Tuesday, March 31, 2026

புதிய NDP தலைவர்

 புதிய ஜனநாயகக் கட்சி (NDP) கடந்த ஆண்டு நடைபெற்ற கனடியக் கூட்டாட்சித் தேர்தலில் அதிகாரப்பூர்வக் கட்சி அந்தஸ்தை இழந்த பின்னர், மீண்டும் தன்னைக் கட்டமைக்க முயல்கிறது. 

இந்நிலையில், முன்னாள் ஒலிபரப்பாளரும் தன்னை "சோசலிஸ்ட்" என்று அழைத்துக் கொள்ளும் அவி லூயிஸ் (Avi Lewis) அதன் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மூன்று நாட்கள் நடைபெற்ற NDP தலைவர் தேர்வு மாநாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். முதல் வாக்கு எண்ணிக்கையிலேயே லூயிஸ் வெற்றி பெற்றது, அவருக்குப் பரவலான ஆதரவு கட்சிக்குள் இருப்பதை வலியுறுத்தியது. 

"மாநாட்டின் மகத்தான உந்துதலை” , "NDP மீட்சியாக” மாற்றுவதாக லூயிஸ் உறுதியளித்தார்.

ஞாயிற்றுக்கிழமை வெற்றிக்குப் பிறகு ஆதரவாளர்களிடம் பேசிய 58 வயது ஆவணப்படத் தயாரிப்பாளரும் முன்னாள் தொலைக்காட்சித் தொகுப்பாளருமான லூயிஸ், சமத்துவத்தை நோக்கியே கட்சியை மையப்படுத்தப் போவதாக உறுதியளித்தார். 

அதிக செல்வ வரிகள், பசுமை எரிசக்தி மற்றும் இலவச உயர்கல்வி ஆகியவற்றை வாக்குறுதி அளித்தார்.

“ஏற்கனவே நிறுவனங்களிடமிருந்து கூக்குரல் கேட்கிறது: ‘இவை அனைத்துக்கும் பணத்தை எப்படிச் செலுத்தப் போகிறீர்கள்?’ 

கோர்ப்பரேஷன்களையும் பில்லியனர்களையும் சரியாக வரி விதிக்கும் நேரம் இது. அவர்கள் இலாபத்தின் அலைக்கழிப்பில் சவாரி செய்யும் போது, 99% மக்கள் துன்பப்படுகின்றனர்,” என்று வின்னிபெக் நகரில் கரகோசம் எழுப்பிய கூட்டத்திடம் அவர் கூறினார்.

ஆளும் லிபரல் கட்சியின் நெறிமுறைத் தவறுகளை லூயிஸ் சுட்டிக்காட்டினார். எண்ணெய் நிறுவனங்களின் ஆதிக்கத்தையும், பில்லியன் கணக்கான லாபம் ஈட்டும் “மளிகைப் பேரரசர்களையும்” (grocery barons) NDP அரசு சவாலுக்கு உள்ளாக்கும் என்று உற்சாகமான ஆதரவாளர்களிடம் தெரிவித்தார்.

“99% மக்களுக்கு வழிகாட்டியாக NDP மீண்டும் வெற்றி பெறும். இந்தப் பயங்கரமான காலங்களின் இருண்ட வானத்தை, கூட்டுப் போராட்டத்தின் உற்சாகமான ஒளி ஒளிரச் செய்யும்,” என்றார்.

முன்னாள் கட்சித் தலைவர் டேவிட் லூயிஸின் பேரனும், முன்னாள் ஒன்ராறியோ NDP தலைவர் ஸ்டீபன் லூயிஸின் மகனுமான லூயிஸ், மேடையில் தனது மனைவியான புகழ்பெற்ற எழுத்தாளர் நயோமி கிளைன் (Naomi Klein) உட்பட ஆதரவாளர்களுடன் இணைந்திருந்தார்.

ஆறு எம்.பி.க்கள் மட்டுமே உள்ள, பலவீனமான கருத்துக் கணிப்பில் உள்ள, சுமார் 13 மில்லியன்  டொலர்கள் கடன் கொண்ட NDP கட்சியை மீண்டும் கட்டியெழுப்புவது அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். 

அரசியல் அலுவலகத்தில் இதுவரை பதவி வகிக்காதவர் மற்றும் பாராளுமன்றத்தில் இடம் இல்லாதவர் என்பது அந்த முயற்சியை மேலும் சிக்கலாக்கும்.

தலைவர் தேர்வில் அவர், எட்மண்டன் ஸ்ட்ராத்கோனா எம்.பி. ஹெதர் மெக்பெர்சன் (இரண்டாவது இடம்), தொழிற்சங்க அமைப்பாளர் றொப் ஆஷ்டன், பிரிட்டிஷ் கொலம்பியா நகரக் கவுன்சிலர் டானில் ஜான்ஸ்டன், விவசாயி டோனி மெக்வெயில் ஆகியோரைத் தோற்கடித்திருந்தார்.

