போப் லியோ (Pope Leo XIV), ஞாயிறு (Palm Sunday) திருப்பலியின்போது, போர் நடத்தும் தலைவர்களின் பிரார்த்தனைகளைக் கடவுள் கேட்கமாட்டார் என்றும், அவர்களின் “கைகள் இரத்தத்தால் நிரம்பியுள்ளன” என்றும் கூறினார்.
இது டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான ஒரு தெளிவான கண்டனமாகத் தெரிகிறது.
இந்தக் கருத்துக்கள், அமெரிக்கப் படைகள் ஆயிரக்கணக்கானோர் மத்திய கிழக்குக்கு வந்துகொண்டிருக்கும் நிலையிலும், அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீற் ஹெக்செத் (Pete Hegseth) எதிரிகளுக்கு “எந்த இரக்கமும் இல்லை” என்று வன்முறையை வேண்டிப் பிரார்த்தனை செய்த சில நாட்களுக்குப் பிறகு வெளியாகியுள்ளன.
வத்திக்கான் நகரில் உள்ள சென்ற் பீற்றஸ் சதுக்கத்தில் நடைபெற்ற ஞாயிறு திருப்பலியில், போப் லியோ, ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான மோதலைக் "கோரமானது” (atrocious) என்று அழைத்தார்.
இயேசுவைப் போரினை நியாயப்படுத்தப் பயன்படுத்த முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
“இதுதான் நமது கடவுள்: இயேசு, அமைதியின் அரசர். அவர் போரை நிராகரிக்கிறார். அவரை யாரும் போரை நியாயப்படுத்தப் பயன்படுத்த முடியாது,” என்று அவர் பல்லாயிரக்கணக்கான பக்தர்களிடம் கூறினார்.
"போர் நடத்துபவர்களின் பிரார்த்தனைகளை அவர் கேட்கமாட்டார், மாறாக நிராகரிப்பார்.”
என்ற பைபிள் வசனத்தை மேற்கோள் காட்டி, “நீங்கள் பல பிரார்த்தனைகள் செய்தாலும், நான் கேட்கமாட்டேன்: உங்கள் கைகள் இரத்தத்தால் நிரம்பியுள்ளன” என்று சொன்னார்.
முதல் அமெரிக்கப் போப்பாக இருக்கும் லியோ, எந்த அரசாங்கத்தையோ தனிநபரையோ நேரடியாகப் பெயர் சொல்லிக் குறிப்பிடவில்லை.
ஆனால் அவரது கருத்துக்கள், ஹெக்செத்தின் பிரார்த்தனைக்குப் பிறகு, ஈரானுக்கு அருகில் அமெரிக்கத் தரைப்படைகள் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் வந்துள்ளன.
ஹெக்செத், புதன்கிழமை ஒரு கிறிஸ்தவ வழிபாட்டு நிகழ்ச்சியில், “நீதியின் எதிரிகளுக்கும் நமது பெரிய நாட்டுக்கு எதிரானவர்களுக்கும் ஒவ்வொரு குண்டும் இலக்கைத் தாக்கட்டும். … அவர்களுக்கு எந்த இரக்கமும் வேண்டாம். தகுதியற்றவர்களுக்கு எதிராக அழிவுகரமான வன்முறைச் செயல்பாட்டை வழங்குங்கள்” என்று பிரார்த்தித்தார்.
போப், இயேசு தன்னைப் பாதுகாக்க வாளைப் பயன்படுத்திய சீடரைக் கண்டித்ததைச் சுட்டிக்காட்டி, “அவர் ஆயுதமேந்தவில்லை, போராடவில்லை. அவர் கடவுளின் மென்மையான முகத்தை வெளிப்படுத்தினார், எப்போதும் வன்முறையை நிராகரித்தார். தன்னைக் காப்பாற்றிக்கொள்ளாமல், சிலுவையில் அறைபட அனுமதித்தார்” என்றார்.
இந்த அமைதி வேண்டுகோள், அமெரிக்க-இஸ்ரேல்-ஈரான் மோதல் இரண்டாவது மாதத்தை எட்டியுள்ள நிலையில் வந்துள்ளது.
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர், அமெரிக்கப் படைகள் வந்தால் “அவர்களைத் தீயில் எரிப்போம்” என்று கூறியுள்ளார்.
அனைத்துத் தரப்பினரும் மதத்தைப் பயன்படுத்தித் தங்கள் செயல்களை நியாயப்படுத்த முயல்கின்றனர்.
ஹெக்செத்தின் கிறிஸ்தவ நம்பிக்கையைப் பென்டகனின் செயல்களுடன் இணைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
போப் லியோ, மோதலில் லெபனான், இஸ்ரேல், வளைகுடா நாடுகளில் அழிவு ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, தொடர்ந்து போர் நிறுத்தம் மற்றும் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை வேண்டினார். கிறிஸ்தவர்கள் இந்தப் பகுதியில் ஈஸ்டர் கொண்டாட முடியாமல் போகலாம் என்று வருந்தினார்.
இந்த ஞாயிறு, கிறிஸ்தவர்களுக்குப் புனித வாரத்தின் தொடக்கம். இயேசு ஜெருசலேமுக்கு வந்து, சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்த நிகழ்வுகளை நினைவுகூரும் நாள்.
இதே நாளில், ஜெருசலேமில் உள்ள புனித கல்லறைத் தேவாலயத்தில் (Church of the Holy Sepulchre) கத்தோலிக்க கார்டினல் பியர்பட்டிஸ்டா பிசாபல்லாவை இஸ்ரேல் போலீஸ் நுழைய விடாமல் தடுத்தது.
இதை அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் கண்டித்தன. அமெரிக்கத் தூதர் மைக் ஹக்காபி இதை “துரதிர்ஷ்டவசமான அதிகப்படியான நடவடிக்கை” என்றார்.
இத்தாலிப் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் ஆகியோரும் மத சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று விமர்சித்தனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்புக் காரணங்களால் தடுத்ததாகக் கூறினார். பின்னர், கார்டினலுக்கு உடனடியாக முழு அணுகல் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக அறிவித்தார்.
இந்தச் செய்தி உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. போப் லியோவின் கருத்துக்கள், போரின் மத்தியில் அமைதி மற்றும் மதத்தின் தவறான பயன்பாட்டுக்கு எதிரான வலியுறுத்தலாக அமைந்துள்ளது.
No comments:
Post a Comment