்ரோ (மார்க்கம், மிசிசாகா உட்பட) போன்ற பல்லினச் சமூகங்கள் நிறைந்து வாழும் பெரு நகரம் ஒன்றில் உள்ளுராட்சிச் சபைத் தேர்தல் ஒன்றில் போட்டியிட்டு வெற்றி பெறுவதன் மூலம் கனடியத் தமிழ் மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்கலாம் என்று மொழியப்படும் வாதங்களோ , அல்லது இங்கு வாழுகின்ற தமிழ் மக்களுடைய உணர்வுகளை, அபிலாசைகளைப் பிரதிபலிக்கலாம் என்பவை போன்ற கருத்துக்களோ மிகுந்த விவாதத்திற்கு உரியன என்றே நான் கருதுகின்றேன்.
சம~;டி ஆட்சி முறை அமுலில் இருக்கும் கனடா போன்ற நாட்டில் அதிகாரங்கள் தேசிய அரசு, மாகாண அரசு, உள்ளுராட்சிச் சபைகள் என்பவற்றுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் நகர சபைகள் போக்குவரத்து, சூழல், பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள், பாதுகாப்பு, வரி போன்ற பல விடயங்களைக் கையாளுகின்றது.

எனவே பல்லின மக்கள் செறிந்து வாழும் பெரு நகர மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யப் புறப்பட்டுத் “தேர்தல் களத்தில்” குதித்தவர்கள் தாம் சார்ந்த குறித்த ஓர் “இன” மக்களையோ, அவர்கள் சார்ந்த நலன்களையோ அடையாளப்படுத்த முனைவதாகக் கூறுவது தமிழ் “வாக்கு வங்கியினைக்” கவர்ந்திழுப்பதற்கான உத்தியாகவே கருத முடியும்.

மறு புறத்தே போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் இவ்வாறான தேர்தல்களில் வெற்றி பெறுவதன் மூலம் கனடா வாழ் தமிழ்ச் சமூகத்திற்கு கனடாவின் “தேசிய நீரோடையில்” இணைவதற்கான நம்பிக்கை ஊட்டத்தை வழங்க முடியும் என்பது ஏற்புடையதாக அமையும். பல்வேறு துறைகளில் கால் பதித்திருக்கும் தமிழர்களது வளர்ச்சி மேலும் வலுவடைவதற்கான படிக்கட்டுக்களில் ஒன்றாக அரசியலில் உட்புகுதலும் ஒன்று என்ற கணிப்பு அண்மைக் காலங்களில் தமிழ் பேசும் சிலரால் கூறப்பட்டு வருகிறது.

கனடா வாழ் தமிழ் சமூகம் என்பது கனடிய சிவில் சமுதாயத்தின் கூறுகளில் ஒன்று. உலக அரங்கில் கனடா ஜி-7 நாடுகளில் ஒன்று. அதாவது உற்பத்தித் தொழில் துறையில் அதி முன்னணியில் நிற்கும் உலக நாடுகளில் ஒன்று. ஐக்கிய நாடுகள் சபை பட்டியலிடும் உலகின் மிகச் சிறந்த நாடுகள் வரிசையில் பல தடவைகள் முதலிடத்தைத் தட்டிக் கொண்ட நாடு கனடா. அந்த வகையில் இன்றைய உலகு தழுவிய “முதலாளித்துவச் சமூக” முறைமைக்குள் பல்வேறு வகை “அனுகூலங்களைப்” பெற்றுத் திளைக்கும் நாடுகளில் கனடாவும், அங்கு வாழும் தமிழ்ச் சமூகமும் அமைகிறது.

எனவே மூன்றாம் உலக நாடுகளில் வாழும் 95 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட வறிய மக்களோடு ஒப்பிடுகின்ற போது எமது கனடா வாழ் தமிழ் சமூகம் வலுப்படைத்து விளங்குகிறது என்றே நான் எண்ணுவேன். ஆகவே அத்தகைய “வளம்” படைத்த சமூகத்தை மேலும் வலுப் படைத்தாக மாற்றி “வீறு” கொண்டெழுவதற்கான பயணமாக இங்கு நிகழும் உள்ளுராட்சித் தேர்தல் அரங்குகள் அமையப் போவதில்லை.

அரசியல் பிரவேசத்துக்கான ஆரம்ப கட்டமாக நகரசபை அரசியல் ஊடாக தமிழர்கள் அரசியல் நிகழ்த்தத் தயார் நிலையில் உள்ளதாக நாங்கள் “புல்லரித்துப்” போவதாலோ, “புளகாங்கிதம்” அடைவதாலோ தினந்தோறும் சொல்லொணாத் துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் எம் ஈழத்துத் தமிழ் சகோதரர்களுக்கு நல்லது எதுவும் நிகழப் போவதில்லை.

தனி மனிதர்களைப் பலப்படுத்துவதற்கான “வேட்டைக் களங்களில்”;, “அரசியல் சூதாட்டத்தில்” தேர்தல்கள் எவ்வாறு எமது சக தமிழ் வேட்பாளர்களால் அல்லது அவர்கள் சார்ந்தவர்களால் கையாளப்பட்டது என்பதை கடந்த உள்ளுராட்சித் தேர்தல்களின் போது தமிழ் வாக்காளர்கள் பட்டு உணர்ந்து கொண்டதையும் இச் சமயத்தில் எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது.

மறு புறத்தில் வெற்றி பெற்ற பின் தமிழ் வேட்பாளர்கள் கர்வம் கொண்டும், மாலைக்கு அலையும் “பிரமுகர்களாக” மாறியும், முழங்கிய வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டும் “மூன்றாம் உலக” அரசியலை இங்கு இழுத்து வரும் அவலத்தையும் நிகழ்த்தி விடக் கூடாது.

ஆனால் இவ்வாறான குழப்பகரமான எனது “கருதுகோள்களுக்கு” மத்தியிலும் மார்க்கம் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் பேராசிரியர் இலகுப்பிள்ளையும், மார்க்கம் (7,8) வட்டாரத்துக்கான கல்விச் சபை வேட்பாளர் நீதன் சண்முகராஜாவும் தங்களது கடந்த காலச் சேவை வரலாற்றாலும், கல்வித் தகமைகளாலும் ஒப்பு நோக்கில் மற்றைய தமிழ் வேட்பாளர்களை விடவும் வேறுபடுத்தி நோக்கு நிலைப்படுத்தப் பட வேண்டியவர்களாக உள்ளார்கள் என்பதையும் இங்கு நான் மறைத்து விட முடியாது.

Monday, October 30, 2006

வடக்குக் கிழக்கு மக்களின்
இணைப்பும் பிரிப்பும்

-நடராஜா முரளிதரன்-

சில தினங்களுக்கு முன் சிறிலங்காவின் உயர் நீதிமன்றம் வட-கிழக்கு மாகாணங்களின் இணைப்பை சட்ட விரோதமானது எனக் கூறித் தீர்ப்பளித்தமை இலங்கையில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களைப் பொறுத்த வரையில் மிகப் பெரிய செய்தியாகும்.
1987ஆம் ஆண்டு யூலையில் உருவாக்கப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு அமைய 1988 இல் வட, கிழக்கு ஆகிய இரு மாகாணங்களையும் இணைப்பதற்கு N;ஜ.ஆர் அவசரகாலச் சட்ட விதிகளையே பயன்யடுத்தியிருந்தார்.
வரலாற்று ரீதியாகத் தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வந்த பாரம்பரிய நிலப்பிரதேசம் என்ற அடிப்படையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கூடாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இறுதித் தீர்மானம் ஏற்படுத்தப்படும் வரைக்கும் தற்காலிக இணைப்பு அமுலில் இருக்கும் என்பதாகவே இந்திய-இலங்கை ஒப்பந்த ஏற்பாட்டாளர்களால் அன்றைய காலகட்டத்தில் இவ் இணைப்புத் தொடர்பாகக் கூறப்பட்டது.

இலங்கை சுதந்திரமடைந்ததாகக் கூறப்பட்ட காலம் முதல் தமிழ் பேசும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றாகவோ அல்லது அவர்களின் அபிலாசைகளைப் பிரதிபலிப்பவைகளில் ஒன்றாகவோ “வடக்கு- கிழக்கு” இணைந்த “தாயக நிலம்” விளங்கி வந்ததை நாம் அறிவோம்.
1957ஆம் ஆண்டு யூலையில் இலங்கைப் பிரதமர் பண்டாரநாயக்காவுக்கும், தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே நடைபெற்ற பண்டா – செல்வா உடன்படிக்கையின் போதும் மாகாண எல்லைகளைத் தாண்டி இரண்டோ அல்லது இரண்டுக்கும் மேற்பட்டோ பிரதேச சபைகள் இணைவதற்கான விதி இடம் பெறுவதாக அவ் உடன்படிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் நான் இங்கு இப் பத்தியை எழுதுவதற்கான நோக்கம் வேறு வகையிலானது எனலாம். ஏனெனில் சிறிலங்காவின் பெரும்பான்மைச் சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கும், அதனால் இயங்குதலுக்குள்ளாக்கப்படும் அரசு யந்திரங்களில் ஒன்றான நீதித்துறைக்கும் வட,கிழக்கு இணைப்பை சிதைப்பதற்கும், பலவீனப்படுத்தவதற்குமான நோக்கங்கள் இருப்பது குறித்து நாம் யாரும் கவலை கொண்டு விட முடியாது.

கிழக்கிலே பெருமளவில் வசிக்கும் தமிழ் பேசும் முஸ்லீம் மக்களைப் பொறுத்த வரைக்கும் தங்களது மத கலாச்சார, பண்பாடடு விழுமியங்களைக் காப்பதில், தங்களது தனித்துவத்தை பேணுவதில் உள்ள கரிசனையை, அக்கறையை அது தொடர்பான அச்சத்தை அவர்கள் வெளிப்படுத்துவதில் உள்ள தர்க்க, நியாங்களை நாம் யாரும் புறந்தள்ளி விட முடியாது.
ஆனால் கிழக்கிலே வாழும், வாழ்ந்த முஸ்லீம் சாராத தமிழ் மக்கள் சிலரால் அண்மைக் காலமாகக் கிளப்பப்பட்டு வரும் கிழக்குத் தொடர்பான “மண் வாசைன” மற்றும் அதனுடன் கூடவேயான “யாழ்பாண மேலாதிக்க வாதம்” தொடர்பான குற்றச்சாட்டுக்களில் எத்தகைய குணாம்சங்கள் அவர்களிடம் இருந்து வெளித்தள்ளலுக்கு உள்ளாகி வருகின்றன என்பது குறித்த பிரக்ஞை அல்லது சிந்தனைத் தளம் இங்கு அவசியமானது என்று நான் கருதுவேன்.
ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தொடர்ச்சியாக வாழ்ந்து வரும் மக்கள் கூட்டம் தாம் வாழும் மண் சார்ந்து உரிமையையும், உணர்வையும் ஒருங்கிணைத்து வாழுதல் இயல்பானது. இத்தகைய குணாம்சமானது முற்போக்கான பல கூறுகளைத் தன்னகத்தே கொண்டது. அத்தகைய உணர்வுநிலை சார்ந்த உளவியல் போக்கை அது சார்ந்த கிழக்கு வாழ் தமிழ் மக்களின் “மண் வாசனையை” அங்கீகரிக்க வேண்டிய புத்தி ஜீவிதத்தை தலைமை தாங்கும் சக்திகள் கொண்டிருத்தல் அவசியமாகின்றது.

அதே வேளை கிழக்கை வாழிடமாகக் கொண்ட தமிழ் “அதிகாரத்துவ சக்திகள்” சில தங்கள் “தலைகளைப்” பலப்படுத்துவதற்கான வேட்டைக் களத்தில் பிரித்தாளும் கோசங்களுக்கு உருவேற்றி அப்பாவிகளைப் “பலியாடுகள்” ஆக்கும் அவலத்தையும் உண்டுபண்ணி நிற்கின்றன.
தேசிய விடுதலைக்கான பரிமாணத்தில் பல் வேறுபட்ட சக்திகள் ஒருங்கிணைந்த ஒரு வகைக் கலவை நிலை உண்டு. இதை உணர மறுத்துச் செல்வதானது பேரினவாதத்தின் வேலைகளை இலகுவாக்கி விடுகிறது.

“தலித்துக்களின்” விடிவுக்காகப் போராடிய பெரியார் எழுப்பிய தனித் திராவிட நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையில் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள சகல மொழி பேசும் மக்களையும் இணைத்துக் கொள்ள முயன்றதையும் அது சாத்தியத்திற்குள்ளாகாத வரலாற்றையும் காணுகின்றோம்.
கிழக்கிலே வாழ்ந்து வரும் சராசரித் தமிழ் மக்களிடத்தில் வடக்கு, கிழக்கு இணைந்த தமிழ் சமூகத்தின் அங்கங்களாக செயற்படும் போக்குத்தான் ஒப்பீட்டளவில் வரலாற்று ரீதியாக மேலோங்கிக் காணப்படுகின்றது. அதை யாராவது மறுதலித்துச் செயற்பட முனைந்து நிற்பார்களேயானால் அவர்கள் இன்றைய வட,கிழக்கு இணைப்பைத் துண்டாடி மகிழ்ந்து நிற்கும் சக்திகளுக்கு துணை போவதாகவே கருத முடியும்.

“மேலாதிக்க வாதம்” எத்தகைய சூழ்நிலையிலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் முற்போக்குச் சக்திகள் ஒரே சிந்தனை படைத்தவர்களாகவே இருப்பார்கள்.

ஆயினும் மிகப் பலம் பொருந்திய “பொது எதிரி” யை வீழ்த்துதற்கான தளத்தில் ஒன்றிணைவதும் பின் மீண்டும், மீண்டும் எமது உரிமைகளுக்கான போராட்டங்களை விளிம்பு நிலை மக்களுக்காக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, உழைக்கும் வர்க்கத்துக்காக என நீட்சிப் படுத்துதலுமே போர்க்குணாம்சம் பொருந்தியவர்களின் கடமையாகிறது.

Monday, October 23, 2006

நான் நேரில் காணாத ஏ.ஜே.கனகரட்ணா!
-
-நடராஜா முரளிதரன்-

சென்னையிலிருந்து இணைய மடல் மூலம் வ.கீதா “ஏ.ஜே.கனகரட்ணா கொழும்பு வைத்தியசாலையில் காலமானார்” என்ற சேதியை அறிவித்தபோதுதான் அந்தத் துயரச் செய்தி எனது காதைக் கவ்விக் கொண்டது. இது வரைக்கும் நான் அந்த “ஆபூர்வ மனிதரை” நேரில் சந்திக்கக் கொடுத்து வைக்கவில்லை. ஆனாலும் என் கண் காணாத அந்த மனிதரின் இழப்பு ஏன் என்னுள் இவ்வளவு துடிப்பை, சலனத்தை நிகழ்த்தி நிற்கிறது என்பதற்கான விடையை நான் எழுதும் இந்த வரிகளுக்கூடாகப் பெற்றுவிட முடியுமா? ஏன்பதையும் என்னால் கூற முடியாதுள்ளது. ஏனெனில் அந்த எல்லைகளையும் தாண்டி அவர் மீதான எனது நேசிப்பு விரவிக் கிடக்கிறது என்பதே உண்மையாக அமையும்.

எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த போது 1972 இல் முதல் தடவையாக அவரது மொழிபெயர்ப்புக் கட்டுரையொன்றினை “மல்லிகை” சிற்றிதழில் வாசித்த ஞாபகம். 1987 களில் நான் தமிழ் நாட்டில் வாழ்ந்து வந்த வேளைகளில் அவர் குறித்து தமி;ழ் நாட்டின் மிகப்பெரும் இடதுசாரி எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.வி;.ராஜதுரை அவர்களும், பத்திரிகையாளரான ஏ.எஸ்.பன்னீர்செல்வமும் நிறையவே என்னிடம் பேசியிருந்தார்கள். அப்படியொரு சமயத்தில்தான் பன்னீர்செல்வம் அவரது “மார்க்சீயமும் இலக்கியமும் - சில நோக்குகள்” (அலை வெளியீடு) என்ற தொகுப்பு நூலை எனக்கு வாசிக்கத் தந்திருந்தார். அந்த நூல் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் இன்று வரை தொடர்வதாகவே நான் எண்ணுகின்றேன். இந்தக் குறிப்புக்களை எழுதுவதற்கு முன் அப் புத்தகத்தையும், “காலம்” சஞ்சிகை வெளியிட்ட ஏ.ஜே.கனகரட்ணா சிறப்பிதழையும் செல்வத்திடம் இருந்து பெற்றுக் கொண்டு மேலோட்டமாக நுனிப்புல் மேய்ந்திருந்தேன். “காலம்” சஞ்சிகை வெளியிட்ட ஏ.ஜே.கனகரட்ணா சிறப்பிதழில் எஸ்.வி;.ராஜதுரை அவர்கள் “கலாச்சாரக் கமிசார்களின் ரசனைகளுக்கும் காலத்துக்குக் காலம் மாறிக் கொண்டிருக்கும் அவர்களது கறாரான அரசியல் தேவைகளுக்கும் வளைந்து கொடுக்காமல், அதே வேளை, மார்க்சிய தரிசனத்திலிருந்து சிறிதும் வழுவாமல் தமிழ் மொழிக்களத்தில் பண்பாட்டுச் செயற்பாடுகளை ஏறத்தாள நான்கு தசாப்தங்களாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் மனிதர்” என ஏ.ஜேயை விதந்துரைத்துள்ளார்.

ஆதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயலும் சக்திகள், அதிகாரத்தை ஏற்கனவே கைப்பற்றியவர்கள் என எல்லோருமே கலை, இலக்கிய வடிவங்களைத் தாங்கள் வரிந்து கட்டிக் கொண்டிருக்கும் கோட்பாடுகளுக்கு அமைய உற்பத்தி செய்யுமாறு உத்தரவுகளைப் பிறப்பித்தோ, கோசங்களை எழுப்பியோ வரும் வேளைகளில் அது குறித்த விசாரணைகளைத் விரிந்த தேடற் பரப்பில் ஆழ்ந்து நோக்கிய புலமை கொண்ட மனிதராகவே நான் ஏ.ஜே அவர்களைக் காணவிழைகின்றேன்.

ஏ.ஜே அவர்கள் தனது “மார்க்சீயமும் இலக்கியமும்” என்ற கட்டுரையொன்றிலே பின்வருமாறு கூறுகின்றார். “ஏனைய கலைஞர்களைப் போன்று, எழுத்தாளர்களும் தமது கற்பனையென்னும் ஆழியில் முத்துக் குளித்து வெளிக் கொணர்பவைதான் உன்னத படைப்புக்கள் என ஒரு சாரார் கருதி வருகின்றனர். இவர்களுடைய கொள்கைப்படி கலைஞர் புற உலகத்தை மறந்து அக உலகத்தில் இரண்டறக் கலந்து நிற்பவர்கள். இன்னொரு விதமாகச் சொல்வதென்றால் கலைஞர்கள் சூனியத்தில் வாழ்பவர்கள். இவ் வாதத்தினை மார்க்சீயம் ஏற்றுக் கொள்ளாது. சமுதாய ஒழுங்கு முறைகளுக்கிடையே ஏற்படும் தொடர்புகளின் விளைவாகவே அரசியல், சட்டம், சமயம், தத்துவம், கலை, இலக்கியம் போன்றவை தோன்றுகின்றன. உற்பத்தி முறைகள் அடித்தளம் என்றால் மேலே குறிப்பிட்ட கலை, இலக்கியம் போன்றவை மேற் கட்டுமானம். அடித்தளத்திற்கும், மேற் கட்டுமானத்திற்கும் இடையேயுள்ள தொடர்புகளை வரையறுப்பது அவ்வளவு எளிதன்று. அடித்தளம் எவ்வாறு மேற்கட்டுமானத்தைப் பாதிக்கின்றதோ அதே போன்று மேற்கட்டுமானமும் அடித்தளத்தைப் பாதிக்கின்றது. ஆதலால் பொருளாதார அடிப்படைகளும், கலை - இலக்கியம் போன்றவற்றிற்கும் இடையில் உள்ள தொடர்புகள் மிகச் சிக்கலானவை.”

இவற்றின் வழியே நெடுங்காலமாக அரசியல், இலக்கியத் துறைகளுள் இடது சாரிச் சித்தாந்தங்கள் கொச்சைப்படுத்தப்பட்டும், வழிபாடுகளுக்கு உட்படுத்தப்பட்டதுமான அவலங்களைத் தமிழ்ச் சூழலுக்குப் புரிய வைப்பதில் ஏ.ஜே.கனகரட்ணா 1966களிலிருந்தே பெரிதும் முயன்று வந்துள்ளார். உலகின் உன்னதங்கள் என்று கருதப்பட்ட பல்வேறு சிந்தனைப் போக்குகளை ஏ.ஜே தமிழுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஒரு நூலினை இலக்கியம் என்று ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்று தீர்மானிப்பதற்கு, முதலில் அந்நூல் இலக்கியமா இல்லையா என்பதனை நிர்ணயித்த பின்புதான் மார்க்சீயக் கோட்பாட்டினைக் கொண்டு அதனை மதிப்பிடுதல் வேண்டுமென ரொட்ஸ்கி “இலக்கியமும் புரட்சியும்” என்ற நூலில் குறிப்பிட்டதையும் ஏ.ஜே.கனகரட்ணா தனது கட்டுரையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இலக்கியத்தினை உரிய முறையில் புரியாத எவரும் கோட்பாட்டு அளவுகோல்களை ஏந்துவது விபரீதத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விடும். கட்சி, கலை, இலக்கியம் என எந்த வட்டங்களுக்குள்ளும் அகப்படாதவர். அவருள் அடங்க மறுத்த அறிவுப் பசியை மற்றவர்கள் ஒப்புதல் பெறாமலே அவரிடமிருந்து அள்ளிச் செல்ல அனுமதி அளித்தவர். கற்றுத் தெளிதலும், கற்றுக் கொடுத்தலும், உரையாடல்களுக்கூடாக ஊட்டம் அளித்தலும் அதற்கும் அப்பால் எண்ணிறைந்த இலக்கிய முயற்சிகளுக்கெல்லாம் பின்னணி முன்னாணாகத் திகழந்தவர் ஏ.ஜே அவர்கள்.

ஏ.ஜே அவர்களை பிரபலமான சிங்களப் புத்திஜீவியும், எழுத்தாளருமான ரெஜி சிறிவர்த்தனா முற்றுகையிடப்பட்ட யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிக் கொழும்புக்கு குடிபெயர்ந்து வருமாறு அழைப்பு விடுத்தபோது தான் “சேற்றில் அழுந்திய தடி” மாதிரி இருப்பதாகவும், தன்னைக் கொழும்பில் “மறுநடவு” செய்யத் தனக்கு விருப்பம் இல்லையெனவும் பதிலளித்திருந்தார். மேலும் ரெஜி கூறுகிறார். “உலகக் குடிமகனுக்குரிய கலாச்சாரமும், சர்வதேசப் பிரக்ஞையும் உடைய புத்திஜீவியான ஏ.ஜே யாழ்ப்பாண மண்ணிலும், அதன் வாழ்விலும் அனுபவத்திலும், மொழியிலும் வேரூன்றி உள்ளார் என்பதை அதிலிருந்து நான் உணர்ந்து கொண்டேன். யாழ்ப்பாணத்தை அதன் சோதனைக் காலத்தில் விட்டு வருவதை ஒரு துரோகச் செயல் என்று அவர் கருதி இருக்கலாம்.”

இலக்கியத்தைக் காதலித்தவர் என்று கருதப்படும் ஏ.ஜே தனி மனித வாழ்வில் கட்டைப் பிரமச்சாரி. பேராதனைப் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தைக் கற்ற அவரின் தனிப் பெருந்துறையாக ஆங்கில இலக்கியம் விளங்கியது. “டெய்லி நியுஸ்”, “கோப்பிறேற்றர்”, “சற்றடே றிவ்வியு”, திசை போன்ற பத்திரிகைகளின் ஆசிரியர், துணை ஆசிரியர் பொறுப்புக்களில் பணியாற்றிய சிறந்த பத்திரிகையாளரும் கூட. பத்திரிகையாளர்
ஏ.எஸ்.பன்னீர்செல்வத்தின் பார்வையில் “ஏ.ஜேதான் யாழ்ப்பாண வாழ்வின் சிக்கல்களை எனக்குப் புரிய உதவியவர். யாழ்ப்பாணத்தை ஆண்ட துப்பாக்கி ஏந்திய பலர் வைத்த அடிப்படைச் சட்டங்களை, முடிச்சவிழ்த்தற்குரிய இன்றியமையாத தடயங்களைத் தந்தவர்.யாழ்ப்பாணத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களின் துயரங்கள் கூட மற்றவர்கள் தொலைவிலிருந்து காட்டிய மாதிரியிலிருந்து ஏ.ஜேயின் மாதிரி மிக வித்தியாசமானது. மண்ணை விட்டுப் பிரிய மறுத்த அந்த மகத்தான “மண்ணின் மைந்தன்” தான் துறை போகக் கற்றறிந்த உலக இலக்கியங்களுக்கூடாகவும், தனது வாழ்வின் ஊடாகவும் எமக்கு விட்டுச் சென்ற சேதிகளை எப்போது நாம் மறு வாசிப்புக்கு உள்ளாக்குவோம்.

Tuesday, October 10, 2006

“மறை பொருள்” குறுந் திரைப்படம்

-நடராஜா முரளிதரன்-

பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம், படைப்புச் சுதந்திரம் போன்ற ஜனநாயக விழுமியங்கள் எத்தகைய விட்டுக் கொடுப்புகளுக்கும், சமரசங்களுக்கும் உட்படுத்தப்படாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்ற குரல்கள் வரலாற்றில் என்றுமில்லாத வகையில் ஓங்கி ஒலித்து வரும் இன்றைய உலகச் சூழலில் ஒரு படைப்பை மறுக்கும் உரிமையை தனி மனிதர்; ஒருவர் மேற்கொள்ளுகிற போது சமூகம் எத்தகைய அவலத்துக்குள் சிக்குண்ண நிகழ்கிறது என்பதையே இரு வாரங்களுக்கு முன் ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் நிகழ்ந்த குறுந் திரைப்பட விழா தொடர்பான விமர்சனங்களில் “மறை பொருள்” குறுந் திரைப்படம் தொடர்பான “தர்சனின்” விமர்சனத்தை கடந்த வாரத்துக்கு முந்தைய “வைகறை” இதழ் ஒன்றில் வாசித்துக் கொண்ட போது என்னால் உணரக் கூடியதாக இருந்தது.

“மறை பொருள்” குறுந் திரைப்படம் சித்தரிக்கும் கருப் பொருள் “முஸ்லீம் பெண்கள் “பர்தா” அணிவதை ஒடுக்குமுறையாகப் பார்க்கிறார்கள் என்பதே” என்றும் அவ் விமர்சனத்தில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக நானும் எழுத்தாளர் தேவகாந்தனும் உரையாடிக் கொண்ட போது அவர் தெரிவித்த கருத்தொன்றினை இங்கு குறித்தல் பொருத்தம் என்று எண்ணுகின்றேன். “மறை பொருள்” என்ற படைப்பாக்கத்தில் உருவகிக்கப்படும் அப் பெண் பாத்திரம் அத்தகைய (“பர்தா” அணிவதை ஒடுக்குமுறையாகக் கருதும்) கருத்து நிலைப்பாட்டைக் கொண்டவளாக இருப்பின் அதில் ஏதும் தவறில்லையே? ஏன்று என்னிடம் சொல்லியிருந்தார்.

படைப்பாளியொருவன் தனது புனைவில் முழுச் சுதந்திரங்களோடு செயற்பாடு கொள்வது சமூக நிர்பந்தங்களால் பாதிப்புக்குள்ளாகுமானால் அதையும் மீறி அவன் முழு வீச்சோடு “சிருஸ்டி” புரியும் போது அதைச் சமூகக் காரணிகளைச் சுட்டிக்காட்டி மறுதலிப்பதானது எவ்வளவு தூரம் அபாயகரமானது என்பதையே இங்கு நான் எண்ணிப் பார்க்கின்றேன். இக் கருப்பொருள் சர்ச்சையை ஏற்படுத்துவதாக அமையலாம். ஆனாலும் “இது ஏற்கக் கூடிய கருப்பொருள் அல்ல” என்று எப்படிக் கூறிவிட முடியும்?எனக்குத் தெரிந்த வரையில் முஸ்லீம் பெண்கள் “முக்காடு” அணிவதையோ, “பர்தா” அணிவதையோ ஒடுக்குமுறையாகப் பார்க்கவில்லை என்பதற்காக அவ்வாறான கருத்துடைய “முஸ்லீம் பெண்கள்” இவ்வுலகில் வாழவேயில்லை என்று அர்த்தப்படுத்தி விட முடியுமா?

நடுவர்கள் இப் படத்திற்கு விருது வழங்கவில்லை என்பதை இங்கு பிரச்சினைக்கு உரியதாக நான் கருதவில்லை.

ஆனாலும் “பர்தா” அணிவதை எப்படி உணர்கிறேன் என்பதை ஒரு முஸ்லீம் பெண் மட்டுமே சொல்ல வேண்டும், சொல்ல முடியும் என்ற கட்டளைகளைத் “தர்சன்” பிறபிப்பது படைப்பாக்கத்துக்கான எல்லைகளை வரையறை செய்து விடுவதில், மட்டுப்படுத்துவதில் படைப்பாளியை அல்லது கலைஞனைக் கொண்டு போய்ச் சேர்க்கிறது என்பதையே இங்கு நான் எடுத்துக் கூற விழைகின்றேன்.

முஸ்லீம் பெண்கள் எல்லோருமே “பர்தா” அணிவதில்லை. இந்தியாவிலே, துருக்கியிலே, பாலஸ்தீனத்திலே “பர்தா” அணியாத எத்தனையோ முஸ்லீம் பெண்களை நாம் காண முடியும். ஒரு குறுந் திரைப்படத்துக்கான மொழியைப் பேசுவதில், மாற்றுச் சினிமாவிற்கான பிரக்ஞையைக் கட்டுவதில் “மறை பொருள்” என்ற குறுந் திரைப்படம் கணிசமான வெற்றியைப் பெற்றுக் கொண்டதாகவே நான் கருதுவேன். படத்தைப் பார்த்த சிலரது கருத்துக்களும் அதற்கு வலுச் சேர்ப்பதற்கான சாட்சியமாக அமைந்ததை இங்கு குறிப்பிடலாம்.

உரையாடல் எதுவுமே இடம்பெறாது ஒற்றைப் பாத்திரத்தைக் கொண்டு நகர்ந்த அக் குறுந் திரைப்படத்தில் பருவப் பெண்ணொருத்தி கண்ணுக்கு மை தீட்டி, அழகான உடை தேர்ந்து நிலைக் கண்ணாடி முன்னே நின்று, நிமிர்ந்து அழகுப் பதுமையாகத் தன்னை அழகு செய்து கொள்ளுகிறாள். தன் அழகு மேலும் பூரித்திட மெருகூட்டும் முயற்சியிலே தன் கவனத்தையெல்லாம் குவித்து மேலும், மேலும் அது குறித்து அவள் முயன்று கொண்டிருந்தாள். ஏற்றத் தாழ்வுகள் படைத்த இச் சமூகச் சூழலிலும் கூட பால் பேதங்கள், வர்க்க பேதங்களையெல்லாம் கடந்து நாமெல்லாரும் ஓடிப் பிடிக்க முனைவதில், வெறி கொண்டு அலைவதில், விரட்டிச் செல்வதில் “அழகுணர்ச்சியும்” முக்கியமான ஒன்று.

எனவே அந்த அழகுக்கு உரியவள் தனக்கான ஒப்பனைகள் அனைத்தையும் பூர்த்தி செய்த மறு கணங்களிலே கரிய “பர்தாவினால்” தனது உடலை உடுத்திப் போர்த்திக் கொள்ளுகிறாள். போர்த்தி முடித்த கையோடு நிலைக் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்ளுகிறாள். பின் தனது கண்களை முடிக் கொள்ளுகிறாள். “மறை பொருள்” குறுந் திரைப்படமும் அத்தோடு முடிந்து கொள்கிறது.

அந்த முடிவோடு அது ஏற்படுத்திய தாக்கம் என்னை, எனது உணர்வுகளை உறைந்து போக வைத்தது. ஏன் அவள் தனது கண்களை இறுக மூடிக் கொண்டாள்? அந்த உளவியல் அர்த்தப்படுத்த விழையும் செய்திதான் என்ன? மொழியே பேசப்படாத அந்தக் “குறுஞ் சினிமா” வெளிப்படுத்திய சேதியால் மதம், பண்பாடு சார்ந்த முஸ்லீம் உணர்வுகள் காயப்படுத்தப்படுவதாக, மறுக்கப்படுவதாகக் “தர்சனால்” கிளப்பப்படும் கூற்றுக்களுக்கு பதிலாக அமைவதெல்லாம் “சினிமா” என்பது எப்போதும் சமூகத்தின் கதையை மாத்திரம் சொல்வதல்ல. மாறாக சமூகத்தின் தனிமாந்தர்களின் விருப்பு, வெறுப்புக்களையும் அவர்களது சொந்தக் கதைகளையும் கூட நல்ல சினிமா சொல்ல விழைகிறது.

மத அடிப்படை வாதத்தையும், அதன் கட்டுமானத்தில் இருந்து எழுப்பப்படும் பிற்போக்கான பெண் ஒடுக்குமுறை சார்ந்த கருத்தியல் நிலைப்பாடுகளையும் கடுமையாக விமர்சிக்கும் எத்தனையோ முஸலீம் அறிஞர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகமிது.

என்னைப் பொறுத்தவரையில் “மறை பொருள்” குறுந் திரைப்படத்தை விழாவுக்கான திரைப்படங்களில் ஒன்றாகத் தேர்வு செய்த துணிச்சலையிட்டு குறுந் திரைப்பட விழா ஏற்பாட்டாளர்கள் காத்திரமான பங்களிப்பொன்றை குறுந் திரைப்படத் துறைக்கு ஆற்றியுள்ளார்கள் என்றே கருதுகின்றேன்.

1993 ஆம் ஆண்டு பங்களாதேசைச் சேர்ந்த “தஸ்லீமா நஸ்ரீன்” என்ற முஸ்லீம் பெண் எழுத்தாளர் “லஜ்ஜை“ என்ற நாவலை வெளியிட்ட போது “பங்களாதேஸ்” அரசு மதவெறியர்களுக்கு இசைந்து அந்த நாவலைத் தடை செய்தது. அதை முஸ்லீம் விரோத நாவல் என்று கூறிய மத வெறியர்கள் அவரைக் கொல்பவர்களுக்கு பரிசு வழங்குவதாகவும் அறிவித்திருந்தார்கள். மதங்களால் மனித சமுதாயத்திற்கு விமோசனமில்லை என்ற கருத்துடைய “தஸ்லீமா” “மனித நேயம் என்பது மதத்திற்கான மற்றொரு பெயராக இருக்கட்டும்” என்று கூறினார். பெண்ணின் உடல் ஆணினால் உடமை கொள்ளப்பட்டு ஆணின் அதிகாரம் அங்கு நிறுவப்படுகிற போது பெண் தன் உடல் மீது தான் கொண்டுள்ள உரிமையை இழந்து விடுகிறாள்.

அதற்கு மேலாக ஆணாதிக்க சமூக மனோபாவமும் “பண்பாடு சார்ந்த அடையாளங்கள்” என்ற கட்டளைகளை பிறப்பிப்பதன் மூலம் இலகுவான இன்பம் சார் நுகர்வுப் பொருளாக பெண்ணை ஆக்குவதில் வெற்றி கண்டு விடுகிறது. எனவே அதனைக் கலை வடிவம் ஒன்றுக்கூடாகப் புரிய வைப்பதில் பெரு வெற்றி பெற்ற “மறை பொருள்” குறுந் திரைப்பட இயக்குனர் பொன்.சுதாவை மெச்சுவதற்கு எனது மனம் அவாவுறுகிறது.

Wednesday, September 27, 2006

“கைதுகள்”

-நடராஜா முரளிதரன்-

நான்கு வாரங்களுக்கு முன்பாக அமெரிக்காவில் ஆயுதக் கொள்வனவு முயற்சியில் ஈடுபட்டார்கள் என்று கூறியும், அதற்குத் துணை போனார்கள் என்று கூறியும் கனடாவிலும், அமெரிக்காவிலும் சில தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

அதையடுத்து கனடிய, அமெரிக்க பிரதான தகவல் தொடர்பு ஊடக சாதனங்கள் அது தொடர்பாக “சுவாரசியத்தோடு” கூடிய பல்வேறு செய்திகளை “விறுவிறுப்பாக” வாசகர்களுக்கு உடன் வழங்கியிருந்ததை எம்மில் யாரும் மறந்திருக்க முடியாது.

அச் சமயத்தில் கனடாவில் வாழும் தமிழர்கள் யாவரும் தமிழர்கள் அல்லாதோரால் பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்படுகிறார்கள், நோக்கப்படுகிறார்கள் என்பதாகவும், இந் நிலைக்கு வேறு யாரும் காரணம் அல்ல தமிழர் தரப்பு மட்டுமே காரணம் என்பது போலவும் அப்பாவித்தனமாகப் பத்திரிகைப் பத்திகள் எழுதப்பட்டமையை உங்களில் பலர் வாசித்திருக்கலாம்.

பலம் வாய்ந்த அரச முகவர்களின் அறிக்கைகள், பெரு முதலாளித்துவ ஊடக சாதனங்களின் பரப்புரைகளையெல்லாம் எவ்வித மறுதலிப்பும், விமர்சனமும் இன்றி உள்வாங்கிக் கொள்ளுங்கள் என்பதனை மறைமுகமாக வலியுறுத்துவது போலவும், அதை மீறுவுதும், கருத்துக் கூறுவதும் ஜனநாயக நெறிமுறை, விழுமியங்களுக்குள் அடங்கியிருந்த போதிலும் அவ்வாறு நடந்து கொள்வீர்களெனில் ஊடக அதர்மம் ஆகி விடும் என்பது போன்ற கருத்துக்களும் அப் பத்திகளின் வரிகளுக்கு இடையில் சொருகப்பட்டிருந்தன.

இவற்றையெல்லாம் நான் வாசித்துக் கொண்ட போது பழைய சில நினைவுகள் மீண்டு என் மூளையைக் குடைய ஆரம்பித்தது.
சுவிசில் 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் தேதி சுவிஸ் பொலீசாரால் நான் கைது செய்யப்பட்ட வேளைகளில் இடம்பெற்ற சில நிகழ்வுகளைப் இங்கே பகிர்ந்து கொள்வது எனக்குப் பொருத்தமாகப்படுகின்றது.

நான் கைது செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பாக அப்போதைய இலங்கை அரசின் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் சுவிசுக்கு விஜயம் செய்திருந்தார். அவர் தனிப்பட்ட முறையில் சுவிசுக்கு வந்திருக்கவில்லை. அன்றைய அவரது பயணம் இலங்கை அரசின் முக்கிய எதிர்பார்ப்பொன்றினை நிறைவேற்றும் பொறுப்புடன் கூடிய அரச பயணமாகவே அமைந்திருந்தது.

சுவிசில் தமிழ் அகதிகளின் அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர்கள் திருப்பி அனுப்பப்பட முற்படுகிற வேளைகளில் எல்லாம் அவர்களுக்கான கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதில் சுவிஸ் அரச அதிகாரிகளுக்கு பெரிய அளவில் நடைமுறைச் சங்கடங்கள்;, சிக்கல்கள் ஏற்படுவது வழக்கம். அதன் காரணமாக அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தலை எதிர்பார்த்துக் காத்திருந்த பல தமிழ் அகதிகள் தப்பிப்பிழைத்த வரலாறும் உண்டு.

ஆயினும் சுவிஸ் அரசின் அகதிகள் தொடர்பான கொள்கை எந்தக் காலத்திலுமே அகதிகள் அங்கு தொடர்ந்து வாழ்வதற்கான இயல்பு நிலையில் பதட்டத்தை, அச்ச உணர்வைத் தோற்றுவிக்கும் வகையிலானது எனலாம். எனவே அச் சூழலைப் பயன்படுத்திக் கதிர்காமர் சுவிஸ் அரசோடு பேரம் பேசியதன் பயன்பாடாகவே நான் சார்ந்த அமைப்புpன் மீதும், அந்த அமைப்பின் பொறுப்பாளர் என்ற வகையில் என் மீதும் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இலங்கை அரசு எம் மீது குறி வைப்பதற்கான எடுகோள் அங்கு பாரிய அளவில் எம்மால் திரட்டப்பட்ட நிதியின் அளவால் நிர்ணயமானதாகும். ஆனால் எம் மீது சுவிஸ் காவல் துறையினர் இவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னதாக அதற்கு வாய்ப்பான வகையில் சாதகமான பொது ஜன அபிப்பிராயத்தை நிறுவுவதற்கான தளத்தை உருவாக்கும் நோக்கோடு திட்டமிட்ட வகையில் என் மீதும், நான் சார்ந்த அமைப்பின் மீதும் தகவல் தொடர்பு சாதனங்களுக்கூடாக உண்மையைக் குழி தோண்டிப் புதைக்கும் வகையிலான பொய்யான பரப்புரைகள் நிகழ்த்தப்பட்டன.

அரசுகளும், ஆதிபத்தியத்தை கொண்ட அதிகார மையங்களும் தங்களது நலன்களுக்காக இவ்வாறான சித்து விளையாட்டுக்களை அரங்கேற்றுவது வரலாற்றுத் தொடர் நாடகக் காட்சிகளாகும்.

எனது எட்டுமாத சிறைவாசத்தின் பின் இறுதியில் எம் மீதான வழக்குகள் யாவும் தோற்கடிக்கப்பட்டு, பல வருடங்களின் பின் எமக்கான நட்ட ஈட்டுத் தொகைகளும் வழங்கப்பட்டன. இதை உணர்த்தும் சம்பவங்களில் ஒன்றாக சில தினங்களுக்கு முன்பாக சிரிய நாட்டைச் சேர்ந்தவரும் பின்பு கனடியப் பிரஜையாக ஆகிக் கொண்டவருமான “அரார்” அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக நீதிபதி டெனிஸ் ஓ’கார்னர் ஆர்.சி.எம்.பியினர் மீது அத்துமீறல்கள் நிகழ்ந்ததற்கான பொறுப்புக்களைச் சுமத்தி நீண்ட அறிக்கையொன்றினை வெளிப்படுத்திய சூழ்நிலையில் கனடியப் பாராளுமன்றமும் “அரார்” நடத்தப்பட்ட விதம் குறித்து ஏகமனதாக மன்னிப்புக் கோரியுள்ளதை நாம் நோக்க வேண்டும்.

ஒட்டாவாவை வசிப்பிடமாகக் கொண்ட இரு பிள்ளைகளுக்குத் தந்தையான “அரார்” என்ற கணணி பொறியியலாளர் 2001, செப்ரெம்பர் 11 அமெரிக்கத் தாக்குதலின் பின் மொரோக்கோவுக்கு விடுமுறைக்காகச் சென்றிருந்த நிலையில் பின் அமெரிக்கா ஊடாக கனடா திரும்பவிருந்த வேளையில் நியூயோர்க்கிலிருந்து சிரியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு அங்கு இரு வருடங்கள் வரையில் சிறையில் வைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டிருந்தார். அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட வேளைகளில் கனடிய அமைப்புக்கள் அமெரிக்க அரசுக்கு வழங்கிய தகவல்கள் குறித்த விடயங்களே மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாகியிருந்தன.

1998 இல் அமைதியான வாழ்வு தேடி நான் எனது மனைவியோடும், எனது நான்கு பிள்ளைகளோடும் இணைவதற்காக கனடா வந்த போது 40 நாட்களின் பின் கனடிய காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட போதும், அதற்குப் பின்னரும் இங்குள்ள தகவல் தொடர்பு ஊடக சாதனங்களால் “பயங்கரவாதியாகவே” சித்தரிக்கப்பட்டு வந்துள்ளேன். இன்றும் கூட “அகதி அந்தஸ்து” மறுக்கப்பட்ட சூழ்நிலையிலேதான் நானும், எனது குடும்பமும் நாடுகடத்தல் உத்தரவை எதிர்கொண்டு “இமிக்கிரேசனும்”, கோர்ட்டுமாக அலைந்து வருகிறோம்.

ஒரு பத்திரிகையாளர் “ நான் கனடா வரும் பொழுது கொண்டு வந்த கொலைப் பட்டியலில் தனது பெயர் மூன்றாவதாக உள்ளதென காவல் துறையினர் தன்னிடம் கூறியதாக” என்னிடம் கூறினார். ஆனால் உண்மை நிலை என்ன? அது முற்றிலும் மாறுபட்டதாகவே உள்ளது.
இவ்வாறே கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களும் நீதிமன்றில் குற்றவாளிகளாகத் தீர்மானிக்கப்படும் கணங்கள் வரை அவர்கள் “சந்தேக நபர்கள்” மாத்திரமே. எனவே இவ்வாறான கைதுகளால் “தமிழ் மாணவர்களின் எதிர்காலமே பாழ்பட்டு விடுவதாக” ஓலம் போடுவது செய்தி மிகைப்படுத்தலாக அமைந்து விடும். அண்மைய செய்திகளின் படி அவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞர்களில் பலர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் அறிகிறேன். அந்தச் செய்திகளையும் கூட தமிழ் ஊடகங்கள் எந்தளவு வெளியிட்டுள்ளன என்பது குறித்து எந்தத் தரவுகளும் என்னிடம் இல்லை.

கடந்த வாரம் துப்பாக்கி ஏந்திய இளைஞர் ஒருவர் மொன்றியலிலே “வெறியாட்டம்” போட்டுள்ளார். அதற்காக அவர் சார்ந்த சமூகத்தை சாட முடியுமா?

பத்திரிகைகளுக்கு “பரபரப்புச் செய்திகள்” விற்பனைக்கு அவசியமாகின்றன. அவை சமூகத்தில் மாறுபட்ட விளைச்சலை ஏற்படுத்துமாக அமையின் அதை எதிர்த்துப் போராடுவதுதான் எழுத்தாளனின் தர்மம்.

Tuesday, September 12, 2006

“கண்ணகி சிலை”
எஸ்.வி.ராஜதுரையும், ஞாநியும்

-நடராஜா முரளிதரன-

தமிழகத்தில் அண்ணாவின் ஆட்சிக்காலத்தில் இரண்டாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு நிறுவப்பட்ட கண்ணகி சிலை கடந்த ஜெயலலிதா அரசின் ஆட்சிக்காலத்தில் அப்புறப்படுத்தப்பட்டமை தொடர்பான செய்திகள் தமிழக ஊடகங்களால் அன்று பரபரப்பாகப் பேசப்பட்டவை.

பின்னர் இன்றைய கலைஞர் ஆட்சியில் மீண்டும் கண்ணகி சிலை நாட்டப்பட்ட போது அதே “பரபரப்பு” எழுந்து பல்வேறு வகை விவாதக் களங்களுக்கு வழிசமைத்துக் கொடுத்தது. அந்தக் களங்களின் வெளிப்பாடு உச்சத்தில் இருந்த அத் தருணங்களில் அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பாகக் கண்ணகி சிலை பற்றி “ஆனந்த விகடன்” வார இதழில் ஞாநி எழுதிய கட்டுரை சர்ச்சைக்குள்ளானதால் “ஆனந்த விகடன்” வார இதழ்கள் எரியூட்டப்பட்டன.

இதன் எதிர்வினையாக யூன் மாத 16-30, 2006 “புதிய பார்வை” மாதமிருமுறை இதழில் ஞாநி “தமிழ் பெண்களை கண்ணகியை பின்பற்றச் சொல்கிறதா கலைஞர் அரசு? என்ற தலைப்பில் மேலும் கலைஞர் மீது விமர்சனக் கணைகளை வீசி எறிந்திருந்தார்.

சில தினங்களுக்கு முன் எஸ்.வி.ராஜதுரை அவர்களின் “ஓர் அணுகுண்டு இரண்டு கவிஞர்கள்” கட்டுரைத் தொகுப்பினை வாசித்துக் கொண்டிருந்த போது “அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்” என்ற 5-1-2002 தினமணி நாளிதழில் பிரசுரமான அவரின் கட்டுரையும் அதில் உள்ளடங்கியிருந்தது. அக் கட்டுரை ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் “கண்ணகி சிலை நீக்கம்” குறித்து அச் சூழலில் அன்று எஸ்.வி.ஆரினால் தினமணியில் எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரையாகும். இந்த இரு கட்டுரைகள் எவற்றைச் சுட்டுகின்றன? எத்தகைய முரண்களைக் கிளப்புகின்றன? தொடர்பாக உள் நுழையும் முயற்சியை அடிப்படையாக வைத்து அலசல் ஒன்றை இங்கு மேற்கொள்ளுவதே எனது நோக்கம்.

“கண்ணகி என்ற பாத்திரம், இரத்தமும் சதையுமாய்த் திரிந்த ஒரு குறிப்பிட்ட மெய்யான பெண்மணி என்பதற்கான வரலாற்றுச் சான்றுகள் ஏதுமில்லாமலிருக்கலாம். ஆனால் தமிழ் பண்பாட்டு வரலாற்றில் நீண்ட நெடுங்காலமாகவே இடம் பெற்றுள்ள பாத்திரமே “கண்ணகி” என்பதுதான் முக்கியமானது. மார்பகமொன்றைக் கிள்ளியெறிந்த கண்ணகியை “சிலப்பதிகாரம்” மட்டுமல்ல, “நற்றிணை”யும் குறிப்பிடுகிறது. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு, கொடுமைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் பெண்ணின் உருவகமாகவே “கண்ணகி” பார்க்கப்படுகிறாள். அநீதியை எதிர்த்துப் போராடுவதற்காகத் தனது மகப்பேறை, “தாய்மை”யைக் கூட இழக்கத் துணிபவளே அவள் என்பதைக் குறிப்பதுதான் மார்பகத்தைக் கிள்ளியெறிதல் என்பதாகும். சிலப்பதிகாரத்திலும் கூட “கண்ணகி”யின் “கற்பை” விவாதத்திற்குட்படுத்தும் நிகழ்வுகள் ஏதுமில்லை.” என்ற மையக்கருவை வலியுறுத்தும் வகையிலே எஸ்.வி.ஆரின் கட்டுரை அமைகிறது. மறுபுறத்தில் ஞாநி “புதிய பார்வை”யில் எழுப்பும் கேள்விகள்.

1) வேறு பெண்ணை நாடிப் போய் விட்டு, தன்னைப் பத்தாண்டுகளுக்கு மேலாகப் பிரிந்து வாழ்ந்த கோவலனைச் சகித்துக் கொண்டு, அவன் திரும்ப வந்ததும் ஏற்றுக் கொண்டதும், அதுவரை இன்னொரு ஆணின் துணையை நாடாமல் இருந்ததும்தான் கற்பு என்றால், அது கோவலன் போன்ற ஆண்களுக்கே வசதியான ஒரு தலைக் கற்பு. இது உண்மையா, இல்லையா?

2) அரசனுக்கு எதிராகக் கண்ணகி போராடிய விசயம், தனக்கு அநீதி செய்த கணவனுக்கு நீதி கேட்டுப் போராடிய பேதமைத்தனமா, இல்லையா? கணவனிடம் நீதிக்காகப் போராட முடியாதவள் அரசுக்கு எதிராகப் போராடிய கற்பனையெல்லோ இது.

3) கோவலனைத் தவறாகக் கொன்றதில் துளியும் சம்மந்தமில்லாத மதுரை மக்களை எரித்த கண்ணகியின் செயல், எங்கோ ஏற்பட்ட வேதனையை வேறெங்கோ வெளிப்படுத்துகிற இயலாமையா இல்லையா?

“பரந்துபட்ட மக்களால் சிக்கல் ஏதுமின்றி ஏற்றுக்கொள்ளப்படும் பண்பாட்டு விழுமியங்களை அந்த மக்களின் கூட்டு நினைவுகளிலிருந்து பிரித்தெடுக்க, பிய்த்தெடுக்க முனைபவர்கள் தற்காலிக வெற்றிகளை அவ்வப்போது பெறக் கூடும். எனினும் மானுட நாகரீகத்தின் வரலாறு அவர்களை “மூர்க்கர்கள்” என்றே பதிவு செய்து வந்துள்ளது.” என்ற எஸ்.வி.ஆரின் கூற்று மக்களினங்களின் வரலாறும், வாழ்வியலும் இலகுவில் பண்பாட்டு அடையாளங்களை இழப்பதற்கான தயார் நிலையில் இருப்பதில்லை. அவை மதிக்கப்படல் வேண்டும் என்ற மனித உரிமைகளுக்கான சாராம்சத்தைக் கோரி நிற்கிறது.

மாறாக ஞாநியோ “காட்டிலும் கழனியிலும் காலம், காலமாக உழைக்கும் தமிழ் பெண்களின் பிரதிநிதியா கண்ணகி? அவள் வண்ணச் சீரடியை மண்மகள் கண்டிலள் என்கிறது காப்பியம். அவள் உழைக்கும் பெண்ணல்ல. உழைக்கும் பெண்கள் சார்பாகப் போராடியவளுமல்ல. மதுரையைத் தீக்கிரையாக்கிய போது, பார்ப்பனரையும், பசுவையும் தீண்டாதே என்று தீக்கு உத்தரவிட்ட “இந்துத்துவக் குரல்” அவளுடையது. இந்தப் பண்பாட்டை தமிழர் பண்பாட்டின் அடையாளம் என்று நாங்கள் ஏன் ஏற்க வேண்டும்?” என்று குமுறுகிறார்.

“தி.மு.கவின் சொல்லாடல்களில் உள்ள “கற்பு”, “மானம்”, சிலப்பதிகாரம் குறித்த அதன் விளக்கங்கள் முதலியன விவாவதத்திற்குரியவை. எனினும் சாதி, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு பொதுவான தமிழ் அடையாளத்தை உருவாக்குவதற்கு அக் கட்சி – குறிப்பாக அண்ணா – அன்று மேற்கொண்ட முயற்சியின் வெளிப்பாடாகவே அதன் ஒரு பகுதியாக கண்ணகி சிலை நிறுவியமை அமைந்தது. அதற்கு தமிழ் நாட்டு மக்களின் ஒப்புதலும் இருந்தது. அதனை ஒரே இரவில் துடைத்தெறிவது கொடூரமான மனித உரிமை மீறலாகும்” என்று எஸ்.வி.ஆர் தனது கட்டுரையில் சொல்லுகிறார்.

“கண்ணகி சிலை தமிழர் பண்பாட்டின் அடையாளம் என்று தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகிறது.” என்ற ஞாநியின் கூற்றையும், “ஆணாதிக்க, தந்தை வழிச் சமுதாய அமைப்பு விழுமியமான “கற்பு” என்பது சுமத்தப்பட்ட படிமமாக அல்லாமல் அநீதிக்கு எதிராகக் குரலெழுப்பும் சாமானியக் குடிமகளின் படிமமாகக் கண்ணகி உருவகிக்கப்பட்டிருப்பது தமிழ் மரபுகளின் சிறப்புக்களில் ஒன்றாகும்.” என்ற எஸ்.வி.ஆரின் வாதமும் எங்களது சிந்தைகளை ஆழக் கிழறுபவை.

வரலாற்று நிகழ்வுகளை, சமூகங்களின் கூட்டுக் கற்பனையில் ஆழ வேரோடி நிற்கும் உணர்வுப் பிரவாகங்களையெல்லாம் “பண்பாட்டுப் புரட்சி” போன்ற சுலோகங்களின் பெயரால் மறுதலிக்க முற்படுவது மக்களினங்களை மாபெரும் துயரங்களுக்கும், சோகங்களுக்கும் இட்டுச் சென்ற வரலாறு நம் கண் முன்னே விரிந்து கிடக்கிறது.

ஞாநி எம்மையெல்லாம் அந்தச் “சுத்தப்படுத்தல்களுக்கு” தயாராகுமாறு விரட்டுகிறார் போல் தென்படுகிறது எனக்கு.

Friday, September 01, 2006

கற்றுக் கொள்ள.....

-நடராஜா முரளிதரன்-

அமெரிக்கக் கண்டமெங்கணும் ஆங்கிலமும், ஸ்பானிசும், போர்த்துக்கீசும் (பிரேசில் நாட்டில் மட்டும்) பேசு மொழிகளாகக் கோலோச்சுவதை இன்று காணுகின்றோம். ஐரோப்பியர்கள் அமெரிக்க மண்ணில் காலடி வைப்பதற்கு முன்பாகவே இந்த நீண்ட பெரு தொடர் நிலப்பரப்பிலே பல்வேறு மொழிகளைப் பேசிய பல தரப்பட்ட கலாச்சார, பண்பாட்டு வாழ்க்கை அமைவுகளை வரித்துக் கொண்ட “மண்ணின் மைந்தர்கள்” திட்டுத், திட்டாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.

ஆயினும் அசுர பலம் படைத்த ஆக்கிரமிப்பாளர்கள், குடியேற்றவாதிகள் முன்னே தனித்துவம் வாய்ந்த தொன்மை கொண்ட அக் குடிகளின் வன்மம் அடக்கப்பட்டு, முறியடிக்கப்பட்ட வரலாறே எம் கண் முன் விரிந்து கிடக்கிறது. அந்த முறியடிக்கப்பட்ட மாந்தர்களின் மனக் குமுறல்களை, ஆதங்கங்களை வரலாற்றின் புதைகுழிகளிலிருந்து மீட்டெடுப்பதில், மறு வாசிப்புக்குள்ளாக்குவதில் எங்களில் அநேகருக்கு ஈடுபாடு இருக்கப் போவதில்லை.

ஆனாலும் கடந்த சனிக்கிழமை ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் நடைபெற்ற கருத்தரங்கமொன்றில் அந்தப் பழங்குடிகளின் சந்ததி வழி வந்த பெண் மனித உரிமைவாதியொருவர் அந்த மக்களின் உரிமைகள் குறித்ததோடல்லாமல் அதற்க்கும் மேலாக அந்த மக்களினங்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கான ஏக்கங்களைப் பிரதிபலித்த போது அந்த உணர்வுகள் நெஞ்சைப் பிழிந்தமையை என்னால் வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.

இந்தத் தளத்திலே உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பிய பழங்குடி மக்களது போராட்ட வாழ்வுக் களங்களில் கனடாவிற்கு மிகவும் அண்மையில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான மெக்சிக்கோவின் “சியாப்பாஸ்” பிரதேசத்தில் வாழ்ந்து வரும் பழங்குடி மாயன் இந்தியர்களின் துயரம் தோய்ந்த வரலாற்றுச் சுவடுகள் ஆழ்ந்து பரிசீலிக்கப்பட வேண்டியவை என்பதை அண்மையில் நான் வாசித்துக் கொண்டிருந்த விடியல் பதிப்பகம் பிரசுரித்த “எதிர்ப்பும் எழுத்தும்- துணைத் தளபதி மார்க்கோஸ்”(தமிழில் மொழிபெயர்ப்பு: எஸ்.பாலச்சந்திரன்) என்ற நூல் எனக்கு உணர்த்தியது.

இந்த நூலின் 36வது அத்தியாயத்தில் “சியாப்பாஸ் பழங்குடிகளின் போராட்டத் தலைவர்களில் மிக முக்கியமானவர் என்று கருதப்படும் துணைத் தளபதி மார்க்கோஸ் காடுகளில் ஒழிந்தவாறான 17 ஆண்டு கால போராட்டத் தலைமறைவு வாழ்க்கையின் பின் 2001ஆம் ஆண்டு மார்ச் மாத நடுக் கூறில் மெக்சிக்கோ அதிபரின் அழைப்பையேற்றுப் பெருமளவு மக்கள் நிறைந்த மாபெரும் பேரணியொன்றை வழிநடத்திப் பல நூறு மைல்கள் கடந்து மெக்சிக்கோ நகரத் திடலை வந்தடைவதும், அச் சமயத்தில் தங்களது குறிக்கோளை வென்றெடுப்பதற்கான அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக “காம்பியோ” என்ற பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியும் கூறப்பட்டுள்ளது.” அரசியல் வன்முறைகள் உச்சம் பெற்றிருக்கும் முரண்பாட்டுக் களத்தில் ஒடுக்கப்பட்ட மக்களது தளைகளை அறுப்பதற்காக அமைதியைப் பேணிக்கொண்டு அடக்குமுறையாளனோடு தீர்வுக்காகப் பேசப் புறப்படுவது குறித்த வளர்ச்சிப் போக்கினை துணைத் தளபதி “மார்க்கோஸ்” எவ்வாறான அரசியல் பார்வையூடு அளவிடுகிறார் அல்லது அளவிட முனைந்தார் என்பது குறித்து இங்கு உரையாடவிழைவதே எனது நோக்கமாகும்.

காம்பியோ பத்திரிகைப் பேட்டியின் போது “ இனவெறிக்கு நிச்சயமாக ஏற்படப் போகின்ற தோல்வியைப் பற்றிய கருத்தானது அரசுக் கொள்கையின் பிரச்சினை, கல்விப் பிரச்சினை, மெக்சிக்கோ சமூகம் முழுவதினுடைய பிரச்சினை. இந்தப் பிரச்சினைக்கான தீர்வை நாங்கள் மிகவும் நெருங்கி விட்டோம்;, எனினும் இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது.

போர் வீரர்களான நாங்கள் கூறுவதைப் போல, போரில் வெற்றி கிடைத்திருக்கலாம். ஆனால் இன்னும் சில யுத்தங்களைப் புரிய வேண்டியிருக்கிறது. சமூகத்துடன் எங்களைப் பிணைப்பது இராணுவரீதியான எங்களது வலிமை அல்ல என்பதாலும், நல்ல விளைவுகளைத் தரப்போவது அமைதி வழியிலான போராட்டமே என்று நாங்கள் உறுதியாக நம்புவதாலும், எங்களுடைய ஆயுதங்களை நாங்கள் கீழே போட வேன்டும் என்பதே மார்ச் 11ம் தேதி எங்களுக்கு உணர்த்தும் செய்தி என்று நான் நினைக்கிறேன்.

மெக்சிக்கோ அரசு மட்டும்தான் இதைப் புரிந்து கொள்ளவில்லை.” என்று “மார்க்கோஸ்” கூறுகின்ற வார்த்தைகளானது சொல்லும் தீர்மானகரமான அரசியல் செய்தி என்ன என்பது பற்றிய புரிதலிலேதான் மக்களின் சுதந்திரம், அமைதியான வாழ்வு பிறப்பெடுத்தல் சாத்தியமாகும்.

மேலும் இன்னுமொரு பதிலில் “ஒரு படை என்ற விதத்தில் அது மறைந்து போய் விட வேண்டும். இராணுவத் தன்மை கொண்ட ஒருவனாக – ஒரு படை வீரனாக – வாழ்வது ஓர் அபத்தமாகும். ஏனென்றால், ஒருவன் தனது கருத்துக்களை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று மற்றவர்களை வற்புறுத்தி ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு, ஆயுதங்களையே எப்போதும் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இந்த அர்த்தத்தில், எங்களுடைய படை இராணுவத் தன்மையைக் கொண்டிருக்குமானால், அதற்கு எதிர்காலம் என்பதே கிடையாது. எமது தேசிய விடுதலைப் படை ஓர் இராணுவரீதியான அமைப்பாகவே தொடர்ந்து நீடிக்குமானால், அது தோல்வியடையப்போவது உறுதி. உலகத்தைப் பற்றிய ஒரு நிலைப்பாடு என்ற முறையில், ஒரு கருத்தியல் ரீதியான தேர்வு என்ற முறையில், அது நிச்சயமாகத் தோல்வியடையும். அது அதிகாரத்தைக் கைப்பற்றித், தன்னை புரட்சிகரமான இராணுவம் என்ற பெயரில் நிலை நிறுத்திக் கொள்ள முயலுமானால், அது இந்தத் தோல்வியை விட மோசமானதாயிருக்கும். தேசிய விடுதலை இயக்கங்களாக உருவான, 60- களையும் 70- களையும் சேர்ந்த அரசியல்- இராணுவ அமைப்புக்களினால் வெற்றி என்று கருதப்பட்டது எதுவோ, அது எங்களால் தோல்வியென்று கருதப்படுகின்றது.” என்றும் கூறுகின்றார்.

இங்கு துணைத் தளபதி “மார்க்கோஸ்” வியாக்கியானம் செய்யும் தத்துவார்த்தச் சிந்தனை முறைமைகள் இலத்தீன் அமெரிக்கச் சூழலில் மாத்திரமே பொருத்திப் பார்க்க முடிந்த நிகழ்வுகளா? அல்லது உலகளாவிய விரிந்த சமூகப் பரப்பில் மீள் வாசிப்புக்குரிய விடயங்களா?

சமூகத்திலே மேலே இருந்தவாறு அதிகாரம் செலுத்துகிற சூழல் புரட்சியை வெற்றி கொண்டவர்களுக்குக் கிடைத்தபோது சமூகத்திற்கான நன்மை, தீமைகளை அக் குழுவே தீர்மானிக்கும் பொழுது உலகத்தையோ, சமூகத்தையோ மாற்றியமைத்துவிட முடியாது என்பதாகவே “மார்க்கோஸ்” தனது வாதத்தை நிகழ்த்துகிறார்.

ஒரு புறத்தில் ஆயுதங்களை ஏந்தாமல் அணிதிரள்வது ஒரு விதத்தில் நிம்மதி அளிக்கும் செயல்பாடாக மாறிவிடுகிறது என்று அவர் சொல்வது இராணுவச் சொல்லாடல்கள் குறித்த அவரது விமர்சனப் பார்வை இவற்றிலிருந்து ஏதாவது நாம் கற்றுக் கொள்ள முடியுமா?