பிரதமர் மார்க் கார்னி மற்றும் கொன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொலீவியர் இருவரும் லூயிஸுக்கு வாழ்த்துத் தெரிவித்து, புதிய தலைவருடன் பணியாற்றவுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கடந்த தேர்தலில் NDPயின் வீழ்ச்சியால் லிபரல்களும் பழமைவாதிகளும் பயனடைந்தனர். 

அப்போதைய தலைவர் ஜக்மீத் சிங் தனது சொந்தத் தொகுதியில் தோற்று இராஜினாமா செய்திருந்தார்.

தற்போது கூட்டாட்சி அளவில் சுமார் 6% வாக்குகள் மட்டுமே உள்ள NDP, இந்த மாதத் தொடக்கத்தில் மற்றுமொரு அடியைச் சந்தித்தது. 

எம்.பி. லோரி இட்லவுட் லிபரலுக்கு மாறியதால், அதிகாரப்பூர்வக் கட்சி அந்தஸ்துக்கு தேவையான 12 எம்.பி.க்களுக்கு மிகவும் குறைவாகவே NDP உள்ளது.

2011ஆம் ஆண்டு, முன்னாள் தலைவர் ஜாக் லேட்டன் தலைமையில் NDP கட்சி 103 இடங்களை வென்றது.

பிற கூட்டாட்சிக் கட்சிகளைப் போலல்லாமல், NDP தனது மாகாணக் கட்சிகளுடன் ஆழமான உறவுகளைக் கொண்டுள்ளது.

மனிற்றோபா மாகாண NDP தலைவரும், 2023இல் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றவருமான 

வாப் கினேவ் (Wab Kinew) மேடையில் லூயிஸுடன் இணைந்திருந்தார். அவர் நாட்டின் மிகவும் பிரபலமான மாகாண முதல்வராகத்  தொடர்ந்து கருத்துக் கணிப்புகளில் இடம்பெறுகிறார்.

ஆனால் லூயிஸின் வெற்றிக்குப் பிறகு சில மாகாணத் தலைவர்களிடமிருந்து வந்த எதிர்வினைகள், கட்சியை ஒன்றிணைப்பதில் அவர் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டுகின்றன. 

பிரிட்டிஷ் கொலம்பியா NDP மாகாண முதல்வர் டேவிற் ஈபி (David Eby) லூயிஸின் வெற்றியைப் பாராட்டினாலும், தொழில்நுட்பம் மற்றும் சுரங்கத் துறைகளில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் தனது அரசின் நோக்கத்தைச் சுட்டிக்காட்டினார். 

இந்தத் துறைகள் இரண்டும் லூயிஸால் விமர்சிக்கப்பட்டவை. “நமது முன்னுரிமை, உழைக்கும் மக்களை உயர்த்துவதும், செழிப்பை வளர்ப்பதும் ஆகும்,” என்றார் ஈபி.

சுற்றுச்சூழல் சான்றுகளை வலுப்படுத்த லூயிஸ் முயன்றுள்ளார். பசுமை எரிசக்தி ஒப்பந்தம் மற்றும் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு ஏற்றுமதி வரி விதிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். 

காலநிலை நெருக்கடியின் விளைவுகளுக்கு எதிராக கனடாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% ஐ முதலீடு செய்ய விரும்புகிறார்.

எண்ணெய், எரிவாயு மேம்பாட்டு விவகாரத்தில் லூயிஸுடன் மோதலில் இருந்த அல்பேட்டா NDP தலைவர் நஹீத் நென்ஷி (Naheed Nenshi), கூட்டாட்சிக் கட்சியில் ஏற்பட்டுள்ள கருத்தியல் மாற்றம் அல்பேட்டா மாகாணக் கட்சிக்கு உதவாது என்று எச்சரித்தார்.

“அல்பேட்டா NDP அரசின் தோல்வியைப் பகிரங்கமாகக் கொண்டாடிய இந்தப் புதிய தலைவரின் கீழ் கூட்டாட்சிக் கட்சியின் திசை, அல்பேட்டா நலனுக்கு உகந்ததல்ல என்பது தெளிவு,” என்றார்.

சஸ்கெச்சுவான் NDP தலைவர் கார்லா பெக் (Carla Beck), லூயிஸுடன் சந்திக்க மறுத்துவிட்டதாகக் கூறி, அவரது நிலைப்பாடுகள் “கருத்தியல் ரீதியாகவும், யதார்த்தமற்றவையாகவும்” உள்ளன என்றார். புதிய பைப்லைன் திட்டங்களுக்கு எதிராக லூயிஸ் இடுகையிட்ட வீடியோவை அவர் சுட்டிக்காட்டினார்.

இடைக்காலத் தலைவர் டொன் டேவிஸ் (Don Davies), கடந்த ஏப்ரலில் ஏற்பட்ட பெரும் தோல்விக்குப் பிறகு NDP கட்சியை மீண்டும் கட்டமைக்கத் தயாராக உள்ளதாகக் கூறினார். பிரதமர் கார்னி நாளுக்கு நாள் மேலும் பழமைவாதமாக (conservative) மாறி வருவதை வாக்காளர்கள் கவலைப்படுத்துவதாக நம்புவதாகத் தெரிவித்தார்.



#NDP

No comments: